விலங்குகளும் பாலினமும் – 14
கேரி சாப்மன் என்ற எழுத்தாளரின் புகழ்பெற்ற ஒரு புத்தகம், மனிதர்களிடையே நிலவும் ஐந்து விதமான காதல் மொழிகளை (Languages of love) விவரிக்கிறது. காதலையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள மனிதர்கள் இந்த ஐந்து மொழிகளில் ஏதாவது ஒன்றை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், இணையரின் காதல் மொழி எது என்று தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நெருக்கத்தை அதிகரித்து பிரச்சனைகளைத் தவிர்க்கும் என்றும் கூறுகிறார். வேலைகள் (Acts of service), தொடுதல், பரிசுகள் தருதல், நேரம் செலவழித்தல், அன்போடும் நம்பிக்கை தருவதாகவும் பேசுதல் என்ற ஐந்து மொழிகளைப் பட்டியலிடுகிறார். உதாரணமாக, நேரம் செலவழித்தலை மொழியாகக் கொண்ட ஒருவருக்கு, ஒன்றாக இருக்கும் நேரத்தில் முழு கவனத்தையும் தருவதே பெரிய ஒரு பரிசாக இருக்கும். வைர மோதிரத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு பிறந்தநாளில் தன்பாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டால் அவர் ஏமாற்றமடையவே வாய்ப்புகள் அதிகம்.
இதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே சாப்மன் எழுதியுள்ளார். இவை மட்டும்தான் மனிதர்களின் காதல் மொழியா, இதன் அறிவியல் பின்னணி என்ன என்பது போன்ற கேள்விகள் எழுந்தாலும் சமூகரீதியாகப் பார்த்தால் இது சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.
விலங்குகளிடமும் இதுபோன்ற காதல் மொழிகள் நிலவுகின்றன. இணையைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில் அந்தந்த இனத்துக்கேற்ற காதல் மொழியில் இணையைக் கவரும் முயற்சிகள் நடக்கும்.
அழகான தோற்றம்
ஆண்மயிலின் நீண்ட தோகை பெண்மயில்களைக் கவர்கிறது என்று நாம் அனைவருமே அறிந்திருப்போம். சொர்க்கப்பறவைகள் (Birds of paradise) என்ற இனத்தில் எல்லா ஆண் பறவைகளும் கண்கவர் வண்ணத்தில் ஜொலிக்கின்றன.
நீலக்கால் பூபி (Blue footed booby) என்று ஒரு பறவை இனம் உண்டு. தான் உண்ணும் உணவிலிருந்து நிறமிகளைப் பிரித்தெடுத்து இவை கால்களுக்கு அனுப்புகின்றன. பளீர் நீலத்தில் கால்கள் கொண்ட பூபிகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருக்கின்றன.
பூபிகளின் தேர்வு முறையிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆண் மயிலின் தோகை எதைக் குறிக்கிறது?
இதை Handicap Hypothesis என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, நீண்ட தோகை என்பது ஒரு பெரிய சிரமம். அதை வைத்துக்கொண்டு எளிதில் வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க முடியாது. ஆனால் இத்தனை சிரமம் இருக்கும்போதே அந்த விலங்கு தப்பிப் பிழைக்கிறது என்றால் அது வலுவான ஆண்பறவை என்று பொருள்!
பாடல் திறன்
“கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது” என்று பாடும் பெண் விலங்குகளுக்கான மொழி இது. பறவைகள், தவளை போன்ற நீர் நிலவாழ்விகள், ஜிம்னோடாய்ட் என்ற ஒரு வகை மீன், சிலவகை திமிங்கிலங்கள் போன்ற பல இனங்களில் உள்ள ஆண்விலங்குகள் விநோத சப்தங்கள், பாடல்கள் மூலம் இணையைக் கவர்கின்றன.
இவ்வளவு ஏன், வீட்டு சுண்டெலிகள் இணையைக் கவர்வதற்காக அல்ட்ராசோனிக் முறையில் பாடல்கள் பாடுகின்றன என்று 2010ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! அது அல்ட்ராசோனிக் அதிர்வெண்ணில் ஒலிப்பதால் மனிதர்களால் அதைக் கேட்க முடிவதில்லை.
வீடு கட்டும் திறன்கள்
தூக்கணாங்குருவியின் கூடு இணையைக் கவர்வதற்காக உருவாக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். பேத்தை (Pufferfish) என்ற மீன் இனத்தில், ஆண்மீன்கள் இணையைக் கவர மணலால் ஆன ஒரு பெரிய வடிவத்தை உருவாக்குகின்றன.
பவர்பேர்ட் (Bowerbird) என்ற பறவை இனத்தில், பெண்ணைக் கவர்வதற்காக ஆண்பறவை அழகான ஒரு கூட்டை அமைக்கிறது. கிளிஞ்சல்கள், எலும்புகள், கூழாங்கற்கள் கொண்டு அதை அலங்கரிக்கிறது. சமீபகாலமாக ப்ளாஸ்டிக் பொருட்கள், பளபளக்கிற பாட்டில் மூடிகள் ஆகியவையும் பவர்பேர்ட் கூடுகளில் காணப்படுகின்றன. இந்தக் கூட்டை சரியாக வந்து அடைவதற்காக ஆண்பறவை குச்சிகளால் ஆன ஒரு வழியையும் அமைக்கிறது. அதில் சிறியதிலிருந்து பெரியதுவரை பொருட்களை வரிசைப்படி அடுக்குகிறது.
