“என் பேர் மாயா… செயின்ட் ஸ்டீஃபன் ஸ்கூல்ல டீச்சர்…
படிச்சது ஐஐடி மெட்ராஸ்… மேத்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ்… எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் புடிச்சிருக்கு…”
படபடவென்று பெரிய விழிகளோடு பேசும் அந்த ஜோதிகாவை, ‘காக்க காக்க’ படத்திற்குப் பிறகு மிகவும் பிடித்துப் போனது.
“ இந்த கண்கள்… இத நான் பார்த்துட்டே இருக்கணும்… உங்களைக் காதலிக்கணும்… உங்க தோள்ல சாஞ்சு அழணும்… சண்டை போடணும்… அப்புறம் ஒரு நாள் செத்துப் போகணும்” என்று காவல் அதிகாரியான அன்புச்செல்வன் மீதுள்ள தன் காதலைச் சொல்லும் அந்தக் காட்சியை, கம்ப்யூட்டரில் சிடி தேயும்வரை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்திருக்கிறேன். இயல்பாகவும், ஓர் ஆணிடம் தன் விருப்பத்தைச் சொல்ல எந்தத் தயக்கமும் காட்டாமல் ஓர் அழகான, தைரியமான பெண் பாத்திரமான மாயாவை, கவுதம் மேனன் மிக அழகாக வடித்திருப்பார். ‘காக்க காக்க’ படத்திற்கு முன் ஜோதிகா பல படங்களில் நடித்திருந்த போதும், அதில் பலவும் வெற்றிப் படமாகவே இருந்த போதும், ‘காக்க காக்க’ அவரை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது. ‘ஓவர் ஆக்ட்’ என்று விமர்சித்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை மாற்றி அத்திரைப்படம் மிகவும் பண்பட்ட ஜோதிகாவைத் திரையில் கொண்டுவந்தது. அதற்குப் பிறகு சந்திரமுகி , மொழி என்று பல ஹிட்களைக் கொடுத்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்த காலம் அது.
சினிமாவைப் பொறுத்தவரையில் பல காலங்களுக்கு நிலைத்து நிற்பது என்பது பெரும்பாலான நாயகிகளுக்கு ஒரு கனவாகவே இருந்து விடுகிறது. திருமணத்திற்குப் பின்னான இடைவெளிக்குப் பின் 36 வயதினிலே (How old are you என்ற மலையாளப் படத்தின் ரீமேக்) திரைப்படம் வந்த போது ஜோதிகாவைக் கொண்டாடாத ஆட்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் இருந்தன. நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அழகழகான புடவை கட்டிக் கொண்டு ஜோ கொடுத்த ப்ரமோவால் ஈர்க்கப்பட்டு தான் 36 வயதினிலே படம் பார்க்கப் போனது! ஆனால், எதிர்பார்த்ததைவிட ஓர் அழுத்தமான கதை என்றதும் மனதில் ஒன்றிவிட்டது அந்தத் திரைப்படம். பொதுவாக இல்லத்தரசிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் போதிய மரியாதை கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவி வந்த நிலையில், வேலைக்குச் சென்று சுய சம்பாத்தியத்தில் நிற்கும் பெண்களும் இது போன்ற சிக்கலில் தவிப்பதைச் சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய திரைப்படம் 36 வயதினிலே.
அந்தத் திரைப்படம் என் போன்ற பல பெண்களுக்கு இன்றும் இன்ஸ்பிரேஷனாகவே இருக்கிறது. தன் கணவர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட, அந்தச் சூழ்நிலையில் படத்தைப் பார்த்த என் தோழி ஒருவர், ஜோதிகாவின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்ததாகவும் , அவளின் மன உணர்வுகளை அப்படியே திரையில் கண் முன்னே கண்டதாகவும் சொல்லி என்னிடம் அழுதிருக்கிறாள். என்னதான் அன்பான கணவராக அமைந்துவிட்ட போதும் பெண்ணின் முன்னேற்றம், அவளின் ஆசை என்பது குடும்பத்தைப் பொருத்தவரை இரண்டாம் பட்சம் என்பதை ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாக அழகான உடல்மொழியோடும், நகைச்சுவையுடனும், கூடவே வலி நிறைந்த மன உணர்வுகளோடும் நடித்து அசத்தியிருப்பார்.
