கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுமிகள் இளம்பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதை மத அடிப்படைவாத ஃபாசிச சக்திகள் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை நாம் இரண்டு விதமாக அணுகலாம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமியப் பெண்கள் உள்ளிட்ட பெண்கள் அனைவருக்கும் வழங்கும் அனைவருக்கும் விரும்பியதைக் கற்கும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். மற்றொன்று மத அடையாளத்தை சுட்டிக்காட்டி அவர்களது உரிமையைப் பறிப்பதாகும்.
இந்த இரண்டு காரணிகளுன் வெவ்வேறாக அலசப்படவேண்டியவை. பெண் கல்வி மறுப்பு என்பது சமரசமின்றி அடிப்படைவாதம், அது கண்டிப்பாக பெண்ணின் உரிமையைப் பறிப்பதாகும், அதற்கு எதிராக சக பெண்களாக நாம் ஒருமித்த குரல் எழுப்பவேண்டும்.
மத அடையாளம் பிரச்னையில் முற்போக்காக சிந்திப்பவர்கள் சற்று குழம்பிப் போயிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஹிஜாப், நிகாப், பர்தா என மூன்று முறைகளை இஸ்லாமியப் பெண்கள் கடைபிடிக்கிறார்கள். இதில் ஹிஜாப் முறை தலையை மட்டும் முக்காடிட்டுக் கொள்வதாகும். இவ்வாறு துப்பட்டி கொண்டு தலையை மூடிய இஸ்லாமியப் பெண்களை நாம் காலம் காலமாக பார்த்துகொண்டேதான் இருக்கிறோம். தங்களை இஸ்லாமியராக அடையாளப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் பெண்கள் அதை அணிகிறார்கள்.
பெண்ணின் ஹிஜாபை ‘விடுதலையற்றது’, ‘அடிமைத்தனம்’ என கேள்வி கேட்கும் ஆண்கள், எப்போதாவது அதே மத அடையாளத்தை சுமந்துவரும் ஆணின் குல்லாய், சீக்கிய டர்பன், பூணூல் போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்களா? இது ஆணாதிக்கமன்றி வேறு என்ன? ஒரே மதத்தைச் சேர்ந்த ஆணை அவனது ஆடைக்காக எதுவும் சொல்லாமல் வாய்மூடிச் செல்லும் சமூகம், பெண்ணின் ஆடையை கேள்விக்குள்ளாக்குவது ஏன்?
அதிலும் பெரும்பான்மை மதத்தின் அடையாளமான பூணூல் யாருக்கும் எந்த இடத்திலும் கண்ணை உறுத்தவில்லை எனில், சிறுபான்மை மதப் பெண் அணியும் ஹிஜாப் ஏன் உறுத்தவேண்டும்? ஆணோ, பெண்ணோ, ஆடை அவரவர் விருப்பம், தேர்வாக இருக்கவேண்டும் என்பதில் நமக்கு எந்த ஐயமுமில்லை. பெண் விடுதலைக்கும் ஹிஜாபுக்கும் என்ன தொடர்பு எனில், எந்தவித அழுத்தமும் இன்றி ஒரு பெண் தானாக விரும்பி ஹிஜாப் அணிவதில் முற்போக்குவாதிகளுக்கு என்ன பிரச்னை இருக்கிறது?
இப்போது ஹிஜாப் பெண்களுக்கு கல்லூரிகளில் அனுமதி மறுக்கும் இந்து மத அடிப்படைவாதிகளிடமிருந்து முற்போக்குவாதிகள், இடதுசாரிகள் ஏன் மாற்றி சிந்திப்பதில்லை? பெண்ணுரிமை என வரும்போது இங்கு வலதும் இல்லை, இடதும் இல்லை என்பது புலனாகிறது.
‘எந்த வித அழுத்தம்’ என்பதை இன்னும் தெளிவாகவே பேசுவோம். ஆட்சி ஹிஜாப் அணிய வலியுறுத்தினால், அதை பெண்ணியம் பேசும் முற்போக்கு சக்திகள் எதிர்ப்போம். அதே சமயம் ஆட்சி ஹிஜாப் அணியக்கூடாது என சொன்னால், அதையும் எதிர்ப்பது தானே சரியாகும்? விரும்பிய ஆடையை சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, எந்த மதத்தவரும் கடைபிடிக்க அவருக்கு இந்த நாட்டில் உரிமையுண்டு. சமூகம், குறிப்பாக மதக் கட்டமைப்பு பெண்ணுக்கான ஆடையை நிச்சயம் செய்தால், அதை கண்டிப்பாக அணியவேண்டும் என வற்புறுத்தினால், அதற்கு எதிராக சமூகம் வெகுண்டு எழத்தான் வேண்டும்.
சமூக அழுத்தம் என்ற peer pressure இஸ்லாமியப் பெண்களுக்கு உண்டு என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அதே சமயம், தன்னிச்சையாக ஹிஜாப் அணிவதை ஒரு பெண் தன் தேர்வாகக் கொண்டால், அதைத் தடுக்க அரசுக்கோ, அடிப்படைவாதத்துக்கோ உரிமையில்லை. அதைக் கண்டும் காணாமல் போவது முற்போக்கு பேசும் சக்திகளுக்கும், லிபரல்களுக்கும் அழகுமல்ல.
மத அடிப்படைவாதமா, பெண்ணுரிமையா என இதை ஒற்றையா இரட்டையா என அணுகவேண்டிய அவசியமும் இல்லை. ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் மதக்கட்டமைப்பு மூலம் பெண் உடல்மேல், அவள் உடை மேல் தன் கட்டற்ற உரிமையை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கிறது என நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். இஸ்லாம் உலகம் முழுக்க ஒரே சீரான பழக்கவழக்கங்களைக் கொண்ட மதமல்ல என்பதையும் உணரவேண்டும். மத்திய கிழக்கில் கடைபிடிக்கப்படும் இஸ்லாமியப் பண்பாடும், இங்கே தமிழ் நிலப்பரப்பில் உள்ள இஸ்லாமிய பழக்கவழக்கங்களும் வேறு. ஒற்றை நோக்கில் எந்த மதத்தையும் நாம் அணுகுவது ஆபத்தில்தான் முடியும்.