தெரு கொள்ளாமல் ஊரே திரண்டிருந்தது. தெருவடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். ராமச்சந்திரன் இறந்து போயிருந்தான். மொத்த ஜனக் கூட்டமும் வந்திருந்தது. வந்திருந்த அத்தனை பேரும் கண்ணீர் விட்டார்கள். இறந்திருந்தவன், இருக்கும்போது அத்தனை பேருக்கும் வேண்டியவனாக வாழ்ந்திருந்தான். அவனது இளமையும் அழகும் இன்னும் கூடுதலாக எல்லாரையும் கண்ணீர் சிந்த வைத்தன. மொட்டை அடித்து உட்கார வைத்திருந்த, அவனது விவரம் அறியா சின்னஞ்சிறுப் பிள்ளைகள் எல்லார் மனதையும் கலங்க வைத்தார்கள்.

அவனது மனைவி சௌந்திரம் அப்படியே பிரமைப் பிடித்து உறைந்து போயிருந்தாள். அரைமணிக்கொரு முறை சங்கு ஊதி, சேகண்டி ஒலிக்கும்போதெல்லாம் சௌந்திரத்துக்கு அடி வயிற்றிலிருந்து ‘குப்’பென்று பயம் கிளம்பி நெஞ்சைக் கவ்வி, மூச்சை அடைத்தது. இனி இந்த வாழ்வில் என்ன இருக்கிறது? அவளை யாரோ இருள் நிரம்பிய பாழுங்கிணறுள் தள்ளிவிட்டார்கள். விழுந்தவள் என்ன என்று உணர்ந்து நிமிரும் முன் மண் அள்ளி மூடினார்கள். மூச்சேவிட முடியாமல் திணறியது. அலற முடியவில்லை. குரல் எழும்பவில்லை. சுற்றி நிரம்பிச் சூழ்ந்த எல்லாம் அவளை அசையவிடாமல் இறுக்கியது. எங்கும் ஒளியே இல்லை. இருள். இருள். எங்கும் நிரம்பி, நிறைந்த இருள்.

கண்ணெதிரே எல்லாரும் இருந்தும், கண்காணாத் தூரத்தில் மங்கலாய்த் தெரிந்தார்கள். நேற்றுவரை உயிரும் உடம்புமாய் ஆர்ப்பரித்துக் கிடந்தவன், இன்று வெற்று உடலாகப் பக்கத்தில் அவளருகே நெடுக நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருந்தான். அவன் இறந்துவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

அவளின் உயிருக்கு உயிரான ராமச்சந்திரன், நேற்று மருத்துவமனையில் அவள் பார்க்கப் பார்க்கவே, அவள் கைப்பற்றியபடி இறந்து போயிருந்தான். அவள் பதறப் பதற, அவனிடமிருந்து ஒரு பெரிய வலிய மூச்சு. இந்த உலகையே தன் மூச்சால் நிறைப்பது போல நெடும் மூச்செடுத்து, சட்டென்று ஒன்றுமில்லாமல் ஆனான். இனி அவன் இல்லை. இனி அவன் எப்போதும் இல்லை என்பது மிகவும் வலித்தது.

வானம் உடைத்துக் கொண்டது போல மழை பெய்தது. பிள்ளைகள் மருத்துவமனையின் மற்ற நோயாளிகளின் பிள்ளைகளோடு கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவனிருந்தால், அவனும் பிள்ளைகளோடு பிள்ளையாய் கத்திக் கப்பல் செய்து விளையாடி இருப்பான். மருத்துவமனையில் நோயில் அழுந்திக் கிடந்தபோது கூட, பிள்ளைகளுக்கு எந்த வருத்தமும் தெரியாமல் பார்த்துக் கொண்டான். இவளிடம் மட்டும் என்ன, நோய்ப்பட்ட வாதையின் சிறு முனகலுமின்றித்தானே புன்னகைத்து இருப்பான். அமைதியாக இருந்தால், ஏதோ தனக்குள் வலியைச் சிறுகச் சிறுகப் புதைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம். கொஞ்சம் நன்றாக இருந்தானென்றால் போதும், எதாவது வேடிக்கை கதைகள் சொல்லிச் சிரிக்க வைத்துவிடுவான். அவற்றைச் சொல்லும்போதே அவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும்.