“காலையில சாப்பாடு கட்டிகிட்டு ஆஃபீஸ் ஓடணும்…பொண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்… எப்போ பாரு தக்காளி என்ன விலை, வெங்காயம் என்ன விலைன்னு பட்ஜெட் போட்டுப் போட்டு… இந்த அன்றாட வாழ்க்கை எனக்கு அலுத்துப் போச்சு” என்று கணவர் சொல்லும் நேரம், “அதே அலுப்பு தான் எனக்கும்… ஆனா சாப்பாடு சரியில்லேன்னா தட்டு பறக்குதுல்ல… எனக்குத் தக்காளி விலை முக்கியம் தான் ” என்று வார்த்தைகளைத் தெறிக்க விடும் வசந்தியைப் பார்த்து எத்தனை பெண்கள் விசிலடிக்க முற்பட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.
என் உறவுக்காரப் பெண் ஒருவர் இருக்கிறார். எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டார். அவர் தன் படிப்பை உச்சரிக்கும்போது ட்ரிப்பிள் ஈ என்று அழுத்திச் சொல்வார். சிலரின் உச்சரிப்பு அது போல இருக்கும். சிலர் முப்பது என்பதை நுப்பது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது வெறும் உச்சரிப்பு மட்டுமே. ஆனால், அப்படிச் சொல்வதை அவள் குடும்பம் மொத்தமும் இன்று வரை கேலியாக அனைவரிடமும் சொல்லிச் சிரிப்பார்கள். “அவ என்ன இன்ஜினியரிங் படிச்சான்னு கேளுங்க” என்று வீட்டிற்கு வரும் நண்பர்களிடம் அவள் கணவர் சொல்லிச் சிரிப்பார்.
அவளுக்கும் ஆரம்பத்தில் இது தர்ம சங்கடமாக இருந்திருக்கும். ஆனால், இப்போது அவளும்கூடச் சேர்ந்து சிரித்து கடந்துவிடுகிறாள். நாமெல்லாம் யோசித்துப் பார்த்தால் நம் வீட்டில் உள்ள பெண்களையும் இது போல் ஏதாவது ஒரு வகையில் அவமானப்படுத்திக் கொண்டே தான் இருந்திருப்போம். தன் குழந்தைகளிடமேகூட தான் அறிவிலியாகச் சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய மனச்சோர்வு அளிக்கும் செயல் என்பதை வசந்தி ஒவ்வொரு நொடியும் திரையில் கடத்துவார்.
சோஷியல் மீடியா பற்றிய அறிமுகம் இல்லாமல், தான் பெரிய அளவில் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இயல்பாகக் கடந்துவிட்டு, அதற்குப் பகடியாக ஒரு வீடியோவோடு பதில் சொல்லும் காட்சி ஒன்று உண்டு. அது போன்ற துணிச்சலை ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் உணர்ந்த தருணம் அது. குடும்பம் என்ற அமைப்பில் நுழைந்து விட்டதும் ஒரு பெண் தனக்கான ‘எல்லாவற்றையும்’ இழந்து விடுகிறாள். ஒரு கட்டத்தில் அதை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போது இந்தச் சமூகம் அவளுக்குச் சுயநலவாதி என்ற பட்டத்தைக் கொடுக்கத் தயாராக நிற்கிறது. பின் ஒரு நாளில் மீட்பர் போல ஒரு பள்ளித் தோழியோ கல்லூரித் தோழனோ வந்து, “நீ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா? நீ பல பேருக்கு இன்ஷ்ப்ரேஷனா இருந்திருக்க” என்று சொல்லும் வரை அவளின் பலம் அவளுக்கே தெரிவதில்லை.
பெண்களுக்கு இன்னும் என்னதான் சமத்துவம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு நாட்டின் பிரதமராக வருவதற்கு இந்திராகாந்திக்குப் பிறகு ஒரு திறமையான பெண் கூடவா இல்லை’ என்ற ஒற்றைக் கேள்வி போதாதா? இப்படியாக அந்தத் திரைப்படம் பேச வேண்டியதை அழகாக, அதே நேரத்தில் சமூகத்தில் அழுத்தமாகப் பேசிச் சென்றது.
