பல்கலைக்கழக விதிகளின்படி கல்லூரி மாணவர்கள், N. S. S. (நாட்டு நலப் பணித் திட்டம்), N.C.C (தேசிய மாணவர் படை), N.A.E.P. (தேசிய முதியோர் கல்வித் திட்டம்), விளையாட்டுகள் இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இதில் என் சி சி – க்கு விருப்பம் தெரிவித்தவர்களில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். என் சி சி க்கு காக்கிச் சீருடை; சிவப்பு நிறத்தில் குஞ்சம் வைத்த காக்கித் தொப்பி, பேட்ஜ் போன்றவை அணிந்து அவர்கள் மிகவும் மிடுக்காகத் தோன்றுவார்கள். என் சி சி மாஸ்டர் வந்து அணிவகுப்பை நடத்தித் தருவார்கள். அதைச் சரிபார்க்க இடையிடையே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி (என்சி சி -க்கான பொறுப்பில் இருப்பவர்) ஒருவர் வருவார்.
நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நேவல் என் சி சி – கடற்படையும் ஆரம்பிக்கப்பட்டது; இதில் 20 பேர், என் சி சி- ல் எண்பது பேர் என்றானது. நேவலுக்கு நீல நிற யூனிபார்ம். அவர்களுடைய அணிவகுப்பு கம்பீரமாக இருக்கும். வாரம் இரு முறை காலையில் அணிவகுப்பு நடக்கும்.
எங்கள் விடுதியிலிருந்து மூன்று பேர் என் சி சி -க்கு கிளம்பிப் போவார்கள். அணிவகுப்பு முடிந்ததும் கேன்டினில் சாப்பிட்டுக் கொள்ளலாம். பெரும்பான்மையான மாணவிகள் பூரி கிழங்குதான் சாப்பிடுவார்களாம்.
ஒருவர், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும், அப்பா அனுமதிக்காததால் செல்லவில்லை. இதுதான் பெண்களின் நிலை. மாணவிகள் என் சி சி யில் தேர்வு மற்றும் முகாமில் பங்கேற்க வேறு ஊர் செல்வார்கள். நிறையப் பேர் தேர்வில் தேர்ச்சி பெறுவர். தோழி ஒருவர் பல்லாவரத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு முகாமில் பங்கேற்றார். ஒருவர் விருதுநகரில் நடைபெற்ற முகாமில் முதலிடம் பெற்றார். அவருக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. ஒன்று சிக்னலுக்கு, இன்னொன்று கிராஸ் கன்ட்ரி ரேஸுக்கு. Cross Country race என்பது பாதை எதுவும் இல்லாத கரடு முரடான இடங்களில் ஓடுவது.
அடுத்த ஆண்டு, பாளையங்கோட்டையில் நடைபெற்ற முகாமில் இன்னொருவர் இரண்டாம் இடம் பெற்றார். அவர் மலை ஏறுதலுக்கு (Trekking expedition ) தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரப்பிரதேசம் (இன்றைய உத்தரகாண்ட்) காத்கோடம் சென்றார். இப்படிப்பட்ட பெருமைக்குரிய விபரங்களை எல்லாம் 10 மணிக்கு நடக்கும் பிரேயரில் அறிவிப்பார்கள். எல்லா வகுப்பறைகளிலிருந்தும் கைதட்டல்கள் பெரிதாகக் கேட்கும்.
அடுத்ததாக என் எஸ் எஸ் பற்றிப் பார்ப்போம். என் எஸ் எஸ் -ல் யாருக்கெல்லாம் சேருவதற்கு விருப்பமோ, அவர்கள் அனைவரையும் ஒரு பெரிய ஹாலில் கூடச் சொல்வார்கள். எல்லோரும் அவரவர் பெயர் எழுதி பெரிய பெட்டியில் போட வேண்டும். என் எஸ் எஸ்- பொறுப்பாளராக இருக்கும் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு சீட்டாக எடுத்து பெயரை வாசிப்பார்கள். தங்களது பெயர் வாசிக்கப்பட்டதும் மகிழ்வில் அந்த மாணவியும், தோழிகளும் ஒரு சின்ன ஒலி எழுப்புவார்கள். எனக்குக் கிடைத்தது என்பதால் என் அனுபவத்தைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தது.