ராமச்சந்திரன் எப்போதும் ‘கட கட’வென வாய்விட்டுச் சிரிப்பான். அவன் வாயைத் திறந்தாலே கேலிதான் கிண்டல்தான். யாரையும் நோகப் பண்ணாத சீண்டல். யாருக்கு என்ன உதவி என்றாலும் முகம் சுளிக்கமாட்டான். ஓடோடிச் சென்று செய்து தருவான். ஊருக்கே நல்லவன். உழைப்பாளி. தேனீயைவிடச் சுறுசுறுப்பு. அவளைத் தரையில் கால் பாவ விடாமல் உள்ளங்கையில் தாங்கினான். ஆணழகன்.

அவனில்லாத வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சுமக்க முடியாத பெருஞ் சுமையாய் அவள் மூச்சை அழுத்தியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. எங்கோ வெறித்திருந்தாள். யாரெல்லாம் என்னவெல்லாம் எதையோ சொன்னதெல்லாம் செய்தாள். திருமணத்தின் சடங்குகளும் இப்படித்தானே, ஊரே கூடிச் செய்தார்கள். அப்போது அவனும் உடனிருந்தான். உயிராய் உயிர்ப்பாய் சிரிப்பாய் மகிழ்வாய் வாழ்வின் வண்ணங்களாய் அசைவாய் கூடவே இருந்தான். ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் அவன் தன் மேல் பட்டும் படாமல் உரசியது அவளுக்குக் கிளர்ச்சியாக இருந்தது. அவனது ஒவ்வொரு பார்வையும் இவளை மெள்ளத் தொட்டு மலர்த்தியது. இப்போது அது அவனது மூடிய விழிகளுள் நிலைத்து உறைந்து போயிருந்தது. அநிச்சையாய் அவள் விழிகள் நிறைந்து வழிந்தன. அவளை எப்படி விழிகளுள் அன்பு நிறைய குறுஞச் சிரிப்போடு உற்று உறுத்துப் பார்ப்பான்; எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டான். என்னவெல்லாம் இந்த வாழ்வில் நடந்தன. ஒரு சிறு நெருடலும் இல்லாத வாழ்வு. ஒரு சின்னக் கசப்புக் கூட இருந்ததில்லை. இல்லை. இல்லை. இல்லையில்லை… இல்லவே இல்லை..?!

அது அவர்களுக்குத் திருமணமான புதிது. ராமச்சந்திரன் கேரளாவில் எஸ்டேட் சூபர்வைஸராக இருந்தான். அங்கு எங்கே வெளியே போவதென்றாலும் பெரும்பாலும் படகுதான். மழைக்காலம் போல காற்றில் குளுமையுடன் எப்போதும் சிறு தூறல் இருந்துகொண்டே இருக்கும். அன்றைக்கு கிருஷ்ணன் கோயிலில் பெரியதொரு பூஜை என்று கூட்டிப் போயிருந்தான். கோயிலே அவ்வளவு பெரியதாக இருந்தது. காலையில் போனது, பூஜை எல்லாம் முடித்துத் திரும்பி வர இரவாகிவிட்டது. கடைசிப் படகையும் விட்டுவிடக் கூடாது என்று ஓடோடி வந்து ஏறினார்கள். அப்பாடா, படகைப் பிடித்துவிட்டோம் என்று வெற்றிக் களிப்பாய் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

திடீரென்றுதான் அவனுக்கு அது உரைத்தது. தனது மனைவியைத் தவிர, அந்தப் படகினுள் யாருமே பெண்கள் இல்லை என்பது. அவளைப் பார்த்தான். அவள் அவன் தோளோடு சாய்ந்திருந்தாள். காலையிலிருந்து இருவரும் நிறைய நடந்திருந்தார்கள். களைப்பிலும் தூக்கத்திலும் சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த மயக்கத்திலும் அவன் மேல் சாய்ந்திருந்தாள்.

இன்னும் அரைமணி தொலைவுதான். இவர்கள் இறங்க வேண்டிய கரை வந்து விடும். போட்டில் கிட்டத்தட்ட ஐம்பது பேர். எல்லாருமே ஆண்கள். காற்றில் எங்கும் எங்கெங்கும் மதுவின் வாடை. போட் ஓட்டுநர் உட்பட அனைவரும் குடித்திருந்தார்கள். அவள் மட்டுமே பெண். மங்கின விளக்கினொளியில் தேவதையாக ஜொலித்தாள். அவனுக்கு இப்போது அவள் அழகு வெறுப்பைத் தந்தது; இளமையும் திரட்சியும் கோபமூட்டியது; பெருஞ்சுமையாய்த் தெரிந்தாள்.

