கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

12

”இவன கொஞ்ச நாளைக்கு இங்கேயே உட்டுட்டுப் போகக் கூடாதா? நாலு நாளைக்கு வச்சிட்டிருந்துட்டு அனுப்பி வைக்கிறேன்” என்று மிகவும் கெஞ்சிக் கேட்டாள் நாதிரா.

“இல்லம்மா, ரஷீத் ஆத்துக்கு அந்தப்புறம் நின்னுட்டிருக்கிறான். கொழந்தைய கூடவே கூட்டிட்டு வந்துடணும்னு உத்தரவு போட்டுட்டானே ” என்று அவர் ஏதும் செய்ய முடியாதவராகச் சொன்னார்.

‘ரஷீத் ஆற்றுக்கு அப்புறம் இருந்தானா? தன்னைப் பார்த்தானா? தான் குழந்தையைக் கொஞ்சுகின்ற உற்சாகத்தில் ஆற்றின் மறுகரையைப் பார்க்கவேயில்லை. ‘தலாக்’ சொல்லிவிட்ட பிறகு ஒருவருக்கொருவர் பார்க்கக் கூடாது அல்லவா? அவன் அங்கே இருந்தது தனக்குத் தெரிந்திருந்தால் தான் ஆற்றங்கரைக்குப் போயிருக்கவே மாட்டோமே! தான் என்னவோ பார்க்கவில்லை, அதனால் எந்தத் தவறும் நேரவில்லை’ என்று நாதிரா தன்னைத்தானே சாமாதானப் படுத்திக்கொண்டாள்.

மகனை இன்னொரு முறை எடுத்துக்கொள்ள கைநீட்டினாள் நாதிரா. இப்போது குழந்தை பாட்டியைத் தழுவிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளவில்லை. நாதிராவின் முகத்தையே மலங்க மலங்கப் பார்த்து மெதுவாகத் தாயின் பக்கம் கையை நீட்டினான். ரத்தபாசம் அவ்வளவு விரைவில் விட்டுப் போய்விடுமா? மூன்று முறை ‘தலாக்’ என்று சொல்லி ‘தூ’ என்று துப்பிவிட்டால் என்றென்றைக்குமாகத் தொடர்பு அறுந்து போய்விடுவதற்கு அது ஒன்றும் நிக்ஹா இல்லையே? இங்கு கட்டிப் போட்டிருப்பது ரத்தப் பிணைப்பு!

நாதிரா குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முறை முத்தமிட்டாள். குழந்தை தாயின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்திலும் புன்னகை மலரத் தொடங்கியது. மெதுவாகத் தன் கையால் தாயின் கன்னங்களை வருடினான். ஒன்பது மாதங்கள் தன்னை வயிற்றில் சுமந்திருந்து, ஒன்பது மாதங்கள் தனக்குப் பாலூட்டிய பெண் இவளாக இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தானோ என்னவோ!

”குடும்மா அவன, ரஷீத் அங்க காத்துக்கிட்டிருப்பான்” என்று மாமியார் இப்படிச் சொல்லிக் குழந்தைக்காகக் கையை நீட்டியதும் அவள் தன் இதயத்தையே அறுத்துக் கொடுப்பதைப் போல், குழந்தையை அத்தையின் கையில் கொடுத்தாள். பெருமூச்சு விட்டு கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

”என்ன பண்றதுன்னு யோசனை பண்ணி சீக்கிரமா ஒரு முடிவுக்கு வா” என்று கூறிக்கொண்டே மாமியார் குழந்தையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கூடவே வந்திருந்த பையனும் பின்தொடர்ந்தான்.

அன்று இரவு கடைசி நமாஜ் முடிந்தபிறகு அவள் தன் முடிவைத் தன் தாய்க்குத் தெரியப்படுத்தினாள். தாய் தந்தையிடம் தெரிவித்தாள். தாய்-தந்தையரின் இதயங்களிலிருந்து பெரியதொரு சுமை இறங்கியது போலாயிற்று. இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், அந்தச் சுமை நாதிராவின் இதயத்தில் பாறையைப் போல உட் கார்ந்து கொண்டது. பாத்திமாவின் இதயத்திலும் எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு வேதனை, அவ்வளவுதான்.