அதற்குப் பிறகு ஜோவின் திரைப்படங்கள் என்றாலே சிறிய கிராமம் முதல் பெருநகரம் வரை அனைத்துப் பெண்களும் பரவலாகப் பேசும் அளவில் மாறிப் போனது. இங்கு திருமணத்திற்குப் பிறகு நடிக்க வந்து ஹிட் ஆன நாயகர்களும் நாற்பது வயதிற்குப் பிறகு சினிமாவிற்குள் நுழைந்து ஹிட் ஆன நாயகர்களும் எண்ணிக்கையில் அதிகம். இது போன்ற ஆணாதிக்கம் நிறைந்த இடத்தில் மீண்டும் தனக்கான இடத்தைப் பிடிப்பது ஜோதிகாவிற்குப் பெரும் சவாலாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கம்பேக் படம் வெற்றிகரமாகக் கொடுத்த பின், அடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அவரின் ரசிகர்களிடையே அதிகரித்தது. மீண்டும் நாயகி அந்தஸ்தைத் தக்க வைப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லயே!
எதிர்பார்த்தது போலவே சில வருடங்களில் இல்லத்தரசிகளின் பிரச்னையை மையமாக வைத்து காற்றின் மொழி (இந்தியில் வெளியான தும்கரி சுலு படத்தின் ரீமேக்) திரைப்படம் வெளிவந்தது. வித்யாபாலன் நடிப்பில் தும்கரி சுலு திரைப்படம் முதலிலேயே பார்த்திருந்ததால் அதன் ரீமேக்கில் ஜோ நடிக்கிறார் என்ற செய்தி வந்ததும் எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. அத்திரைப்படத்தைப் பார்த்த போதே, தமிழில் ரீமேக் என்று வந்தால் ஜோ தான் இதற்கு சரியான தேர்வாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
“கரண்ட் பில் கட்ட ஏன் நேரா போகணும், ஆன்லைன்ல கட்டலாமே?” என்று கணவர் கேட்கும் போது, ஆபீஸுக்கு நேரடியாகவே சென்றால் பல பேரைப் பார்க்கலாம், பேசலாம் என்று ஜோ ஒரு பதில் கொடுப்பார். பரபரப்பான காலையில் யாருமில்லா வீட்டின் தனிமையை உணர்ந்த ஓர் இல்லத்தரசியின் வலி அது. மின்வாரிய அலுவலகத்தில் காத்திருக்கும் போது ரேடியோவில் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அந்த நிகழ்ச்சி தான் அவர் வாழ்க்கைப் பாதையை மாற்றும். ரேடியோக்கள் இல்லத்தரசிகளுக்கென்றே கிடைத்த ஒரு வரம் என்று நான் சொல்வேன். துபாய் வந்த புதிதில் அநேக நேரம் நான் ரேடியோவைத்தான் கேட்டுக்கொண்டிருப்பேன். ஒரு முறை கேள்வி-பதில் நிகழ்ச்சியில், அதுவும் அரசியல் பற்றிய நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெகு நேரம் முயற்சி செய்தும் லைன் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக லைன் கிடைத்ததும் என்னைக் காட்டிலும் நிகழ்ச்சியை வழங்கும் தொகுப்பாளருக்கு மகிழ்ச்சி. இரண்டு மணி நேர அரசியல் கேள்வியில் இறுதியில் ஒரு பெண் என்று அவரே மகிழ்ச்சியில் இருந்தார். கேள்வி எனக்கு நினைவில் இல்லை. ஆனால், “பெண்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெண்களும் அரசியல் பேச வேண்டும். நாட்டின் அரசியல் தான் வீட்டில் வாங்கும் வெங்காயம் முதல் கேஸ் சிலிண்டர் வரை அடிப்படைத் தேவைகளின் விலையைத் தீர்மானிக்கிறது” என்று பேசிய நினைவு. ஹவுஸ்வொய்ஃப் பேசும் அரசியலை நம் வீட்டு ஆண்கள் “உனக்கு அரசியல் பேச்செல்லாம் எதற்கு” என்று ஆரம்பத்திலேயே மட்டம் தட்டிவிடுகிறார்கள். இவர்கள் டீக்கடையில் பேசும் அளவுக்குக்கூடப் பெண்களுக்கு அரசியல் பேசும் தளங்கள் கிடைப்பதில்லை. சோஷியல் மீடியா வந்த பிறகு அதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது மட்டுமே ஆறுதல்.
