இந்தக் கேள்விக்கான விடையை தெளிவாக முனைவர் தீபான்ஷு மோகன் இங்கு தருகிறார்- ஒன்றுமில்லை!
பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் மூலம் ஏழு முக்கிய தொழில் துறைகளில் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘நூறில் இந்தியா’ திட்டமும் பெரும் முதலீடு தேவைப்படும் சாலைக் கட்டமைப்பு, ரயில்வே, விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு போன்ற தூறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேம்போக்காகக் காணும்போது இது பெரும் நிறுவனங்களுக்கும் அதில் பணியாற்றும் ஆண்களுக்கும் உதவிடுமேயன்றி, சிறுதொழில், தகவல் தொடர்பு, வேளாண்மைத் துறைகளில் பெருமளவில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் பெண் வர்க்கத்துக்கு எந்தப் பலனும் தராது. 2011ம் ஆண்டு சென்சஸ் கணக்கின்படி இந்திய மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதன் மூலம் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவோ, பணிப்பாதுகாப்பு கிடைக்கவோ வாய்ப்பின்றிப் போகும்.
பெண்களுக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘நாரி சக்தி’ திட்டத்தின் கீழ், மிஷன் போஷன் 2.0, மிஷன் வாத்சல்யா, மிஷன் சக்தி போன்ற முன்னெடுப்புகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். கூடவே இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இன்னும் அதிக வேலைவாய்ப்புகள் உருவானால் கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான திட்ட மதிப்பீட்டு அளவு 2023ம் ஆண்டு 73000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை இது பெரும் ஏமாற்றமே. கொரோனா நாடடங்கு காலத்தில் பணியிழந்த பல நகர்ப்புற எளிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் கிராமப்புறத்தை நோக்கிப் படையெடுத்திருக்கும் சூழலில் இவ்வாறான திட்டத்துக்கு முதலீட்டைக் குறைப்பது அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும்.
இந்தியத் தொழில்தூறையில் பெரும்பங்கு வகிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்கு 21%க்கும் குறைவாகவே உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறையில் நூறு தொழில் நிறுவனர்களில் ஏழு பேர் மட்டுமே பெண்கள் என புள்ளிவிவரம் சொல்கிறது. இவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் அவசியம் கருதியே தொழில்துறைக்குள் நுழைகின்றனர்.
ஒழுங்கமைந்த தொழில்துறையில் பெண்களுக்கு சரியான பங்கேற்பு வழங்கமுடியவில்லை எனில், அமைப்புசாரா துறைகளிலாவது அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்த வழிசெய்திருக்க வேண்டும், அதுவும் சரிவர செய்யப்படவில்லை. அவசர காலக் கடன் தொகை (ECLGS) திட்டத்தை மட்டும் மார்ச் 2023 வரை நீட்டித்து, அதன்மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கடன் சுமையை ஏற்றுமே அன்றி, கோவிட் காலகட்டத்தில் போதிய பலன் தருமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தக் கடன்கள் எவ்வாறு, யார் மூலம் வழங்கப்படும் என்ற தெளிவும் தரப்படவில்லை.
இவற்றைவிட மோசமாக பாதிக்கப்படவிருப்பது சமூக நலத்திட்டங்களே. கல்விக்கும் உடல்நலனுக்குமான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மொத்த அரசுச் செலவினத்தின் இது 26.6% ஆகும். ஊட்டச்சத்து உள்ளிட்ட சிறு குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கு கடந்த பட்ஜெட்டைவிட 11.86% அதிகமான தொகை ஒதுக்கப்பட்டாலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பல்கலைக்கழகம், ஒரு வகுப்பு ஒரு டிவி சானல் திட்டங்கள் என்ன நலன் பயக்கும் எனத் தெரியவில்லை.
இடைநிற்றலும், கல்வி ஒதுக்கமும் கூடிவிட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டங்கள் பலனளிக்குமா என்பது ஐயமே. குழந்தைப் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 1500 கோடியிலிருந்து 900 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே மாநில அளவில் ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு சமாளிக்கக்கூடும். ஆனால் சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களின் நிலை மோசமாகிவிடும்.
இருக்கும் நிதியை கோவிட் நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் செலவிட்டுவிட்டு கையை உதறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினத்தைச் சுருக்குவது என்பது பெண்கள், குழந்தைகளைக் கொடும் காட்டில் கைவிடுவதற்கு சமம்.