தலைப்பைப் படித்ததும் சூர்யா நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்தான் இங்கு நிறைய பேருக்கு நினைவுக்கு வரும். மரபணு பொறியியல் என்கிற ஒரு துறை இருக்கிறது என்பதே அந்தப் படம் பார்த்த பிறகுதான் பலருக்குத் தெரிய வந்தது என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு மரபணு பொறியியலை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி இருக்கிறது இந்தத் திரைப்படம். அதில் காட்சிப்படுத்தியிருப்பது போல திறமைகளை மரபணு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்த முடியுமா? எந்த மாதிரியான தகவல்களை மரபணுக்கள் சேமித்து வைக்கின்றன எனப் பல கேள்விகளும் அது சார்ந்த கற்பிதங்களும் நம்மிடையே உழன்று வருகின்றன.

உயிர்‌ வாழ்தலுக்கும், உடலுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் தேவையான புரதங்களைப் பற்றிய தகவல்கள்தாம் தாயனையில் இருக்கும். நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தொடங்கி செரிமானத்திற்குத் தேவையான நொதிகள் வரை அனைத்துமே புரதங்களால் ஆனது. ஒரு செல்லின் செயல்பாடுகள் அனைத்தும் புரதங்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தப் புரதங்கள் எப்போது வேண்டும், எவ்வளவு வேண்டும், உடலின் எந்தப் பகுதியில் வேண்டும் போன்ற அனைத்துத் தகவல்களும் தாயனையில் இருக்கும் மரபணுக்களில் சேமிக்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் இந்தத் தகவல்கள் இருப்பதால் நம் தோற்றத்தையும் இந்த மரபணுக்கள்தான் முடிவு செய்கின்றன. உடலின் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பதால் அதைப் பாதிக்கும் நோய்களும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.

இந்த மரபணுத் தீர்மானங்கள் அனைத்தும் கருவாக உருவாகும் போதே அரங்கேறிவிடும். பிறப்பிற்குப் பின்னர் மரபணு பிறழ்வுகள் ஏற்பட்டால் மட்டுமே அது அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்படும். அது தவிர நம் ஆர்வத்தின்பால் ஒரு குறிப்பிட்ட பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது அது நம் மரபணுக்களில் சேமிக்கப்பட மாட்டாது. உதாரணத்திற்கு, பிறப்பிற்குப் பின்னர் ஒரு தனி நபர் கால்பந்தில் ஆர்வம் கொண்டு நீண்ட காலப் பயிற்சிக்குப் பிறகு ஒரு தலை சிறந்த கால்பந்து வீரராக வரும் பட்சத்தில் அந்த நபரின் வருங்காலத் தலைமுறையினரும் கால்பந்தில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், திறமைகள் மரபணுக்களில் பதியப் பெறாது. ஒருவேளை ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டியது போல திறமைகளை மரபணுக்கள் வழியாக அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த முடியும் என்றால், இந்த உலகில் ஒரே ஒரு குடும்பம்தான் இசையில் தேர்ந்தவர்களாக இருக்க முடியும்.‌ ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கால்பந்தில் சிறந்தவர்களாக இருக்க முடியும்.

கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம்.‌ அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் ஏற்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலையும், அதன் விளைவுகளையும் இன்றும் அந்த மண்ணும் மக்களும் எதிர்கொண்டு வருவதே இதற்கான சான்று.

சரி, மரபணுக்களுக்கும் திறமைகளுக்கும் தொடர்பே இல்லையா என்று கேட்டால். தொடர்பு உண்டு. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் பெரும்பாலும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கு அவர்களுடைய மரபணுக்கள்தாம் காரணம். உலகப் புகழ்பெற்ற தடகள வீரரான உசைன் போல்ட்கூட ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்தான். அதே போல மாரத்தான் வீரர்கள் பெரும்பாலும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம். இதற்கும் மரபியலுக்கும் தொடர்பு இருக்கிறது.

