என் அன்பின் இதயமே,

நான் உன்னிடம் சட்டப்படி எதையும் கேட்டு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கடிதத்துக்குக் கடிதம் எனக் கோரிக்கை வைக்கவில்லை. நெகிழ்வுடனும் பெருந்தன்மையுடனும் நான் இருந்தாலும், சில வரிகளில் பதிலாக உன் கடிதம் கிடைப்பதை என் இதயம் எதிர்பார்க்கிறது. நீ சுகமாக இருக்கிறாய், என்னைப் போல் நீயும் எனக்காகச் சிறிது ஏங்குகிறாய் என்று தெரிந்தால் போதும். நான் மிகவும் விரும்பி எதிர்பார்ப்பது இது போன்ற உன் கடித வரிகளைத்தான். நீ எனக்காகத் தவிக்கிறாய், நான் உனக்குத் தேவைப்படுகிறேன் என்று உன் கடிதம் இருந்தால் நான் மகிழ்வேன்.

வழக்கமாக ஆரம்பிக்கும் நீதிமன்ற வேலைக்கு முன் சுருக்கமாக ஒரு செய்தி, நம் சின்னவள் பற்றி… அவள்தான் இப்பொழுது நமது இணைப்பில் மிகவும் முக்கியமானவள். உனக்கும் எனக்கும், நமது காதலில் பூத்த மற்றொரு நேசிப்புக்கு உரியவள். இந்தச் சின்னக் குழந்தை பிரயாணத்திற்குப் பின்பு, நோயுற்றாள். மலம் கழிக்காததாலும் அளவுக்கு மீறி பால் ஊட்டியதாலும் இருக்கலாம். எங்களுக்கு மருத்துவரை அழைக்க வேண்டியதாகிவிட்டது.

ஜென்னி, மார்க்ஸ் தம்பதியின் இளைய மகள் ஜென்னி ஜூலியா எலனார், wikipedia

பால் புகட்ட ஒரு வாடகைத்தாய் அமர்த்தி, புட்டிப்பாலைத் தவிர்ப்பதுதான் அவள் விரைவில் நலம்பெற வழி என்று சொல்லிவிட்டார். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. ஆரோக்கியமான அந்த வாடகைத்தாயால் பாலூட்டப்பட்டு வளர்கிறாள். பார்பெல்ன் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் ஒரு படகோட்டியின் மகள். அந்தப் படகோட்டியுடன் என் அப்பா அடிக்கடி பயணித்திருக்கிறார். வளமாக இருந்த காலத்தில் அம்மா இந்தப் பெண்ணிற்கு உடைகளை வழங்கியிருக்கிறார். அப்பா தினமும் அவளுக்குச் சிற்றுண்டி வழங்கியிருக்கிறார். அவளே நம் குழந்தைக்கு இன்று பாலூட்டி, நம் குழந்தையின் உடலையும் உயிரையும் பாதுகாக்கிறாள்.

ஜென்னி மார்க்ஸ் தம்பதியின் இளைய மகள் ஜென்னி ஜூலியா (படத்தில் நடுவே இருக்கும் குட்டிப் பெண், அருகே அவளது இரு சகோதரிகள், நிற்பவர்கள் மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், wikipedia)

இவ்வளவு சிரமப்பட்டாலும் இப்போது மிகவும் அழகாகவும் மலரைப் போன்ற வெண்மையுடனும், மிடுக்குடனும் இளவரசியைப் போல் இருக்கிறாள். பாரீசில் இப்படி நோய்வாய்ப்பட்டு பார்த்ததில்லை. எனவே இந்தப் பயணம் மிகவும் சிறப்பானதாகவும் நன்மை பயப்பதாகவும் அமைந்தது. இதனிடையே அன்பான அம்மாவின் தனிப்பட்ட பெரிய போராட்டத்தின் விளைவாக நாம் பிரிக்கப்பட்டு, மறுபடியும் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன்.

இந்தக் குளிர்காலத்தில் எனக்கு என் எளிய அம்மாவின் வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்பதை உணர முடிந்தது. ஆனால், நான் அவரை நினைத்து அழுது துன்பப்பட்ட போதெல்லாம் எனக்கு அனுசரணையாகவும் அமைதி காத்தும் நீ ஒத்துழைத்தாய். இந்த வாடகைத்தாயால் இன்னொரு பலன், அவள் எங்களுக்கு உதவியாக எங்களுடன் எல்லா இடங்களுக்கும் துணையாக வருகிறாள். பிரெஞ்சு மொழியும் பேசுகிறாள். எனவேதான் நான் திரும்பி வரும் பயணம் உறுதியானது.