திருமணமாகி இன்னும் இவனே அவளை ‘உள்ளும் புறத்தும்’ முழுதாக அறிந்தானில்லை. சிமிட்டும் நேரத்தில் அது நிகழத் தொடங்கியது. யாரோ ஒருவனின் தைரியம் பெற்ற விரல்கள், அனைவரையும் அழைத்தன. அவர்கள் அத்தனை பேரும் தொட்டார்கள், பட்டார்கள். இவன் கேரளா வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அனைவருமே ஏதோ ஒரு வகையில் இவனுக்குத் தெரிந்தவர்கள்தாம். தின வாழ்வில் எதிர்ப்படுபவர்கள்தாம். ஜண்டை அடிக்கும், தேங்காய் நார் உறிக்கும், நாரைக் கயிறாகத் திரிக்கும், கடலில் வலை வீசும், வீசிய வலையின் எத்தனை கனத்தையும் இழுக்கும், மரமேறும், துடுப்பு வலிக்கும் அந்தக் கைகளை அவன் தினம் தினம் அறிவான்.

‘சேட்டா, மதி, விடு’ ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

ஒரு யுகம் கழிந்து, கரை வந்தது.

அவனும் அவளும் அழுதழுது கண்ணீர் வற்றிப் போயிருந்தார்கள். வழி நடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேச எதுவுமில்லை. வீட்டை நோக்கி நடந்தார்கள். வீட்டிற்கு இரண்டு தெருக்கள் முன்பு நின்றான். புரியாமல் அவளும் நின்றாள்.

‘கடவுள் மீது ஆணயாக, எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் எதற்காகவும் யாரிடமும் இதைச் சொல்லக் கூடாது’ என்று அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

அது இழவு வீடு. தாங்க முடியாத பெரிய சாவு. இனி அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் பெருங்கேள்விக்குறி.

‘‘எஸ்கே வந்துட்டாராப்பா?

‘‘வந்துட்டார்வந்துட்டார். பாவம்பா மனுஷன்! டெல்லிலருந்து ஃப்ளைட்ல நேரா சகலை சாவுக்குத்தாம்பா வர்றார். இவருக்கு மருந்து வாங்கத்தாம்பா டெல்லிப் போயிருக்கார். அதுக்குள்ள இங்க இவருக்கு எல்லாம் முடிஞ்சிருச்சு. ப்ச்.. இவருக்கு கொடுத்து வைக்கல்ல. இது இனிமே என் சகலை உயிரத் தருமான்னு வாங்கிட்டு வந்த மருந்தெல்லாம் குப்பைல தூக்கி வீசிட்டாருஎல்லாம் அவ்ளோ காஸ்ட்லி மெடிசனாம்பா. அதிருந்தா ராமச்சந்திரன் உசுரக் காப்பாத்திருக்கலாமாம்பா.. அத்தனையும் குப்பைல போட்டு, மனுசன் தெருவே உருண்டு பெரண்டு அழுவுறாருப்பா. காணச் சகிக்கல்ல.

‘‘ஐயோ, சகலை நான் எஸ்கே வந்திருக்கேன். அண்ணே அண்ணேனு கொண்டாடுவீங்களே. ஓடிப்போய் சர்பத் வாங்கியாருவீங்களேஎனக்கு நொங்கு சீவித் தருவீங்களே… எனக்குப் பிடிக்கும்னுட்டு மொளகாப் பொடித் தூவி மாங்காப் பத்தையா வெட்டித் தருவீங்களே… எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு வகைவகையா விருந்து செஞ்சுப் போடுவீங்களே… இலை நிறைய சுடச் சுட பரிமாறுவீங்களே.. அண்ணனுக்கு வேர்க்குது பாருன்னு புருசனும் பொண்டாட்டியும் ஆளுக்கொரு பக்கம் நின்னு விசிறில விசுறுவீங்களே… என்னைய மகாராஜா மாதிரி பாத்துக்குவீங்களே… சகலை… யாரு இனிமே என்னைய அப்படிக் கவனிப்பா… ஐயோ சௌந்திரம்… ஐயோ கடவுளேஅந்தப் புள்ள இனிமே எப்படி வாழப் போவுது… சாவுன்னா என்னானு கூடத் தெரியாம இதோ இந்தப் பிள்ளைக வெளாடிட்டு இருக்குதே … இப்புடி ஒன்னுந் தெரியாத பிஞ்சுப் பிள்ளைகள விட்டுப் போக எப்படிச் சகலை மனசு வந்திச்சு… ஆசையாசையா கல்யாணம் பண்ணி, ஆசையாசையா பெத்து.. இப்படி எல்லாரையும் அம்போனு விட்டுப் போனீங்களே.. சாவுற வயசா இதுஐயோ சகலை…”

