ஒரு நாள் காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு வேளையாகப் பிரிப்பது போல் மனித வாழ்க்கையை நான்காகப் பிரித்தால் முதல் இருபது வருடங்கள் காலை, அடுத்த இருபது வருடங்கள் மதியம், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை மாலை, அதன்பின் எண்பது வயது வரை இரவு என்று கொள்ளலாம்.

இதில் காலையும் மதியமும் பலவிதக் கடமைகளில் கழிந்து விடுகிறது. கல்வி, வேலை, கல்யாணம் என்று மூச்சு விடாமல் இருந்து திரும்பிப் பார்த்தால் மாலைப் பொழுது வந்து விடுகிறது. அதுதான் நாற்பது வயது. அது கூடவே ஒருவிதமான அலுப்பையும் சலிப்பையும் கூட்டி வருகிறது.

பெண்களுக்கு இளமை என்பது கடுமையாக இருக்கும் பருவம் இந்த நாற்பது ப்ளஸ்கள். அதன்பின் முதுமை வருவது அவரவர் மனநிலையைப் பொறுத்துதான். பொதுவாக இருபதுகளில் திருமணமான ஒரு பெண் ஒன்றிரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களும் வளரிளம் பருவத்தில் நுழைந்து சிறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கிய பிறகு ஒரு தனிமையை உணரும் பருவம் அது.

பெண்களின் ஏழு பருவங்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

  • பேதை – 1 வயது முதல் 8 வயது வரை
  • பெதும்பை – 9 வயது முதல் 10 வயது வரை
  • மங்கை – 11 வயது முதல் 14 வயது வரை
  • மடந்தை – 15 வயது முதல் 18 வயது வரை
  • அரிவை – 19 வயது முதல் 24 வயது வரை
  • தெரிவை – 25 வயது முதல் 29 வயது வரை
  • பேரிளம் பெண் – 30 வயதுக்கு மேல்

அந்தப் பேரிளம் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று ஆண்கள் ஏன் யோசிப்பதில்லை?

திருமணம் முடித்து, விருப்பமோ இல்லையோ கணவருடன் நேரம் கழித்து, பிள்ளைகள் பெற்று, அவர்களுடன் பொழுதைப் போக்கி, அவர்களுக்குப் பாடம், பண்பு, நல்லது கெட்டது எல்லாம் சொல்லிக் கொடுத்து, மூச்சு விட்டு நிமிர்ந்து பார்த்தால் வருடங்களோடு இளமையும் விடை பெறத் தொடங்கியிருக்கும். அந்தி சாயத் தொடங்கியிருக்கும்.

அதன்பின் திரும்பிப் பார்த்தால் அவளுக்கென்று, அவளுடன் யாருமேயில்லை என்பது தனிமையின் பொட்டல் வெளியில் நின்றிருக்கும் போதுதான் புத்தியில் உறைக்கும். இதில் பெரும்பாலான பெண்கள் இனி என்ன செய்வது என்றறியாமல் கையறு நிலையில் இருக்கும் நிலையிலேயே தொடர்வார்கள். குழந்தைகளின் திருமணம், அவர்களின் குழந்தைகளை வளர்ப்பது என்று அந்தக் கண்ணி அறுபடாமல் தொடரும். இதுதான் ஒரு பெண்ணின் வாழ்வு பூரணத்துவம் பெறும் நிலை என்ற பிதற்றல்கள் எல்லாம் பாராட்டுகள் என்ற பெயரில் மூளையில் திணிக்கப்பட்டு மயக்கம் தரும். தெய்வ நிலைக்கு உயர்த்தி நம்மையே பலிகடாவாக்குவது புரியாமல் நாமும் வாகாய்த் தலையைக் காட்டிக் கொண்டு நிற்போம்.

நாற்பதுகளில் தான் ஒரு பெண்ணின் உடலும் உணர்வுகளும் தேவைகளும் உச்சத்திற்குச் செல்கின்றன. அவளது இளமை விடைபெறப் போகிறது என்பதைவிட முதுமை அழையா விருந்தாளியாக வரப் போகிறது என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது. போதாக்குறைக்கு உடல் உபாதைகளும் அவளைப் படுத்தி எடுக்கும். அது புரியாமல் அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்ற அளவில் தான் இந்திய ஆண்கள் தங்களது குடும்பப் பெண்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

உடல் பரபரப்பாகும் நேரம் அதுதான். ஹார்மோன்களின் ஆட்டத்தினால் பாலியல் தேவை அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் வீட்டில் பெண்களின் பாலியல் தேவை இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது? “இந்த வயசுல இது தேவையா?” என்றும், “பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற வயசுல உனக்கு இது அசிங்கமாப் படலையா?” என்றும் அருவருக்கப்படுகிறது. இந்த ‘அடக்கப்பட்ட’ தேவையே அவளின் கத்தல்களுக்கும் கோபங்களுக்கும் அடிப்படை.

