”இன்னிக்கிப் பேருந்து ஒரே கூட்டமா இருந்துச்சு. உட்கார இடமே கிடைக்காம நின்னுகிட்டே வந்து காலையிலேயே அசதி ஆயிடுச்சு. எல்லோரும் பயணிக்கிற நேரமா இருக்கறதால பல நேரம் அப்படித்தான் இருக்கு. என்ன செய்யறது அரசாங்கம் மாற்று ஏதாவது செய்ய முயற்சிக்கலாம் ” என்று பெருமூச்சு விட்டார் கலா.

.

”நின்னுகிட்டே வர்றது சிரமம்தான். பயணத்திலேயே அசதி ஆயிடும்தான். பெண்களாகிய நமக்கு குடும்ப வேலைகளை முடிச்சிட்டுப் பயணம் பண்ணி வேலைக்கு வர்றது இன்னும் கூடுதல் அசதி தான் டீச்சர் ” என்றார் மீனா.

”கடைசி வகுப்பு 9 பி தானே டீச்சர், எப்படி வகுப்பு போச்சு?“ என்று கலா முடிக்கும் முன்பே மீனா படபடவென தொடங்கினார்: “எப்படிப் போச்சா? என்னமோ போங்க ! எப்படித்தான் அந்த வகுப்பைச் சமாளிக்கறதுன்னு பல நேரம் நான் தடுமாறுறேன். பசங்க ஒரே அடாவடியா இருக்காங்க! நீங்க எப்படித்தான் அந்த வகுப்புக்கு வகுப்பாசிரியரா இருக்கிங்களோ! நம்ம பள்ளிலயே அடங்காத வகுப்புகள்ல இதுவும் ஒண்ணு. எப்படித்தான் நீங்க சமாளிக்கறிங்க?“

”கல்விங்கிறது கத்துக்கறது, கத்துக் கொடுக்கறதை உள்ளடக்கியது. கத்துக்கறதும் கத்துக்கொடுக்கறதும் பள்ளியில் மட்டுமல்லாம குழந்தைகள் போற இடம் எல்லாத்திலும் நடக்க வாய்ப்பிருக்கு. பல இடங்களில் குழந்தைகள் கத்துக்கறாங்க. நாமும் கல்வி சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் பலவற்றைத் தேடிப் படித்துக்கொண்டேதான் இருக்கோம். குறிப்பா என்னோட வகுப்பு குழந்தைங்ககிட்டயும் கத்துக்கிட்டே இருக்கேன். தொடர் முயற்சிதானே ஆசிரியராகிய நமக்குத் தேவை. குழதைகளைப் புரிஞ்சுக்கறதுக்கும் முயற்சி செஞ்சுகிட்டே இருக்கேன்“ என்றார் கலா.

“என்னமோ போ! நீதான் என்னென்னவோ பேசற… அதெல்லாம் பசங்களா? பாடம் எடுக்கவே விடமாட்டாங்க. கத்திக் கூச்சல் போடறதே வாடிக்கை அவங்களுக்கு. மத்த டீச்சர்ஸ் எல்லாம் கதறுறாங்க” என்று ஆஜரானார் சுகிதா.

சுகிதாவின் கருத்தை மற்ற ஆசிரியர்களும் ஆம் என்ற தலையசைப்போடு ஆமோதித்தனர்.

”வகுப்பே அடங்காதவங்களா இருக்காங்க. இந்தப் பொம்பளப் புள்ளைங்களுக்கு எங்கப் போச்சு புத்தி? அவங்களும் ஆம்பளப்பசங்களுக்கு ஈடா , ஏன் ஒரு படி மேல போய் ஆடறாங்க. காலம் ரொம்ப கெட்டுப் போச்சு போங்க. இந்தக் காலத்துல ஆசிரியரா இவங்களுக்குப் பாடம் எடுக்கறதே சவாலான விஷயம்தான். கலா கொஞ்சம் கண்டிச்சு வைங்க“ என்று உரையாடலில் புதிதாக வந்தார் லீலாவதி.

