நம் பிள்ளைகளுக்கு வாசிப்பு ஏன் அவசியம்? வாசிப்பு என நான் சொன்னதுமே, பல பெற்றோருக்கும் முதலில் பள்ளிப் புத்தக வாசிப்பு பற்றிய எண்ணமே வந்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியதா? ஆம் எனில், உங்களோடு உரையாடி வாசிப்பு பற்றிய உங்கள் புரிதலை சிறிதளவேனும் மாற்றும் முயற்சிதான் இது.
வாசிப்பு என்றால் பாடம் தாண்டிய பிற நூல்களை வாசித்து அறிவது. வாசிப்பினால் ஒருவர் அறிவதும் அடைவதும் ஏராளம். இடைவிடாத வாசிப்பு ஒருவரை சுற்றியுள்ள உலகம் பற்றிய புரிதலைத் தரும். எந்த திணிப்பும் கட்டாயமும் இன்றி ஒருவர் வாசிக்கும்போது, வாசிப்பு, பேரானந்தமான அனுபவம். அத்தகைய வாசிப்பு, ஒழுக்கம், சமூக அக்கறை, மனிதாபிமானம், பொறுப்புணர்வு, தேடல் ஆகியவற்றை இயல்பாகவே உருவாக்கிடும். தேடித்தேடி வாசித்த ஒரு சிறந்த வாசகர், ஒரு சிறந்த எழுத்தாளராகவும் பிறப்பெடுப்பார்.
ஆனால் தேர்வு என்ற பந்தயத்திற்கு தயார் படுத்தப்படும் குழந்தைகள் அந்தத் தேர்வில் முதலாவதாக தேறி, வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில்தானே கல்வி கற்கிறார்கள்? நாமும், ‘அந்த வெற்றிக்குக் காரணம் நான்தான், ஒரு பெற்றோராக நான் ஜெயிச்சுட்டேன்’ என நமது தோளை நாமே தட்டிக் கொடுத்து பேரின்பம் அடைகிறோம் இல்லையா?
ஆனால் நாம் அவர்களை சரியான பாதையில்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறோமா? அவர்களின் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருக்கிறதா? நாம் நமது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த கொண்டாட்டங்கள், ‘ஜென் அல்பா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த தலைமுறை சிறார்களுக்கு கிடைத்துள்ளனவா?
அன்பான பெற்றோரே, ஆசிரியரே, உங்களைச் சுற்றி இருக்கும் குழந்தைகளை ஒரு நிமிடம் ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் மனப்பூர்வமாக மகிழ்ந்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம் எனில், ரொம்பவே மகிழ்ச்சி. இல்லை சந்தேகம்தான் என்கிற எண்ணம் தோன்றினால், உடனே அந்தக் குழந்தையை அருகில் அழைத்து உரையாடத் தொடங்குங்கள். அந்தக் கேள்விக்கான பதில் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த உலகமே போட்டி நிறைந்ததாகி விட்டது. தற்போதைய உலகில் வெற்றியாளர் என்பவர் ‘அதிகமாக சம்பாதிப்பவர்.’ அந்த சம்பாதிக்கும் சக்தியை அதிகரிப்பதே இன்றைய கல்வியின் அடிப்படை நோக்கமாகிப் போனது. எங்கு திரும்பினாலும் கார்ப்பரேட் துறையின் ஆதிக்கம், கணினி அறிவியல், மென்பொருள் செயலிகள் குறியீடாக்கம் என சிறார் ஒருபுறம் இதற்காக தயாராக ஆரம்பித்துவிட்டார்கள். மறுபுறம் செயற்கை நுண்ணறிவு, தானியங்கியல் போன்றவை, ‘என்னையும் சீக்கிரம் கற்றுக்கொள்! இல்லையேல் வேகமாக வளரும் விஞ்ஞான உலகத்திலிருந்து நீ பின்தங்கி விடுவாய்’ என மிரட்ட ஆரம்பித்துள்ளன.
இதையெல்லாம் இருந்த இடத்திலேயே கற்பிக்கும் திறன்பேசி மற்றும் கணினி… இத்தனை வளர்ச்சிகளையும் தாங்க முடியாமல் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் இந்த ‘அல்பா தலைமுறை’ சிறார்.
