இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மாவைப் பார்க்க சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். தெரிந்த பெண்கள் சிலர் அம்மாவின் உடல்நலனை விசாரிக்க வீட்டுக்கு வந்திருந்தனர். பேச்சு உடல் பிரச்னை, வாக்கிங், ஜிம் என்று எங்கெங்கோ சுற்றி நைட்டியில் வந்துநின்றது.
“இந்த பொண்ணுங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ? நைட்டியைப் போட்டுட்டுப் பால் வாங்க வர்றது, குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில ஏத்திவுட வர்றது, நைட்டியோட டூவீலர்ல பக்கத்துத் தெரு கடைக்குப் போறதுன்னு அலும்பு பண்றாங்க…” என்று ஒருவர் புலம்பினார்.
“இதுல நைட்டிக்கு மேல துண்டோ துப்பட்டாவோ போட்டுட்டுப் போவாங்க. அதுவே சகிக்காது. சில பேரு அதுங்கூட போடாம, நைட்டி மட்டும் போட்டுட்டு சுத்தறத எங்க போய்ச் சொல்றதுங்க்கா… ” என்று திட்டித் தீர்த்தார்.
“ஏம்பா, நைட்டி போட்டுட்டுப் பொண்ணுங்க வெளிய வந்தா என்ன பிரச்னை? ” என்று கேட்டேன்.
“அது…” என்று நெளிந்தவர், “பாக்கறதுக்கு ஒரு மாதிரி இருக்குதில்லைங்க… ஒல்லியா இருக்கறவங்களாச்சும் பரவால்ல, குண்டா இருக்கிற பொண்ணுங்க போட்டா நல்லாவா இருக்கு…” என்று இழுத்தார்.
“ஏம்பா, ஆம்பளைங்க கைலியைத் தூக்கிக்கட்டிட்டு, தொந்தி தெரிய, மேல சட்டைக்கூடப் போடாம, தெருவுல போறாங்களே, அது பிரச்னை இல்லையா?” என்று புன்னகையுடன் கேட்க, அந்தப் பெண்கள் அசவுகரியமாகச் சிரித்தனர். பாவம், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆமாம், பெண்கள் நைட்டியை அணிவதில் பொதுச் சமூகத்திற்கு என்ன பிரச்னை? நைட்டி இரவு உடை. அதை இரவில் மட்டும் தான் அணிய வேண்டும் என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று பெரும்பான்மைப் பெண்கள் அன்றாடம் வீட்டில் அணியும் உடையாக நைட்டி மாறிவிட்டது. நைட்டி எளிமையாக இருக்கிறது. அணிய வசதியாக இருக்கிறது. இறுக்கிப் பிடிக்கும் ரவிக்கை, ஐந்தரை மீட்டர் புடவையைச் சுற்றிக் கொண்டு வீட்டு வேலை செய்வதைவிட, தளர்வான நைட்டியைப் போட்டுக் கொண்டு செய்வது வசதியானது. விலையும் குறைவு. நூறு ரூபாய்க்குகூட நைட்டி கிடைக்கிறது. இதனால் கிராமத்துப் பெண்கள், வயலில் வேலை செய்வோர், கட்டிட வேலை செய்யும் பெண்கள் என்று உழைக்கும் பெண்கள் பலர் நைட்டிக்கு மாறிவிட்டனர்.
ஆனாலும், வீட்டுக்கு வெளியே நைட்டியுடன் பெண் செல்வதை, சிறு நகரங்களும் பெருநகரங்களும் ஆட்சேபித்துக் கொண்டே இருக்கின்றன. இதை நேரடியாக அந்தப் பெண்களிடம் சொல்ல முடியாது என்பதால், மறைமுகமாகக் கிண்டலடிப்பதையும் விமர்சிப்பதையும் ஆணாதிக்கப் பொதுப்புத்தி தொடர்ந்து செய்கிறது. இதில் ஆணாதிக்கப் பார்வையுள்ள பெண்களும் அடக்கம். “நைட்டியில் வெளியே வருவது நாகரீகமானது அல்ல” என்று நைட்டி அறிமுகமான காலத்திலிருந்தே இந்தச் சமுதாயம் சொல்லி வருகிறது. புடவை அணியும் போது இடுப்பு தெரிகிறது, தொப்புள் தெரிகிறது என்று புலம்பும் சமூகம், சுரிதார் அணிந்து லெக்கிங்ஸ் போடும் போது தொடை, கால்களை இறுக்கிப் பிடிப்பதால் உடலமைப்பு அப்படியே தெரிவதாகக் குமுறும். இது கழுத்து முதல் கால் வரை பெண்ணின் உடலை மூடும் உடைதானே; அதுவும், பிரா, உள்பாவாடை அல்லது ’நைட்டி ஸ்லிப்’ எனப்படும் முழுநீள சிம்மீஸ் அணிந்து, அதற்கு மேல்தான், பொதுவாகப் பெண்கள் நைட்டியைப் போடுவார்கள். அப்புறம், இந்தப் பொதுச் சமுதாயத்திற்கு என்னங்க பிரச்னை?
