கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.
தமிழில்: சி.சு. சதாசிவம்
13
மணிபுரம் பெரிய மசூதியை அவர் அடையும்போது மசூதியின் பெரிய மௌல்வி நடுப்பகலின் நமாஸ் முடித்து குர்-ஆன் படித்தவாறு உட்கார்ந்திருந்தார். காதர் அங்கேயே ‘அல்லி’யில் (தடாகத்தில்) கைகால்களைக் கழுவிக்கொண்டு மசூதியின் உள்ளே வந்து நமாஸ் செய்தார். மௌல்வி குர்-ஆன் ஓதி முடிந்த பிறகு அவர் அருகில் சென்று அவருக்கு ‘சலாம்’ இட்டார். மௌல்வி ‘சலாமை’ திரும்பச் செலுத்திவிட்டுக் காதர் வந்த காரணத்தைக் கேட்டார்.
காதர் சாயபு, நாதிராவின் தலாக் பற்றியும் இந்த ஒரு நாள் திருமணம் பற்றியும் அவருக்குத் தெரியப்படுத்தினார். பிறகு, “பாருங்க மௌல்விசாஹிப், இப்போ அந்தப் பொண்ணுக்கு ஒரு சந்தேகம், இதனால தனக்குக் கொழந்தையாயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? நீங்க தயவுசெஞ்சி இந்தப் பிரச்னைக்கு ஒரு பரிகாரம் சொல்லணும்” என்று மிகவும் வினயமாக மௌல்வியை வேண்டிக்கொண்டார்.
மௌல்வி சற்றுநேரம் ஒன்றுமே பேசவில்லை. அவரின் நெஞ்சு ஏறி இறங்குவதிலிருந்தும் அவர் விரைந்துவிட்ட அனல் மூச்சுக்காற்றிலிருந்தும் அவருக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காதர் சாயபு உணர்ந்து கொண்டார். மௌல்வியின் கண்கள் நட்சத்திரங்களைப் போல ஒளியுமிழத் தொடங்கின. அவர் ஒருமுறை தம்முடைய நரைத்த தாடியை நீவிக்கொண்டே, ”உங்களுக்கு, ஜனங்களுக்குப் புத்தியேயில்ல. குர் ஆனைச் சரியா புரிஞ்சிக்கிறதில்ல. மூணுமுறை ‘தலாக்! சொல்றதோட அர்த்தம் ஒரே நேரத்துல சொல்லிடணுன்றதில்ல… மூணு மாசத்துல தனித்தனியா சொல்லணும். மூணுமுறை ‘தலாக்’ சொல்றதுன்னா அது குர்-ஆன் நமக்குக் கொடுத்திருக்கிற மூணு சந்தர்ப்பம். இந்த மூணாவது வாய்ப்பை நாம பயன்படுத்தும்போது நாம நல்லா யோசனை பண்ணணும். இனிமே எப்போதுமே இந்த மனைவி நமக்கு வேண்டாம்ன்ற முடிவான தீர்மானத்தோட தான் நாம இந்த மூணாவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கணும். ரெண்டு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியிருந்தாலும்கூட எந்தத் தொல்லையும் இல்லாம, கணவன் மனைவி திரும்பவும் சேர்ந்து வாழலாம். ஆனா, இந்த மூணாவது வாய்ப்பும் முடிஞ்சி மறுபடியும் ஒருத்தனுக்கு அதே மனைவி வேணும்னு வரும்போது அவள் இன்னொருத்தனைத் திருமணம் பண்ணிக்கிட்டு அந்தக் கணவன் மனைவி நல்லபடியா வாழ முடியாம அவனைவிட்டு வந்தவளாயிருக்கணும். முதல் கணவனையே திருமணம் பண்ணிக்கிறதுக்காக ஒருத்தன ஒரு இரவுக்குத் திருமணம் பண்ணிக்கணும்னு குர்-ஆன்ல எங்கேயும் சொல்லலே. இதெல்லாம் இந்த முட்டாள் ஆணுங்க தங்களோட வசதிக்காக ஏற்படுத்திக்கிட்ட தந்திரங்க. இருந்தாலும், ஒரே நேரத்துலே ‘தலாக்’ன்னு மூணுமுறை சொல்லிவிட்டாலும் அந்தப் பந்தம் அறுந்து போன மாதிரிதான். அவங்க மறுபடியும் ஒண்ணாகணும்னா அந்தப் பொண்ணு இன்னொருத்தனைத் திருமணம் செய்யணும். இந்தத் திருமணத்தில் கொழந்தை பொறந்தா அந்தக் கொழந்தைக்கு இந்தக் கணவனே சொந்தக்காரன், பொறுப்பானவன். அதனால கொழந்தை பொறக்கிற வரைக்கும் இந்தப் பொண்ணு தன்னொட முதல் கணவன திருமணம் பண்ணிக்கவே முடியாது. இப்படி குர்-ஆன் சொல்றது ஒண்ணுன்னா நீங்க பண்றது வேறொண்ணு ” என்று சோல்லிவிட்டு மௌல்வி எழுந்து கோபத்தோடு தம் அறையை நோக்கி நடந்து போனார்.