மஹமத்கானுக்கு இப்போது வீட்டைவிட்டு வெளியே எங்கும் போவதற்கு இயலாமலிருந்தது. அதனால் அவர் தன் நண்பன் காதர் சாயபுவை வரவழைத்து மகளின் இந்தத் திருமணப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

தென்னை மரங்களிலிருந்து காய் பறிக்கும் அலி எனும் ஐம்பது வயதுக்காரர் ஒருவர் பாகோடு கிராமத்திலிருந்தார். ஒருமுறை பக்கத்து கிராமம் ஒன்றில் இப்படிப்பட்ட ஒருநாள் திருமணம் நடக்க வேண்டியிருந்தபோது அந்த வீட்டார் இவனை அழைத்துக்கொண்டு போய், அவனை இந்த ஓர் இரவு மணமகனாக ஏற்பாடு செய்தனர். இந்தச் செய்தியைக் காதர் சாயபுவும் கேள்விப்பட்டிருந்தார். இந்த ஒருநாள் திருமணம் மிகவும் அபூர்வமானதாக இருந்ததால், எப்போதாவது ஒருமுறை இந்தத் திருமணம் நடக்கும்போது ஊருக்கெல்லாம் தெரிந்துபோய்விடும்.

மறுநாள் காதர் சாயபு கிளியூரிலிருந்து பாகோடு கிராமத்திற்கு வந்து அலியைச் சந்தித்தார். அவனுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்தி வருகிற வியாழக்கிழமை இரவு கிளியூரின் மஹமத்கான் வீட்டுக்கு வரவேண்டுமென்று சொன்னார். புதியதாக ஆடைகள் வாங்கிக்கொள்ள அவன் கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். அவன் மகிழ்ச்சியில் தலையாட்டினான். ஓர் இரவுக்கே என்றாலும் ஒரு பெண்ணை மணந்துகொள்ள அவன் தயாராக இருந்தான்.

இவ‌னை மணந்துகொள்ள சம்மதமா என்று நாதிராவைக் கேட்க வேண்டியத் தேவையேயில்லை. ஏனென்றால் ஒரு நாளைக்கு அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியவள்; சமாளிக்க வேண்டியவள் பெண். ஆண்கள் யாரும் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. தங்களுக்கு விருப்பமான போது ‘தலாக்’ என்று மூன்று முறை, சொல்லிவிட்டால் அவர்கள் பொறுப்பு முடிந்துவிட்டது. எல்லாக் கட்டுகளும் தொடர்புகளும் அறுந்துபோய்விடும். ‘தலாக்’ எதற்காகச் சொல்லப்பட்டது என்று யாருக்கும் காரணம் கூற வேண்டியதில்லை. அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சமும்கூடக் கொடுக்க வேண்டியதில்லை. ‘மஹரை ‘த் தவிர அவளுக்கு எந்த வகையான பரிகாரமும் கொடுக்க வேண்டியதில்லை, அவன் மறுபடியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அப்போது அவள் மட்டுமே மற்றொருவனை மணந்து அந்தக் கணவனிடமிருந்து ‘தலாக்’ பெற்று வரவேண்டுமேயொழிய, அந்த முதல் கணவன் இன்னொருத்தியை மணந்து, அந்த மனைவிக்கு ‘தலாக்’ கொடுத்துவிட்டு வரவேண்டுமென்ற நியமம் இல்லை. கணவனிடம் எவ்வளவுதான் அவமானப் பட்டிருந்தாலும் பெண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாள். அவளுக்கு உணவு, உடை, இருக்க இடம் கொடுப்பவனே அவன்தானே?

நாதிரா தன் முடிவை என்னவோ தாய் தந்தையரிடம் சொல்லிவிட்டாள். ஆனால், இதயம் மட்டும் கொந்தளிக்கும் கடலாக இருந்தது. அவளது இதயத்தின் குமுறல், கொந்தளிப்பு யாருக்குமே புரியவில்லை. வேதனை நிறைந்த இரவுகளைப் படுக்கையில் புரண்டு நெளிந்து கழித்துக் கொண்டிருந்தாள். ஆற்றங்கரையின் குளிர்ந்த காற்றும் அவளுக்குப் பாலைவனத்தின் ‘அனல் காற்றாகத்’ தெரிந்தது. தான் மூச்சுத்திணறிச் செத்துக் கொண்டிருப்பதாகச் சில வேளைகளில் கனவு கண்டு நடுங்கினாள்.