தடாலென்று மயக்கம் போட்டு விழுந்தார். யாரோ அவரை அணைத்துக் கொண்டார்கள். ‘‘யே ஓடிப்போய் சோடா வாங்கிட்டு வாங்கையா.”

அவர் முகத்தில் சோடா தெளித்து எழுப்பினார்கள். ஒரு நாற்காலியில் அவரைப் பதனமாக அமர வைத்தார்கள்.

‘‘அவரைவிட நான் வயசில சின்னவன். அக்காவக் கட்டினதால அவுருக்கு அண்ணன். அவரு தங்கச்சிய கட்டுனனால எனக்குத் தம்பி. வயசுல என்னையவிட பெரியவருன்னாலும் என்னையும் என் வீட்டம்மாவையும் வாய் நெறய்ய அண்ணா அண்ணினுதான் கூப்பிடுவாரு. லீவுன்னு ஊருக்கு வந்தா பஸ்ஸ விட்டு இறங்குனதுலருந்து, திரும்பி நாங்க ஊருக்குப் போறவரைக்கும் தரைல கால்படாம தலைல வச்சித் தாங்குவாரு. சின்னப் பையன் மாதிரி குடுகுடுனு அங்கயும் இங்கயும் ஓடி சர்பத் என்ன, பதநீர் என்ன, நொங்கு என்னானு வாங்கிட்டு வருவாரு. பாட்டில் பாட்டிலா ஊறுகாய் செய்து தருவாரு. அவ்வளவு அன்பு அவ்வளவு பாசம் அவ்வளவு மரியாதை. எங்கேயும் யாருகிட்டயும் அப்படிப் பார்க்க முடியாது. போச்சு எல்லாம் போச்சு… மண்ணோடு மண்ணாப் போச்சு… வேரோட போச்சு… நாசமாப் போச்சு..

சகலைக்கு எல்லாத்துலயும் அவசரம்… நான் நாலெட்டு நடக்கறதுக்குள்ள அவரு பத்தெட்டு வச்சிப் போயிட்டிருப்பாரு. என்னையப் பாத்து, என்ன சகலை நடக்க முடியலியா, தூக்கிட்டுப் போவட்டானு கிண்டல் பண்ணிச் சிரிப்பாரு. இப்படி நான் அவரைத் தூக்கும்படி பண்ணிட்டாரே. இந்தக் கடவுளுக்கு கண்ணில்லையா… ஐயோ.. கடவுளே இல்லையா…”

கொஞ்சம் தொலைவில் அவராடும் சதிராட்டங்களை எல்லாம் அவர் மனைவி ஜெயா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் துக்கம் விசாரிக்க வந்த எல்லாருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருந்தாள். பறந்து கட்டிப் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மனுசன் எழவு வீட்டில்கூடத் தன்னைத்தான் எல்லாரும் தாங்கும்படி பண்ணிக் கொள்ள முடியுமா? ஜெயா அவரைப் வெறுப்போடு பார்த்தாள். இது கிராமம். அத்தனையும் வெள்ளந்தி மனிதர்கள். கொண்டதே கோலம்; கண்டதே காட்சி என அப்படியே நம்பக் கூடியவர்கள். நாலைந்து குளுகோஸ் பாட்டில், கொஞ்சம் சிரிஞ், கொஞ்சம் மருந்துப் பட்டைகள். எல்லாவற்றையும் மெனக்கெட்டு எடுத்து வந்து, தெரு முக்கில் காரை நிறுத்தி, எல்லாவற்றையும் நெஞ்சோடு அணைத்துத் தூக்கிக் கொண்டு, நடந்து வந்து தெருவில் சிதறடித்து, தரையில் உருண்டு பிரண்டு, எல்லாரையும் தன்னைத் தூக்க வைத்து, தன்னையே பார்க்க வைத்து, தன்னையே தாங்க வைத்து – அதோ, இறந்து போனவரின் தாலி கட்டிய பெண்டாட்டிகூட உறைந்த பார்வையாய் அசையாமல் இருக்கிறாள். என்னவோ அவளைவிடத் தனக்குத்தான் பெரிய துக்கம் போல அழுது அரற்றிக் கொண்டிருந்தார் எஸ்கே.