இயக்குநர் ராதாமோகன் எப்பொழுதுமே குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாகப் படைப்பதில் வல்லவர். சிறு பிசகு ஏற்பட்டாலும் அது ஓவர் சென்டிமெண்டலாகப் போய்விடும் என்று தன் படங்களைக் கவனமாகக் கையாள்பவர். காற்றின் மொழி ரீமேக் படமாகவே இருந்த போதும், விஜி என்ற பாத்திரத்தையும், ஆர்.ஜே மதுவையும் மீளுருவாக்கம் செய்திருந்தது அதி அற்புதம். ஆர்.ஜேவாக அவதாரம் எடுத்து இரவு நேரத்தில் ஒலிபரப்பாகும் ‘மதுவோடு பேசுங்கள்’ என்ற அந்தரங்க கேள்வி-பதில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு விஜிக்கு கிடைக்கும். “நான் பெண்கள் அணியும் உள்ளாடைக் கடையில் வேலை செய்கிறேன். எனக்கு எந்தப் பொருளைப் பார்த்தாலும் பெண்ணின் மார்பகங்கள் போலவே தோன்றுகிறது. இது தவறானதா, என் மனதை மாற்ற பல வழிகளில் முயன்றேன். முடியவில்லை. வழி சொல்லுங்கள்.” ரேடியோவில் பேசும் கனவில் இருந்தவளுக்கு, ஓர் ஆணிடம் இருந்து இவ்வாறாக வந்த முதல் கேள்வியிலேயே ஒரு நிமிடம் தடுமாறிப் போவாள். ஆனால், சிறிது சுதாரித்துவிட்டு அந்தக் கேள்வியை அவள் எதிர்கொள்வாள். திருமணம், குழந்தை, என்று வாழ்வின் பல நிலைகள் கடந்த ஒரு பெண் இது போன்ற கேள்வியை, அல்லது இது போன்ற மனச்சிக்கல்களுக்கு ஓர் ஆசுவாசமான பதில்களைத் தருவாள் என்ற பிம்பமும் அப்போது எனக்கு வந்தது. அந்த வயதும் அனுபவமும் வந்தபோது அது சரியென்றே உணர்ந்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சி அருமையாகச் சென்றதும் , அதற்குப் பின்னர் அவள் அந்த ரேடியோவில் ஒரு ஸ்டார் தொகுப்பாளினியாகவே மாறிவிடுவாள்.
இதோ இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்கூட என் மனதில், ‘வாழ்வில் எதையாச்சும் சாதிச்சிடணும்… இப்படி ஹவுஸ்வொய்ஃபா மட்டுமே இருந்திடக் கூடாது…’ என்னும் மன ஓட்டம் தான் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டும் அல்ல. ஹவுஸ்வொய்ஃபாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே இருக்கும் மன உளைச்சல் இது. எல்லாம் சரி. ஆனால், தன் மனைவி குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி தனக்கான ஒரு வெளியில் இயங்கும் போது கணவனால் அதை எவ்வாறு சாதாரணமாக ஏற்க முடியும்? இது முழுக்க முழுக்க அவனின் தவறும் இல்லை. அதிலும் தான் வாழ்ந்த, வளர்ந்த சூழலில், தன் அம்மா, அக்கா, உறவினர்கள் என்று யாரும் இது போல் இல்லை என்ற நிலை இருந்தால் அந்தக் கணவனால் ஆரம்பத்தில் அதைப் புரிந்துகொள்வது சிறிது சிரமமே. அந்தப் புரிதல் ஆணுக்கு வரும் வரை ஒவ்வொரு பெண்ணும் சிறிது போராடத்தான் வேண்டும் என்பதை விஜி அழகாகத் திரையில் நடித்திருப்பார். தன் குழந்தையின் படிப்பு அவன் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் சிறிது சறுக்கும் போதும்கூட அவளே தன்னைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிக்கொள்வாள். நம் இந்தியச் சமூகத்தில் மட்டும் தான் குழந்தைகளுக்கான பிரச்னை என்று வரும் போது வீட்டில் உள்ள பெண்களைக் கையைக் காட்டி விடுகிறார்கள். குழந்தை என்று வரும் போது பெற்றவர்கள் இருவருக்கும் சரிசமமான பங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடப்பதே மாற்றத்திற்கான ஓர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.
காற்றின் மொழி விஜியைப் போல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கேரட் நறுக்கும் தருணத்தில் வாழ்க்கை மாறிப் போவதில்லை. அதற்காக அவள் ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன் ‘மனதோடு பேச’ வேண்டும். ஒவ்வொரு நாளும் ரேடியோ அலுவலகத்திற்குள் நேர்த்தியாகக் கட்டிய புடவையுடன், ஹேண்ட் பேக்கைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, ஒருவித மிடுக்கோடு, உதட்டில் எப்போதும் வழியும் புன்னகையோடு நுழையும் ஜோ அலைஸ் விஜி அலைஸ் ஆர்.ஜே மது நிச்சயம் ஓர் உற்சாகத்தின் அடையாளம்.