மாதம் இருமுறை நாங்கள் கல்லூரியின் அருகே உள்ள திரேஸ்புரம் என்ற கடற்கரை கிராமத்திற்குச் செல்வோம். மாலை 4 மணிக்குக் கல்லூரி விட்ட பின்னர், திரேஸ்புரத்திற்கு நடந்து செல்வோம். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும் என்று நினைக்கிறேன். அழைத்துச் செல்லும் பேராசிரியர், கல்லூரிக்கு வெளியே நட்பாக இருப்பார். அங்கு உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு மணிநேரம் பாடம் சொல்லிக் கொடுப்போம். அவர்களின் படிப்பிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொடுப்போம். பள்ளி செல்லாத பிள்ளைகளுக்குத் தனியாகப் பயிற்சிகள் கொடுப்போம். டே ஸ்காலர் மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் சேரவும் உதவி புரிவார்கள்.
விடுதிக்குத் திரும்பக் கிட்டத்தட்ட ஆறு மணி ஆகிவிடும். கேன்டினில் பயன்படுத்திக் கொள்ள என்று 50 பைசாவிற்கு ஒரு டோக்கன் கொடுப்பார்கள்.
என் எஸ் எஸ் சார்பில் மாதம் ஒரு திரைப்படம் போடுவார்கள். சரியாக மாதம் ஒன்று என்று போடாவிட்டாலும் ஆண்டுக்கு நான்கு, ஐந்து திரைப்படங்கள் அரங்கத்தில் (ஆடிட்டோரியத்தில்) மதிய இடைவேளை முடிந்ததும் நடைபெறும். முடிவதற்கு நான்கு முப்பது அல்லது ஐந்து மணி வரை கூட ஆகும். முன்தினமே திரைப்படம் திரையிடப்படுவதை அறிவித்து விடுவார்கள். அப்போது தானே வீட்டில் சொல்லிவிட்டு வர முடியும். ‘தியாகம்’, ‘நீயா’ படங்கள் இவ்வாறு திரையிட்டதாக நினைவு.
1980 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் 23 வரை என் எஸ் எஸ் முகாம் பத்து நாள்கள் நடைபெற்றது. அப்போது திரேஸ்புரம் கிராமத்திற்கு மண் மற்றும் ஜல்லிக்கற்களால் ஆன ஒரு சாலை போட்டுக் கொடுத்தோம். வெயிலில் நின்று சாலை போடுவது சிரமமானதுதான் என்றாலும், ரொம்ப ஜாலியாக இருந்தது. சாலை போடுவதற்கு முதலில் சரல் போட்டு அதன் மேல் செம்மண் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி ரோடு ரோலரை மாணவிகள் கையால் இழுத்து சாலையை உறுதியாகவும் சமமாகவும் ஆக்க வேண்டும். இப்போது போல ரோடு ரோலர் இயந்திரம் கிடையாது. அந்தக் கல்லை சில சமயம் நாங்கள் இழுக்க முடியாமல் போனதால், அங்குள்ள சில ஆண்கள் உதவி புரிந்தார்கள்.
அனைவரும் கறுத்து விட்டோம். சாப்பாடு ரொம்ப நன்றாக இருந்தது. ஒரு நாள் பொரித்த இறால்கூட போட்டார்கள். நான் இறால் சாப்பிட்டது அதுவே முதல் முறை. போக்குவரத்து சிரமத்தினால் இறால் எல்லாம் வெளியூரில் கிடைக்காது. கடற்கரை ஊர்களில் மட்டுமே கிடைக்கும்.