வயதானால் என்ன? பசி, தாகம் போல அதுவும் ஓர் இயற்கையான உணர்வுதான் என்ற புரிதல் ஏன் நமது சமூகத்திற்கு இல்லாமல் போனது? ஆனால், தொண்ணூறு வயதானாலும் ஓர் ஆணின் பாலியல் தேவை இங்கு சகஜமாகப் பார்க்கப்படுகிறது. ஆதிக்கச் சமூகம் தானே இது?

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதை அவள் எத்தனையோ முறை வெளிப்படுத்துகிறாள். ஆனால், எத்தனை கணவர்களும் குடும்பத்தினரும் அதைப் பாராட்டுகிறார்கள்? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருக்கிறார்கள். நன்றாகச் சமைக்கும் திறமை, அழகாகக் கோலம் போடுவது, அருமையாகக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுவது, வீட்டை நன்கு அலங்கரிப்பது, உடைகளை டிசைன் செய்வது, சிறந்த பேச்சாற்றல், புகைப்படங்கள் எடுப்பது என்று எண்ணிலடங்கா திறமைகள் கண்டுகொள்ளப்படாமலே போய்விடுகின்றன.

அதை வெளியாள் ஒருவர் கண்டறிந்து பாராட்டும் போது மனம் பூரித்துப் போகிறது. இது தொடரும் போது நாளடைவில் மனம் அவர்கள் பக்கம் சாயத் தொடங்குகிறது. இதனால்தான் குடும்பத்தில் பிரச்னை ஏற்படத் தொடங்குகிறது.

எல்லார் மனமும் ஒரு சிறிய பாராட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் தான் ஏங்கித் தவிக்கிறது. அது கிடைக்கும் இடத்தில் மனம் இயல்பாகச் சாய்ந்து விடுகிறது. இதைத் தவறென்று சொல்பவர்கள் எத்தனை பேர் இன்று மனம் விட்டு ஒரு செயலைப் பாராட்டினீர்கள்?

நாற்பது வயதில் குழந்தைகள் வளர்ந்து வருவார்கள். அப்போது தமக்கு வயதாவதை உள்ளம் உடனே ஏற்றுக் கொள்ளாது. முன் நெற்றியில் நரைமுடிகள் வரும். நெற்றியில் கோடுகள் விழும். கண்ணோரங்களில் காக்கைச் சுருக்கங்கள் தோன்றும். ஆனால், அவற்றை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும்.

மனம் தடுமாறி சலனமுறும்‌ அபாயமும் இந்தப் பருவத்தில் உண்டு. இதற்கு முழுமையான காரணம் வீட்டினரால் கண்டுகொள்ளப்படாமல் போவதும் அலட்சியப்படுத்தப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் தாம். ஆண்கள் தங்கள் மனைதாண்டி பிற பெண்களை நோக்குவது இயல்பாகப் போய்விட்ட இந்தச் சமூகத்தில் பெண் சாதாரணமாக அயலானிடம் பேசினாலே கற்பு போய்விடும் என்று கதைக்க மட்டும் நன்றாகத் தெரியும்.

தன்னை யாராவது கொண்டாட மாட்டானா என்று பெண் ஏங்கும் வயது இதுதான். தனக்கே தனக்காக, தனது திறமைகளுக்காக ஓர் ஆண் தன்னை உயரத் தூக்கி வைத்துப் பேசமாட்டானா என்று மனம் அலைபாயும். திருமணமான நாளில் இருந்து மட்டம் தட்டிய பேச்சுகளைக் கேட்டவள் தனக்கான புகழுரைகளுக்காக ஏங்குகிறாள். அதைத் தருவது கணவனாக இருக்கும் பட்சத்தில் பிரச்னைகள் ஏதும் இல்லை. இல்லையெனில் தேவையற்ற பிரச்னைகள் தான் ஏற்படும். அப்போது கூட, “உனக்கெதுக்கு இதெல்லாம்? சமைச்சோமா புருஷன் குழந்தைகளைக் கவனிச்சோமானு இருக்காம… தேவையில்லாத வேலை பார்த்தா இப்படித்தான்… கண்டவனும் வந்து பேசுவான்..” என்று அப்போதும் பெண்ணைத் தான் ஒடுக்குவார்கள்.

