உலகம் தோன்றிய பொழுது ஆதி மனிதர்கள் காடுகளுக்குள் பராரியாகச் சுற்றித் திரிந்தார்கள். நாகரிகம் தோன்றி வளர்ந்து விரிவடைந்த போது அவர்கள் தங்களுக்குள் கூடி வாழத் தொடங்கினர். ஒருவர் உணவு தேடப் போக, இன்னொருவர் குழந்தைப் பராமரிப்பு, உணவு தயாரிப்பு என்று பணிகளைப் பிரித்துக் கொண்டார்கள். அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தார். அவர்கள் தங்களுக்குள் எல்லைகளை வகுத்து குடும்பம் என்கிற ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த ஆதிக் குடும்பத்தின் நீட்சியாகவே இன்றும் ஆண்கள் பொருளீட்ட வெளியே போக, பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
ஒருவருக்கு இன்னொருவர் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்ட இந்த அமைப்பு, நாளடைவில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் ஓர் அமைப்பாக மாறத் தொடங்கியது. ஆதிக்கம் செலுத்துபவர் ஆணாகவும், அடங்கிச் செல்பவர் அடக்கி வைக்கப்படுபவர் பெண்ணாகவும் இருப்பதுதான் ஆகப்பெரும் துயரம்.
குடும்பமாகச் சேர்ந்து வாழத் தொடங்கிய காலகட்டத்தில் வெளியில் காட்ட முடியாத வன்முறை எண்ணங்களுக்கும் கோபதாபங்களுக்கும் வடிகாலாக வீட்டில் இருக்கும் பெண்கள்தாம் மாட்டிக்கொண்டார்கள். ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருக்க வேண்டிய உறவுகளே வன்முறையைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை சகஜமாக ஏற்றுக்கொண்டு கடந்து செல்லும் போக்குதான் மக்களிடையே இருக்கிறது.
இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.
என் தோழி ஒரு செய்தியைப் பகிர்ந்தார். அவருடன் பணிபுரியும் பெண்கள் நிறையப் பேர் கணவரிடம் அடி வாங்குவதாகச் சொன்னார். “சட்டுன்னு கை நீட்டுவாரு…” என்று ஒரு பெண் சொல்லும் போது, அது இயல்பென்பது போல இதரர்கள் அமைதி காப்பார்களாம். நம் இந்தியக் குடும்பங்களில் மனைவியை அடிப்பது ஒரு கணவனின் இயல்பான செயல்தான் என்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கணவன் தன்னை அடித்து விட்டான் என்று ஒரு பெண் புகுந்த வீட்டினரிடமோ அல்லது பெற்றோரிடமோ புகார் அளிக்கும் போது, அது குறித்து அவர்கள் யாரும் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. “இது எல்லார் வீட்டிலும் இருப்பதுதானே? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?” என்றுதான் சொல்கிறார்கள். இது பெண்ணுடலின் மீது நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அல்லது புரிந்து கொண்டாலும் தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள். பெண் என்பவள் கணவனின் சொத்து. அதை அவன் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்பதையே இது வலியுறுத்துகிறது.
இன்னொரு தோழி தன் கணவன் உடல் ரீதியாகத் தன்னை அணுகிப் பல வருடங்கள் ஆனதாகத் தெரிவித்தார். ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனி படுக்கை அறைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். கணவருக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்று எதுவும் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். இது குறித்து வெளிப்படையாக கணவருடன் பேச முயன்ற போதெல்லாம் அவருக்குக் கிடைத்தது கேவலமான வசைச் சொற்களும் அசிங்கமான பட்டங்களும்தாம். அதன் பின் பேசிய இரண்டு, மூன்று தோழிகளும் இதே விஷயத்தைத்தான் தெரிவித்தார்கள். தன் இணையரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யாததும் குடும்ப வன்முறையில் அடங்கும்.