சாலை போட்டதோடு மட்டுமல்லாமல் மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பேபி ஷோ, பட்டிமன்றம் எல்லாம் நடத்தினோம். பேபி ஷோவில் ஒரு நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை, ‘தேன் மல்லிப் பூவே’ பாட்டிற்கு தையைத் தக்கா என்று அழகாக ஆடியது. தோழி ‘உன்னை நான் பார்த்தது’ என்கிற பாடலை கையில் மைக்கைப் பிடித்தபடி பாடினார்.
ஒரு நாள் பட்டிமன்றம் வைத்திருந்தோம். எங்கள் அணியைச் சார்ந்த அனைவரும் அன்று பிற்பகல் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
ஒரு நாள் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ஒரு பகுதியான தருமி பொற்கிழி வாங்கும் படலத்தை நாடகமாகப் போட்டோம் அதில் நான் தான் பாண்டிய அரசன். எனக்கு மேக்கப் போடும்போதுதான் என் முகத்தில் வடுக்கள் இருக்கிறதே என்று பேராசிரியர் கேட்டார்கள். கூர்ந்து பார்த்தால்தான் வடுக்கள் இருப்பது தெரியவரும். “நான்கு வயதில் எனக்குப் பெரியம்மை வந்திருந்தது; அதன் வடுக்கள்” என்றதும், “பரவாயில்லை லேசாகத் தானே இருக்கிறது” என்றார்கள். நான் எனது அம்மா செய்ததைச் சொன்னேன். அப்போது நாங்கள் மும்பையிலிருந்தோம். பலருக்கும் பெரியம்மை நோய். பலரும் வீடுகளில் வைத்துக் கவனித்திருக்கிறார்கள். சில நெருக்கடியான இடங்களில், பக்கத்து வீட்டினர் புகார் செய்ததால் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்கள்.
தம்பி வேறு கைக்குழந்தை. அவனுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மொழி தெரியாத இடத்தில், மருத்துவமனையில் நாள் முழுவதும் என்னை வைத்துக் கொண்டு தனியே இருக்க வேண்டும். ஒரே நீள அறை தான். அருகிலிருந்த பலரின் இறப்பை வேறு பார்க்க வேண்டும். அப்பா மாலை மட்டும் ஒரு மணி நேரம் வர முடியும். அப்போது தேவையானவற்றை வாங்கி வருவார். இளநீர் போன்றவை நிறைய வாங்கி வருவார். அதைச் சாப்பிட, குடிக்க என என் கவனம் சிதறும். அந்த நேரம் தவிர மற்ற நேரத்தில் சொரிந்து விடுவேன்; இதனால் அம்மா என் கைகளைக் கைக்குட்டையால் இணைத்துவிட்டு, நான் சொல்லுமிடத்திலெல்லாம் வேப்பிலை கொண்டு தடவுவார்கள். அப்போது ஒரு கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நாள்தோறும் குளிக்க வைக்க வருவார். அவர் பொட்டாசியம் பெர்மங்கனேட் என நினைக்கிறேன்; அதைச் சிறிது நீரில் விடுவாராம். என் அம்மாவும் நெடுநாள் எனக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் தான் சோப்பு போடாதே; சிறுபயறு, கடலை மாவு போட்டுக் குளிக்க வை எனச் சொல்லியிருக்கிறார்.
