வாழ்வின் அந்திமப் பொழுதுகளை முதுமை என்கிறோம். பிறந்த உயிர் இறப்பை நோக்கி நடக்கும் வேளை அது. கட்டுடல் தளர்ந்து, தோல் சுருங்கி, தளர்நடைப் பருவம் இன்னொரு மழலைக்கு ஒப்பாகும். அதே நேரத்தில் வாழ்வின் சுவாரசியங்கள் கைகூடி, சிந்தனையில் பக்குவம் ஏற்பட்டிருக்கும். உடலுக்கு ஏற்படும் முதுமை வேறு. மனதுக்கு ஏற்படும் முதுமை வேறு. வயதாக ஆக சிறிய விஷயங்களே அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.


முதுமை என்பது ஒரு சிறந்த வரம். இளமையை வெற்றிகரமாகக் கடந்தவர்களே முதுமையை அடைகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களில் முதியோர், முதியவர், மூதாளர், மூதிலாளர், மூத்தோர், முதுமக்கள், மூதாட்டி, முந்தையர் முதுமூப்பு, முதுமகன், முதுமகள், முதிர்வினன், முதிர்வினள், முதியாள், முதுபெருங்குரவர் ஆகிய சொற்கள் முதியோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டவையாகும். இவை முதியவர்களை மரியாதையோடு விளிக்கக்கூடியவை. ஆனால், இன்று இளைய தலைமுறையினர் பெரியவர்களை எப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

முதுமை என்பது ஏதோ ஐம்பது அல்லது அறுபது வருடங்கள் கடந்த பின்தான் வருகிறது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. நாம் பிறந்த அடுத்த நொடியில் இருந்தே முதுமை அடையத் தொடங்குகிறோம். கருவறையில் இருந்து கல்லறை நோக்கி நடக்கும் நேரத்தின் இறுதி நிமிடங்கள் தாம் இந்த முதுமை.

50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மெல்ல மந்தமடைகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தியும் குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்கவும், உலக இயக்கத்தைப் புத்துருவாக்கவும் இந்த முதுமையும் இறப்பும் ஏற்படுகிறது எனலாம். முதுமை எவ்வாறு ஏற்படுகிறது என்று அறிவியல் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறது. முதுமை ஏற்படுவதற்கான காரணங்களாகச் சிலவற்றை அறிவியல் நம் பார்வைக்கு வைக்கிறது.      

அதில் முதலாவது செல்களுக்கு இடையே ஏற்படும் மரபணு மாற்றம். இதனால் செல்கள் சேதமடைந்து முதுமை ஏற்படுகிறது. அடுத்து டிஎன்ஏ இழைகளின் ஓரத்தில் காணப்படும் குரோமோசோம்களின் டெலோமிர்கள் வருடங்கள்கூடக் கூடச் சிதைவுறுவதால் பாதிப்படைந்து முதுமையைத் தோற்றுவிக்கும். செல்களின் சேதமடைந்த பகுதிகள் இளமைப் பருவத்தில் உடனடியாகப் புதுப்பிக்கக் கூடிய வகையில் இருக்கும். ஆனால், வருடங்கள் கடக்கும் போது அந்தத் திறன் குறைவதால் முதுமை வருகிறது.           

வருடங்கள் ஆக ஆக உடல் செல்களில் கொழுப்பு, சர்க்கரையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் திறன் குறையத் தொடங்குவதால், வளர்சிதை மாற்றம் ஏற்படுவது குறைந்து அது தொடர்பான நோய்கள் ஏற்பட்டு முதுமை வருகிறது. செல்களுக்குச் சக்தியை வழங்கும் செல் இழைமணியின் செயல்பாடுகள் வருடங்கள் அதிகரிக்கும்போது குறையத் தொடங்குகிறது. ஒரு செல், வருடங்கள் அதிகரிக்கும்போது வேலை செய்யும் திறனை இழந்து விடுவதால் அது வயதான செல்லாகக் கருதப்படுகிறது. இத்தகைய வயதான செல்கள் உடலில் அதிகரிக்கும் போது இயல்பாகவே முதுமை வரத் தொடங்குகிறது. ஸ்டெம் செல்கள் படிப்படியாகச் சக்தி குறைந்து, மீளுருவாக்கிக்கொள்ளும் செயல்திறனை இழந்து விடுகின்றன.

செல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் தகவல் தொடர்பில் இருந்துவருகின்றன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்தத் திறனும் குறைந்து போகிறது. இதனால் வீக்கம் உருவாகி அந்தச் செல்கள் ஒன்றுக்கொன்று தகவல் தொடர்புகொள்ளும் திறன் மறைந்து போகிறது. இதனால் நோய்க் கிருமிகள், சேதம் விளைவிக்கும் உயிரணுக்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு உடலுக்கு அற்றுப் போய் விடுவதால் முதுமை வரத் தொடங்குகிறது.                  

ஸ்பெயினின் தேசியப் புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மனுவேல் செர்ரானோவின் இந்தக் கூற்றுகள் முதுமை வருவது குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இந்த முதுமை அடையும் நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் அதனை மட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் அவர்.