இதற்கு மாறாக இன்னொரு தோழி சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. அவர் கணவர் எப்போது அழைத்தாலும் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டுமாம். இடம், பொருள், நேரம், காலம் என்றெல்லாம் எதுவும் அவர் பார்ப்பதில்லை என்று வருந்தினார். அவருக்கு உடல் ரீதியான நிறைய தொந்தரவுகள் இருந்தன. என்றாலும் அவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்தியது இல்லை. தினமும் வதைக்கிறார் என்று கண்ணீர் வடித்தாள். பெண்ணுடலின் மீது நிகழ்த்தப்படும் இந்த ஆகப்பெரிய கொடுமை குடும்ப வன்முறை. மனைவியாகவே இருந்தாலும் உறவில் அவளுக்கு விருப்பமா, இல்லையா என்று தெரியாமல் வெறும் கருவி போல அவளைப் பயன்படுத்துவது மாபெரும் தவறு. ஆனால், எத்தனை பெண்கள் இதை மற்றவர்களிடமும் பெற்றவர்களிடமும் சொல்ல இயலும்? மீறிச் சொன்னாலும், “அவர் உன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறார்…” என்று சொல்லி வாயை அடைத்து விடுகிறார்கள்.
நிறைய குடும்பங்களில் ஒருவருக்கு பட்டப் பெயர் வைப்பதை விளையாட்டாகச் செய்கிறார்கள். குட்டச்சி, குண்டச்சி, அரைக்காப்படி, கறுப்பி என்றெல்லாம் கேலியாக அழைக்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு மன வருத்தம் மிகும். இப்போது இந்தப் போக்கு குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக மறையவில்லை. இது மனரீதியாக அவர்களுக்கு வேதறையளிக்கும். இது கூடவா குடும்ப வன்முறை என்று கேட்பீர்களேயானால் அழுத்தமான பதில் “ஆமாம்” என்பதுதான்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மாமியார், காலமாகி விட்டார். மாமனார் யாருமில்லாத நேரத்தில் தன் மருமகளின் கையைப் பிடித்து இழுக்கப் போக, அது பெரிய பிரச்னையாகி, அவரை விட்டு அவர்கள் தனிக் குடித்தனம் போய் விட்டார்கள். ஆனால், யாரும் அந்த ஆளைக் கண்டிக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி. அந்தப் பெண்தான் ஊருக்குள் தலைகுனிந்து போனார். குடும்பத்துக்குள் நம்பிக்கைக்கு உரிய நபராக இருக்க வேண்டிய அந்த ஆள் இவ்வாறு நடந்து கொண்டது எத்தனை பெரிய வன்முறை?
இவையெல்லாம் இன்று, நேற்று மட்டும் நடப்பதில்லை. காலங்காலமாக நடந்து கொண்டுதான் வருகிறது. அப்போது வெளியில் சொல்லவில்லை. இப்போது துணிச்சலாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான் வித்யாசம். இன்னும் ஒரு குடும்பத்தில் தவறாக நடந்து கொண்ட மாமனார், மாட்டிக் கொண்ட போது அந்தப் பெண்ணின் மீதே பழியைத் தூக்கிப் போட்டார்.