ஒருபுறம் குடும்பப் பெண்கள் நைட்டி அணிந்து வெளியே வரமாட்டார்கள் என்று ஆன்மீக குரூப் பிரகடனம் செய்ய, ’இது குடும்பப் பெண்கள் அணியும் நைட்டி’ என்றே ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் நைட்டிக்கு விளம்பரம் செய்யும் கூத்து மறுபுறம். இந்தக் குடும்பப் பெண் முத்திரை படுத்தும்பாடு இருக்கிறதே… சேலை அணிந்து வெளியிடங்களுக்கு வருபவர்கள்தாம் அக்மார்க் குடும்பப் பெண்களாம். ’அப்ப, இந்த சுரிதார்ங்க?’ ’போட்டுக்கலாம், ஆனால், கட்டாயம் துப்பட்டா போட்டுட்டு வரணும்.’ ’இந்த குர்தான்னு ஏதோ சொல்றாங்களே…’ ’கல்யாணமான, வசதியான பொண்ணுங்ககூட போட்டு வர்றாங்க… அந்தக் கர்மத்தையும் ஒத்துக்கத்தானே வேண்டியிருக்கு, ஆனா தாலியும் செயினும் கழுத்துல போட்டிருக்கணும்…’ இப்படியெல்லாம் ’குடும்பப் பெண்ணாக’ முத்திரை குத்த நிபந்தனை விதிக்கிறது ஆணாதிக்கச் சமுதாயம். ஆனால், இன்றுவரை, நைட்டியில் வெளியே வரும் பெண்ணை மட்டும் கொலைக்குற்றம் செய்தவரைப் போல ஏசுகிறார்கள். ஆண்களின் கைலியைப் போல, டீசர்ட், பெர்முடாஸைப் போல பெண்கள் நைட்டியை கேஷுவல் உடையாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
நைட்டியைப் பற்றி நெட்டில் துழாவிக்கொண்டிருந்தேன். 2012ஆம் ஆண்டில் பெங்களூரில் இருக்கும் பெரிய தனியார் பள்ளி ஒன்று, தாய்மார்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவந்து விடும்போது நைட்டி அணிந்து வரவேண்டாம் என்று சுற்றறிக்கை விட்டிருக்கிறது. நைட்டியில் பள்ளிக்கூட கேட்டருகே அவர்கள் குழந்தையை விட்டுச்செல்லும் போது, அதை மற்ற குழந்தைகள் கேலி செய்கின்றனவாம், அது அவர்கள் குழந்தையைத்தான் பாதிக்கிறதாம் என்றும் கூறியிருக்கிறது. என்னங்க கதை இது? அதிகாலையில் எழுந்து சமைத்து, குழந்தையைத் தயார் செய்து, அதற்கு காலையுணவு கொடுத்து, மதியத்திற்குக் கட்டிக் கொடுத்து, குறித்த நேரத்திற்குள் கிளம்பி பெல் அடிப்பதற்குள் ஸ்கூலில் கொண்டுவிட வேண்டும். அதைப் பார்ப்பார்களா, இல்லை உடை மாற்றிக் கொண்டிருப்பார்களா? ’உன் அம்மாவின் உடை அவர் உரிமை. அதைப் பிறர் கேலி செய்தால் பிரச்னை அவர்களிடம்தானே ஒழிய, உன் தாயிடம் இல்லை’ என்று சொல்லிக் கொடுப்பதுதானே ஒரு பள்ளியின் கடமை. அதை விட்டுவிட்டு கேட்டருகே விடுவதற்கெல்லாம் டிரெஸ் கோட் சொல்லிக் கொண்டிருப்பது அப்பட்டமான உரிமை மீறல்.
சரி, இது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புதானே, இப்போது முன்னேறியிருப்பார்கள் என்று சமாதனம் செய்துகொள்ள நினைத்தால்… ’நோ’ என்றது 2018 செய்தி. 2018இல் ஆந்திரா மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலபள்ளி கிராமத்தில், பஞ்சாயத்து நிர்வாகம், பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதித்திருக்கிறதாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பெரியவர்கள் இந்த உத்தரவை வழங்கினார்களாம். காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பெண்கள் நைட்டி அணிந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; தடையை மீறி நைட்டி அணிபவர்கள் பற்றி ஊர்ப் பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தால் 1,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். வசூலிக்கும் அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தண்டோரா அடித்து தெரிவித்திருக்கிறார்கள். இதைப் பற்றி அந்த கிராமத்தில் இருக்கும் 2,400 பெண்களில் ஒருவர்கூடப் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பது கூடுதல் தகவல்.
நைட்டி மீது ஒட்டுமொத்த ஆணாதிக்கச் சமுதாயத்திற்கும் இருக்கும் கோபத்தின் ஒரு வெளிப்பாடாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன். இங்கே பொதுப்புத்தியின் உளவியலை ஆராய்வோம். பெண் அழகாக, ரம்மியமாகக் காட்சியளிப்பது முக்கியம் என்று அது எண்ணுகிறது. அதற்கு வாய்ப்பளிக்காத நைட்டியை வெறுக்கிறது. பெண்ணுக்கு அது வசதி என்பதையெல்லாம் அது பொருட்படுத்துவதில்லை. ’நைட்டி நாகரீகமான உடை இல்லை’ என்று ஊடகங்கள் வாயிலாகவும், பிற்போக்குவாதிகளின் கூற்றுகள் மூலமும் மூளைச்சலவை செய்துகொண்டே இருக்கிறது. இதைப் பல பெண்களும் நம்பிக்கொண்டு, அதைக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பச் சொல்லி, சகப் பெண்களைக் குறை சொல்வதுதான் கொடுமை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போடாதீர்கள். நைட்டி அணியும் பெண்களை, அதை வைத்து ’ஜட்ஜ்’ செய்வதும், மதிப்பிடுவதும் மிகத் தவறு.
தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது. வெளியிடங்களுக்கு நைட்டியில் வரும் பெண்ணை விமர்சிப்பதும் வெறுப்பைக் கக்குவதும் மிகத் தவறானது. ஆணாதிக்கச் சமுதாயம், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்ணுடையை விமர்சித்துக் கொண்டே இருக்கப் போகிறது? இன்றே இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் தோழர்களே. பெண்ணை அவள் போக்கில் இயங்கவிடுங்கள் தோழிகளே.
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.