–
பெண் என்பவள் ஆதித் தாய். அன்பின் பிறப்பிடம். பண்பின் ஊற்று. அமைதியின் இருப்பிடம். கனிவின் உறைவிடம்… இந்த மாதிரி நிறைய வார்த்தைகளைப் பெண்களைப் பற்றிச் சொல்வார்கள். ஆனால் அவை அத்தனையும் வெற்று வார்த்தைகளே. உண்மையிலேயே பெண் என்பவள் பிறக்கும் போதே பிரச்சினையாகப் பார்க்கப்படுபவள். இரண்டாம் பாலினமாகவே பாவிக்கப்படுபவள். தூர்தர்ஷனில் தமிழ் ஒளிபரப்பு தொடங்கிய புதிதில் (1990 காலக்கட்டத்தில்) திரைக்கலைஞர் ஸ்ரீவித்யா ஓர் அரசு விளம்பரத்துக்கு வருவார். ’ஆணா, பொண்ணா பொறந்ததுன்னு அதுதான் இங்க முதல் கேள்வி. ஆணாப் பொறந்தா சிரிப்பு என்ன? அது பொண்ணாப் பொறந்தா அட வெறுப்பு என்ன?’ என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் ஆரம்பம். ஆணும் பெண்ணும் சமம் என்று இந்தப் பாடல் வலியுறுத்திய கருத்து
அந்தச் சின்ன வயதில் நன்றாக மனதில் பதிந்தது. இந்தப் பிரச்சாரப் பாடல் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் இன்னும் இந்தக் கேள்வி இருக்கிறது. கேள்வி தவறில்லை. அதற்கு அளிக்கப்படும் பதில்கள்தாம் சில சிரிப்போடும், சில வெறுப்போடும் வருகின்றன. அந்த நிலைமை கொஞ்சமே கொஞ்சம்தான் மாறியிருக்கிறது. உலகளவில் 4 பெண்களில் ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி இருக்கிறார். ஆனால் 10 ஆண்களில் ஒருவர்தான் அப்படி இருக்கிறார். இது பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. பெண்களைக் குலசாமியாக (?) வணங்கும் (?) இந்தப் புனித பூமியில்தான் பெண் சிசுக்கொலை, ஆணவக்கொலை என்று இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
சாதாரணமாக ஒரு வீட்டில் சமைத்த உடனே எத்தனை பெண்கள் சாப்பிடுகிறார்கள்?. கணவன், குழந்தைகள் அதுவும் ஆண் குழந்தை இருந்தால் அவன் சாப்பிட்ட பின்பு, இருக்கும் மிச்சம் மீதியை வழித்து வாயில் போட்டுக் கொள்வதோடு திருப்தி(?)ப்பட்டுக் கொள்ளும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். ஒருமுறை மலையாளத் திரைப்படக் கலைஞர் ரீமா கல்லிங்கல் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். ஒருநாள் சாப்பிடும் போது வறுத்த மீன் துண்டு ஒன்றை அவரது அம்மா ரீமாவின் அண்ணனுக்கு மட்டும் சாப்பிடக் கொடுத்திருக்கிறார். ஒன்றே ஒன்று மட்டும் இருந்ததை ஆண்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும் என்று கொடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். ரீமா அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு வறுத்த மீன் என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி இந்தச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். உணவுப் பங்கீட்டில்கூட ஆணும் பெண்ணும் இங்கு சமமாக நடத்தப்படுவதில்லை.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் முதன் முதலில் 2012 அக்டோபர் 11 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தவும், பாலினப் பேதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களின் அவசியத்தையும், பெண்களின் அதிகாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவது குறித்தும் வலியுறுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சர்வதேச தினத்திற்கான யோசனை ஓர் அரசு சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனலின் ‘ஏனென்றால் நான் ஒரு பெண்'(Because I am a Girl’) பிரச்சாரத்திலிருந்து தொடங்கியது. சர்வதேச, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையை இதில் ஈடுபட வலியுறுத்தியது. டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அக்டோபர் 11, 2012 ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றியது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உண்மையான திறமைகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்வதும்தான் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கம். பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் மையப்புள்ளி. அன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபை குழந்தை திருமணத்தை எதிர்த்தும், பெண் கல்வியை ஆதரித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இதர பெண்கள் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் திறமைகளை உணரவும், பெண் குழந்தைகளின் சாதனைகளை உலகுக்கு அறிவிக்கும் வகையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ’குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்’. இந்த 2024 ஆம் ஆண்டின் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘எதிர்காலத்துக்கான பெண்களின் பார்வை’. பெண்களின் அதிகாரத்துக்கான உரிமையை ஏற்படுத்த, மாற்றங்களைச் செயல்படுத்த இந்த நாள் வலியுறுத்துகிறது. பாலினப் பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்குக் கற்றல் வசதிகள், மாணவர்களுக்கு இணையாகத் தொழில்நுட்பக் கல்வி கற்றல், கிராமப்புற மாணவிகளுக்கும் தரமான கல்வி, சுகாதார உரிமைகள், மருத்துவம் போன்றவற்றை வழங்கவும், பெண்களுக்கு வேலை வாய்ப்பு, திறமை அடிப்படையில் அதிகாரம் வழங்குதல், அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றை ஐ.நா வலியுறுத்துகிறது. பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது. அதேபோல் பெண் என்பதாலேயே முன்னுரிமை வழங்கப்படக் கூடாது. இரண்டுமே தவறு. தனது திறமைகளை நிரூபித்துப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்படும் போது அது சிறந்த முறையில் கையாளப்படும் என்பதில் சந்தேகமில்லை.