கல்யாணத்தின் போது அவருக்குச் சரியான வேலை இல்லை. எந்தத் தைரியத்தில் என்று தெரியவில்லை, கல்யாணமான சில மாதங்களிலேயே எஸ்கேயின் அப்பா அவரையும் ஜெயாவையும் கோவையில் தனிக்குடித்தனம் வைத்தார். அவ்வப்போது செலவுக்குப் பத்து நூறு என்று தருவார்.

இது துக்க வீடு. யாரையும் சந்தேகிக்காது. யாரும் அவரை இப்படி எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும். மிக நன்றாகத் தெரியும். தாலி கட்டின நாள் முதல் இன்றுவரை அணு அணுவாகத் தெரியும். அவரிடம் அவள் பட்டது கொஞ்சமா, நஞ்சமா…

பணம் கிடைத்ததும் எஸ்கே தன் நண்பர்களுடன் சீட்டாடப் போய் விடுவார். அவரது நண்பர்கள் எல்லாருமே அவரைவிடத் தத்தாரிகள். குடியும் உண்டு. அவரது நண்பர்களிலேயே கந்தசாமி மட்டும்தான் கொஞ்சம் உருப்படியாகப் படித்து, பேங்கில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். இந்தக் கும்பலில் அவர் மட்டும் தனி. நளினம், நாகரிகம், ஒழுங்கு, மரியாதை, பொறுப்பு எல்லாவற்றிலும். அவரை மட்டும்தான் எஸ்கே நம்பி, தன் வீட்டிற்குள் அனுமதிப்பார்.

அப்படித்தான் ஒருமுறை கந்தசாமி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது எஸ்கே வீட்டில் இல்லை. எங்கோ போயிருந்தார். இவள் கந்தசாமியை வரவேற்று ஹாலில் உட்காரச் சொல்லிவிட்டு, காபி போட சமையலறைக்குச் சென்றுவிட்டாள். கந்தசாமி வரவேற்பறையில் இருந்த ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். எஸ்கே வெளியில் போயிருந்தவர் வந்தார். உள்ளே வந்து நுழைந்த நிமிடத்திலிருந்து அவர் பார்க்கிற பார்வை மாறியது. அது கொஞ்சம் கொஞ்சமாக உஷ்ணத்திற்குப் போவதை ஜெயா உணர்ந்தாள். ஏனென்று காரணம் புரியவில்லை.

கந்தசாமி காபி குடித்து, அரட்டை அடித்து ‘வரட்டுமாம்மா’ சொல்லிக் கிளம்பியதுதான் தாமதம், படக்கென்று வாசல் கதவை அடைத்தார் எஸ்கே.

‘‘எதுக்கு அவன் நானில்லாத நேரத்தில வீட்டுக்கு வந்தான்?”

ஜெயா விழித்தாள். எஸ்கே எப்ப வருகிறார், எப்ப போகிறார் என்றே அவளுக்குத் தெரியாது. இதில் அவர் ஃப்ரெண்டைப் பற்றி அவளுக்கென்ன தெரியும்?

‘‘எனக்கெப்படித் தெரியும்?” அவள் முடிக்கும் முன் பெல்ட்டை உருவியிருந்தார். என்ன கேட்டார், ஏன் கேட்டார், எதற்குக் கேட்டார், அதற்குத் தான் என்ன பதில் சொன்னோம், என்ன ஏது என்று புரியும்முன்னே அடி விளாசியிருந்தார்.

ஆத்திரம் அடங்குமட்டும் விளாசித் தள்ளிவிட்டு, வெளியே போய்விட்டார். அவர் திரும்பி வந்தபோது, அவள் ஹாலின் மூலையில் சுருண்டிருந்தாள். இவர் கையில் பூ, ஒரு புதிய பட்டுப் புடவை வேறு. இரவு உணவைக் கடையில் வாங்கி வந்திருந்தார்.

‘‘மன்னிச்சுக்க ஜெயா” காலைப் பிடித்தார். எல்லாமே அதீதம்.

