பூஞ்சையைப் போல இது ஈரமான, இருட்டான இடங்களில் வளரும். பார்ப்பதற்கு இது பாசி போல வழவழப்பாக இருக்கும். ஆனால், இது பூஞ்சையல்ல, பாசியும் அல்ல. இது விலங்கும் அல்ல, தாவரமும் அல்ல. ஒரு மீட்டர் நீளம் வளரக்கூடிய ஒருசெல் உயிரி இது!
இந்த உயிரியின் அறிவியல் பெயர் Physarum polycephalum. ’பல தலைகள் கொண்ட பிசுபிசுப்பான பொருள்’ என்ற அர்த்தம் தரும் சொல் இது. இதன் செல்லப் பெயர் The Blob. 1958இல் வந்த இந்த அறிவியல் புனைவு திகில் படத்தைப் பலர் பார்த்திருக்கலாம். அமீபாவைப் போன்ற ஒரு வேற்று கிரக உயிரி, ஒரு விண்கல்லில் பயணித்து பூமிக்கு வந்துவிடுகிறது. தான் செல்லும் பாதையில் இருக்கும் எல்லாவற்றையும் போர்த்தி விழுங்கக்கூடிய ப்ளாப், ஒரு கட்டிடத்தை விடப் பெரிதாக வளர்ந்து எல்லாரையும் அச்சுறுத்துகிறது.
இந்தப் பெயருக்குப் பொருத்தமான உயிரி இது. ப்ளாப்புக்குக் கண்கள் கிடையாது, வாய் கிடையாது, வயிறு கிடையாது. எதாவது ஒரு தடை வந்தால் அமீபாவைப் போல தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு முன்னேறுவதுதான் அதன் வேலை. எந்த உயிரின வகையிலும் அடங்காது என்பதால் ஒரு புனைவான வேற்றுகிரகவாசியின் பெயர் இந்த உயிரிக்குப் பொருந்தும் என்றும் விஞ்ஞானிகள் நினைத்திருக்கலாம்.
சரி, எப்படி ஓர் உயிரி எந்த வகைப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்க முடியும்?
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ப்ளாப் உயிரி, Slime mould என்ற வகைமையில் வைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு வழுவழுப்பாகத் தெரியும் பூஞ்சை என்ற பொருள்தரும் இந்தச் சொல் தவறானது என்பதே பின்னாட்களில்தான் தெரியவந்தது. இவை பூஞ்சை வகையைச் சேர்ந்தவை அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது. விலங்கு, தாவரம், பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரி என்ற எந்த வகையிலும் சேராத Protista (முகிழுயிரி) என்ற வகைமைக்குள் வரும் உயிரி இது. இதில் சுவாரசியம் என்னவென்றால் விலங்குகள், தாவரம் போன்ற வகைமைகளைப் போல் அல்லாமல், முகிழுயிரிகளுக்கு என்று தனித்துவமான பண்புகள் கிடையாது. எந்த வகைமையிலும் சேராத உயிரிகளை எல்லாம் விஞ்ஞானிகள் பொதுவாக முகிழுயிரி என்று வகைப்படுத்திவிடுவார்கள்!
ஒரு செல் உயிரிகள் கண்ணுக்குத் தெரியாதவை. நுண்ணோக்கி இருந்தால் மட்டுமே அவற்றை நாம் பார்க்க முடியும். இது எப்படி ஒரு மீட்டர் வளர்கிறது?
தன் வாழ்க்கைப் பாதையைத் தொடங்கும்போது இது ஒரு நுண்ணுயிரியாகத்தான் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து வளர்ந்து சூழ்நிலை கடினமானதாக மாறும்போது, தன் அருகில் இருக்கும் பிற ப்ளாப் செல்களுடன் ஒன்றாகக் கலந்து பல கருக்கள் (Nucleus) கொண்ட ஒரு பிரம்மாண்ட செல்லாக மாறுகிறது. அமீபாவைப் போல தன் உடலை விரித்தும் சுருக்கியும் ஃப்ராக்டல் வடிவங்களில் நகர்ந்து உணவை நோக்கி முன்னேறுகிறது!
இது சும்மா பாசி போல படர்ந்திருக்கிறது என்று உதாசீனப்படுத்திவிட வேண்டாம். ப்ளாப்களிடம் உள்ள சில தனித்திறமைகள் பெரிய விலங்குகளிடம்கூடக் கிடையாது. இரண்டாக வெட்டப்படும் ப்ளாப்கள், சில நிமிடங்களுக்குள் தங்களைத் தாங்களே செப்பனிட்டுக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை!