“எனக்கொரு சந்தேகம், இந்த வகுப்புலதான் இப்படிப் பசங்க இருக்காங்களா, இல்ல வேற வகுப்புலயும் இருக்காங்களா?“ என்று கொக்கிப் போட்டார் கலா.

“ குழந்தைகளோட அறிவு, இயல்புகள் எல்லாம் ஒவ்வொருவருக்கும் வேறுபாடா, பலவகை அறிவுத்திறன் (MULTIPLE INTELLIGENCE) இருக்குன்னு ஹோவார்டு கார்டனர்ங்கிற அறிஞர் மற்றும் இன்னும் பலர் ஆய்வுசெய்து சொல்லியிருக்காங்க. ஒருத்தருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அறிவுத்திறன்கூட இருக்குமாம். கார்டனர் எட்டு வகையான அறிவுத்திறனை வகைப்படுத்தியிருக்காரு. ஆனா, இப்படி வித்தியாசமா வெவ்வேறு அறிவுத்திறன் (INTELLIGENCE) உள்ள குழந்தைகளுக்கு ஒரே விதமான கல்வி, கற்பித்தல் முறை நடைமுறைல இருக்குங்கிறது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அதைத் தனியா பேசணும். கார்டனர் சொல்ற எட்டு வகையான அறிவுல உடல் இயக்க அறிவுத்திறன் ஒண்ணு இருக்கு. அது இருக்கற குழந்தைகள் உடல் இயக்கம் அதிகமா தரமாதிரியான செயல்பாடுகள் மூலமாத்தான் கத்துக்குவாங்க. சும்மா ஒரு இடத்துல உட்கார்ந்திருக்க மாட்டாங்க. ஆனா, எதார்த்தத்துல ஒரே இடத்துல உக்கார வைச்சு சொல்ல வேண்டிய நிலை நமக்கு. மொழியறிவு இருக்கறவங்க அதிகம் மொழியைப் பயன்படுத்தறவங்களா இருப்பாங்க. மனிதர்களோட தொடர்பு ( INTER PERSONAL INTELLIGENCE ) அறிவுத்திறன் இருக்கவங்க எப்பவும் அதிக மனிதர்களோடே பழகுவாங்க, உரையாடுவாங்க.இப்படிப் பல்வகை அறிவுத்திறனோட இருக்கற குழந்தைகள நாம எப்படிக் கற்பித்தலில் ஈடுபட வைக்க முடியுமோ அதை முயற்சி பண்ணுவோம். குழந்தைகளைத் தனித்தனி அறிவுத்திறன் கொண்டவர்களா புரிஞ்சுக்க முயற்சிப்போம்“ என்றார் கலா.

”என்னென்னவோ பல்வகை அறிவுத்திறன்ங்கிற… சரி, தேடிப் படிச்சு நானும் தெரிஞ்சுக்கறேன். அப்போ வித்தியாசமான பல்வகை அறிவுத்திறனை உள்ளடக்கிய கற்பித்தல் முறைதான் இனி வகுப்புல செய்யணும்ங்கிற. ஆனாலும் இந்தப் பொண்ணுங்க ஆட்டம் தாங்கலியே! நாளைக்கு அவங்க எதிர்காலம் என்னாவுறதுங்கிற கவலை நமக்கு இல்லாம இல்லை” என்றார் லீலாவதி.

”குறும்பு பண்றது, தன்னை வெளிப்படுத்தறது குழந்தைகளின் இயல்புதான். சின்ன வயசுல நாம் ரசித்து மகிழ்றோம். ரொம்ப அடாவடி பண்ணினா, பெருசா ஆண், பெண்ணுனு பிரிச்சுப் பார்க்கறதில்ல. பெரியவங்க ஆகும்போது பதின்ம வயது ஹார்மோன்கள் ஒரு பக்கம் உடம்புல பூந்து விளையாடத் தொடங்குது. பதின்ம வயதுல நம்மகிட்ட இருக்காங்க “ என்றார் கலா.