எல்லாம் சரியாகிவிட்டது என்று அவராக நினைத்துக்கொண்டார். அதற்கடுத்த வாரம் ஜெயாவின் அம்மா, அப்பா அவள் வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வர, கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். பஞ்சாயத்து நடந்தது. கிடுக்கிப் பிடியாக எல்லாரும் நெருக்க, தான் வகையாக மாட்டிக்கொண்டோம் எனும்போது, படக்கென பிரம்மாஸ்திரத்தைக் கையிலெடுத்தார்.

‘‘ஜெயா தன்னிடம் பெண்டாட்டியாக நடந்துகொள்ளவில்லை. எந்த ஆம்பிளைக்குத்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்” என்றார். அப்போதுதான் ஜெயாவுக்கு, தான் தப்பிப்பதற்காக எஸ்கே எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார் என்று தெரிந்தது. அவருக்கிணையாகத் தரங்கெட்டு தான் எதுவும் பதில் சொல்லிவிடலாகாது என்று அமைதியாக இருந்தாள்.

எஸ்கே மரியாதையாக சாஷ்டாங்கமாக எல்லார் காலிலும் விழுந்து எழுந்தார். மன்னிப்பு கேட்டார். ஜெயாவை இனி தன் அம்மாவின் மேல் ஆணையாக அடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். அவ்வளவுதான் எல்லாரும் போய்விட்டார்கள்.

அவள் அம்மா வீடு மட்டும் என்ன, இவளைக் கொண்டுபோய் வைத்தெல்லாம் தாங்காது. இவள் தன் புருஷனோடு இங்கு இருந்தால்தான், அங்கு மரியாதை. ஆனால், இவளுக்கு ஒன்றென்றால் படையாக எல்லாரும் வந்து நிற்பார்கள் என்கிற பயத்தை, எஸ்கேவுக்குக் கொடுத்தாள்.

தெரியவில்லை. ராமச்சந்திரன் கணவனாக வாய்த்திருந்தால், இவளும் சௌந்திரமாக இருந்திருப்பாளோ என்னவோ. புழுவைக் கொட்டிக் குளவியாவது போல, அவர் செய்யும் கிருத்துருவங்களுக்கு ஈடு கொடுத்தே இவளும் அவராக ஆனது போல சிலசமயம் உணர்வாள்.

இப்படி நிகழ்வுகளுக்குப் பிறகு அவரோடு படுப்பது என்பதே முள்தான். படுத்து, பிள்ளையும் பெற்றாள். பெண் பிள்ளை. மகள் பிறந்த பிறகுதான் தனது செல்வாக்கு கூடியது என்று அவருக்கு மகள் மேல் தனிப் பாசம். இருந்தாலும் திடீர் திடீரென்று அவருக்கு கிறுக்கு ஏறிவிடும். மகளுக்காக என்று அவரை அவள் இன்னும் பொறுத்தாள். எல்லாமும் எல்லை மீறும் நாளும் ஒன்று வந்தது.

எஸ்கே அநாயாசமாக கார் ஓட்டுவார். ஒரு நாளிரவு. லேசாகக் குடித்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை. ஆளரவமில்லை. மகள் ஒரு வயதுக் குழந்தை. இவர் கொஞ்சம் வேகமெடுக்க, மெதுவாகப் போகச் சொன்னாள். ஏற்கெனவே அப்பப்போ கிறுக்கு. இப்போ போதையின் கிறுக்கு வேறு. உதட்டைக் கோணிச் சிரித்தார். மகள் வேறு மடியில் இருக்கும்போது ‘இந்தாளோடு என்னத்தை மல்லுக்கட்ட’ என்று அமைதியாகி விட்டாள். இவர் வண்டியை வேகமெடுக்க வேண்டியது; கோணலாக இவளைப் பார்த்துச் சிரிக்க வேண்டியது என்றிருந்தார்.

இவர்கள் கார் கிளைச் சாலையில் திரும்ப வேண்டும். இவர் ஓட்டிக் கொண்டிருந்த அதே வேகத்தோடு திருப்ப, அங்கிருந்து எதிரில் வந்து கொண்டிருந்த கார் சுதாரித்து நிறுத்தியிராவிடில் பெரிய விபத்து நடந்திருக்கும். அந்த காரிலிருந்து இறங்கியவன் கோபத்தோடு பெரிய சண்டைக்குத் தயாராகி ‘ஏன்டா …. வண்டியாடா ஓட்ற’ என்று கத்தி, இன்னும் கத்த வாயெடுத்தவன், காரிலிருந்து குழந்தையும் கையுமாக இவளிறங்கி, கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்து, சட்டென்று அமைதியானான்.

