முத்துலட்சுமி

அம்மா கண்ணாத்தாள். சிறுவயதில் இருந்தே கண்டிப்பான அம்மாவைதான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கண்டிப்புதான். சில நேரம் எனக்கு வெறுப்புகூட வந்துவிடும். ஒருநாள் அக்கம்பக்கத்து குழந்தைகள் கொய்யாப்பழம் வாங்கிச் சாப்பிட்டார்கள். நானும் கேட்டேன். அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். காரணம் புரியாமல் அமைதியாக இருந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து கொய்யாப்பழம் வாங்கிக் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்கும் தைரியமும் இல்லை. இப்படிப் பல கேள்விகளைக் கேட்காமலேயே காலம் கழிந்தது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு கொய்யாப்பழம் வாங்கித் தராதது குறித்துக் கேட்டேன். “எல்லா நேரமும் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. காசு இல்லாத நேரத்தையும் நாம கடந்துதான் போகணும். அது உனக்குப் புரியணும். அதுக்குதான்” என்றார். அம்மாவின் கண்டிப்புக்கான காரணங்கள் அன்றிலிருந்து புரிய ஆரம்பித்தன. “நல்லா படி, கண்டிப்பா வேலைக்குப் போகணும். நான் படிக்கல, அதனாலதான் இப்படிக் கஷ்டப்படுறேன். பொம்பள பிள்ளைக்குப் படிப்புதான் மரியாதையைத் தேடித் தரும்” என்று அடிக்கடி சொல்வார்.

எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று யோசித்தால், “உன்னால கண்டிப்பா முடியும், அது என்ன பெரிய விஷயமா? கண்ணு பார்த்தா கை வேலை செய்யப் போகுது” என்று ஊக்குவிப்பார்.

அம்மாவும் அப்பாவும்

என் அம்மாவுக்குச் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஆர்வம். அருகில் இருப்பவர்களிடம் கேட்டு, சாம்பிராணி போடுவது போன்ற வேலைகளைச் செய்வார். ஆனால், சிறிது காலம் மட்டுமே அது நிலைக்கும். இன்றளவும் அதற்காக வருந்துகிறார். விதவிதமான கூடைகளைப் பின்னுவார். செஸ், கேரம் போர்டு விளையாடுவார். அம்மாவிடமிருந்துதான் விளையாடக் கற்றுக்கொண்டேன்.

அம்மா அதிகமாக மற்றவர்களிடம் பேச மாட்டார். ஒன்றைத் தவறு என்று நான் குறிப்பிட்டால், ஏற்றுக்கொள்வார். அது எனக்குப் பிடித்த குணம்.

அப்பாவுக்கு நான் வேலைக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால், அம்மா கொடுத்த தைரியத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இன்று நான் ஓர் ஆசிரியராக இருப்பதற்கு அம்மாதான் காரணம்.

என் பிரசவத்தின்போது என்னைக் கவனித்துக்கொண்ட விதத்தை இன்று நினைத்தாலும் கண்ணீர் வந்துவிடும். இரட்டைக் குழந்தைகள் என்பதால் அம்மாவுக்கு 24 மணி நேரமும் வேலை இருந்துகொண்டேயிருந்தது.

வாழ்க்கையில் என்னைச் செதுக்கிக்கொள்ள ஓர் உளியாக, நான் பிரச்சனைகளை எதிர்த்து போராடக் கற்றுக் கொடுத்த வீராங்கனையாக, வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்றுக்கொடுத்த படிக்காத மேதையாக, என் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கச் சொல்லிக்கொடுத்த ஆசிரியராக இருக்கும் அம்மாவுக்கு நன்றி!