இந்தத் தலைமுறை உலகைக் கண்டறிய, தொழில்நுட்பத்தையே அதிகம் நம்பியுள்ளது. இவர்கள் எல்லாம் பிறந்ததிலிருந்தே புதிய தொழில்நுட்பங்கள் அவர்களின் வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட்டன. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே இரண்டு வயது குழந்தை ஸ்மார்ட்போனை அத்தனை லாபகமாக உபயோகப்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பல திரைகளை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் பெரிய வேலைகளைக்கூட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக வளர்கிறார்கள். அதே நேரத்தில் மற்ற செயல்களில் கவனமின்மையையும் கற்றலில் ஆர்வமின்மையையும் இது அதிகப்படுத்துகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது. அமெரிக்க உளவியலாளர் ஜீன் எம் ட்வெங்கே தனது ஐஜென் (iGEN) புத்தகத்தில் அமெரிக்க சிறார் மற்றும் இளைஞர்களிடத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை, தீமை மற்றும் விளைவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
இளைஞர்கள் பலரும் நண்பர்களுடன் நேரில் தொடர்பு கொள்வதை விட மின்னணு முறையிலேயே அதிகமாகத் தொடர்பு கொள்கிறார்கள். இது அவர்களின் சமூகத்திறனை பாதிக்கிறது. மனச்சோர்வும் பதட்டமும் இந்தத் தலைமுறை இளைஞர்களிடத்தில் அதிகமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவை இன்றைய காலகட்டத்தில் சிறாருக்கும் பொருந்தும் தானே? இதை ஒரு பிரச்னையாக உணர்கிறீர்களா? இல்லை தொழில்நுட்ப வளர்ச்சியில் இவையெல்லாம் இயல்புதானே என்கிறீர்களா?
எல்லா வளர்ச்சியிலும் ஒரு சில எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனாலும் அது ஒரு ஒரு தலைமுறையின் சிந்தனைத் திறனை, கற்பனை திறனை, சமூகத்திறனை பாதிக்கிறது என்றால், அதனைத் தடுக்க நாம் விரைவாக ஏதேனும் செய்திட வேண்டும்தானே? இதனை சரிசெய்ய வாசிப்புத் திறன் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. குழந்தைகளிடமிருந்து வாசிப்பை அந்நியப்படுத்தியது, நம் கல்விமுறையின் மாபெரும் வரலாற்றுப் பிழை.
அதற்கு சொல்லப்படும் காரணங்கள்
• குழந்தைகள் திறன்பேசிக்கே (SMART PHONE) அதிகம் அடிமையாகிவிட்டார்கள்.
• பள்ளிப் பாடம் படிக்க, வீட்டுப்பாடம், சிறப்பு வகுப்புகள் மற்ற விளையாட்டுப் பயிற்சி, என்று நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களால் வாசிக்க இயலாது.
• பள்ளிப் பாடங்களை படிப்பதற்கே நேரம் போதவில்லை, இதில் கூடுதலாக புத்தகங்களை எப்படி வாசிப்பது?
இவையெல்லாம் சிறார் வாசிப்புக்குப் பெரும் தடையென்று பொதுவெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் பெற்றோரும் ஆசிரியர்களும் கொஞ்சம் மனது வைத்தால் இதனை மாற்ற முடியும். ஏனென்றால் ஸ்பெல் பீ, ஒலிம்பியாட் தேர்வுகள் மாதிரியான தளங்களில் தங்கள் பிள்ளை சாதிப்பதையே இங்கு நிறைய பெற்றோர் விரும்புகிறார்கள். புத்தக வாசிப்பினால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லையாதலால், அதற்கான அவசியமும் இல்லை என்றே நினைக்கிறார்கள்.