எஸ்கே பிடித்துக் கொண்டார். ‘‘சொல்டா, என்ன சொன்னே… ஏ.. அதெதுக்குடா அவளைப் பாக்குற. அவளுக்கும் உனக்கும் …..தா? ஏங்கடா அடுத்த வூட்டுப் பொம்பளைக்கே அலையிறீங்க?” என்று சட்டையைப் பிடிக்க, அவன் பதறிப்போய் ஜெயாவைப் பார்த்தான்.

‘‘ஏ.. அங்க என்னடா பார்வை? …தால. டேய்” அவன் சட்டையைக் கிழித்தார்.

‘‘நான் காரு அப்படித்தான்டா ஓட்டுவேன். நீ யாருடா கேட்க, மயிரு” என்று உலுக்கினார்.

அவன் நடுநடுங்கிப் போயிருந்தான். இப்படி எல்லாம் பார்த்திருக்கவே மாட்டான்.

ஜெயா ‘இது வேலைக்காவாது’ என்று குழந்தையை காரின் பின் சீட்டில் வைத்துவிட்டு, களத்தில் குதித்தாள். இருவருக்கும் நடுவே புயலெனப் பாய்ந்து விலக்கினாள். ‘‘நீங்க போயிருங்க; இவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாது; தப்பா எதும் நடந்திரும்” என்றாள். அவன் இன்னும் புரியாமல் விக்கித்து நின்றான்.

எஸ்கேவுக்குத் தலைக்கேறியது. ‘‘ஏ அவன்ட்ட ஏன்டி கெஞ்சற. அவன் என்ன உன் புருசனா.. டேய் யார்றா நீ. உன்னய… இரு.”

வெறி பிடித்த மிருகம் போல ஓடினார். கார் டிக்கியிலிருந்து பெரிய ஸ்பானரை எடுத்து வந்து, ஓட முயன்ற அவனைக் காலால் தள்ளி, கொத்தாய் தலைமயிரைப் பிடித்தார். அவன் தலையிலடிக்க ஓங்கினார்.

அப்போது ஜெயா யாரும் எதிர்பாராத ஒன்றைச் செய்தாள். அவளே எதிர்பாராத ஒன்றைச் செய்தாள். தான் போட்டிருந்த சுடிதாரின் டாப்ஸைக் கிழித்தாள்.

”இப்ப நீ அவனை விட்றியா. இல்ல. பொட்டுத் துணியில்லாம அப்பிடியே ரோட்ல நான் போகவா?” அலறினாள்.

அது எஸ்கேயே எதிர்பாராதது. அவர் சட்டென அவனை விடுவித்தார். கார் சீட்டின் பெரிய டவலை எடுத்து ஜெயாவைப் போர்த்தி காரில் அமர வைத்தார். அதற்குப் பிறகு அவரிடம் சலனமில்லை. இன்றுவரை அப்படியொரு பெரிய ஆக்ரோஷ நிலைக்கு அவளைத் தள்ளாமல் பார்த்துக் கொண்டார்.

இப்போது இவை எல்லாம் பெரும் பழங்கதை. யாரோடு சந்தேகப்பட்டு ஒரு காலத்தில் அவளை பெல்ட்டால் அந்த விளாறு விளாறினாரோ, அதே கந்தசாமி உதவ, பேங்க் லோன் எடுத்து, பிசினெஸ் தொடங்கி, தக்கி முக்கி முன்னேறி, இப்போது 100, 200 பேர் வேலை செய்யும் ஃபேக்டரிக்கு இவர்தான் ஓனராக இருக்கிறார். சமூகத்தில் மிகப் பெரிய மரியாதை. அந்த மரியாதை ஒவ்வோர் இடத்திலும் தனக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார், இந்த இழவு வீட்டிலும் கூட!

மருத்துவமனையில் ராமச்சந்திரன் இறந்து விடுவார், ‘ஹோப்லெஸ்’ என்று டாக்டர்கள் கையை விரித்ததுமே, விட்டடித்து டில்லிக்கு ஓடிப் போய்விட்டார் மனுசன். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கு அருகில் இருப்போமே, அதற்கடுத்த காரியங்களை எல்லாரும் எப்படிச் செய்வார்கள், கூட இருந்து உதவுவோமே என்கிற உணர்வு துளியும் இல்லாமல், உயிரோடு இருந்தபோது அந்த மனிதனை அத்தனை வேலை வாங்கி உழைப்பை உறிஞ்சி இருக்கிறோமே என்கிற நன்றியுணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், ‘‘ஜெயா என்னால இதெல்லாம் தாங்கவே முடியாது. நீ பாத்துக்க” என்று சொல்லிவிட்டு, டில்லி கிளம்பிப் போய்விட்டார்.

