ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

வட ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம், சஹேலியன் பகுதிகளில் வசிக்கும் துவாரெக் பழங்குடியினரின் மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆணாதிக்க விதிமுறைகளுக்குச் சவால் விடுகின்றன.

துவாரெக் சமூகம் வலுவான இஸ்லாமியமயமாக்கப்பட்ட படிநிலையாக இருந்தாலும், பெண்கள் முக்காடுகளை அணிவதில்லை. அவர்கள் மிகவும் பழமையான மக்களாக இருந்தாலும், அவர்களின் சமூகம் மிகவும் முற்போக்கானது. பெண்கள் கூடாரங்களையும் கால்நடைகளையும் பார்த்துக்கொள்கிறார்கள். கருநீல முக்காடுகளால் ஆண்கள் முகங்களை மூடிக்கொண்டு குதிரையில் பாலைவனத்தில் பயணம் செய்கிறார்கள். விவாகரத்து என்பது ஒரு பொதுவான நிகழ்வு. விவாகரத்துக்குப் பிறகு, பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் கூடாரம் உட்பட அனைத்து உடைமைகளையும் தாங்களே வைத்திருக்கிறார்கள், மேலும் ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். விவாகரத்துக்கு வழிவகுக்கும் செயல்முறைகளைப் பெண்களே தொடங்குகிறார்கள். சமூகத்தில் விவாகரத்து களங்கம் அல்லது அவமானம் அல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் துவாரெக் கலாச்சாரம். பெண்களுக்கு வீடுகள், விலங்குகள் சொந்தம். விவாகரத்துக்குப் பின் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சில நேரம் அந்த நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். மற்ற ஆண்களுக்கு அவள் மருமணத்திற்குத் தயாராக இருப்பதைத் தெரிவிக்க விருந்து வைக்கிறார்கள்.

துவாரெக் என்பதற்கு ‘கடவுளால் கைவிடப்பட்டவர்கள்’ என்று பொருள். பிற்போக்குத் தனத்தில் உறுதியாக நிற்கும் இஸ்லாமிய அண்டை நாடுகள் இந்த முற்போக்கான, தாராளவாத வாழ்க்கை முறைகளைப் பின்பற்றும் துவாரெக் பழங்குடியினருக்கு இட்ட பெயராக இது இருக்கலாம்.

துவாரெக் பழங்குடியினர் அரை நாடோடிகள். மழைக்காலத்தில், அவர்கள் தங்கள் கால்நடைகளுக்குப் பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை முகாமுக்குச் செல்கிறார்கள். வறண்ட காலங்களில் அவர்கள் அடிக்கடி தண்ணீரைத் தேடி நகர்கிறார்கள், ஆனால் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே தங்க விரும்புகிறார்கள்.

வட ஆப்பிரிக்க பெர்பர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகிறார்கள் துவாரெக் பழங்குடியினர். அவர்களின் தமாஷேக் மொழியும் அதே உத்வேகம் கொண்டது. 1960களில் ஆப்பிரிக்க நாடுகள் பரவலான சுதந்திரத்தை அடைந்தபோது, பாரம்பரிய துவாரெக் மக்கள் பரவியுள்ள நைஜர், மாலி, அல்ஜீரியா, லிபியா, புர்கினா என்று பல நவீன மாநிலங்களுக்கிடையில் பிரதேசம் பிரிக்கப்பட்டது. அதிக மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக நாடோடிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனித செயல்பாடு, வளங்களைச் சுரண்டுதல், அதிகரித்தல் ஆகியவற்றால் பாலைவனமாக்கல் அதிகரிக்கிறது.

சில துவாரெக் மக்கள் விவசாயத்தில் பரிசோதனைகள் செய்கின்றனர். சிலர் கால்நடை வளர்ப்பதைக் கைவிட்டு நகரங்களில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகின் சுதந்திரமான பெண்களில் ஒருவராக, துவாரெக் பெண்கள் கருதப்படுகிறார்கள். பெண்களின் கைகளில் மகத்தான அதிகாரத்தை வைப்பதுதான் இவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. பெண்கள் அரசியல் விவாதங்களில் பங்கு வகிக்கிறார்கள்.