தடகள வீரர்களுக்குத் தேவையான அதி வேக ஆற்றலையும் ஆக்ஸிஜனையும் (உயிர்வளி) தசைகளுக்குக் கடத்தும் புரதத்திற்கான மரபணு, மற்ற நாட்டவர்களைவிட ஜமைக்கா நாட்டவர்களுக்கு இயற்கையாவே வலிமை மிகுந்ததாக இருக்கிறது. அதனால் அந்நாட்டவர்கள் அதிகம் தடகள வீரர்களாக இருக்கிறார்கள். இது இயற்கையின் கொடை. ஆனால், ஜமைக்கா நாட்டைச் சேராதவர்கள்கூட முறையான பயிற்சிகள் மூலம் தடகள வீரர்களாக முடியும். அதே போல மாரத்தான் வீரர்கள் அதிக தூரம் ஓட வேண்டும். அதற்குத் தேவையான ஆற்றலையும் ஆக்ஸிஜனையும் உடலில் அதிக நேரம் தக்க வைத்து, தசைகளுக்குக் கடத்தும் புரதத்திற்கான மரபணு வலிமையாக இருப்பதால், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மாரத்தான் வீரர்களாக இருக்கிறார்கள். அதிவேகமோ அதிக தூரமோ எதுவாயினும் கால் தசைகளுக்கு எந்த நேரத்தில் எவ்வளவு ஆற்றல் வேண்டும், எவ்வளவு ஆக்ஸிஜன் வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கடத்துவது மரபணுக்களின் வேலை. வீரர்களை உருவாக்குவதோ திறமைகளை வெளிப்படுத்துவதோ இந்த மரபணுக்களின் தலையாய கடமையில்லை. ஓடும் போதும் நடக்கும் போதும் கால் தசைகளுக்குத் தேவையானவற்றைச் சீராகக் கொடுப்பதுதான் இதன் வேலை. சுற்றுச்சூழல், உணவு முறை, தட்பவெப்ப நிலை போன்றவற்றால் இந்த மரபணுக்களின் வலிமை ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால் அதைத் திறமைகளை வெளிப்படுத்தவும், பிறரோடு போட்டியிடுவதற்கும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

உண்மையில் இந்த மரபணுக்கள் தடங்களுக்கானதல்ல கால்களுக்கானது. மானின் சிறப்பம்சமாக ஓடும் வேகத்தைச் சொல்கிறோம். ஆனால், அது எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பிழைக்கும் திறன் என்பதை நாம் சிந்திப்பதேயில்லை. சிங்கம், புலி போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளின் நீண்ட கூரிய பற்களைப் போலதான் மனிதர்களாகிய நமக்கும் இருந்திருக்கிறது, நெருப்பு என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படும்வரை.‌ மாமிசங்களைப் பச்சையாக உண்ணும் போது அதைக் கிழிப்பதற்குக் கூரிய நீண்ட பற்கள் தேவைப்பட்டன‌. ஆனால், நெருப்பைக் கண்டறிந்து மாமிசங்களைச் சமைத்து உண்ண தொடங்கியதும் இந்த நீண்ட கூரிய பற்களின் தேவையில்லாமல் போனது. அதுவே காலப்போக்கில் மனிதர்களுக்கு இப்போதிருக்கும் குறுகிய பற்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. அதுவும் பல ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சிங்கத்திற்கும் புலிக்கும் சமைக்க தெரியாததால் இன்றும் அவற்றுக்கு அந்த நீண்ட கூரிய பற்கள் தேவையாக இருக்கிறது.‌

இன்று நாம் அதிகம் திறன்பேசியைப் பயன்படுத்தி வருவதால் காலப்போக்கில் நம் கட்டைவிரல் திறன் பேசியைப் பிடிப்பதற்கு ஏதுவாக வளைந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மாற்றமும் நாளைக்கே நடக்கப் போவதில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கும் சில ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.‌ நம் வாழ்வியலுக்குத் தேவையானவற்றையும், பிழைக்கும் ஆற்றல் உடையதையும், பொருந்தி வாழும் தன்மையையும் மட்டுமே இயற்கையும், மரபியலும் ஏற்றுக் கொள்ளும். இவற்றை நாம் சிறப்பம்சமாக, திறமையாக, ஆளுமையாக, இன்னும் என்னவாக வேண்டுமானாலும் கருதலாம். ஆனால், இவை அனைத்தும் பிழைத்தலுக்கான பண்புகள் மட்டுமே.

அறிவாற்றலையும் திறன்களையும் ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு வாய் வழியாகவோ, பயிற்சிகள் மூலமோ கற்றுத் தரலாமே ஒழிய மரபணுக்கள் வழியாகக் கடத்த முடியாது.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.