நான் கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்தேன். என் வயதை ஒத்தவர்கள் எல்லாம் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்க, நான் மட்டும் தினமும் எங்காவது பயணம் செய்துகொண்டேயிருப்பேன். என்னால் மட்டும் எப்படி இப்படி உற்சாகமாவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடிகிறது என்று பலரும் கேட்பார்கள். அதற்குக் காரணம் என்னுடைய மரபணு, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என்று சொல்வேன்.
என்னை அறிந்தவர்களுக்கு நான் எப்படி உணவை எடுத்துக்கொள்கிறேன் என்பது தெரியும். காலை எழுந்து உடற்பயிற்சி முடித்தவுடன் கஞ்சி சாப்பிடுவேன். பிறகு காபி. காலை உணவுடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடுவேன். 11 மணிக்கு சூப் அல்லது பழச்சாறு குடிப்பேன். மதியம் 3, 4 வகைக் காய்கள், கீரைகள். இரவு எளிதான உணவு. என் அம்மா, பாட்டிகூட வீட்டில் வசதியில்லாவிட்டாலும் சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுவார்கள். அதனால்தான் என் பாட்டி 112 வயது வரையும் என் அம்மா 103 வயது வரையும் வாழ்ந்தார்கள். எனக்கும் அந்த மரபணு இருப்பதாலும் ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சிகளாலும் எந்த நோயும் என்னை நெருங்காது என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
அந்த நம்பிக்கை தகர்ந்தது. 2010, பிப்ரவரி. வழக்கம் போல அறையில் மதியம் சிறு ஓய்வுக்காகத் தரையில் படுத்திருந்தேன். இடது மார்பில் கட்டிபோலத் தென்பட்டது. ஏதாவது கொழுப்புக் கட்டியாக இருக்கலாம், ஒரு நாள் மருத்துவமனைக்குப் போகும்போது மருத்துவரிடம் இது பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அப்போது என் மாணவர் குப்புசாமி வந்தார். கட்டி குறித்து அவரிடம் சொன்னேன். “அம்மா, தாமதப்படுத்தாமல் உடனே டாக்டரிடம் காட்டுங்கள்” என்றார். நானும் சரி என்றேனே தவிர, மருத்துவரிடம் செல்லவில்லை. இல்லை, செல்ல முடியாத அளவுக்கு அறிவிய இயக்கப் பணிகளும் தொழிற்சங்கப் பணிகளும் என்னை அழுத்திக்கொண்டிருந்தன. இன்று போகலாம், நாளை போகலாம் என்று தள்ளிப் போட்டுப் போட்டு நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடிக்கொண்டிருந்தன.
அமெரிக்காவில் இருக்கும் மகனும் மருமகளும் செப்டம்பர் 8 டிக்கெட் எடுத்தாகிவிட்டது. எந்த வேலையையும் காரணம் காட்டி, வருவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அமெரிக்கா சென்றால், திரும்பி வர 3 மாதங்களாவது ஆகிவிடும். அதனால் ஏற்ற பொறுப்புகளை விரைவாகச் செய்து முடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்ததில் கட்டி என் நினைவுக்கே வரவில்லை.
அன்றும் வழக்கம்போல் 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றேன். படுத்தவுடன் இடது மார்பகத்தில் சுருக்சுருக்கென்று வலி. அப்போதுதான் கட்டியின் நினைவே வந்தது. இனி எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் மருத்துவரைப் பார்ப்பதைத் தள்ளிப் போடக்கூடாது. அமெரிக்கா போன பிறகு பிரச்னை வந்தால் அது பெரிய சிக்கலாகிவிடும் என்று நினைத்துக்கொண்டேன்.
தூக்கம் வரவில்லை. ஒருவேளை இந்தக் கட்டி புற்றுநோயாக இருக்குமோ? ஐயோ… என் நண்பர் அருணந்தி புற்றுநோயால் அனுபவித்த வேதனைகளை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது.