பிரான்சில் நடந்த ஒரு சோதனையில், ப்ளாப்களின் உணவை ஒரு புதிர்ப்பாதையின் முடிவில் வைத்துவிட்டு, ’கேரட்டை அடைய முயலுக்கு வழி சொல்லுங்கள் குழந்தைகளே’ என்ற ரீதியில் ப்ளாப்பை அதற்குள் விஞ்ஞானிகள் விட்டுவிட்டார்கள். புதிர்ப்பாதையில் ஆங்காங்கே இவற்றுக்குப் பிடிக்காத கசப்பான உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில முயற்சிகளிலேயே உணவை அடையக் கற்றுக்கொண்ட ப்ளாப்கள், அடுத்தடுத்த முயற்சிகளில் கசப்பான உணவு இருக்கும் பாதையைத் தவிர்க்கவும் பழகிக்கொண்டன! அது மட்டுமல்லாமல், இந்தப் புதிர்ப்பாதையின் நுணுக்கங்களை அவை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்திருந்தன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்! ஒரு வருடம் கழித்து இந்தச் சோதனை மீண்டும் நடத்தப்பட்டபோது, கசப்பான உணவு இருக்கும் பாதைகளைத் தவிர்த்து ப்ளாப்கள் லகுவாக உணவைச் சென்றடைந்தன.
ஜப்பானின் கியோ பல்கலைக்கழகத்தில் இந்த ப்ளாப்களின்மேல் வேறொரு சோதனை நடத்தப்பட்டது. கணிப்பொறி உலகில் இதை Travelling salesman problem என்று அழைப்பார்கள். நீங்கள் உங்கள் சொந்த ஊரிலிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விற்பனை நடத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வோர் ஊருக்கும் ஒரு முறை மட்டுமே செல்லவேண்டும், மிகக்குறைவான தூரம் பயணித்தால் மட்டுமே செலவையும் அலைச்சலையும் குறைக்க முடியும், வேலையை எல்லாம் முடித்துவிட்டு உங்கள் ஊருக்குத் திரும்பவேண்டும். அங்குமிங்கும் ஊர்கள் சிதறிக் கிடக்கும் ஒரு வரைபடத்தைக் கொடுத்து மிகக்குறைந்த தூரம் பயணிக்கத்தக்க வழி எது என்று ஒரு அல்காரிதம் அமைக்கும் சோதனை இது. வெவ்வேறு இடங்களில் உணவுகளை வைத்தாலும் மிகக்குறைந்த தூரம் மட்டுமே பயணித்து ஆற்றலைச் சேமித்த ப்ளாப்கள் இந்தச் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
ப்ளாப்கள் கணக்கு போடுகின்றன, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றன, அதை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்துக்கொள்கின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா? இதோ இன்னோர் ஆச்சரியம், இவை தான் கற்ற விஷயங்களை மற்ற ப்ளாப்களுக்கும் தேவைப்பட்டால் சொல்லித்தரும் ஆற்றல் படைத்தவை! அருகிலிருக்கும் ப்ளாப் செல்களுடன் இணையும்போதுதான் ஒரு ப்ளாப் செல் கற்ற எல்லா விஷயங்களும் அந்த செல்லுக்கும் கடத்தப்பட்டு, அவை புதிய உயிரியாக இருக்கும்போதும் அந்த நினைவை இழக்காமல் இருக்கின்றன!
டால்பின்களிலோ யானைகளிலோ சிம்பன்சிகளிலோ இதுபோன்ற ஆற்றல்கள் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்காது. ஏனென்றால் அவை பரிணாமம் ரீதியில் மேல் அடுக்குகளில் இருப்பவை. ஆனால், ப்ளாப்கள் அப்படியல்ல. சொல்லப்போனால் ப்ளாப்களுக்கு நரம்பு, நரம்பு மண்டலம், மூளை எதுவுமே கிடையாது! மூளை இல்லாத ஓர் உயிரி கற்றுக்கொள்கிறது, நினைவில் வைத்துக்கொள்கிறது என்றால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றிய நமது புரிதல்தான் என்ன என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு தேடி வருகிறார்கள்.