காதர் சாயபு கிளியூருக்கு வந்து எல்லாவற்றையும் மஹமத்கானுக்கு விளக்கிவிட்டுத் தன் வீட்டிற்குப் புறப்பட்டார். தாங்களெல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணுக்குப் பெரிய அநீதியை இழைக்கிறோமோ என்ற ஓர் எண்ணம் அப்போது அவர் மனதில் ஒரு மூலையில் குறுகுறுத்தது.
மாலை நேரம் நெருங்க நெருங்க நாதிரா இருந்த இடத்தில் இருக்க முடியாமல் தவித்தாள்; நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. ஏதோ தவிப்பு; என்னவோ படபடப்பு. தான் எப்போதோ இறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? பாப்புவைப் பெற்றெடுக்க, தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால், அப்போது தான் சாகவில்லை; அப்போது பிழைத்து, இப்போது நாள் தோறும் செத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாள் கழிந்து விட்டால் தான் பிழைத்துக் கொண்ட மாதிரிதான். ஆனால், இந்த ஓர் இரவு சுகமாகக் கழியுமா?
இரவு கடைசி நமாஸுக்குப் பிறகு அலி மணமகனாக வந்தான். காதர் சாயபு அவனைத் தோணித்துறையில் சந்தித்தார். அங்கிருந்து இருவரும் மசூதிக்குப் போய் நமாஸ் முடித்துக்கொண்டு மௌல்வியையும் இன்னும் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு மஹமத்கானின் வீட்டிற்கு வந்தார்கள். நாதிரா தன் அறையில் படுத்திருந்ததினால் வந்தவர்களைப் பார்க்கவில்லை.
மௌல்வி அறையின் கதவருகில் நின்று அந்த ’நிகாஹ்’விற்கு நாதிராவின் ஒப்புதலைக் கேட்டார். ‘ஊம்’ என்ற ஒலி அவள் தொண்டையிலிருந்து வெளிவரவே இல்லை. மௌல்வி இன்னொருமுறை கேட்டதும் பக்கத்திலேயே இருந்த பாத்திமா மகளின் தோளைத் தொட்டுச் சமாதானப்படுத்தி, “ஊம்ன்னு சொல்லும்மா” என்றார் கனிவாக. நாதிரா மிகவும் பாடுபட்டு ’ஊம்’ என்றாள். ஒப்புதல் கிடைத்துவிட்டது. மௌல்வி வெளியறை நோக்கி நடந்தார்.
நிகாஹ் சொல்வது நாதிராவின் காதில் விழுந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லும் தன்னையே கோடாலியால் ஒவ்வொரு வெட்டாக வெட்டிப் பிளப்பதைப் போல அவள் உணர்ந்தாள். உதட்டைக் கடித்து அவள் அழுகையைத் தடுத்துக்கொண்டாள். காலச்சக்கரத்தைப் பிடித்து நிறுத்த முடியுமானால்…? எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு இத்தகைய தண்டனையை விதித்துவிட்டார்களே தன் அப்பாவும் கணவனும் மௌல்வியும்! யாரை எதற்காக நொந்து கொள்ள வேண்டும்? எல்லாம் தன் தலையெழுத்துப்படி நடக்கிறது. திருமறையை யாரும் மீறமுடியாதே!
நிகாஹ் முடிந்தது. ஆண்களெல்லாரும் வெளியறையிலேயே அமர்ந்து விருந்துண்ணத் தொடங்கினர். பக்கத்து வீட்டுத் தெரிந்த பெண்ணொருத்தி பாத்திமாவிற்குச் சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் உதவி செய்து கொண்டிருந்தாள். பரிமாறுவதற்கு வேண்டிய உணவு வகைகளை அவள் மகன் வெளியறைக்குக் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். எலும்பும் தோலுமாக இளைத்துப் போயிருந்த மஹமத்கானால் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்துகொள்வதே பெரும்பாடாய் இருந்தது.
நாதிரா எழுந்து நடுவீட்டிற்கு வந்தாள். கட்டுப்படுத்த முடியாமல் அவள் திரையைச் சற்று மெதுவாக விலக்கி அங்கே விருந்து உண்டு கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள். கடைசியில் அவளது பார்வை அலியின் மீது பதிந்தது.