இன்னொரு தோழி நன்கு படித்தவர். படித்து முடித்த உடனே திருமணம் ஆகிவிட்டது. கணவரிடம் வேலைக்குச் செல்லும் விருப்பத்தைத் தெரிவித்த போது அவர் ஒற்றை வார்த்தையில் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். காரணம் கேட்டபோது, “என்னையும் என் பெற்றோரையும் கவனித்துக் கொண்டு, நமக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளை நன்றாக வளர்த்தால் போதும்… நீ சம்பாதித்து இங்கு ஒன்றும் ஆகப் போவதில்லை…” என்று கூறியிருக்கிறார். தன் ஆத்ம திருப்திக்கும் பொருளாதாரப் பலத்துக்கும், தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் சொன்னதை, அவர் கணவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தனது படிப்புக்கும் தனக்கும் நடந்த அவமரியாதையாகவே அவள் அதைக் கருதினாள். ஒவ்வொரு முறையும் வீட்டுச் செலவுக்கும், தனது தனிப்பட்ட செலவுக்கும் அவள் கணவரிடமே பணத்தை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. “எனக்கு நாப்கின் வாங்கணும்னாகூட அவர்கிட்ட என்ன செலவுக்குன்னு சொல்லித்தான் வாங்க வேண்டியிருக்குடி. குழந்தை எதையாவது ஆசைப்பட்டுக் கேட்டா, அவருக்குக் கணக்கு சொல்லணும்னே பயமா இருக்கு. என் சம்பாத்தியம் இருந்தா இதுக்கெல்லாம் நான் பயந்துட்டு இருந்திருக்க மாட்டேன்டி” என்றாள் ஆற்றாமையோடு. இதுவெல்லாம் குடும்ப வன்முறையில் சேர்த்தி என்று அவள் கணவருக்கு மட்டுமல்ல, அதே போன்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் உணர்த்த வேண்டும்.
என் உறவுப் பெண் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவர் கணவரோ மிகப்பெரிய பக்திமான். தினமும் விளக்கேற்றச் சொல்லி, சாமி கும்பிடச் சொல்லி, விரதம் இருக்கச் சொல்லி என்று பலவிதங்களிலும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இதெல்லாம் குடும்ப வன்முறையில் சேர்த்தியா என்று கேட்டீர்களேயானால் நீங்கள் ஆகப்பெரிய ஆதிக்கவாதி என்று அடித்துச் சொல்வேன். உனக்கு நம்பிக்கை இருந்தால் அது உன்னோடு. எனக்கு இல்லையென்றால் விட்டுவிடு என்றுதான் அந்தப் பெண் சொல்கிறார். ஒருவருக்குப் பிடிக்காத ஒன்றை வற்புறுத்தி செய்யச் சொல்லுவது மிகப் பெரிய வன்முறை.
அன்பென்பது ஆகப் பெரிய வன்முறை என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?. இப்போது பார்க்கப் போகும் தோழியின் கதை அவ்வாறு அன்பால் கட்டிவைக்கப்பட்ட புதுவிதமான ஒன்று. அவளுக்குத் திருமணமான புதிதில் இருந்து கணவர் அவளைத் தாங்கோ தாங்கென்று தாங்கினார். அவளது எல்லாச் செயல்களிலும் இவரே முதன்மையாகப் பங்கெடுத்துக் கொண்டார். அன்பென்ற ஆயுதம் கொண்டு அவளது தன்னிச்சையாகச் செயல்படும் சிறகுகளை ஒவ்வொன்றாக முறித்துப் போட்டார். தனக்கென்று ஒரு தனி உலகை அவள் சிருஷ்டித்துக் கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டார். இப்போது அவரின்றி அவளால் தனித்துச் செயல்பட முடியவில்லை என்பதைவிடத் தெரியவில்லை என்று சொல்லலாம். காலம் கடந்து இப்போதுதான் அந்தப் பொன்விலங்கை அவள் புரிந்து கொண்டாள். ஆனால், அதை வெட்டிவிடும் வழியின்றித் தவித்துக் கொண்டு இருக்கிறாள். மனைவியின் பொது அறிவு வளராமல் பார்த்துக் கொண்டு அவர் மட்டும் நிம்மதியாக இருக்கிறார். கேட்டால், “பொம்பளைங்களை வளர விட்டால் அவ்வளவுதான். நம்மை மூலையில் உட்கார வெச்சிடுவாங்க. அதான் பாசம், நேசம்னு தட்டி வெச்சிருக்கேன்” என்று அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதில் இருந்து அவள் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
