ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒற்றைக் குரலான டன்டாரா பாகு (Dandara Pagu) சில வாரங்களுக்கு கிளப்ஹவுஸின் ஐகானாக வலம் வருவார். உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் வசீகரமான புன்னகைக்குச் சொந்தக்காரி. போர்ச்சுகீசிய மொழியில் கிளப்ஹவுஸில் வலம் வரும் டன்டாராவின் ஹால்வேக்களை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என்கிறது கிளப்ஹவுஸ் நிர்வாகம். ஆம்… உணர்வுக்கு மொழி அவசியமில்லைதானே. மொழி தெரியாத பலரும்கூட இவரின் சில உரையாடல்களில் கலந்து கொள்வது டன்டாராவின் மிகச்சிறந்த ஆளுமைத்திறனை காட்டுகிறது. பிரேசிலின் முதன்மையான கிளப்ஹவுஸ் வரிசையில் அவரின் ஹால்வேக்கள் பலரால் கவனிக்கப்பட்டதுதான் அவர் யார் என்ற தேடுதலுக்கான ஆரம்பம்.
டன்டாரா பாகு பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பெர்னம்புகோவில் (State of Pernambuco) பிறந்தவர். தன் பெற்றோருக்கு பன்னிரண்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இவர் சிறு வயது முதலே வறுமை மற்றும் குடும்ப உறவுகளால் ஏற்பட்ட வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டவர். நான்கு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட மற்ற சகோதர சகோதரிகளுடன் தனது குழந்தைப்பருவத்தைக் கழிக்கிறார். தன் சொந்த பாட்டியால் உடல்ரீதியான வன்முறைக்கு ஆட்படும் இவர் முதல்முறையாக அதுபற்றி பகுத்தறிவோடு சிந்திக்க ஆரம்பிக்கிறார். “பாட்டி ஏன் இவ்வளவு வன்முறையாக இருக்கிறார் என்று. ’ஏனென்றால், அவரிடம் அனைவருமே எல்லை கடந்த வன்முறையையே கையாண்டிருக்கிறார்கள்” என்று சுய சிந்தனைக்கு தன்னை ஆட்படுத்துகிறார்.
பல கனவுகளோடு இளமைக்காலத்தில் அடியெடுத்து வைக்கும் டன்டாராவுக்கு இந்த சமூகம் மீண்டும் ஏமாற்றத்தையே தந்தது. தனது உருவம் மற்றும் உடல் குறித்த கேலிகளுக்கு அதிகம் ஆளாகிறார். அதே நேரத்தில் பல பாலியல் துன்பங்களுக்கும் ஆட்படுகிறார். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உள்ள முரண் சமூகம் பற்றிய அவரது பார்வையை பெரிதாக்குகிறது. பொது வெளிகளில் ஒடுக்கப்பட்ட கருப்பின பெண்களின் நிலையை பேச ஆரம்பிக்கிறார். கிளப்ஹவுஸ் செயலியை அதற்கான சிறந்த தளமாக எடுத்துக்கொண்டு செயல்படத் தொடங்குகிறார்.
மாடரேட்டராக சில பதற்றமான தலைப்புகளில் அந்நியர்கள்கூட பங்கேற்கும் விதமான சில உரையாடல்களை அற்புதமாக கையாள்கிறார். ஒரு கருப்பினப் பெண்ணாக, அரசியல் மற்றும் சமூக சித்தாந்தங்களை முன்னெடுக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுடன் உரையாடுகிறார். இனவெறி மற்றும் வன்முறைக்கு ஆளான ஒருவர் மாடரேட்டராக முன்னெடுக்கும் ஒரு விவாதத்தில் அவர்களின் பேச்சு எல்லை மீறும்போதும் கூட, அதே பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருப்பது மனித இனத்தில் நடக்கும் எல்லை கடந்த கொடுமை.
இப்படி Victim Blaming என்ற நிலைக்கு ஆளாகும் போதும்கூட பாகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தெளிவுடனும் பொறுமையுடனும் அவர்களிடம் உரையாடி நிலைமையை மட்டுப்படுத்துகிறார். அவர்களுடன் நடக்கும் உரையாடல்கள் கூட “ உங்களின் நிலைப்பாடு உறுதியாக இல்லை. மேலும் அது வன்முறைக்கும் அவமதிப்புகளுக்கும் கம்பளம் அளித்து வரவேற்கும் விதமாகவே உள்ளது. நீங்கள் உரையாடலில் இருந்து விலகிக் கொள்ளலாம்” என்பது போன்ற கருணையின் வடிவமாகவே காணப்படுகிறது என்று கிளப்ஹவுஸ் நிர்வாகம் அவரை புகழ்கிறது. அதோடு, ஹால்வேக்களில் இருக்கும் மற்ற அனைவரிடமும் கூட “மக்கள் மாறுவார்கள்” என்ற புரிந்துணர்வுக்கு அவர்களை ஆட்படுத்துகிறார்.
“நான் விமர்சிக்கப்படுகிறேன். நான் கடந்து வந்ததை அவர்கள் ஒரு போதும் அறிய முடியாது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது ஒன்றே தீர்வு. நம்மை எதிர்ப்பவர்களின் கைகள்தாம் ஓங்கி இருக்கின்றன. நம் குரல் இன்னும் ஒன்றிணைய வேண்டும்” என்று அன்பால் ஈர்க்கிறார். தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்கள்தாம் தன்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்ட அவர் பிரேசிலின் சில பிரபலங்களுடனும் இணைந்து சில உரையாடல்களை நிகழ்த்துகிறார். கிளப்ஹவுஸுக்கு வெளியே அவர் ஒரு சமூக ஆர்வலர், தயாரிப்பாளர், கருப்பினப் பெண்களின் உரிமைப் போராளி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Body positivity” என்கிற பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.
கிளப்ஹவுஸ் வழியாக பிரபலம் அடைந்ததோடு, அதன் வழியாகவே அவர் தன் காதலனையும் கண்டடைகிறார். ஓர் உரையாடலில் கலந்துகொண்டு ஹால்வே விட்டு வெளியே எல்லோரும் சென்ற போதும் ஒருவர் மட்டும் எஞ்சி இருக்கிறார். பின்னர் அவரை தொடர்புகொண்டு “என்ன பைத்தியக்காரர்கள் இவர்கள்” என்று உரையாடத் தொடங்கிய அவர், அவரும் தான் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே இருப்பதைத் தெரிந்து காதல் வயப்பட்டு, அன்றிலிருந்து இருவரும் இணைந்து வசிக்கிறார்கள்.
“இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள். பாதிப்புக்குள்ளாகிறவர்கள் இதற்கான விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை. மாறாக அவர்களின் குரல்கள் இன்னும் பெரியதாக ஒலிக்கட்டும்” என்கிறார் டன்டாரா பாகு.
படைப்பாளர்
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.
படைப்பாளரின் பிற படைப்புகள்