ஆதனின் பொம்மை நூலுக்காக 2023-ம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், “ஒரு சமூகமாக நமக்கு ஒரு பெரிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். பெற்றோர்கள் புத்தக வாசிப்புக்குத் திரும்பினால், குழந்தைகளும் அவர்களைப் பின்பற்றுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்ல வேண்டும். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நவீன இலக்கியங்களைப் படிக்க வேண்டும். அடுத்து, ஆசிரியர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பள்ளிகளில் பாடத்திட்டத்தைத் தாண்டி வாசிப்பு இல்லை. குழந்தைகளில் அனைத்து வகையான மாற்றங்களையும் கொண்டு வரும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு உண்டு. என் தமிழ் ஆசிரியர் என் வாழ்க்கையில் விதைத்த விதைகளால்தான், நான் இன்று இவ்வாறாக உருவாகியிருக்கிறேன்”, என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
ஆனால் இன்று ஆசிரியர்கள் பலரும் புத்தக வாசிப்பில் பெரிதும் ஆர்வம் இல்லாதர்வர்கள் என்பதும் ஒரு காரணம். நான் நிறைய பள்ளிகளுக்கு புத்தகங்கள் பரிசளித்து எங்களுடைய அறிவொளி வாசிப்புக் குழு பற்றியும் பேசுகையில் ஆசிரியர்கள் பலரும், “பல் மருத்துவர் வேலையை பார்க்காமல் உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, இந்தப் பசங்க அவங்களோட பாடப் புத்தகத்தையே வாசிக்க மாட்டானுங்க. இதுல தேவையில்லாம இதை வேற கொடுக்குறீங்க,” என்று கிண்டலாகவே விமர்சித்தார்கள். இவர்களுக்கு சிறார் வாசிப்பின் மகத்துவம் தெரிந்தால் மட்டுமே, குழந்தைகளுக்கு அது சென்றடையும் என்பது நிதர்சனம்.
எல்லா ஆசிரியர்களும் இப்படித்தான் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஆசிரியபயிற்றுநர் எழுத்தாளர் சாலை செல்வம் அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறார் வாசிப்பு நூல்களை எழுதியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியை எழுத்தாளர் கி. அமுதா செல்வி, ‘வால் முளைத்த பட்டம்’, ‘பசி கொண்ட இரவு’ போன்ற சிறார் புத்தகங்களை எழுதியுள்ளார். இன்னும் பல ஆசிரியர்கள் வாசிப்பு இயக்கங்களை ஒருங்கிணைக்கிறார்கள். தங்கள் பள்ளிக் குழந்தைகளை தங்களது செலவில் நூலகங்களுக்கு, புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து சென்று, வாசிப்பு உலகை அறிமுகம் செய்கிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் ஒருசில பள்ளிகள் என்றில்லாமல், எல்லா பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இது கிடைக்க வேண்டும்.
சிறார் எழுத்தாளர் சரிதா ஜோ, சிறந்த கதை சொல்லியாக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குழந்தைகள் அதிகம் விரும்பும் மாயாஜாலமும் கற்பனைகளும் இணைந்த ஃபேண்டஸி சார்ந்த கதைகளை சிறப்பாக எழுதுபவர். நேர்காணல் ஒன்றில், “ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை அமைக்கும் விதத்தில் சிறார் இலக்கியம் அடித்தளமாக செயல்படுகிறது. பத்து வயதிற்குள் அவர்களுக்கு இருக்கும் சமூகச் சூழல் மற்றும் அவர்கள் வாசிக்கும் புத்தகம்தான், பிற்காலத்தில் அவர்களுடைய ஆளுமையைத் தீர்மானிக்கிறது. சிறார் இலக்கியம் என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. அதுதான் வாழ்க்கைப் பயணத்தின் முதல் ஆசான்”, என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் ஞா.கலையரசி அவர்கள் தனது பேரனுக்காகக் கதை சொல்ல ஆரம்பித்தபோது அவனுக்காக நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறார். அத்தோடு புதுப்புது கதைகள் யோசிக்க ஆரம்பித்தாராம். அப்படி யோசித்த கதைகளையெல்லாம் எழுத ஆரம்பித்துள்ளார். இது பெற்றோர் மட்டுமன்றி, தாத்தா பாட்டிகளும் தங்களது குழந்தைகளுக்காக வாசிப்பது எத்தனை சிறந்தது என்பதை உணர்த்துகிறது அல்லவா ?
சிறார் வாசிப்பதால் புதிய எண்ணங்கள் கண்ணோட்டங்கள், யோசனைகள் உருவாகும். அதன் மூலமாக படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனைத் தூண்டும். சிறந்த புத்தகங்கள் அறிவை விரிவுபடுத்தும். சமூகத் திறனை மேம்படுத்தும். அவர்களின் சொல்லகராதி , மொழித்திறன், செறிவு, நினைவாற்றல் மற்றும் விமர்சன சிந்தனைகளை வளர்க்க உதவும். வாசிப்புத் திறன் மற்றவர்களிடம் கருணையும் புரிதலையும் வளர்க்க உதவும். வாசிப்பு, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது. வாசிப்பு திறன் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்க்கவும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கவும் உதவும். இது புதிய ஆர்வங்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்தவும் உதவுகிறது.