மாமியார் என்பவர் தன் எதிர்கால வாழ்க்கை குறித்த பாதுகாப்பின்மையாலும், தன் மகனிடம் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான பாசத்தாலும் அந்தக் குடும்பத்துக்கு வந்திருக்கும் மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர் செய்வதும் குடும்ப வன்முறையில்தான் அடங்கும். ஒரு தோழியின் மாமியார் இதுபோலத்தான், புதிதாக வந்த மருமகள் தன் மகனை முந்தானையில் முடிந்து கொள்ளுவாள் என்று அக்கம் பக்கத்தினர் பேச்சைக் கேட்டு முதல் நாளிலிருந்தே அவள் உடை, தலை அலங்காரம், அவளது செயல்கள் எல்லாவற்றிலும் தலையிட்டு, தனது அதிகாரத்தை நிலைநாட்டப் பார்த்திருக்கிறார். உச்சகட்டமாக மகனும் மருமகளும் தனியறையில் உறங்கக் கூடாதென்று சொல்லும் அளவுக்குப் போனார். அதன் விளைவு இப்போது மகனும் மருமகளும் விவாகரத்து செய்து விட்டனர். மகனுக்கு இன்னொரு திருமணம் செய்ய முழுமூச்சாகப் பெண் தேடி வருகிறார். முன்கதை தெரிந்ததால் யாரும் பெண் தர முன்வரவில்லை.
இந்தக் குடும்ப வன்முறையைப் பெண்கள்தாம் அதிகம் அனுபவிக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வன்முறை செய்வது விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களோ, அல்லது வறுமை நிலையில் உள்ள குடும்பங்களோ அல்ல. அங்கும் இருக்கலாம். ஏனென்றால் அங்கே அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கு வழி தேடவே நேரம் போதவில்லை. படித்த, அழகான, வசதியுள்ள, அந்தஸ்தில் மேம்பட்ட குடும்பங்களில்தாம் பெரும்பாலும் இத்தகைய வன்முறைகள் நிகழ்கின்றன. சமுதாயத்தில் பெரிய பொறுப்பில், பதவியில் இருப்பவர்கள்கூடத் தங்கள் வீட்டுப் பெண்களிடம் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வீடுகளில் உள்ள குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தாங்கள் பிற்காலத்தில் தங்கள் துணையிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இத்தகைய பெற்றோர்கள் தங்களை அறியாமலே குழந்தைகளின் பிஞ்சு மனதில் பதியனிடுகிறார்கள். இத்தகைய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தங்கள் பால்யத்தை இழக்கிறார்கள்.
இத்தகைய குடும்ப வன்முறைகளில் இருந்து குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005 ஆம் ஆண்டு அக்டோபரிலும் அதன் விதிமுறைகள் 2006 ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்டன. இச்சட்டம் 2006 லிருந்து நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. வார்த்தைகள் மற்றும் மனரீதியான கொடுமைகளும் குற்றச் செயல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களே புகார் தரத் தேவையில்லை. அவர்களால் புகார் செய்ய இயலாத பட்சத்தில் அருகில் வசிப்பவர்கள், சமூகப் பணியாளர்கள், உறவினர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் என்று யார் வேண்டுமானாலும் அவர்கள் சார்பாக அருகில் இருக்கும் காவல் நிலையம், மாவட்ட சமூக நல அலுவலர், குற்றவியல் நடுவர் ஆகியோரிடம் புகார் கொடுக்கலாம்.
இச்சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைக்கும் நிவாரணங்கள் பிரிவு 18இன் படி பாதிக்கப்பட்ட பெண் பணி புரியும் இடத்துக்குச் சென்று தொல்லை தருவதைத் தடுக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடிதம், தொலைபேசி, இணையம் என்று எந்த வழியிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 19இன் படி பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருக்கும் இடத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்ட நபரை வெளியேற்றலாம். அல்லது அந்தப் பெண் பாதுகாப்பாகத் தங்குமிடத்தைக் குற்றம் சாட்டப்பட்ட நபரே ஏற்பாடு செய்து தரலாம்.