36 வயதினிலே திரைப்படத்திற்குப் பிறகு ஜோதிகாவின் மேல் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்ததை நான் கவனித்தேன். அவர் இனிமேல் ஆண்களுடன் கை கோத்து நடிக்கப் போவதில்லை. அவரின் திரைப்படங்களில் காதல் காட்சிகள் இருக்கப் போவதில்லை. ஆண்களைத் தொடாமல் நடிக்கப் போகிறார். புரட்சி வேடங்களில் தான் நடிக்கப் போகிறார் போன்ற செய்திகள். இவை அனைத்துமே பெண்கள் தங்கள் மேல் தாங்களே கல்லை எறிவது போன்ற ஓர் அபத்தமான பார்வை. பெண்ணைத் தொடாமல் நடிப்பேன் என்று கொள்கை கொண்டு சினிமாவில் வலம் வந்த டி. ராஜேந்தருக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. பெண் என்று வரும் போது மட்டும் அதை விமர்சனப்படுத்துவது ஒரு பொதுப்புத்தியாக இருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் ஆரம்பித்து, களத்தில் இயங்கும் பல பெண்ணியச் செயற்பாட்டாளர்களைப் பார்க்கிறேன். அவர்கள் தங்களின் நண்பர்கள் குறித்து எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறார்கள்? தோழர்களுடன் இருக்கும் படங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறோமா? சிலர் அதைத் தைரியமாகப் பகிர்கிறார்கள். ஆனால், சில பெண்கள் தோழமையோடு பழகினாலும் அதை மீடியாக்களில் அதிகம் பகிர்வது இல்லை. தேவை இல்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவே அது போல் செய்யலாம். சில நூறுகளில் லைக், சில ஆயிரம் பார்வைகள் விழும் சோஷியல் மீடியாவிற்கே இந்தக் கதியென்றால், கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் தன் திரைப்படம் என்ன விஷயத்தைப் பேச வேண்டும் என்ற தெளிவு ஒரு பெண்ணிற்கு இருந்தால் போதாதா? குட்டைப் பாவாடையோடு பாடல்களுக்கு நடனமாடுவதும், காதல் காட்சிகளில் ஆண் பக்கத்தில் ஒரு பொம்மையாக நின்று கொண்டு இருப்பதைக் காட்டிலும் இது மேலான தேர்வாகவே எனக்குத் தோன்றியது.
செக்கச் சிவந்த வானம், பொன்மகள் வந்தாள், ராட்சசி, மகளிர் மட்டும் என்று தொடர்ந்து வந்த பல படங்களும் தனித்த அடையாளத்துடன் இருந்தன. உடன்பிறப்பே போன்ற பிற்போக்குத் தனங்களுடன், பழமைவாதங்கள் பேசிய படங்களில்கூட ஒவ்வொரு காட்சியிலும் ஜோ என்ற தனிப் பெண்ணின் வெற்றியை என்னால் ரசிக்காமல் கடக்க முடியவில்லை.
திருமணம், குழந்தை, அடுத்த குழந்தை என்ற நம் சமூக அமைப்பில் நுழைந்தவுடன் ஒவ்வொரு பெண்ணுக்கும் பல கட்டங்களாக அவளுக்கான கட்டுப்பாடுகள் கட்டமைக்கப்பட்டு விடுகிறது. அதிலும் சாதி, மதச் சடங்குகளில் ஊறிப் போயிருக்கும் நம் இந்தியச் சமுதாயத்தில் அந்த விலங்குகளை எல்லாம் ஒரு பெண் உடைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தன் சுயத்திற்காகத் திருமணம் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து வெளியே வருவதென்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. அது அவசியப்படவும் இல்லை. அவளுக்காக ஒரு வரையறை கொடுக்கப்பட்டு, அதற்குள் இருந்துகொண்டே சாதிக்கலாம் என்ற வாய்ப்பு வரும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்வது தான் சிறந்த வழி. சமூக அமைப்பின் உள்ளேயே நின்றுகொண்டு சாதிப்பது என்பது இன்னும் கடுமையான சவால். அந்தச் சவாலில் ஜோதிகா மட்டும் அல்ல, நீங்கள், நான் என்று அனைவருமே அவரவர்களுக்கான தளங்களில் போராடலாம். அப்படிப் போராடும் பெண்கள் அனைவரும் என் செல்லங்களே !
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர். ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் இவர் எழுதிய ‘தமிழ்ப் பெண்ணும் துபாய் மண்ணும்’ தொடர், ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.