யாரால் மட்டும் இதெல்லாம் முடியும்! இவளென்ன நூறு சாவுகள் பார்த்தவளா? இவளுக்கு மட்டும் என்ன இருநூறு கைகளா? அப்பப்பா… ஒற்றைப் பெண்ணாய் ஆம்புலன்சுக்கு அலைந்து, சௌந்திரத்தையும் அழும் பிள்ளைகளையும் அணைத்து ஆறுதல் தந்து, இறந்த உடலை அவர்களின் ஊருக்கு எடுத்துப்போக அத்தனை வேலைகளையும் செய்து, சட்டச் சம்பிரதாயங்களை முடித்து, இங்கு வந்து யாருக்கெல்லாம் தகவல் தர வேண்டுமோ தந்து, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பார்த்து… அவளுக்கு ஏன்தான் இந்தப் பிறவி எடுத்தோமோ என்றிருந்தது. இவள் அழவே இல்லை. அழக்கூட முடியவில்லை. இதெல்லாம் முடித்து தனியே ஓரிடம் கிடைத்தால், ஒரு வாரம் சோறு தண்ணி இல்லாமல் அழுவாள். அவ்வளவு துக்கம் அவளுக்கு இருந்தது. அவ்வளவு துக்கத்தையும் பொறுமையாக அடக்கி வைத்திருந்தாள்.

அதே துக்க வீடு.

அந்தாள் குடித்திருக்கவில்லை. பார்க்க மரியாதையாகத்தான் தெரிந்தார். வேட்டி சட்டையில் 60 வயது மதிக்கத்தக்க கண்ணியமான தோற்றம். மிகத் தெளிவாகவேதான் அந்தக் காரியத்தைச் செய்தார். அழும் பெண்களின் அருகே போய் ஆறுதல் சொல்வது போல அவர்களை ஈஷினார். அவர் கண்களில் அழுவது போலக் கண்ணீர். கைகள், ப்ளவுஸ் இல்லாத வெற்றுப் பகுதி முதுகைத் தடவின. முழங்கையைப் பற்றுவது போல விரல்கள் வெகு எதார்த்தமாக நோக்கம் தவறாமல் மார்பில் பட்டன.

ஜெயாவிடம் போய், ‘‘குடும்மா எல்லாருக்கும் நான் காபி தர்றேன்” என்று தட்டைப் பிடுங்கினார். தட்டை வாங்கும் சாக்கில், விரல்களைப் பற்றி உணர்த்தினார். ஜெயா அருவெறுத்து நகர்ந்தாள். ‘உள்ள வேதனையில இது வேறயா’ எரிச்சலாக உணர்ந்தாள்.

Diverse group of raised hands

ரதம் தயாராகி பாடையேற்றிக் காட்டுக்குப் புறப்பட, யாரோ ‘கடைசியாக எல்லாரும் ஒருமுறை பார்த்துக்கங்க’ என்று கத்தினார்கள்.

சௌந்திரம் அவ்வளவு நேரம் இறுகி, இறுக்கிய அழுகையையும் வெடித்து, ‘‘ஐயோ, என்னைய விட்டுட்டுப் போறீங்களே.. என்னங்க” என்று கதறினாள். ஊரே கலங்கியது. ஜெயா உதடு கடித்து அழுகையை அடக்கினாள்.

அந்தாள் கூட்டத்தில் மிதங்கி மிதங்கி சௌந்திரத்தின் அருகில் சென்றிருந்தார். அவளின் வெற்று முதுகில் கை வைத்தார். தொலைவில் இருந்து இதைப் பார்த்த ஜெயா ஒரே பாய்ச்சலில் அவரருகே போனாள். அவளின் வெற்று முதுகின் மேல் படர்ந்திருந்த அவருடைய கை விரல்களைப் பற்றி, பலங்கொண்ட மட்டும் வலிக்க முறித்தாள்.

‘‘துக்க வீட்ல, நிம்மதியா அழக் கூட விடமாட்டீங்களாடா… கேடு கெட்ட நாய்களா… த்தூ…”

அவர் மூஞ்சியில் துப்பினாள்.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.