பெண் என்பவள் தனக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவள் என்று ‘செவ்வாய் கிரகத்தில்’ இருந்து வந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஆண்களின் நினைப்பை மாற்றினால் தான் மாற்றங்கள் நிகழும்.

என் நெருங்கிய தோழி, நாற்பதைத் தாண்டியவள் தான். தன்னுடன் படித்த நண்பர்களுடனான சந்திப்புக்கு அதுவும் குடும்பத்தினரோடு பங்கேற்கும் நிகழ்வுக்குச் செல்வதற்கு அனுமதி (?) கோரியிருக்கிறாள். அதற்கு அவளுக்கு கிடைத்தது, “உனக்குக் குடும்பம் முக்கியமா, இல்லை ஃப்ரெண்ட்ஸா?” என்ற கேள்வியும், “நீயெல்லாம் குடும்பத்துக்கு லாயக்கில்லை”என்ற வசவும் தான்.

தன்னையும் குடும்பத்தையும் தாண்டி ஒரு பெண் யோசிக்கக் கூடாதென்பது தானே இதன் பொருள்? அவளுக்கென்று எந்த நண்பர் வட்டமும் இருக்கக் கூடாதென்ற சுயநல எண்ணமும் தான் இதில் கலந்திருக்கிறது.

இன்னொரு தோழி தான் தனியாகச் செல்வதாகச் சொன்னதும் குழந்தைகள் புருவம் உயர்த்தி நோக்கியிருக்கிறார்கள். “இத்தனை நாள் இல்லாமல் இதென்ன புதுசா?” என்றும், “நீ இப்ப எதுக்கு ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கப் போற?” என்றும் கேள்விக் கணைகளை வீசியிருக்கிறார்கள். அம்மா என்றால் அவள் எந்நேரமும் வீட்டிலேயே இருந்து கொண்டு, சமைத்துத் தள்ளிக் கொண்டு, துணிகளை வெளுத்துக் கொண்டு தான் இருப்பாள் என்ற ஆணாதிக்கச் சிந்தனையைத் தானே அந்தக் குழந்தைகளின் மூளையில் பதித்து வைத்திருக்கிறது இந்தச் சமுதாயம்?

அவளும் நம்மைப் போல இளம் பருவத்தைக் கடந்து வந்தவள்தானே? அவளுக்கும் ஒரு நண்பர் குழாம் இருக்கும்தானே? இந்த மாதிரியான சிந்தனைகள் குழந்தைகள் மனதில் ஏற்படாமல் இருக்க யார் காரணம்? முழுக்க முழுக்க ஆணாதிக்கம் ததும்பும் இந்தச் சமூகம் தான். அதுதான் விக்கிரமாதித்தன் கழுத்தை இறுக்கும் வேதாளம் போல பெண்களின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும், தனது நட்புகளைப் பார்க்க ஒரு பெண் தனது கணவரின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தகவல் சொல்லிவிட்டுப் போய்வரும் நிலை இன்னும் வரவில்லை என்பது எத்தகைய வேதனையான விஷயம். குடும்ப உறவுகளுக்குள் ஆரோக்கியமான உறவு நிலை நிலவவில்லை என்பதுதான் நிஜம். தனக்கான தருணங்களை ஒரு பெண் அனுபவிக்க ஏன் மறுக்க வேண்டும்? தனக்கென சில சந்தோஷங்களை அனுபவிக்க யாரும் தடை சொல்லக் கூடாது.

தன் மனைவி சமையலைப் புகழ்வது என்பது நிறைய ஆண்களுக்குக் கைவருவதில்லை. நன்றாக இல்லாத சமையலைக்கூட மனம் புண்படாதபடி சொல்லித்தான் பாருங்களேன். மறுநாளில் இருந்து இன்னும் சுவையான உணவு கிடைக்கும். ஆண்கள் தங்கள் கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு ஒருநாள் மனைவிக்குச் சமைத்துத் தந்தால் ஒன்றும் குறைந்துவிட மாட்டார்கள். அவரவர் பணிகளைப் பொறுத்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது ஒன்றும் தவறில்லை.