கடைசியாக அந்த நாளும் வந்தேவிட்டது. ‘யா அல்லா, இன்று விடியாமலே இருக்கட்டும் ‘ என்று அவள் வேண்டிக் கொண்டாலும் அந்தக் காலைப்பொழுது விடிந்தே தீர்ந்தது. பாத்திமாவும்கூடப் பாரமான இதயத்தைச் சுமந்துகொண்டே நடமாடிக்கொண்டிருந்தார். இருந்தவர்களில் மஹமத்கான் மட்டும் கலகலவென்றிருந்தார். எப்படியோ கடைசியில் தன் மகள் அவள் கணவனோடு சேரும்படியாயிற்றே என்பது அவரது நிம்மதிக்குக் காரணம்.

இதற்கிடையில் நாதிரா தன் தாயாரிடம் ஒரு விஷயத்தைக் கேட்டாள், ”உம்மா இந்தக் கலியாணத்தினாலேயே எனக்குக் கொழந்தையாயிட்டா என்ன பண்றது?” பாத்திமா அதிர்ந்துபோனார். ஆமாம், தான் இதுவரை இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. அப்படி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அவள் கணவனிடம் சென்று பதட்டமான குரலில், ”என்னங்க, நாதிராவுக்கு இப்போ ஒரு சந்தேகம். இந்தக் கலியாணத்துனால தான் ஏதாவது கர்ப்பமாயிட்டா என்ன பண்றதுன்னு கேக்கறாளே?” என்றார்.
ஒரு கணம் மஹமத்கானும்கூடப் பேச்சிழந்து போனார். இதுவரை யாரும் இப்படியும் ஆகிவிட்டால் என்று எண்ணிப் பார்த்ததில்லை. நொடியில் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சும்மா எதையாவது ஒண்ண யோசன பண்ணி மூளைய கொழப்பிக்காதே. ஒரே நாள்ல அப்படியெல்லாம் ஆயிடாது. அப்படியே ஆயிட்டாலும் என்ன பண்றதுன்னு மௌல்விகளையே கேக்கலாம்” என்று அவர் மனைவியைச் சமாதானப்படுத்தினார். மகள் இந்தப் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மஹமத்கான் பாத்திமாவை என்னவோ சமாதானப் படுத்திவிட்டார். ஆனால், அவர் மனதிலிருந்து அவ்வளவு விரைவாக இந்தப் பிரச்னையைத் துடைத்தெறிய முடியவில்லை. இப்படி ஏதாவது நடந்துவிட்டால் நாதிரா என்ன செய்வாள்? அவளது எதிர்காலம் எப்படியிருக்கும்? கணவனையும் குழந்தையையும் எப்படியாவது மீண்டும் அடைந்துவிட்டால் போதுமென்ற ஆசையினால் தானே அவள் இந்த ஏற்பாட்டிற்கே சம்மதித்தாள். இப்போது என்ன செய்வது? அவர் சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பிப் போனார். அப்படியே வயிற்றுவலியும் தொடங்கி அந்த வேதனையையும் தாங்க முடியாமல் தவித்துப் படுத்திருந்த போது, காதர் சாயபு இரவு ஏற்பாடு குறித்து அவரோடு பேச வந்தார்.

நண்பனைக் கண்டதும் அவருக்குப் புதையல் கிடைத்தது போலாயிற்று. தன் மனைவியும் மகளும் கிளப்பிய அந்தச் சந்தேகத்தை அவர் நண்பனிடம் தெரிவித்தார்.

கடைசியாக அவர் காதர் சாயுபுவிடம், ”பாரு காதர், நீ இப்பொவே மணிபுரம் போய் அங்க பெரிய மசூதியில் பெரிய மௌல்வி சாஹிபப் பார்த்து அவருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தறயா? இந்த விஷயத்துல அவர் என்ன சொல்றார்னு இன்னைக்கே, கேட்டுட்டு வந்துடறியா? என் ஒடம்பு நிலைமை நல்லாயிருந்திருந்தா நானே போய் கேட்டுட்டு வந்துடுவேன்.” கெஞ்சுவதைப்போல நண்பனிடம் இப்படிக் கேட்டதும், காதர் சாயபுவினால் மறுக்க முடியவில்லை. அதுவுமல்லாமல் இந்த மாதிரிப் பிரச்னைகளுக்குப் பரிகாரம் என்னவென்று தெரிந்துகொள்ள அவருக்கும் ஆர்வம்தான்.

காதர் சாயபு உடனே தன் வீட்டிற்குச் சென்று ஆடை மாற்றிக் கொண்டு குடையை எடுத்துக்கொண்டு மணிபுரம் புறப்பட்டார்.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.