மறுநாள் என் மகனின் நண்பன் கோகுலை அழைத்துக்கொண்டு மருத்துவர் சந்திரசேகரிடம் சென்றேன். ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, “சிறிய கட்டிதான். சாதாரணமான கட்டியாகத்தான் இருக்கும். அதை எடுத்துவிட்டால் பிரச்னை இருக்காது. கவலை வேண்டாம்” என்றார்.
நான் அமெரிக்கா செல்ல இருப்பதைச் சொன்னேன். “நீங்கள் மதுரை சென்று, புற்றுநோய் நிபுணர் மோகன் பிரசாத்தைப் பாருங்கள்” என்றார். நானும் பலரிடம் விசாரித்தேன், எல்லாரும் மோகன் பிரசாத்தைதான் சந்திக்கச் சொன்னார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு அவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் சிறந்த மருத்துவர் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன, அவரைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்.
மோகன் பிரசாத் வந்தார். நர்ஸ் என்னை ஒரு மேஜை மீது படுக்கச் சொன்னார். மருத்துவர் ‘எந்தப் பக்கம்?’ என்று கேட்டார். சொன்னேன். கண்களை மூடச் சொன்னார். மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை. ஒரு பெரிய ஊசியை எடுத்து மார்பகத்துக்குள் இறக்கினார். வலியால் துடித்துவிட்டேன். திசுவும் திரவமும் எடுத்தாயிற்று. நர்ஸ் கொஞ்சம் இருங்கள், இன்னோர் ஊசி இருக்கிறது, அது கொஞ்சம் வலிக்கும் என்றார். அடப்பாவிகளா, இப்போ வலிக்காமல் ஊசியை இறக்கினதாக நினைத்துவிட்டீர்களா என்று சொல்லிக்கொண்டேன்.
ஊசி குத்திய இடத்திலிருந்து ரத்தம் கசிந்தது. நர்ஸ் அதில் ஒரு பிளாஸ்திரி ஒட்டி, இரண்டு நாட்களுக்கு எடுக்கக் கூடாது என்றார். இப்படிக் கட்டியிலிருந்து திசு எடுக்கும் சடங்கு ஒரு வழியாக முடிந்தது.
மருத்துவர் கோகுலை அழைத்தார். “கேன்சர்தான். அடுத்த வாரம் ஆபரேஷன் செஞ்சிடலாம். ஒன்றரை லட்சம் செலவாகும். பணம் ரெடி பண்ணிட்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு, மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
கோகுல் அமைதியாக வந்தார். புற்றுநோய் என்பதை என்னிடம் சொல்லவே இல்லை. ஆனாலும் அது புற்றுநோயாக இருக்கலாம் என்று என் மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது. மகனுக்கும் மருமகளுக்கும் தகவல் சொன்னேன். வேறு ஒரு மருத்துவரிடமும் கருத்துக் கேளுங்கள் என்றார்கள். உடனடியாக மகனால் இந்தியா வர முடியாத சூழல் என்றான். நான் பார்த்துக்கொள்கிறேன், நேரம் கிடைக்கும்போது வந்தால் போதும் என்றேன்.
அடுத்த இரண்டு நாட்களில் சிறப்பு மருத்துவரைத் தேடினேன். என் நண்பரும் மருத்துவருமான தேவ் ஆனந்தைத் தொடர்பு கொண்டேன். அவரிடம் கோவை சென்று இன்னொரு மருத்துவரிடம் கருத்துக் கேட்டு வருகிறேன் என்றேன். அவரும் சரி, ஆனால் மதுரையிலேயே நீங்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்றார். எனக்கு விருப்பமில்லை என்றேன். அப்படியென்றால் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார். மறுநாள் கோவை நோக்கிக் கிளம்பினேன்.
(இன்னும் பகிர்வேன்)
படைப்பாளர்:
மோகனா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இந்த தொடரில் புற்றுநோய் உங்களுக்கு ஏன் வந்தது என்றும் எழுதினால் நன்று. ஏன் வந்தது என்று தெரியவில்லை என்றால்?!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நமது கடமை.
முதல் அத்தியாயத்திலேயே விடாது வாசிக்கக் கோரும் நடை அழகு.தொடர்க தொடர்வோம்.