பொங்கல் விழா நெருங்க நெருங்க முருகன், திவ்யா குடும்பத்தினருக்கும் அவர்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.

திவ்யா, முருகன் குடும்பத்தினர் மலை அடிவாரத்தில் விவசாயம் பண்ணிக்கொண்டும், ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒவ்வொரு வருடம் பொங்கல் விழாவிற்கும் உறவினர்கள், நட்புகள் கூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அனைத்து வேலைகளையும் அனைவரும் பகிர்ந்து செய்வார்கள். இந்தக் கூடலுக்குப் பல நாட்கள் முன்னாடி இருந்தே குட்டிகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் திட்டம் போடத் தொடங்கிடுவார்கள்.

பொங்கல் விழா நெருங்க நெருங்க ஆர்வம் மிகுதியாகிவிடும். போகிக்கு முன்னதாகவே ஒவ்வொருவராக வரத் தொடங்கிவிடுவார்கள். முருகனின் குடும்பத்தினரும் அதற்கான முன் தயாரிப்புகளைச் செய்து வைக்கத் தொடங்கிவிடுவார்கள். போகிக்கு முதல் நாளன்று அனைவரும் ஒன்றுகூடி ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளை ஒதுக்கிவிடுவார்கள். பொறுப்புகளை வருடாவருடம் மாற்றிக்கொள்வார்கள்.

சமையல் பொறுப்பாளர்கள் சமையல் செய்துகொண்டே, “இந்தக் கூடல்ல இருக்க அழகே எந்தப் பாகுபாடில்லாம அனைவரும் எந்த வேலையா இருந்தாலும் பங்கிட்டுச் செய்யணும்ங்கிறதுதான் உச்சகட்ட சிறப்பே” என்று புதிதாகத் திருமணம் ஆகி வந்திருக்கும் கலா சொல்ல, அதை ஆமாம் என்பதுபோல் அனைவரும் தலையசைத்து ‘உம்’ கொட்டினர். கலாவும் மனோவும் புதுமணத் தம்பதி. கலாவுக்கு இந்தக் கூடல்தான் முதல் கூடல்.

கலகலப்பாக அரட்டையைத் தொடங்கினர். ”நானும் முகத்துக்கு என்னென்னவோ பூச்சு போட்டுப் பார்க்கறேன். நீங்க என்னதான் போடறீங்க இப்படி வெள்ளையா இருக்கறீங்க” என்றார் கலா ஆனந்தியிடம்.

”நான் பவுடர்கூடப் போடறதில்ல. நல்லா சத்தா சாப்பிடுவேன், தேவையான அளவு தண்ணீர் மறக்காம குடிச்சிருவேன், நல்லா தூங்குவேன் அவ்ளோதான். அப்பப்போ கொஞ்சம் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்வேன். மனதையும் உடலையும் எப்போதும் புத்துணர்வா வச்சுக்குவேன்” என்றார் ஆனந்தி.

”உடல் நலனை நல்லா பார்க்கறீங்கன்னு சொல்லுங்க, கூடவே மனநலனையும் கவனிச்சுக்கறீங்க. பெரும்பாலான பெண்கள் செய்ய நினைத்தும் செய்ய முடியாததைச் செய்யறீங்க அண்ணி சிறப்பு“ என்றார் சந்தியா.

”உன் தம்பி தீபக் வெளுப்பா அழகா இருக்கான். ஆமா, சந்தியா இப்படிக் கறுப்பா பொறந்திட்டியே… அவன் கறுப்பா இருந்திருந்தாக்கூடப் பரவால்ல. பிற்காலத்துல கண்ணாலத்துல பொண்ணு கறுப்பா இருந்தா நல்ல மாப்பிள்ளை கிடைக்காது. அதான் சொல்றேன்” என்று பெருமூச்சுவிட்டாள் கலா.

அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் சந்தியா இதை நினைத்து கவலைப்படுவாளோ என்று வருத்தமாகவும் இருந்தது.

”சரி, வெள்ளை நிறத் தோல்தான் உயர்ந்ததா? அழகா?” என்று கேட்டார் ஆனந்தி.

உடனே கலா, ” அதெல்லாம் தெரியாது. நாலுபேர் பொதுவா வெள்ளையா இருந்தாத்தான் ஒசத்தி, அழகுன்னு சொல்றாங்க. மதிக்கறாங்க. குறிப்பா பொண்ணுனா வெள்ளையா அழகா இருக்கணும்” என்றாள்.