சலனங்களை அடக்கும் பக்குவங்கள் எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை. சறுக்கலோடு தப்புபவர்கள் வெகு சிலரே. ஆழத்தில் விழுந்து எழ முடியாமல் தவிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இந்த நாற்பது ப்ளஸ் வயதில் சலனங்கள் வருவது இருபாலருக்கும் சகஜம் தான். ஆனால், அதைத் தாண்டி வருவது என்பதுதான் நிஜமான சவால்.

உடல்ரீதியாகப் பெண்களுக்கு நிறைய சிரமங்கள் வரும் வயதும் இதுதான். அதை முதலில் கணவன் புரிந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து தனக்கு மனைவி ‘கம்பெனி’ கொடுப்பதில்லை என்று வெளியே போய் சாப்பிட அலையக் கூடாது. அதேபோல் மனைவியும் நினைக்கத் தொடங்கினால், அப்பப்பா… அப்புறம் ஆண்கள் தான் ஆடிப்போக வேண்டும். மனைவியின் உடல்ரீதியான, மன ரீதியான உணர்வுகளை இந்திய ஆண்கள் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும்.

Woman is working on laptop deinking coffe cup

நாற்பது வயதுகளில் உடல் எடை கூடும். கலங்காது உடல்நலனுக்குத் தகுந்தவாறு உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நரை முடியை ‘டை’யிட்டு மறைக்காது கம்பீரமாக மாற்றிக் கொள்ளலாம். (அந்த ‘டை’யினால் வரும் கண்பார்வை கோளாறுகளைத் தவிர்க்கவே இந்தக் கருத்து.) நாம் அழகு என்று ஒரு நாளுக்குப் பத்து முறையாவது தன்னம்பிக்கையோடு வாய்விட்டுச் சொல்ல வேண்டும். நாம் நம்மை முதலில் அழகு என்று நம்ப வேண்டும். அப்புறம் பாருங்கள் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’. எதையும் நேருக்கு நேர் பேச முயற்சி செய்ய வேண்டும். நேர்மை நம்மை இன்னும் கம்பீரமாகக் காட்டும்.

நமக்குப் பிடித்த ஆடைகளை நாம் அணிந்து கொள்ள வேண்டும். அதற்கு யாருடைய அனுமதியையும் கேட்கக் கூடாது. நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். யாரையும் கண் பார்த்துப் பேச வேண்டும். நம் உடலுக்குத்தான் வயதாகிறதே தவிர, நம்முடைய எண்ணங்கள் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.

நாற்பது என்பது சிறகுகள் முளைக்கத் தொடங்கும் இல்லையில்லை மடங்கிக் கிடக்கும் சிறகுகள் விரியத் துடிக்கும் பருவம். அந்த அழகிய அந்திப் பருவத்தை இனிமையாகக் கொண்டு செல்வது தன்னுடன் இருப்பவர்களின் ஆதரவையும் அனுசரணையையும் பொறுத்துதான் அமையும்.

ஒரு நாளின் அந்திப் பொழுது எப்போதுமே அழகாக இருக்கும். பகல் பொழுதின் வெம்மை தணிந்து, இரவின் குளுமை ஆரம்பமாகும் ரம்மியமான நேரம் அது. அந்த நாளின் களைப்பையெல்லாம் மறக்கடித்து விட்டு, இரவின் ஏகாந்தத்தை அனுபவிக்க ஏதுவாகக் கட்டியம் கூறும். அதைப்போல இந்த நாற்பது ப்ளஸ் வயதை முதலில் ஏற்றுக் கொண்டு, அதை ரசனையோடு அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பகிரப்படாத தருணங்களைச் சூடான தேநீர்க் கோப்பையுடன், நமக்குப் பிடித்தமான நட்புடனோ, உறவுடனோ மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிடித்த இசையை அனுபவிக்கலாம். படிக்காத புத்தகங்களை வாசிக்கலாம். மனதை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.  நமது எஞ்சிய முதுமைக் காலத்தை அது இதமாகக் கழிக்க உதவும். முதுமையை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. நாற்பது வயதை இனிமையாக்குவதும், நாராசமாக்குவதும் நமது எதிர்கொள்ளும் திறனையும், அணுகுமுறையையும் பொறுத்தே அமையும். வாருங்கள் தோழிகளே.. நாற்பதுகளை நலமாகக் கடக்கலாம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.