மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும் கூறப்படுகிறது. ஆனால் என்னுடைய ஆய்வில் அய்யா வைகுண்டர் அதற்கு முன்னதாகவே சமூகப் பிரச்னைகளில் தலையிட்டு புரட்சிக் குரல் கொடுத்ததாகத் தெரிகிறது.

முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் தனது இளமைக் காலம் முதல் நாகர்கோயில் மிஷன் சொசைட்டியின் தெற்கு தாமரைக்குளம் திருச்சபையில் உறுப்பினராக இருந்தார் என்பதை LONDON MISSION SOCIETY (L.M.S) கிறிஸ்தவ ஆவணங்கள் பலவும் உறுதி செய்கின்றன.1*

தெற்கு தாமரைக்குளம் திருச்சபை ரிங்கள்தொபேயால் உருவாக்கப்பட்டது. அச்சபையில் இரவு நேரங்களில் வேதப்பாடம் நடத்தும் அளவுக்கு முத்துக்குட்டி வேதப்பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். அத்திருச்சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்த சார்லஸ் மீட் மற்றும் சார்லஸ் மால்ட் ஆகியோர் நிகழ்த்திய முதல் மற்றும் இரண்டாவது தோள்சீலைப் போராட்டங்களில் பங்கு கொண்ட முத்துக்குட்டி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிகழும் சாதியக் கொடுமைகளைத் தீவிரமாக எதிர்க்கும்படி, சார்லஸ் மீட், மற்றும் சார்லஸ் மால்ட் ஆகியோரிடம் கூறினார்.

“ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல், சுதந்திரமாக இயங்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசை, நேரடியாக தீவிரமாக எதிர்க்க இயலாது”, என்று சார்லஸ் மீட் மற்றும் மால்ட் கூறினார்கள். திருவிதாங்கூர் அரசை எதிர்க்க மிஷனரிகள் மந்தமான போக்கைக் கடைபிடித்ததாக உணர்ந்த முத்துக்குட்டி கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறினார்.2*

‘மதம் மாறாத சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சுயமரியாதை வாழ்வு ஒன்றே, பின்னாளில் அய்யா வைகுண்டரின் லட்சியமாக இருந்தது’ என்பதையும், அய்யா வைகுண்டர் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறிய மேற்கண்ட நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்துச்சாணார்களுக்கு* கிறிஸ்தவ மதகுருமார்களால் உதவி செய்ய இயலாமல் போனதை உணர்ந்ததால்தான், அய்யா வைகுண்டர் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகின்றது.

இந்து மதத்தின் சாதியக் கட்டுப்பாடுகளில் தலையிட இயலாத கிறிஸ்தவ மிஷனரிகளால், இந்து மதத்திலேயே தங்கி விட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவ இயலவில்லை. கிறிஸ்தவத்துக்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 1829-ம் ஆண்டின் தோள்சீலைப் போராட்டமும் தோல்வியில் முடிந்தது. எனவேதான் மிஷனரிகளின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாக முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி விட்டார் என்பது எனது ஆய்வின் முடிவு.

ஒடுக்கப்பட்ட 18 சாதி மக்களுக்காக, போராடும் முடிவுடன் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறிய முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. முத்துக்குட்டிக்கு, மருத்துவாழ்மலையில் வஞ்சகர்கள் விருந்துடன் மருந்து சேர்த்து கொடுத்ததால் அவர் நோய்வாய்ப்பட்டார் என்றொரு குறிப்பு கிடைக்கிறது.3*

அவ்வாறு 1831-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட முத்துக்குட்டி, இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்.4* 1833-ம் ஆண்டு மாசி மாதம் 20-ம் தேதி திருச்செந்தூர் கடலில் நீராட அழைத்து செல்லப்பட்டு, விஞ்சை பெற்றார்.

ஆக, விஞ்சை பெறுவதற்கு முன்பே முத்துக்குட்டிக்கு விஷம் கொடுக்கும் அளவுக்கான விரோதிகள் இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகின்றது. எனில் முத்துக்குட்டி விஞ்சை பெறுவதற்கு முன்பாகவே சமூக சீர்திருத்தம் பற்றி பேசியிருக்க வேண்டும் என்பதை அறியலாம். கிறிஸ்தவத்தில் தொடர்வதன் மூலம் தனது குடும்பத்தினை மட்டும் சாதியத் தீண்டாமை மற்றும் கொடுமைகளிலிருந்து காப்பாற்றிக் கொண்டு முத்துக்குட்டி வாழ்ந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்தவத்தில் சேராத ‘ஒடுக்கப்பட்ட இந்து மக்களின்’ சீர்திருத்தம் மற்றும் சமூக விடுதலைக்காகவும் போராடக் களம் கண்டார் முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர்.

இந்துத்துவத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, கிறிஸ்தவத்தால் கைவிடப்பட்ட ‘இந்துச்சாணார்*’, இந்துப் பறையர்* முதலான ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் சமூக விடுதலைக்காக பிரச்சாரம் மேற்கொண்ட முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர், அம்மக்களுக்காக கிறிஸ்தவமும் அல்லாத இந்துத்துவமும் அல்லாத ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார். அதுவே ‘அய்யாவழி’ என்றானது.

திக்கின்றி, தலைமையின்றி தவித்த இந்துச்சாணார்கள்*, கூட்டம் கூட்டமாக முத்துக்குட்டி சுவாமிகளின் பின்னால் திரண்டனர். சாணார்கள்* மட்டுமின்றி, மதம் மாறாத, ஒடுக்கப்பட்ட பல சாதி இந்து மக்களும் அய்யாவழியில் இணைந்தனர். பார்ப்பனியத்தின் தீமைகளைப் புரிந்து கொண்ட ‘சாதி இந்துக்கள்’ என்றழைக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களும்கூட, அய்யா வைகுண்டரின் பின்னால் அணி திரண்டனர்.