எட்கர், ஜென்னியின் சகோதரன் (மாற்றாந்தாய் மகன்), Wikipedia

எட்கர்* அம்மாவிடம் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, முட்டாள்தனமாக கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுகிறான். நெருங்கிக்கொண்டிருக்கும் புரட்சியைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறான். அது எல்லாவித நிகழ்காலத் தடைகளையும் தூக்கி எறிந்துவிடும் என்று நினைக்கிறான். ஆனால், அவனிடமே இருக்கும் புரட்சிக்கு எதிராக உள்ள தடைகளை அவன் முதலில் தூக்கி எறிய வேண்டும்.

நாம் இப்போது இந்தப் புரட்சி விஷயத்தைத் தாண்டி மறுபடியும் வாடகைத்தாய் விஷயத்திற்கு வருவோம். என் பயணச் செலவின் மீதத்திலிருந்து இந்த மாதச் சம்பளத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு, மருந்து, மருத்துவர் செலவையும் சமாளித்துவிடுவேன். ஆனால், அம்மாவிற்கு இப்படி நான் செலவு செய்வது பிடிக்கவில்லைதான். இருந்தாலும் உணவுக்காக எங்களுக்கு அதிகம் செலவு செய்கிறார். இந்த ஏழ்மையிலும்கூட அவர் எல்லாவற்றையும் முறையோடு கவனித்துக்கொள்கிறார். ட்ரையரில் உள்ள மக்கள் அம்மாவிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார்கள். அது என்னுள்ளும் அப்படியே வாழ வேண்டும் என்ற ஆவலைச் சிறிது தூண்டுகிறது. ஆனால், யாரையும் சந்திக்க வேண்டிய சூழல் எனக்கில்லை.

காலை முதல் இரவுவரை நீதிமன்ற வேலைகளுக்காக என்னைத் தேடியே வந்துவிடுகிறார்கள். அவர்கள் பெயரையெல்லாம் என்னால் வரிசையாகத் தெரிவிக்க இயலாது. இன்று தேசப்பற்றாளர் லேஹ்மனின் வழக்கை விவாதித்து விடுவித்தேன். அவர் மிகவும் தெளிவாகவே விவாதிக்கிறார். ஆனால், உன் பூரண அறிவியல் சித்தாந்தக்கல்வி அங்கே தாக்குதலுக்குள்ளாகுமோ என்று அஞ்சுகிறார்.

நான் ஒரு நீதிதேவதைப் போல்தான் கண்ணியமாக எல்லோரிடத்திலும் நடந்துகொள்கிறேன். அது என் வெளித்தோற்றத்திற்கும் பொருந்தி வருகிறது. பரிவுடன் நடந்துகொள்வதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும் பலர் என்னிடம் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

என் ஒற்றை இதயத்தை நேசிப்பவனே, என் மனம் எப்படிச் சிறகடித்துப் பறந்து உன்னிடம் போயிற்று… அந்த ஜூன்19! எவ்வளவு உறுதியாகவும், நெருக்கமாகவும் என் மனம் அன்று உன் காதலுக்காகத் துடித்தது!

மறுபடியும் திரும்பி நடந்த நிகழ்ச்சிகளுக்கு வருவோம். நமது திருமண நாள் நெருங்கும்வரை நம் அன்புச் சிறுமி, உடல் நலம் சரியில்லாமல் களையிழந்திருந்தாள். அதன் பின்புதான் என் கடினமான பயணத்திற்குத் திட்டமிட்டேன். உனக்குத் தெரியுமா எங்கே என்று? நான் அழகான பாரீஸ் கவுனை அணிந்துகொண்டேன். என் முகம் ஆர்வத்திலும் பரவசத்திலும் பளிச்சென்றாகிவிட்டது. நான் மணியை அழுத்தும்போது என் இதயம் படபடத்தது. ஒவ்வொரு விஷயமும் என் எண்ணத்தினூடே நடந்தது. கதவு திறந்தது. ஜெட்சன் தோன்றினாள். என்னை அப்படியே தழுவி, முத்தமிட்டு வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு உன் அம்மாவும் சோபியும் அமர்ந்திருந்தனர். இருவரும் என்னை தழுவிக்கொண்டனர். உன் அம்மா என்னை, ”மகளே” என அன்புடன் அழைத்தார். சோபி அவளது அருகில் என்னை அமர்த்தினாள். அவள் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள். மறுபடியும் சிரமப்பட்டுத்தான் அவள் நலம்பெற வேண்டும். ஜெட்சன் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளார்.