பெண்ணுடல் பெண்ணுக்குத்தான் சொந்தம் என்பதை ஒவ்வொரு கணமும் வலியுறுத்திச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனால் கணவன், மாமியார் (அவரும் பெண்ணாக இருந்தாலும்), சமூகம் என்று ஒவ்வொருவரும் பெண்ணுடல் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள, குழந்தைப் பெற்றுக் கொள்ள, கருக்கலைப்பு செய்ய, செய்யாமல் இருக்க என்று ஒவ்வொன்றையும் இந்தச் சமூகத்தை எண்ணியே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இன்னும் இரவில் தாமதமாக வரும் பெண்ணின் மீதான பார்வையைச் சமூகம் மாற்றிக் கொள்ளவில்லை. ஆண் பலதார மணம் செய்வதை இயல்பாகவும், வீரமாகவும் பார்க்கும் இந்தச் சமுதாயம் ஒரு பெண் மறுமணம் செய்வதையோ விவாகரத்து செய்வதையோகூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அடிவயிறு கலங்க அவளுக்கு அறிவுரை சொல்லிக் கூப்பாடு போடுகிறது. அல்லது பகடி செய்து அவளை வதைக்கிறது. தாம்பத்திய பலாத்காரம், வரதட்சிணைக் கொடுமை, ஆசிட் வீச்சு, மீ டூ பிரச்னைகள் என்று பலதும் மலிந்து கிடக்கின்றன.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னேற்றும் வகையில் இந்த சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பெயரளவுக்கு இல்லாமல் ஆத்மார்த்தமாகச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும், நடத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கான நாளாக இந்த நாளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், எல்லா நாட்களுமே பெண்களுக்கான தினமாக மனதில் நினைத்துக் கொண்டு செயல்படும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. எங்கெல்லாம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மட்டுமன்றி, அனைத்து உரிமைகளையும் மறுக்கும் உரிமை எந்த ஆணுக்கும் கிடையாது என்பதை எல்லாரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் சமத்துவக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும்கூட. என்னதான் பெண்ணியம் பேசினாலும், பாலினச் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்தாலும் இன்னும் மாற்றங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் நடக்கின்றன. இன்னும் பெண்தான் திருமணம் செய்து ஆணின் வீட்டுக்குப் போகிறாள். இன்னும் பெண்தான் வாய்கிழிய சமத்துவம் பேசிவிட்டு அடுத்த வேளை உணவு சமைக்கிறாள். இன்னும் பெண்தான் இடுப்பொடிய வீட்டுவேலை செய்து அதை இயல்பாகக் கடந்து செல்லும் சமூகத்தில் வசிக்கிறாள். முக்கியமாக இன்னும் பெண் மட்டும்தான் தாலி கட்டிக் கொள்கிறாள். மாற்றங்களை இனிவரும் காலங்களிலாவது கட்டாயமாக்குவோம். அதற்கு முன்
இந்த மாற்றங்களை முதலில் வீட்டிலிருந்தே தொடங்குவோம். பாலினச் சமத்துவத்தை நாம் கடைப்பிடிப்போம். கலாச்சாரங்களைக் காட்டி பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதை உடைத்தெறிவோம். சமமான ஊதியம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சீர்படுத்தக் குரல் கொடுப்போம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, பாலினச் சமத்துவம், பொருளாதாரச் சமநிலை, குழந்தைத் திருமண ஒழிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் கொள்கைகளை அதிகரிக்கும் போது நாட்டின் வளர்ச்சி சிறந்த முறையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
படைப்பாளர்
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.