”சின்னது எப்படியோ இருந்துட்டுப் போகட்டும். வயசுக்கு வந்துட்டா பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருக்கணுமா இல்லியா? ஆம்பளப் பசங்கதான் பெஞ்சு மேல ஏறி ஆடறாங்கன்னா, இவளுகளும் ஆடறாளுங்க. எப்படித்தான் வாழப்போறாங்களோ! நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? இருக்கற இடமே தெரியாமத்தான இருந்தோம். இதெல்லாம் எங்கப் போயி முடியப் போகுதோ?” என்று வெடித்தார் மீனா.

”சின்ன வயசுல சொல்லாத நாம, பதின்ம வயசுல பொதுவாக ஆண், பெண் அடக்கமா, அமைதியா அறிவுறுத்தற நாம, பெண்ணை மட்டும் கூடுதலா அடக்கமா அதிகம் பேசாம குறும்புகள் செய்யாம இருக்கணும் நினைக்கக் காரணம் என்னவா இருக்கும்? குழந்தைமைன்னாவே குறும்புகள்தானே?“ என்றார் கலா.

“என்ன நம்மகிட்ட படிக்கற பொண்ணு சமூகம், குடும்பம், படிப்புன்னு சிறப்பா வளர்ந்து உச்சத்தைத் தொடும்னு நாம நினைக்கறோம். இப்படி அடங்காப்பிடாரி ஆகி படிப்பைக் கோட்டை விட்டுச்சுன்னா வாழ்க்கை வீணாகிடுமேன்னு கவலைதான். எங்க அவுங்க புரிஞ்சுக்கறாங்க?“ என்றார் கரிசனம் கலந்த குரலில் லீலாவதி.

” உங்க ஆதங்கம் புரியுது. காலங்காலமா ஆண் தன் இயல்பை வெளிப்படுத்த இந்தச் சமூகத்தில் வாய்ப்பிருக்கு. பெண் தன் இயல்பைக் கட்டுப்படுத்திக்கிட்டு அடக்கமா வாழணும்னு சமூகமும் குடும்பமும் பெண் மேல திணிக்கிறது மூலமா ஆதிக்கத்தை நிலைநாட்டுது. கல்வி மூலமா பாலின பேதத்தைக் குறைச்சு சமூகத்துல சமத்துவம் மலரணும்னு படிச்சிருக்கோம் அரசாங்கமும் கல்விக் கொள்கைல வைச்சிருக்கு, பயிற்சிகள்லகூட நமக்குச் சொல்றாங்க. பெண்களாகிய நாம் கல்வி கற்றதாலதான் நாமளும் இங்க ஆசிரியரா வந்து சொந்தக்கால்ல நிக்கறோம், விடுதலைக்காற்றைச் சுவாசிக்கறோம். ஆணோ பெண்ணோ குறும்பு, ஆட்டம், பாட்டம், கலகலப்பு இதெல்லாம் சேர்ந்ததே குழந்தைமை. அவர்கள் திறனை வெளிப்படுத்தற மாதிரி நம் கல்வி செயல்பாடுகள், ஆடல், பாடல், விளையாட்டு, நகைச்சுவை, களப்பயணம், ஆய்வு, விமர்சனம்னு பலவகையான யுக்திகளை உள்ளடக்கியதா இருக்கணும். இந்த மாதிரி குழந்தைகள் கற்பித்தல் பணிக்கு உட்படுத்த நாம இன்னும் அதிக தேடலோட வேலை செய்யணும். இதை வகுப்புக்கோ நமக்கோ இடைஞ்சலா நினைக்காம இவர்கள்கிட்ட உரையாடல் நிகழ்த்தலாம், எந்த மாதிரியான கற்பித்தல் முறையை விரும்பறாங்கனு. இப்போ மாற்றம் தொடங்குன காலத்துல இருக்கோம். முற்காலத்துல அதிகமா பெண்ணை அடக்கி வைச்சது இப்போ சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கறதால தற்சமயத்துக்கு அதிக எழுச்சியோட பெண்கள் இருக்கலாம். இல்ல ஒப்பீட்டளவில் முன்னைவிட இப்போ பார்க்க அப்படித் தெரியலாம். இதெல்லாம் இயற்கைதானே! இப்படியெல்லாம் பேசினாலும் மாற்றம் முற்றிலும் நிகழ்ந்திடாததால மாற்றம் முழுமையாக நிகழும்வரை நம் சமூக வாழ்வியல் எதார்த்தத்தையும் நாம் பெண்களுக்குப் புரிய வைக்கணும் “ என்றார் கலா.

