இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது.

  1. சிங்க முத்திரை The Lion Capital

அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான பேரரசராக மாற்றியது. அவர் பௌத்தத்தின் ஆதரவாளரானார். அவரது சிங்க முத்திரை புத்தரின் அமைதியைக் குறிக்கிறது. 

சாரநாத்தில் புத்தர் தனது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடி பீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்கள் உள்ளன. கீழே ‘வாய்மையே வெல்லும்’ என்னும் பொருள்படும், ஸத்யமேவ ஜயதே என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. 

இது இந்தியாவின் தேசிய சின்னம்.

2. இந்தியக் கொடி National Flag 

3. Douglas DC4 வானூர்தி 

1948-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள்

  1. மலபார் இளவரசி

நாடு விடுதலை அடைந்தபின் 8 ஜூன் 1948 அன்று, மலபார் இளவரசி (Malabar Princess) என்கிற ‘வானூர்தி’ வெளிநாட்டுப் பயணமாக ஏர் இந்தியா, பம்பாயிலிருந்து லண்டன் புறப்பட்டது. அதைக் குறிக்கும் விதமாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. 

2. காந்தி மரணம்

காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நான்கு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அவர் ஜனவரி 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி 30 தியாகிகள் நாளாக இன்றும் கடைபிடிக்கப் படுகிறது. 

1949ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள்

இந்தியா 1949-ம் ஆண்டு, தொல்பொருள்/ வரலாறு குறித்த அஞ்சல்தலைகளை வெளியிட்டது. 

1.வெற்றிக் கோபுரம் Victory Tower 

ராஜஸ்தானின் சித்தோர்கர் கோட்டையில் (Chittorgarh fort) வெற்றிக் கோபுரம் அமைந்துள்ளது. 15-ம் நூற்றாண்டில் மேவார் அரசர் (Mewar king, Rana Kumbha) ராணா கும்பாவால், முகமது கில்ஜியை (Mahmud Khilji) வெற்றி கொண்டதன் நினைவாக இந்தக் கோபுரம் கட்டப்பட்டது.

2. அஜந்தா யானை ஓவியம் Ajanta painting

இந்த அஞ்சல் தலை அஜந்தா (Ajanta Caves) குகைகளில் உள்ள ஓவியத்தின் படத்தைக் கொண்டுள்ளது.  அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் கொண்ட குடைவரைக் கோயில்கள். இவை புத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், புத்தமதக் கொள்கைகள், போன்றவற்றைச் சித்தரித்து உருவாக்கப்பட்டவை. பொ.மு.2 – பொ.ஆ. 6 -ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு கால கட்டங்களில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. காடுகளால் மறைக்கப்பட்ட இக்குகைகள் பொ.ஆ. 1819 இல் தான் உலகிற்குத் தெரியவந்தன.

3. 1949-ம் ஆண்டு வெளியான போதிசத்வர் Bodhisattva அஞ்சல் தலைகள் 

போதிசத்வர் என்பவர் பௌத்த சமயத்தின் நிர்வாணத்தை (துன்பம் இல்லாத நிலை) அடையக்கூடியவர்.

4. 1949 -ம் ஆண்டு வெளியான புத்த கயா (Buddha Gaya) அஞ்சல் தலை 

புத்த கயா பீகாரில் உள்ள புத்தர் ஞானம் பெற்ற நகரம். இங்குள்ள அரச மரத்தடியில் (போதி மரம்) அவர் ஞானம் பெற்றதால், பெளத்தர்களின் புனிதத் தலமாகத் திகழ்கிறது. 

5. 1949-ம் ஆண்டு வெளியான கோல் கும்பாஸ் (Gol Gumbaz) அஞ்சல் தலை 

கோல் கும்பாஸ் கர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூரில் உள்ளது. இங்கு, 17-ம் நூற்றாண்டின் பிஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

6. 1949-ம் ஆண்டு வெளியான பொற்கோவில் (The Golden Temple) அஞ்சல் தலை 

7. கோனார்க் குதிரை Konark Horse

இது இந்தியாவின் ஒடிசா மாநிலம் கோனார்க் கோயிலில் காணப்படும் சிற்பம். கோனார்க் சூரியக் கோயில் பொ.ஆ.1250 இல் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் முதலாம் நரசிம்மதேவன் (1238 – 1264) என்பவரால் கட்டப்பட்டது.