அய்யா வைகுண்டர் பெண்களை தோள்சீலை அணிய வலியுறுத்தியதும், ஊழியம் மறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டதும், ஆண்களை தலைப்பாகைக் கட்டி தலைநிமிர்ந்து நடக்கச் செய்ததும், வரி கொடாப் போராட்டம்5* நிகழ்த்தியதும் திருவிதாங்கூர் அரசின் பார்வையில் தேசத் துரோகங்கள் ஆயின.

புரொட்டெஸ்டண்ட் கிறிஸ்தவத்துக்கு மாறினால்தான் சமூக விடுதலை என்ற நிலை மாறி, மதம் மாறாமலே சமூக விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அய்யா வைகுண்டர் இயக்கத்தில் இணைந்தார்கள். இதனால் கிறிஸ்தவ மதமாற்றம் வெகுவாகக் குறைந்தது.

ஏசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை கிறிஸ்தவத்துக்கு மாற்றாமல், கிறிஸ்தவ மதத்தை நிரப்பும் நோக்கத்துடன் மதம் மாற்றிய கிறிஸ்தவ மதகுருமார்கள், அய்யா வைகுண்டரை எதிர்த்தனர்.

திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ மதகுருமார்கள் ஆகியோரின் இருமுனை எதிர்ப்புக்கு நடுவே, நம் நாட்டின் வளங்களைச் சுரண்ட வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும் வீரியத்துடன் சாடி பிரச்சாரம் செய்தார் வைகுண்டர். இதனால் ஆங்கிலேய அரசின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர். இந்த மும்முனை எதிர்ப்புகளையும் தாங்கியபடிதான், இந்துச்சாணார்*, இந்துப்பறையர்*, முதலான ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடையே எழுச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

இச்சூழலில்தான் 1837-ம் ஆண்டு6*, முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ‘1837-ம் ஆண்டு’ என்பது இந்துச்சாணார்*, இந்துப்பறையர்* முதலான இந்து மதத்து ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கான தோள்சீலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டமாகும்.

‘முத்துக்குட்டி, தான் பிறந்த சாதியான, சாணார்* மக்களுடன் கலந்து வாழ்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக பிற சாதி மக்களை ஒன்று திரட்டி அறிவுரைப் பிரச்சாரம் செய்யக்கூடாது’, என்று எழுதப்பட்ட நிபந்தனைக் கடிதத்தில் கையெழுத்திட்டால், முத்துக்குட்டியை (அய்யா வைகுண்டரை) விடுதலை செய்வோம் என்றது திருவிதாங்கூர் அரசு. முத்துக்குட்டி நிபந்தனைக் கடித்த்தில் கையெழுத்திடவில்லை. இறுதியாக, அய்யாவழி இயக்கத்து வீரர்களின் தர்ணாப் போராட்டத்தின் விளைவாக, அய்யா வைகுண்டர் விடுதலை செய்யப்பட்டார்.7*

விடுதலைக்குப் பிறகு, திருவிதாங்கூர் அரசின் நிபந்தனையை மீறி, மீண்டும் அனைத்து சாதி மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் சீர்திருத்த பிரச்சாரங்களை மேற்கொண்டார் முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முகநூலில் ஒருவர் ‘அய்யா வைகுண்டர் கூட்டம் கூட்டினாரா? எங்கே கூட்டினார்? எத்தனை பேரைக் கூட்டினார்? எந்த இடத்தில் கூட்டம் கூட்டி புரட்சி செய்தார்? அய்யா வைகுண்டர் மக்கள்கூட்டம் கூட்டியதாக அகிலத்திரட்டில் இருக்கிறதா?’ என்று பல கேள்விகளை என்னிடம் கேட்டார். அக்கேள்விகளுக்கெல்லாம் பதில் ‘துவையல் தவசு’.

தொடரும்…

*மேற்சொன்ன வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலகட்டத்தில் நாடார் சாதியினர் ‘சாணார்’ என்று அழைக்கப்பட்டதால் சாணார் என்ற வார்த்தையை எழுத வேண்டி வந்தது. பறையர் என் கிற சொல்லும் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதை சொல்ல முனைந்ததால் வந்ததே. மற்றபடி சாணார், பறையர்* என்று எழுதுவதில், எழுத்தாளருக்கோ பதிப்பாசிரியருக்கோ துளியளவும் உடன்பாடில்லை.

தரவுகள்

  1. THE TINNEVELY MISSION OF THE CHURCH MISSION SOCIETY, REV. GEORGE PETTITT, 1850, PAGE NO: 285 & கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் இதழ், ஜூலை 22, பக்கம் எண்: 6
  2. கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் இதழ், ஜூலை 22, பக்கம் எண்: 6
  3. இறைவனின் வைகுண்ட அவதாரம், பொறிஞர் ஆ. கிருஷ்ணமணி, முதற்பதிப்பு: 04.03.2014, பக்கம் எண்: 21.
  4. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ. இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட், 2011, பக்கம் எண்: 19.
  5. கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் இதழ், ஏப்ரல் 2021, பக்கம் எண்: 22.
  6. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ. செந்திவேலு, சூரன்குடி அ. இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட், 2011, பக்கம் எண்: 23.
  7. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 274, 275 & அய்யாவழி அறிவோம், அத்தியாயம் 16.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.