உன் அம்மா மட்டுமே பொலிவோடும் உற்சாகத்தோடும் இருக்கிறார். இப்படி இருப்பதும் பாவம்தான். எல்லாப் பெண்களுமே மிகவும் அன்புடன் இருந்தார்கள். குறிப்பாக கரோலின். மறுநாள் உன் அம்மா காலை ஒன்பது மாணிக்கே குழந்தையைப் பார்க்க வந்தார். பிற்பகலில் சோபி வந்தாள். இன்று காலை சின்னவள் கரோலினும் நமது இளைய தேவதையைக் காண வந்தாள். உம்மால் இந்த மாற்றத்தைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நான் இதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எப்படி இப்படி ஒரு திடீர் மாற்றம்? வெற்றி என்பது எப்படி மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது! அதுவும் நம் விஷயத்தில் கண்களுக்குப் புலப்படும்போதே இப்படி ஒரு மாற்றம். இதைப் பராமரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது ஒரு வித்தியாசமான செய்தி அல்லவா? கொஞ்சம் யோசித்துப் பாரு. காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது!

மார்க்ஸ் பிறந்து வளர்ந்த ட்ரையர் நகரில் மார்க்சின் சிலை, tripadvisor

ட்ரையர் நகரின் அனைத்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் நீதிமன்ற கவனிப்பும் இருந்தாலும்கூட, என் இதயமும் ஆத்மாவும் உன் பக்கம்தான் இருக்கிறது. எனது அன்புக்குரிய காதல் இதயமே, இந்தக் குளிர் பானங்கள் எல்லாம் எந்த மகிழ்ச்சியும் தரவில்லை. நீ ஒன்றே என்னுடைய மகிழ்ச்சி!

நான் அடிக்கடி நம் எதிர்காலம் குறித்து கவலைகொள்கிறேன். என் அலைபாயும் உணர்ச்சிகளுக்காகவும் கவலைகொள்ள முடியாத நிலையில் இங்கு வாழ்வதற்காகவும் தண்டிக்கப்படலாம். உன்னால் முடிந்தால் என் மன நிலையை அமைதிப்படுத்து. நிரந்தரமான வருமானம் நமக்கு வேண்டும் என்பது குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது.

நம் குழந்தையின் அழகான வெள்ளை நிறம் எல்லோரையும் அதிசயிக்க வைக்கிறது. அவள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள். ஸ்லீச்சர் அவளை நன்றாக கவனித்துக்கொள்வதுடன் அக்கறையும் எடுத்துக்கொள்கிறான். இன்று அவன் வெளியில் போக விரும்பவே இல்லை. காட்ஸ்வ்ராத், ரெவர்ச்சன், லேஹ்மேன்,பொப்பே ஒவ்வொருவராக வந்தார்கள். நாள் முழுவதும் இதிலேயே போய்விட்டது.

மிகுந்த சங்கடத்துடனும் சந்தோஷமில்லாமலும் மட்டும் எழுதவே வேண்டாம். உனக்கே தெரியும், உன் மற்ற கட்டுரைகளெல்லாம் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தன என்று. உண்மைகளின் அடிப்படையிலோ எளிதாகப் புரியும்படியோ தமாஷாகவும் எளிதாகவும் மட்டுமே எழுதவும்.

என் அன்பு இதயமே, உன் பேனாவைக் காகிதத்தின் மேல் ஓடவிடு. சில நேரத்தில் அது தடுமாறி விழுந்தாலும், வார்த்தைகளைத் தாங்கித்தான் விழ வேண்டும். உன் சிந்தனைகள் எல்லாம் தலைநிமிர்ந்து, பழைய சிப்பாய்க் காவலர்கள் போல் தைரியமாகவும் நிரந்தர மரியாதைக்குரியதாகவும் அனுபவம் வாய்ந்த படைவீரனைப் போல் உரத்துச் சொல்ல வேண்டும். ”இறக்கும் தறுவாயிலும் சரணடைய மாட்டேன்.”

எப்போதாவது சீருடை சிறிது தளர்ந்து தொங்கினாலோ பட்டன் இறுக்கமாக மாட்டாததாலோ என்ன ஆகிவிடப் போகிறது? பிரெஞ்சு ராணுவ வீரர்களிடம் பிடித்த அம்சமே அவர்கள் எளிமையாக, தயக்கமில்லாமல் காட்சியளிப்பதுதான். விடைபெறுகிறேன். என் நெருக்கமான அன்பு இதயமே, என்னால் நேசிக்கப்படுபவனே, தற்பொழுது நான் ஜெர்மனியில் இருக்கிறேன். எல்லாத் தேவைகளும் என் அருகிலேயே, என் குழந்தையும் அம்மாவும்கூட இருந்தாலும் என் மனம் கவலைப்படுகிறது. ஏனெனில் நீ மட்டும் இல்லாததுதான். உனக்காக ஏங்குகிறது என் இதயம்.

இப்படிக்கு,

உன் அன்புமிகுந்த நாய்க் குட்டியும் அதன் செல்லக்குட்டியும்…

  • எட்கர் – ஜென்னியின் தம்பி. அப்பாவின் இன்னொரு மனைவியின் மகன்.

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சோ சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர். வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம்.