”பொதுவுல சமூகம் அப்படித்தான் இருக்குது. ஆனா, தோலில் நிறத்துக்குக் காரணம் மெலனின் அப்படிங்கிற நிறமி கொண்ட செல்கள் இருப்பதே. மெலனின் நிறமி கொண்ட செல் மிக அடர்த்தியாக இருந்தா அவங்க கறுப்பா இருப்பாங்க. மெலனின் நிறமி அடர்த்திக்கேற்ப அவங்கவங்க தோல் நிறம் இருக்கும். பூமில தொடக்கக்காலத்துல இருந்த நம்ம தாத்தா, பாட்டிகள் எல்லாம் கறுப்பன், கறுப்பிகள்தான். முதல் மனிதர்கள் தோன்றிய ஆப்பிரிக்காவுல இன்னும் ஏன் இப்பகூட மனிதர்கள் அடர்கறுப்பாத்தான் இருக்காங்க” என்று ஆனந்தி முடிக்கும் முன்பே, ”ஆமாம் அவங்க ஆப்பிரிக்கக் கறுப்பர்கள்” என்றாள் கலா.

”ஆப்பிரிக்கக் கண்டம் போன்ற நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழும் பகுதில வருடம் முழுவதும் வெயில் அடிப்பதால் அவங்க தோலில் மெலனின் நிறமி செல்கள் அதிகமா உருவாகி கறுப்பாக இருக்காங்க. காலப்போக்கில் மனிதர்கள் உலகின் பல்வேறு இடத்திற்கு இடப்பெய்ர்ச்சி அடைஞ்சாங்க. குளிர் பிரதேசம், மித வெப்ப மண்டலம்ன்னு நகர்ந்து அங்கங்க நிலையாகக் குடியேறி வாழத் தொடங்கினாங்க. அவங்க இருக்கற காலநிலை சூழலுக்கேற்ற மாதிரி மனிதர்கள் தோலின் நிறம் மாற்றம் அடைந்தது.”

”நம்மவர்களிலேயே அதிகமாக வெயில்ல போறவங்க கறுப்பாகிடறாங்க. வெயில்லயே போகாம வீட்டுக்குள்ளேயே இருக்கவங்க வெளுப்பா இருக்கறத நாம பார்க்கறேன்னே அக்கா. அப்போ மெலனின் நம் உடலுக்கு என்ன செய்யுது?” என்றாள் கலா.

”நீயும்கூட இணையத்துல மெலனின் நிறமிகளோட வேலை, பயன்னு தேடிப் படிக்கலாம். நான் படிச்சவரைக்கும் சொல்றேன். பொதுவா மெலனின் நிறமி அதிகமா இருக்கவங்களுக்கு வெயில்ல தாங்கக்கூடிய சக்தி, சீக்கிரம் வயதாகாம இருப்பது, உடல்ல உள்ள நீர் குறையாம இருத்தல், நோய்க்கிருமி தாக்காத தோல்கள் போன்ற நன்மைகளுடன் வலுவாக இருப்பாங்களாம்.

அதுவுமில்லாம தோல் புற்றுநோய், கதிர்வீச்சு போன்றவற்றிலிருந்து எல்லாம் பாதுகாக்குதாம் கறுப்புத்தோல். இப்படி உலகத்துல பல ஆய்வாளர்களால் ஆய்வு பண்ணி அறிக்கை வெளியிட்டிருக்காங்க” என்றார் ஆனந்தி.

”அப்போ கறுப்பா இருக்கவங்க தோல் நிறம் குறைவா இருக்கறவங்களவிட பல வகைல வலிமையானவங்கன்னு சொல்றீங்க! நானும் இது சார்ந்து நிறையத் தேடிப் படிக்கறேன். இப்படி இருக்க, ஏன் வெள்ளைத் தோலை அழகுன்னு சொல்லி அனைவரும் அதுபோல் ஆக பல முயற்சிகள் செய்ய வைக்கறாங்க” என்றாள் கலா.

”ஆண் எந்த நிறத்தில் வேணா இருக்கலாம், வெளிர், கறுப்பு நிற ஆண்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதுண்டு. ஆனாலும் பெண் வெளிர் நிறமா இருக்கணும்னு பொதுவா பெரும்பாலும் நினைக்கறாங்க. அதற்கெல்லாம் என்ன காரணம் இருக்கும்ன்னு நீயே பகுத்துப் பார்த்துட்டுச் சொல்லு, நாம பேசலாம்” என்றார் ஆனந்தி.

”சிறப்பான உரையாடல். நானும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். சரி, வாங்க சமையல் முடிஞ்சிடுச்சு. சாப்பிடலாம்” என்று சமையல் பொறுப்பாளர் தமிழரசன் கூற, அனைவரும் சென்றனர்.

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.