கருநீல முக்காடுகள் துவாரெக் ஆண்கள் பருவமடையும் போது தொடங்குகிறது, இது அவர்கள் திருமணத்திற்குத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. இது ஆண் அடையாளத்தின் சின்னம். தீய ஆவிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. சமூகத்தின் பெரியவர்கள், பெண்களுக்கு முன்னால் கண்டிப்பாக அணியப்படுகிறது. தொடர்ந்து ஆண்கள் முக்காடுகள் அணிவதால் கரு நீலச் சாயம் அவர்கள் முகங்களில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்வதால், அவர்கள் ‘சஹாராவின் நீல மனிதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கான மரியாதை மிகவும் வலுவானது, ஓர் ஆண், தான் உடலுறவு கொள்ள முடியாத ஒரு பெண்ணின் முன் அல்லது அவளது பெரியவர்களுடன் சாப்பிடுவது மிகவும் ஒழுக்கமற்ற செயலாகக் கருதப்படுகிறது. ஆண் அடக்கத்துக்கு இந்தப் பாரம்பரியம் முக்கியக் காரணமாக உள்ளது. எந்த ஆண்களும் அதைக் கேள்வி கேட்கவோ குறையாக சொல்லவோ வாய்ப்பில்லை.

துவாரெக் பெண்கள் மருதாணியால் தங்கள் கைகளையும் கால்களையும் அலங்கரிக்கிறார்கள். இந்த மருதாணி தீய சக்திகளின் தாக்குதலைத் தடுக்கிறது என்று நம்புகிறார்கள். இது சருமத்திற்குக் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.

மழை பெய்து பாலைவனம் மீண்டும் உயிர்பெறும்போது திருமணங்கள் நடத்தப்படுகின்றன. திருமணம் ஆடல், பாடல், ஒட்டகப் பந்தயம் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கூடாரங்களில் வறுக்கப்பட்ட இறைச்சி, அரிசி, பேரீச்சம்பழங்கள் எனப் பெரிய விருந்து சமைக்கப்படுகிறது.

மணமகள் அலங்கரிக்கப்பட்ட கழுதைகள் மற்றும் ஒட்டகங்களின் மீது பாலைவனத்தின் வழியாக மணமகனின் முகாமுக்குச் செல்கிறார். அவர்கள் அனைவரும் நேர்த்தியான ஆடைகளை அணிவார்கள். திருமணத்திற்கு முன், பெண் உறவுகள் மணமகளின் தலைமுடியைப் பின்னிவிட்டு அவரது தலைமுடியில் நறுமணம் கொண்ட கறுப்பு மணலைத் தேய்ப்பார்கள்.

தூய்மையின் அடையாளமாக மணமகன் காலில் மருதாணியைத் தேய்ப்பார். மணமகனும் மணமகளும் இல்லாத நிலையில் ஒரு மசூதியில் திருமணச் சடங்கைச் செய்வார்கள். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி மணமகளின் பெற்றோர் முகாமுக்குச் சென்று அவர்களுடன் ஒரு வருடம் வாழ்வார்கள். இந்த நேரத்தில், ஆண் தனது மனைவி பெற்றோரின் மரியாதையையும் பாராட்டையும் பெற கடினமாக உழைக்க வேண்டும். இதை அடைந்தவுடன், அவர் தனது மணமகளைத் தனது சொந்த முகாமுக்கு அழைத்துச் செல்லலாம்.

துவாரெக் பெண்கள் காட்சி, செவிவழி கலைகள் இரண்டிலும் சிறந்தவர்கள். அலங்கரிக்கப்பட்ட வெள்ளி நகைகள், செதுக்கப்பட்ட ஒட்டகச் சேணங்கள், அலங்கரிக்கப்பட்ட பூத்தையல்கள், சாயம் பூசப்பட்ட துணிகள் போன்ற அற்புதமான கைவினைப் பொருள்களை உருவாக்குகிறார்கள். உலகத் தரம் வாய்ந்த இசைக்கலைஞர்களாகவும் கலைநுட்ப வல்லுனர்களாகவும் திகழ்கிறார்கள்.

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

சுதந்திரப் பறவைகளாகத் திகழும் துவாரெக் பெண்கள் கவிஞர்களாகவும் இசை வல்லுநர்களாகவும் திகழ்கின்றார்கள். தாராளவாத விழுமியங்களைக் கொண்ட இந்தச் சமூகத்தில், ஒவ்வொரு பெண்ணும் தனது உடல், பாலியல், உரிமைகளைப் பொறுத்தவரை போற்றுதலுக்குரிய சுதந்திரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

எந்தவோர் இனம் அதன் பெண்களின் திறனை முடக்குகிறதோ, அந்த இனம் அதன் குடிமக்களில் பாதிப் பேரின் பங்களிப்பை இழக்கிறது. அதன் வளர்ச்சியைத் தானாகக் குறைத்துக்கொள்கிறது.

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

Example Ad #2 (only visible for logged-in visitors)

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.