தன் உண்மையான கணவனையும் தன் குழந்தையையும் மீண்டும் அடைய வேண்டுமென்றால் இவனுக்கு இந்த ஓர் இரவு தன் உடலை ஒப்படைத்தே ஆக வேண்டும். நிகாஹ் என்னவோ முடிந்துவிட்டது. இனி, தான் இவனுடன் இந்த இரவைக் கழித்தேயாக வேண்டும். பிறகு, காலையில் தலாக் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டுப் போய்விடுவான். அதன் பிறகு மூன்று மாதங்களானதும் கணவன் ரஷீதுடன் தன் மறுமணம்!
ஆண்களின் பந்தி முடிந்தது. பாத்திமா வந்து மகளைச் சாப்பிட அழைத்தார். நாதிரா எழுந்து உணர்வேயில்லாமல் தாயைப் பின்தொடர்ந்தாள். தாயுடன் சாப்பிட உட்கார்ந்தாலும் ஒரு கவளம்கூட அவள் தொண்டையில் இறங்கவில்லை.
வெளியறையிலிருந்து தந்தையின் குரல் கேட்டது.
“என்ன… அறைக்கு அனுப்பு.” எந்தக் கவலையும் இல்லாமல் ஆணையிட்டார் கான்.
தாய் மகளின் அருகில் வந்தார். மகளுக்குப் புதுப் புடவையொன்றை உடுத்தினார். மகளின் தலையைத் தடவி, ‘அல்லா உனக்குக் கருணை காட்டட்டும்” என்று தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு கூறினார்.
நாதிரா ஒரு நிமிடம் அங்கேயே தயங்கி நின்றாள். பிறகு, ”உம்மா, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன். என்னமோ தெரியலே, வயித்துக்குள்ள என்னமோ பண்ணுது” என்று முகத்தைச் சுருக்கிக்கொண்டு சொன்னாள்.
”நானும்கூட வரட்டுமாம்மா?” பரிவோடு தாய் கேட்டார்.
”வேணாம்மா, ஒருதடவ வெளியே போய் வந்தா சரியாயிடும். நானே போயிட்டு வந்துடறேன்.”
நாதிரா நேராக ஆற்றங்கரைக்கு வந்தாள். விடாமல் பெய்துகொண்டிருந்த மழை இப்போது நின்றிருந்தது. பௌர்ணமி நாளாக இருந்தும் வானத்தில் கனத்த மேகங்கள் சூழ்ந்திருந்ததால் நிலவைக் காணவேயில்லை. நாதிரா சற்று நேரம் ஆற்றங்கரையில் நின்று தன் அன்பான சந்திரகிரி ஆற்றையும் அதற்கு அப்பால் தெரியும் பாகோடு கிராமத்தையும் பார்த்தாள். அங்கிருந்து அவள் ஆற்றங்கரையோரமாகவே நடந்து தோணித்துறைக்கு வந்தாள். துறைக்கு அருகில் சில தோணிகள் இருந்தன. மழைக்கால இரவானதால் இந்த நேரத்தில் ஆற்றைக் கடப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. மசூதியின் பக்கம் வந்தாள். மசூதியிலும் யாரும் காணோம். மசூதியின் வாசலில் இருந்த ‘கோரி’களைக் கண்டு சிறுவயதில் பயப்படுவாள். சிறுவயதில் மசூதியின் பக்கத்திலிருந்த ஒற்றையடிப் பாதையில் தாயுடன் எங்காவது நடந்துபோகும்போது அவள் அந்தக் ‘கோரி’களின் பக்கம் பார்க்கவே மாட்டாள்.
ஆனால், இன்று அவளுக்கு எந்தவிதமான அச்சமும் ஏற்படவேயில்லை. அலியைப் பார்த்த பிறகு, அவனுடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டுமென்று ஆனதும் அவள் அப்போதே பாதி இறந்து போயிருந்தாள். ஏதோ ஒரு கற்பனை உலகம் அவளைக் கைவீசி அழைத்துக் கொண்டிருந்தது. மசூதியின் தடாகத்தின் அருகில் வந்து சற்று நேரம் அவள் அந்தத் தடாகத்தின் நீரையே உற்றுப் பார்த்தாள். நீரில் ரஷீதினதும் பாப்புவினதும் முகங்கள் மிதந்து வந்தன.
”அல்லா கருணை வைத்தால் நாம் நியாயத் தீர்ப்பு நாளன்று ஒன்று சேரலாம்!” என்று தடாகத்தில் எகிறிக் குதித்துவிட்டாள். சிறிது நேரம் தடாகத்து நீர் அல்லோல கல்லோலமாய் அலைபாய்ந்து மெதுவாக அமைதியடைந்தது. கனத்த மேகங்கள் மீண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிப் பேய்மழையாய்க் கொட்டத் துவங்கிற்று.
(நிறைந்தது)
படைப்பாளர்
சாரா அபுபக்கர்
கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.