பிரிவு 20, 21, 22 ஆகியவற்றின் படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பொருள் இழப்பு, ஜீவனாம்சம், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட பொருளாதாரத் தேவைகளைக் குற்றம் சாட்டப்பட்ட நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் குழந்தைகளைத் தன்னுடன் வைத்துக் கொள்வதற்கான இடைக்கால ஆணையைப் பெறலாம்.
பிரிவு 23 இன்படி பாதிக்கப்பட்ட பின் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் ஆபத்துகளையும் நீதிமன்றத்தில் கூறும் பொழுது அதனால் அவளுக்கு மேற்கொண்டு ஏதும் பிரச்னைகள் வராமல் இருக்க இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 இன்படி அறிவிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சேவை அளிப்பவர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் இச்சட்டத்துடன் தொடர்புடைய அலுவலர்களோடு இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ உதவி, குழந்தைகளைப் பேணுதல் உள்ளிட்டவற்றில் உதவிகள் செய்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் உரிய தொழிற்கல்வி பெற்று சொந்தக் காலில் நிற்கவும் இவர்கள் உதவி செய்கிறார்கள்.
உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை, வார்த்தைகள் வாயிலான வன்முறை, பொருளாதார முறையிலான வன்முறை இவை எல்லாமே குடும்ப வன்முறையில் அடங்கும். இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவோரும், பாதிக்கப்படுவோரும் எங்கோ கண்காணாத இடங்களில் வசிப்பதாக எண்ண வேண்டாம். நம் உறவினர் வீடுகளில், நண்பர்கள் வீடுகளில், அக்கம் பக்கத்து வீடுகளில் அவ்வளவு ஏன் நம் வீட்டிலும் கூட இருப்பார்கள். பெண்கள் மீதான இந்த வன்முறைகள் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் ஊறிய, பெண்களைப் புனிதமானவர்களாகப் பூஜிக்கின்ற (?) நம் இந்தியத் திருநாட்டில்தான் அதிகம் அரங்கேறுகின்றன. காலம் காலமாகப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை இயல்பானது என்று கட்டமைத்த இந்தச் சமூகத்தின் குரூரப் போக்கு இனியாகிலும் மாற்றப் படவேண்டும் என்பது அவசரமான அவசியம். குடும்ப வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் 4.71 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவை விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். குடும்ப வன்முறை குறித்து 2014ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4,547. அவற்றில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3,838. அதாவது மொத்த வழக்குகளில் எண்பது சதவீதம் இங்குதான் பதிவாகியிருக்கிறது. இது உள்துறை அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரம். கடந்த 2020 இல் கொரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,748 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 2022 ஆம் ஆண்டு 6,900 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,045 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான அத்தனை அத்தியாவசிய விதிகளும், சட்ட நுணுக்கங்களும் எல்லாப் பெண்களும் கட்டாயம் அறிந்து கொள்ளும் வகையில் பரவலாக்கப் படவேண்டும். தன் மீதும் தன் உரிமைகள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகளை இனம் கண்டுகொள்ளப் பெண்கள் முதலில் பழக வேண்டும். எதையும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திப்பதும், தெளிவாகப் பேசுவதும் இதற்கு அவசியம். தன்னைச் சுற்றி நடப்பவைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது மிக மிக அவசியம். தனக்கான முடிவுகளைத் தானே எடுத்துக் கொள்ளும் வகையில் பெண்கள் இருக்க வேண்டும். அதற்கு முதலில் படிப்பறிவும், சுய சம்பாத்தியமும் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மாற்றங்கள் தொடங்கினால் அது நல்லதொரு சமுதாயத்தை நிச்சயம் நாளை மலரச் செய்யும். மாற்றங்களை முதலில் நமது வீட்டில் இருந்தே ஆரம்பிப்போமா?
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.