முதுமை என்பது வரமா அல்லது சாபமா என்பது குறித்த வாதங்கள் ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் வேறுபடுகின்றன. முதுமைப் பருவத்தை வரமாக்கிக்கொள்வதும், சாபமாக மாற்றிக்கொள்வதும் அவரவர்களுடைய எண்ணங்களின் மூலம் தான். உடலையும் மனதையும் இளமையில் பராமரிக்காதவர்கள் நிச்சயமாக முதுமையில் தடுமாறித்தான் போவார்கள். 25 வயதைக் கடந்த பின்பு பேசல் மெட்டபாலிக் ரேட் எனப்படும் அடிப்படை வளர்சிதைமாற்ற விகிதம் பத்து வருடங்களுக்கு ஒரு முறை 10 சதவீதம் குறைந்துவிடுகிறது. மனிதன் உறங்கும் போதும் ஓய்வெடுக்கும் போதும் உடல் இயங்கச் செலவிடப்படும் சக்தியே அடிப்படை  வளர்சிதை மாற்ற விகிதம் எனப்படுகிறது. இதனால் இளமையில் எளிதாகச் செய்த வேலைகளை முதுமையில் செய்ய இயலுவதில்லை. உடல் சோர்வடையத் தொடங்குகிறது.              

அத்துடன் முதியவர்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. அதை ஈடு செய்யும் வகையில் எளிதில் செரிமானம் ஆகும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். முதுமையில் எலும்புகள் வலுவிழந்து போகும். அதனால் சிறு அடி பட்டாலும் உடனே எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உண்டு. இவற்றைத் தவிர்த்து முதுமையை எளிதாக எதிர்கொள்ளலாம்.              

வயது என்பது வெறும் எண்களின் கூட்டம் தான். மனதை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். பதினாறைத் தாண்டக் கூடாது. சமீபத்தில் பலவிதமான வயதுடைய பெண்களுடன் உல்லாசப் பயணம் செல்ல நேரிட்டது. இரண்டு நாள் பயணத்தில் தான் எத்தனை எத்தனை உற்சாக முகங்கள். மனம் மகிழ்வாக இருக்கும் போது உடல் லேசாகிவிடுகிறது போலும். முதுமை என்று களைப்படைந்த ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை. ஆட்டம், பாட்டு, விளையாட்டு, கொண்டாட்டம் என்று அசத்தினார்கள். நம் மனதை இதுபோல் பழக்கிக்கொண்டால் உடலும் தானாகவே புதுப்பித்துக்கொள்ளும். உள்ளத்தின் உற்சாகம் தானே உடலிலும் ஊறிவிடும்.

முதுமையில் பாலுணர்வு என்பதைத் திரைப்படங்கள் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டன. சமூகம்கூட முதியோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் கிண்டலும் வசையும் பாடுகிறது. பாலுணர்வு சுதந்திரம் இளையோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது முதியவர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில் துணை தேடும் நெஞ்சங்கள் வெறும் உடலுறவுக்கு மட்டுமே தேடுவதில்லை. அதையும் தாண்டி ஒரு நேசத்தையும் உணர்வுகளையும் வலிகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் தேடுகிறார்கள். ஆனால், இதைப் புரிந்துகொள்ள மறுக்கும் சமூகம் அவர்களைப் பொதுப் புத்தியுடனே அணுகுகிறது. நமக்கும் ஒருநாள் முதுமை வரும் என்று நினைத்தால் அவர்களைக் கருணையுடன் அணுகலாம். 

ஆனால், இப்போது முதுமையைச் சகித்துக்கொள்ளாத ஒரு போக்கு நிலவிவருவது அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. சில மாவட்டங்களில் வயது முதிர்ந்தவர்களை விடிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு பச்சைத் தண்ணீரில் குளிப்பாட்டி, கையோடு நான்கைந்து இளநீர்களைச் சீவிக் கொடுத்து அருந்த வைப்பார்கள். அன்று பொழுது சாய்வதற்குள் அந்த உயிர் பிரிந்துவிடும். இதை எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ஒரு சடங்காகச் செய்வதை அறியும் போது மனம் கனத்துத் தான் போகிறது. இன்று நாம் விதைப்பதையே  நாளை  அறுவடை செய்ய வேண்டும் என்று உணராமல் இருக்கிறார்கள். இயற்கை படைத்த உயிரை எப்போது எடுக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இயற்கையின் வரிசையில் நாம் குறுக்கீடு பண்ணக் கூடாது. மனதைச் சலிப்படைய விடாது முதுமையில் நமக்கே நமக்கான நேரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிடித்த கலைகளைக் கற்றுக்கொள்ளலாம். தெரிந்த விஷயங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம். புத்தக வாசிப்பு, திரைப்படங்கள் என்று நேரத்தை உபயோகமாகச் செலவிடலாம். சமூக சேவை, ஆன்மிகச் சுற்றுலா என்று மடைமாறலாம். வயதாகி விட்டது என்ற எண்ணமே வரக் கூடாது. சிறுசிறு உடற்பயிற்சிகள் மூலம் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ளலாம்.

தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது. எதிர்மறைச் சிந்தனைகளை ஒதுக்கிவிட வேண்டும். நேர்மறைச் சிந்தனைகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்க வேண்டும்.                  

அப்புறம் “இளமை திரும்புதே… புரியாத புதிராச்சே… இதயத் துடிப்பிலே பனிக்காற்றும் சூடாச்சே… ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்… தூக்கம் வரவில்லை கொஞ்சம்… மாலை வரும் என அஞ்சும்… மீண்டும் முதல் பருவம்…” என்று சத்தம் போட்டுப் பாடலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.