8. நடராஜர் Natarajar

நடராஜர் என்ற சொல்லுக்கு, நடனத்தின் அரசன் என்று பொருள். தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் கோயிலில் நடராஜர் முதன்மைக் கடவுள். இக்கோயில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

சிவன் நடனமாடும் அரங்கம் பொன்னம்பலம் (golden court) என்று அழைக்கப்படுகிறது. சோழ மன்னனான பராந்தகன் (Paranthakan, the Chola king) இந்தக் கோவிலின் கருவறையின் மேற்கூரைக்குத் தங்க ஓடுகள் போட்டார். மிக அழகான கோவில்.

9. சாஞ்சி ஸ்தூபி Sanchi Stupa 

சாஞ்சியில் உள்ள பெரிய ஸ்தூபி (ஒரு குவிமாடம் வடிவ புத்த கோவில்) மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி என்ற சிறு ஊரில் அமைந்துள்ளது. இது புத்தரின் நினைவுச்சின்னங்களின் மீது கட்டப்பட்ட அரைக்கோள வடிவ செங்கல் அமைப்பாகும். அசோகர் (பொ.ஆ.மு 3-ம் நூற்றாண்டு) Ashoka the Great (3rd century BCE) ஸ்தூபியைக்  கட்டியிருக்கிறார். ஸ்தூபியில் உள்ள தூண்களில் ஒன்றில் இந்தியாவின் தேசிய சின்னமான சிங்கச் சின்னம் உள்ளது. இந்த ஸ்தூபியின் வாசல் படத்துடன் இந்திய அரசு, அஞ்சல்தலை வெளியிட்டது. 

10. மும்மூர்த்தி Trimurti

மும்மூர்த்தி என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று கடவுள்கள் இணைந்த திருவுருவம்.

11. பரசுராமேஸ்சுவரர் (Parashurameshvara) கோவில் 

இது, ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் ( Bhubanēswar) உள்ளது. இது 7–8ம் நூற்றாண்டில் சைலோத்பவ வம்ச மன்னர்கள், மணல் கற்களால் கட்டிய கோவில். இக்கோவில் படம் பொறித்த இரண்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

12. கண்டாரியா மகாதேவா கோயில் Kaṇḍariya Mahadeva Temple

கண்டாரியா மகாதேவா கோயில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் உள்ளது. இந்தக் கோயில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நுட்பமான சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற கோவில் இது.

13 தாஜ்மகால் Taj Mahal

1936-ம் ஆண்டு, தாஜ்மகால் குறித்த முதல் அஞ்சல்தலையை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. 

14. செங்கோட்டை Red Fort

செங்கோட்டை புது தில்லியில் அமைந்துள்ளது.

ஷாஜகான் (17-ம் நூற்றாண்டு) தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்தபோது, ​செங்கோட்டையைக் கட்டினார். சிவப்பு மணற்கல் சுவர்கள் கொண்டிருப்பதால், செங்கோட்டை என்ற பெயரைப் பெற்றது.

1857-ம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் போது, ​​கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷா , ஆங்கிலேயர்களால் இங்குதான் கைது செய்யப்பட்டு பின்னர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார். 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளன்று, பிரதமர் செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்துகிறார்.

15 குதுப் மினார் Qutub Minar

குதுப் மினார் டெல்லியில் உள்ளது. இது செங்கற்களால் ஆன உலகின் மிக உயரமான மினார். கட்டுமானப்பணி, 1193-ம் ஆண்டில் தொடங்கி, 1386-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. 

16 சத்ருஞ்சய ஜெயின் கோயில் Shatrunjay Jain Temple

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் சத்ருஞ்சய மலைகள் அமைந்துள்ளன. இது 900க்கும் மேற்பட்ட ஜைன கோயில்களைக் கொண்ட ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான புனிதத் தலம். இந்த கோயில்கள் 11 முதல் 16 -ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டன. ஜைன மதம் என்பது பொ.ஆ.மு 6-ம் நூற்றாண்டில் ஒரு அரச போர்வீரர் குடும்பத்தில் பிறந்த வர்த்தமான மகாவீரரால் நிறுவப்பட்ட மதம். மகாவீரரும் புத்தரும் சமகாலத்தவர்கள்.

17. யுனிவர்சல் போஸ்டல் யூனியன் பவள விழா

யுனிவர்சல் போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அதன் படம், மற்றும் அசோக தூண் கொண்ட அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.