வாசிப்பு ஏராளமான தகவல்களை அளிப்பதோடு, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் நன்கு புரிந்து கொள்ள வழிவகுக்கும். நாகரீகங்கள், பழக்கவழக்கங்கள், கலைகள், வரலாறு, புவியியல், சுகாதாரம், உளவியல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு தலைப்புகள் மற்றும் கூறுகள் பற்றிய அடிப்படை புரிதலை அவர்களுக்குக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, சில நேரங்களில் குழந்தைகளிடம் நாம் பேசத் தயங்கும் அத்தியாவசியமான விடயங்களை ஒரு புத்தகம் எளிதாகப் பேசிவிடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘கயிறு’ என்ற சிறிய புத்தகம் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. சாதி, மதம் பார்க்கக் கூடாது என்கிற சமத்துவச் சிந்தனையை கற்றுக்கொடுக்க பல ஆண்டுகளாக பள்ளிகளும் ஆசிரியர்களும் முயற்சித்துக் கொண்டிருப்பதை ‘கயிறு’ நூல் எளிமையாக்கி உள்ளது என்றே சொல்லலாம்.
எழுத்தாளர் எஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ 2020-ம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்திய புலஸ்கார் விருது’ பெற்ற நூல். பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு பதிலாக பாதுகாப்பான, பாதுகாப்பற்ற என்னும் சொற்களை ஆசிரியர் பயன்படுத்தியது மிகச் சிறப்பு.
இயற்கை மற்றும் விலங்குகள் சார்ந்த கதைகளை குழந்தைகளுக்கு புரியும்படி எளிமையாக எழுதும் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா, லாலிபாப் சிறுவர் உலகம் என்ற பதிப்பகத்தை நிறுவி நிறைய சிறார் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். இன்னும் பல சிறந்த எழுத்தாளர்கள் பல அற்புதமான சிறார் புத்தகங்களைத் தந்துள்ளனர். இந்த புத்தங்கள் எல்லாம் அதன் வாசகர்களிடம் சென்று சேர்ப்பதே அந்த எழுத்தாளர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய அங்கீகாரம்.
குழந்தைகள் வாசிப்பு நோக்கி நகராமல் இருப்பதற்கு காரணம் புத்தகம் தேர்வு செய்வதில் நாம் செய்யும் தவறாகவும் இருக்கலாம் . ஜே.கே. ரவுலிங் கூறியது “உங்களுக்கு வாசிக்க பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் சரியான புத்தகத்தை தேர்ந்தெடுக்கவில்லை”.
குழந்தைகள் அவர்களாகவே அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்யட்டும்.அவர்களுக்கு இதுதான் புடிக்கும் இதுதான் சரியானது என்று நீங்களாக எதையும் தேர்வு செய்து கொடுப்பதை விட அவர்களுக்கு எது பிடித்தமானதோ அதனைத் தேர்வு செய்ய அனுமதியுங்கள். இந்த நேரத்தில் வாசிக்க வேண்டும், இவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும், இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்கிற எந்த நிர்பந்தனையும் விதிக்காமல், அவர்களுக்கான சுதந்திரம் தரப்படும்போது, வாசிப்பு ஒரு பேரானந்த அனுபவமாக நிகழும் என்பது திண்ணம்.
‘சிறார் வாசகர்கள் பெருகட்டும்; சிறார் இலக்கியம் வளரட்டும்’.
படைப்பாளர்

சு.சூர்யா. பல் மருத்துவர். சென்னை அனகாபுத்தூர் RS பல் மருத்துவமனை நிறுவனர். 2021- இல் ‘அறிவொளி வாசிப்பு குழு’ என்கிற குழந்தைகளுக்கான வாசிப்பு தளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலமாக பல்வேறு குழந்தைகளோடு நிறைய சிறார் புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சிறாரிடம் கதை சொல்லல், புத்தக வாசிப்பு என்று தற்கால சிறார் இலக்கியத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அறிவொளி வாசிப்பு குழு சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தி 200க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார். ‘சென்னி முன்னா செண்பை கிராமம்’ என்கிற புத்தகத்தை 2020இல் எழுதி, லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார்.





Impressive 👍
மிகச் சிறப்பு. வாழ்த்துகள்..
அருமை❤️❤️… Write up of your own thoughts and mentioning so many authors and abt their books…. 👌👌.. nice to read…
Beautifully narrated..Great work.. it ll be an eye opener for this generation parents who is not aware of the fact that book reading does so many wonders in building children ‘s confidence