ஒரு வேற்றுகிரகவாசியின் பெயர் இதற்கு வைக்கப்பட்டது பொருத்தம்தான் என்று கட்டுரையின் தொடக்கத்தில் கூறியிருந்தேன். இன்னும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இதோ ப்ளாப் பற்றிய இன்னும் ஒரு செய்தி: ப்ளாப்கள் 720 பால் வேற்றுமைகள் கொண்டவை! (720 sexes)
கட்டுரையிலிருந்து புனைவுலகிற்குள் நாம் தாவிவிட்டதுபோல் தோன்றினாலும் இது உண்மைத் தகவல்தான். உண்மையாகவே ப்ளாப்களுக்கு 720 பால் வேற்றுமைகள் உண்டு.
’ஆண், பெண்’ என்ற இருமைகளுக்கு அப்பால் சில பாலினங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது, அது எப்படி 720 பால்கள் சாத்தியமாகும் என்று நமக்குள் கேள்வி எழலாம்.
மனிதர்களில் உடல்ரீதியாக ஆண்/பெண் வேற்றுமைகளை நாம் எப்படி வகைப்படுத்துகிறோம்? பால் சார் குரோமோசோம்களில் எக்ஸ்-எக்ஸ் இருக்கும் உடல்கள் பெண் உடல்கள் எனவும், எக்ஸ்-ஒய் இருக்கும் உடல்கள் ஆண் உடல்கள் எனவும் பிரிக்கப்படுகின்றன. ப்ளாப்கள் matA, matB, matC என்ற மூன்று பால்சார் மரபணுக்களைக் கொண்டவை. இந்த மூன்று மரபணு குறிப்பிடங்களில் உள்ள டி.என்.ஏக்களில் பல்வேறு வகைமைகள் உண்டு. matA வில் 16 வகைமைகள், matBல் 15 வகைமைகள், matCல் 3 வகைமைகள் காணப்படலாம். இந்த வேற்றுமைகள் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பதால் ஒட்டுமொத்தமாக 16x15x3 – அதாவது 720 வேற்றுமைகள் சாத்தியம்! ஆக ஒவ்வொரு ப்ளாப்பும் 720 பால்களில் ஏதாவது ஒரு பால்வகைமையைச் சேர்ந்ததாக இருக்கிறது. தன்னைவிட வித்தியாசமான ஒரு பால்வகைமை கிடைத்தால் இது இணைசேருகிறது.
சிறு மரபணு வேற்றுமைகளைத் தனி பால் அடையாளம் என்று சொல்லிவிட முடியுமா என்று நமக்குள் ஒரு கேள்வி எழலாம். பால் அடையாளம் என்பது வெளிப்படையாகத் தெரியாத உயிரி இது. ஒருவேளை ப்ளாப் ஒரு பாலூட்டியாகவோ மனித இனமாகவோ இருந்திருந்தால் ஒவ்வொரு மரபணு வேற்றுமைக்கும் ஒவ்வொரு மாதிரியான பால் அடையாளம் இருந்திருக்குமோ என்னவோ? ஆகவே அந்தச் சாத்தியக்கூறை நாம் ஒதுக்கிவிட முடியாது. தனித்தனி மரபணுக்கூறு என்பது நிச்சயம் தனி பால் வகைமைதான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். எளிய உயிரி என்றாலும்கூட இத்தனை பால்வகைமைகள் கொண்டது என்பதால் இதை விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்துவருகிறார்கள். இவற்றின் இனப்பெருக்க முறைகள் தெளிவாக வரையறுக்கப்படும்போது மரபணுவியலுக்கு மட்டுமல்லாமல் பால்சார் அறிவியலுக்கும் பல புரிதல்கள் கிடைக்கலாம்.
இனப்பெருக்க உறுப்பு இல்லாமலேயே 720 பால் அடையாளங்கள், கால்களற்ற போக்குவரத்து, மூளையற்ற சிந்தனை, நரம்புகளற்ற தகவல் பரிமாற்றம் என்று எந்த விதத்தில் பார்த்தாலும் இது விநோத உயிரி தான். ப்ளாப் திரைப்படம் இப்போது ரீமேக் செய்யப்படுமானால் இந்த உயிரிக்கு நன்றி தெரிவித்தே படத்தைத் தொடங்கவேண்டியிருக்கும்!
720 பால்கள் என்பது ஒரு விநோதம்தான். பொதுவாக பால்சார் இனப்பெருக்கத்தில் ஆண்-பெண் என்ற இரு வகைமைகள் உண்டு. ஒருபால் மட்டுமே கொண்ட இனங்கள் உண்டா? அவை எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன?
(தொடரும்)
படைப்பாளர்:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.