மருத்துவம் மற்றும் கடும் முயற்சியால் வெளியில் தெரியுமளவிற்கு என் முகத்தில் வடுக்கள் இல்லை. ஊசி குத்தக்கூட இடமில்லாத அளவிற்கு வேப்பம் பழம் அளவிற்கு கொப்பளங்கள் இருந்தனவாம். என்னுடன் பாதிக்கப்பட்ட பலர் முகங்களில் குழிகள் உண்டு. அவர்கள் மருத்துவமனையை நாடாதவர்கள். இவை எல்லாம் என் அம்மா சொன்னவைதான். இப்போது அந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
சரி நாடகத்திற்கு வருவோம். பொற்கிழி வேண்டுமே! கைக்குட்டையில் ஓட்டாஞ் சில்லை (உடைந்த ஓடு) வைத்துக் கட்டினோம். நாடக முடிவில் நான் பொற்கிழி கொடுக்கும் போது, முடிச்சு அவிழ்ந்து ஓட்டாஞ் சில்கள் அனைத்தும் பொலபொலவென வீழ்ந்தன. இத்தனைக்கும் அது வெளிநாட்டிலிருந்து அப்பா கொண்டுவந்தது என்பதால் வழக்கமான கைக்குட்டைகளை விடப் பெரிதாக இருக்கும். அப்படியிருந்தும் போதவில்லை. நான் உள்பட எல்லோருமே சிரித்து விட்டோம். நாடக முடிவு காமெடியானது. இதில் நடித்ததற்கு ஒரு பிளாஸ்டிக் தட்டு பரிசாகக் கிடைத்தது. அப்போது பிளாஸ்டிக் பொருள்கள் அதிக விலை.
இவ்வாறு என் எஸ் எஸ் முகாம் இனிய பல நினைவுகளைக் கொண்டது. முகாமில் விடுதி மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், மற்றவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாகவும் நினைவு. கடமைக்காக அன்றி, உண்மையில் மக்கள் நலனை மனதில் வைத்து பணியாற்றியது எங்கள் கல்லூரி.
200 பேர் என் எஸ் எஸ் இற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், மீதி 100 பேர் முதியோர் கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதியோர் கல்வியில் முதியோருக்குக் கையெழுத்துப் போட மற்றும் ஓரளவு ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுப்பார்கள். அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்புக்கு உதவுவது, மரங்கள், செடிகளின் விதைகளை விநியோகிப்பது போன்ற செயல்பாடுகள் அதனுடன் இணைந்து இருக்கும். இதன் மூலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் உண்டு.
அடுத்தது விளையாட்டுத் துறை. என் எஸ் எஸ் மொத்தம் 200 பேரும், என். ஏ. இ. பி. நூறு பேரும் போக மீதி அனைவரும் விளையாட்டுத் துறையைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இவர்களில் கொஞ்சப் பேர்தான் விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். மீதி உள்ளவர்கள் வேறு வழியின்றி அந்தத் துறைக்கு வந்தவர்கள்தான். விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் அவரவர்க்குப் பிடித்த படி வாலிபால், பேட்மிட்டன், டென்னிஸ், டென்னி காய்ட் போன்ற விளையாட்டுகள் விளையாடுவார்கள். டிவைடிங் ஸ்கர்ட் போட வேண்டும் என்பதற்காக வாலிபால் போன்றவற்றில் சேராதவர்கள் பலர் உண்டு.
இன்டோர் ஆடிட்டோரியத்தில் டேபிள் டென்னிஸ், செஸ், கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவார்கள். மீதி கொஞ்சப் பேர் விளையாட்டு அரங்கினுள் ஜாகிங், ரன்னிங் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். இது எதிலும் ஆர்வம் இல்லாதவர்கள் புல்லாவது பி( பு)டுங்கிக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் பிஸிக்கல் டைரக்டர் கண்காணித்துக் கொண்டிருப்பார். விளையாட்டு தினத்திற்கு ஆயத்தம் செய்யும்போது என் எஸ் எஸ் மாணவர்களும் அவர்களுடன் இணைத்து கொள்வோம்.
தொடரும்…
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.





Super👌👌
நன்றி
சமூகப்பணி, நோய் பராமரிப்பு, அழகுக்குறிப்பு ( அம்மை வடு மறைய) நாடக காமெடி என அசத்தலான கலவை நன்றாக இருக்கிறது.
உங்கள் நினைவாற்றல் அருமை.இதனை வாசிக்கும்போது என்னுடைய விடுதி வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது.
நன்றி
நன்றி
Very interesting to read also informative 👌
Thanks
அனுபவங்கள் ஆயிரத்தையும் நினைவூட்டுகின்றது.