“அப்போ அடங்காம ஆடுங்கிறீயா? இல்ல யதார்த்தைச் சொல்லி புரிய வைக்கணும்ங்கிறீயா? பொண்ணுனா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருக்கணும். அதுதான நம் கலாச்சாரம், அதை மாத்தலாமா? நம்ம பாரம்பரியம் என்னாவுறது?” என்றார் மீனா.

“அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு என்னானு பொருள் தெரியாமலே பாதிப் பேர் பொண்ணுனா இப்படி இருக்கணும்ன்னு சொல்லிடறாங்க. அச்சம் அஞ்சுவது கண்டு அஞ்சணும், மத்தபடி ஏன் பயப்படணும்? அப்புறம் மடமை எவ்ளோ விஷயம் தெரிஞ்சாலும் தெரியாதது போல நடிக்கச் சொல்றாங்க இல்ல. நாணம் எந்தச் செயலைச் செய்யவும் வெட்கப்படுனு எதையும் செய்யவிடாமயே பெண்களை வைச்சிருக்கோம். இருக்கறதுல அர்த்தமே தெரியாத வார்த்தைதான் பயிர்ப்பு, அப்படின்னா தன்னைக் கட்டிக்கப் போற கணவரைத் தவிர, வேற ஆண் கை பட்டாக்கூட கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி உணரணுமாம். காலம் எவ்ளோ மாற்றமடைஞ்சு சமத்துவ பாதைல பயணிக்கும் வேளைல இதெல்லாம் கலாச்சாரம்ங்கிற பேர்ல திணிக்கலாமானு யோசிங்க. நாமெல்லாம் பெண்கள் இப்படிப் பாகுபடுத்திப் பார்ப்பதை விரும்பமாட்டோம். நம்மகிட்ட படிக்கற பெண் குழந்தைகளையும் பிரிச்சுப் பார்க்க மாட்டோம்னு நினைக்கறேன். எளிமையா சொல்லணும்னா ஏன் இப்படிங்கிற இயற்கையைப் புரிஞ்சுக்கணும். ஒரு புறம் சமூக எதார்த்தத்தையும் விளங்க வைச்சு மாற்றத்துக்கான முன்னெடுப்பையும் நிதானமா செய்ங்கனு தெளிவாக அவங்களுக்குப் புரிய வைக்கணும். அவங்களுக்கப் பல முறை அரைச்ச மாவையே அறிவுரைங்கிற பேர்ல கண்மூடித்தனமா அரைக்காம நாம பகுத்துப் பார்த்து இதைப் புரிஞ்சுக்கணும். எதார்த்ததுல மாற்றத்தை எப்படி முன்னெடுக்கணும் இல்ல எப்படிப் பார்க்கணும்ன்னு பகிர்ந்துக்கணும். அடக்கமான பொண்ணை இனி சுடுகாட்லதான் தேடணும். அவர்களுக்கான அறித்திறனை வெளிப்படுத்த நம் வகுப்புலயாவது வாய்ப்பு இருக்கட்டும். வகுப்பறை சமத்துவத்திற்கானது” என்றார் கலா.

“இதெல்லாம் எங்களுக்குப் புதுசா இருக்கு. சரி, நம்மகிட்ட படிக்கறக் குழந்தைகள்கிட்ட பாகுபாடில்லாத அணுகுமுறையை அதிகபட்சம் கொண்டுவர முயற்சி பண்றேன். நம்மை அறியாம பல கருத்தை நம் மண்டைக்குள்ள திணிச்சிருக்காங்க” என்றார் மீனா.

அடுத்த வகுப்பிற்கான மணியோசை கேட்டது. புத்துணர்வோடு கிளம்பினார்கள், குழந்தைகள் விரும்பும் ஆசிரியர்கள்.

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.