ஒரு படம் அப்படி என்ன செய்துவிடும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ’ஜெய்பீம்’.
படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே அதன்மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. படம் ஆரம்பிக்கும் போதே ஜாதியின் பெயரை அப்பட்டமாகச் சொல்லி யதார்த்தத்தை நச்சென்று அறைந்த காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைத்தன.
பல திரைப்படங்கள் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளைப் பேசி இருந்தாலும், ’ஜெய்பீம்’ கையில் எடுத்திருப்பது ஒரு புதுமையான கதைக்களம். அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டு வெகுண்டெளும் ஆண்கள் சந்திக்கும் சோதனைகளை வலியுடன் படமாக்கி இருந்தார்கள். அதில் அரசியல், அதிகாரம் எல்லாம் அவர்களை இன்னும் எவ்வளவு ஒடுக்குகிறது என்பதையும் பதிவு செய்திருந்தார்கள். ஜெய்பீம் முழுக்க முழுக்க கையில் எடுத்திருந்ததோ, ஒடுக்கப்பட்ட இனத்தில் வாழும் ஒரு பெண், அவளுக்கு எதிராக நிகழ்ந்த அநீதிகளை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்கிறாள் என்பதைத்தான். இதை உண்மைக்கதையில் இருந்து எடுத்து படைத்திருக்கிறார்கள்.
உணவுக்காக வயற்காட்டில் சுற்றும் எலிகளை வேட்டையாடும் இருளர் இன மக்களோடு ஆரம்பிக்கிறது கதைக்களம். ஆனால், அதைத் தாண்டி அந்தப் பழங்குடிகளின் வரலாறு இன்னும் பலர் அறியாதது. காட்டைப் பாதுகாக்கும் அவர்களிடமிருந்து காட்டைப் பறித்து விரட்டிவிட்டு, அவர்களை ஒரு பட்டா கூட இல்லாத வீடற்ற அகதிகளாக மாற்றியதுதான் மனிதன் நாகரிகமடைந்த வரலாறு.
பொய் வழக்கில் மாட்டிக் கொள்ளும் கணவன் ராஜாக்கண்ணுவை (மணிகண்டன்) மீட்கப் போராடும் இருளர் பெண் செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்). கணவனை கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரி, அவன் வீட்டில் இல்லை என்றதும் செங்கேணியின் முடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வண்டியில் ஏற்றும்போது ‘அவ மாசமா இருக்கா சார்’ என்ற ஏட்டையாவின் குரலுக்கு ‘என்ன வளைகாப்பு பண்ணலாமா’ என்று கேட்பதில் ஆரம்பிக்கிறது அந்தப் பெண்ணின் மீதான ஜாதிய வன்மம். சட்டரீதியாக அவர்களைத் துளியும் அணுகாமல் லாக்கப்பில் வைத்து அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளில் என் மனம் ஓலமிட்டுக்கொண்டே இருந்தது.
லாக்கப்பில் வைத்து விசாரிக்கப்படும்போது ராஜாக்கண்ணுவின் அக்காவை அரை நிர்வாணமாக்கும் போலீஸ் அதிகாரியிடம் இருந்தது அப்பட்டமான ஜாதிய வன்மம். இப்படி ஆட்சி, அதிகாரம் மற்றும் ஜாதியம் என்று அனைத்தும் குடிகொண்டிருக்கும் இடத்தில் பெண்ணுக்கான நீதி என்பது அம்பேத்கரின் சட்ட வடிவத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த ஒரு தோழர், அவளை சட்டரீதியாக இப்பிரச்னையை அணுக வக்கீல் சந்துருவிடம் (சூர்யா) அழைத்துச் செல்கிறார்.
செங்கேணியிடம் வக்கீல் சந்துரு சொல்லும் ஒரு வசனம் என்னை வெகுவாக ஈர்த்தது. வக்கீல்களிடம் சென்றால் அவர்கள் பொய் சொல்லியாவது கேஸை ஜெயிக்க வைப்பார்கள் என்பதுதான் பொதுப்புத்தியாக இருந்து வருகிறது. சூர்யா செங்கேணியிடம் ’உண்மையை மட்டும்தான் பேசணும்’ என்று சொன்னதே ‘வாவ்’ சொல்ல வைத்தது.
ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்ததாலேயே இந்தச் சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை சமீபத்தில் வைரலான அஸ்வினியின் (குறவர் இனப்பெண்) குரலில் நம் தமிழ்ச் சமூகம் சிறிதளவாவது உணர்ந்திருக்கும். ’சாப்பாடு முக்கியமில்லை… எங்களைப் படிக்க விடுங்கள்’ என்று அவர் பேசிய பேச்சு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ பணமோ, சொத்தோ , படிப்போ, வேறு எதுவுமே தேவை இல்லை. அவள் சுயமரியாதை உள்ள பெண்ணாக வாழ, அவள் ஒடுக்கப்பட்ட இனம் என்பதே போதுமாக இருக்கிறது என்பதைத் திரையில் காட்டியதற்கு இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களுக்குப் பாராட்டுகள்.
காட்சி 1:
கணவனைக் காணாமல் போலீசின் மேல் வழக்குத் தொடுத்ததும் செங்கேணியைக் காவல் நிலையத்துக்கு வரவைக்க அவரின் மகளை பட்டப் பகலில் போலீஸ் தூக்கிச் சென்றுவிடும். பிறகு காவல் நிலையம் சென்ற அவரை விடுவிக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தந்து, அவரை போலீஸ் ஜீப்பில் கொண்டு வீட்டில் விட்டுவிட உத்தரவு கொடுக்கப்படும். ஆனால், அதை மறுத்துவிட்டு நடந்து சென்று , பேருந்தில் வீட்டுக்கு வருவார். கூடவே போலீஸ் ஜீப்பும் பந்தோபஸ்தாக அவள் வீடு போய்ச் சேரும் வரை பின்னாலேயே வரும். அவள் போலீஸ் ஜீப்பில் ஏறி வந்திருந்தால் கூட இவ்வளவு அழுத்தம் அந்த பாத்திரத்துக்குக் கிடைத்திருக்காது.
காட்சி 2:
கணவர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவர் இறப்புக்கான நீதி கேட்கும் சட்டப் போராட்டத்தில், பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற வைக்க முயலும் போலீஸ் அதிகாரியிடம்,‘அந்தப் பணம் என் வாழ்க்கைக்கு உதவியா இருக்கும். ஆனால் அந்தப் பணத்தில் என் குழந்தைகளை படிக்க வைக்கவோ , வளர்க்கவோ விரும்பவில்லை’ என்று துணிச்சலாகச் சொல்லிவிட்டு அந்த இடம் விட்டு வெளியேறுவார் செங்கேணி.
காட்சி 3:
க்ளைமாக்ஸ் காட்சியில் வழக்கில் வெற்றி பெற்று அரசின் மூலமாகக் கிடைக்கும் (கல் வீடு) வீட்டில் ரிப்பன் வெட்டிக் குடிபுகும்போது மிளிரும் தன்னம்பிக்கை.
இந்த மூன்று காட்சிகளுமே பொருளாதார ரீதியாக வலுவிழந்து நிற்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட பெண்களின் முகமாகவே எனக்குத் தெரிந்தது.
செங்கேணியின் அத்தனை போராட்டங்களுக்கும் கூடவே வரும் அறிவொளி ஆசிரியர் மைத்ரா (ரஜிஷா விஜயன்) கவனம் ஈர்த்துக்கொண்டே இருந்தார். இது போன்ற பெண் பாத்திரங்களை தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து கொண்டு வாருங்கள்.
கோர்ட் டிராமா வகையில் சில வருடங்களுக்கு முன் வெளியான ’பிங்க்’ திரைப்படம் போன்றதொரு பிம்பத்தை ’ஜெய்பீம்’ கொடுத்திருக்கிறது. சட்டம் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. சட்டப் போராட்டத்தைக் கையில் எடுக்க அதில் அறிவும் நேர்மையும் கொண்ட மனிதர்கள்தாம் தேவைப்படுகிறார்கள் என்பதை இந்த இரண்டு படங்களுமே அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.
பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தோர் , கருப்பினத்தவர், பெண்கள் என்று ஒடுக்கப்படும் எல்லாருக்குமே இந்த உலகம் பொதுவானது. அவர்களுக்கு ஓர் உயிர்ப்புள்ள உதாரணம்தான் செங்கேணி.
படைப்பாளர்:
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.