பெண்ணைக் கவர்ந்து வரவேற்க மட்டுமல்ல, இதுபோன்று நடந்துவரும் பெண்பறவைக்கு, கூட்டுக்குள் இருக்கும் ஆண்பறவை அளவில் பெரிதாகத் தெரியுமாம்! கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாதையைக் கடந்து திடீரென்று ஒரு வாயிலுக்குள் நுழைந்து கட்டிடத்தைப் பார்க்கும்போது நமக்குள் நடக்கும் காட்சிப் பிழை இது. பெரிய பறவைகள் வலுவானவை என்பதால் அப்படி ஒரு வழியில் நடந்துவரும் பெண்பறவை கவரப்பட வாய்ப்புகள் அதிகம்!
“என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்” என்று ஆண் பாடுவதான ஒரு பாடல் வரி நினைவுக்கு வரலாம்.
பரிசு தருதல்
சில வகை சிலந்திகள், பட்டு நூலால் சுற்றப்பட்ட இரையைப் பெண் விலங்குகளுக்குப் பரிசாகத் தருகின்றன! சும்மா எதையாவது தராமல் பயன்படக்கூடிய உணவைப் பரிசளிப்பதோடு மட்டுமல்லாமல் அதைப் பட்டுநூலாலும் சுற்றி அழகுபடுத்தத் தெரிந்து வைத்திருக்கின்றன!
க்ரேப் என்ற பறவை, பெண் பறவைக்குப் பாசித்துண்டுகளைப் பரிசளிக்கிறது. ஜெண்டூ பென்குயின்கள் பெண் பறவைக்கு அழகான கூழாங்கற்களைப் பரிசளிக்கின்றன. இந்தப் பறவைகள் இணைசேரும்போது, இந்தப் பாசிகளும் கூழாங்கற்களும் கூடு கட்டப் பயன்படுகின்றன!
நடனம்
இசையைப் போலவே நடனமும் இணைகவர்வதில் முக்கியமானது. மயில்களோ பூபிகளோ சொர்க்கப்பறவைகளோ அழகாக இருந்தால் மட்டும் போதாது, அந்த அழகை வெளிப்படுத்துமாறு பிரம்மாண்டமாக நடனமாடினால் மட்டுமே பெண் பறவைகள் கவனிக்கும். மானாகின் (Manakin) என்ற ஆண் பறவை ஒருபடி மேலே போய் மைக்கேல் ஜாக்சனைப் போல பின்னோக்கி நகர்ந்து மூன்-வாக்கிங் கூட செய்கிறது!
ஆடும்போதே சில வித்தைகளும் செய்யத் தெரிந்தால் அது கூடுதல் பலம். அனாஸ் தேன்சிட்டு என்ற பறவை இனத்தில், ஆண்பறவை திடீரென்று 100 அடி மேலே எழும்பிப் பறந்து, பிறகு தலைகீழாக வளைந்து டைவ் அடிக்கும்! கீழே பறந்து வரும்போதே பெண் பறவையை நெருங்கி வால் சிறகுகளை விரித்து ஒரு சத்தத்தை உருவாக்கும்! ஒரே நேரத்தில் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும்!
பெரிய விலங்கினங்கள் மட்டுமல்ல, பரிணாமப் படிநிலையில் கீழே இருக்கும் விலங்குகளிலும் இதுபோன்ற பண்பு உண்டு. மயில் சிலந்தி (Peacock spider) என்ற ஒரு இனத்தில் அழகாக நடனமாடும்போதே ஆண் சிலந்திகள் ஒரு ரீங்கார சத்தத்தையும் உருவாக்குகின்றன. இரண்டும் பிடித்திருந்தால் மட்டுமே பெண் விலங்குகள் கவரப்படும்.
இவை எல்லாமே ஆண் விலங்குகள் கஷ்டப்பட்டு பெண் விலங்குகளைக் கவர்வதாகவே இருக்கிறது, பெண் விலங்குகள் இவ்வாறு செய்வதில்லையா? அது ஏன்?
பால் தேர்வு (Sexual selection) முறையில் பெரும்பாலும் ஆண் விலங்குகளே பெண்களுக்காகப் போட்டி போடுகின்றன. உயிரணுக்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால், ஒருவேளை இணையாகத் தகுதியில்லாத பெண்ணைத் தேர்ந்தெடுத்துவிட்டால்கூட ஆண்விலங்கு அடுத்த இணையை நோக்கி நகர்ந்துவிடலாம், ஆனால் முட்டைகளை உருவாக்குவது, கருத்தரித்த முட்டைகளைப் பேணிக்காப்பது, அதற்குப் பிறகு குழந்தை வளர்ப்பு என்று பெண் விலங்குகள் இதில் அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. ஆகவே பெண் விலங்குகளே கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஒருமுறை கருத்தரித்த பின்பு யானைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே இணைசேருகின்றன. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கும் யானைகள் வாழ்நாளில் ஐந்து ஆண்டுகளை இழந்துவிடுகின்றன.வெகு அரிதாகப் பெண் விலங்குகள் ஆண்களுக்காக இணைகவரும் முயற்சியில் ஈடுபடும் நிகழ்வுகளும் உண்டு.
இதில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு அறிவியல் வரலாறும் உண்டு. மயிலின் தோகையை சுட்டிக் காட்டி, பெண் விலங்குகள் அழகு, வலிமை உள்ளிட்ட ஆண் விலங்குகளின் பண்புகளைப் பார்த்து அவற்றைத் தேர்வு செய்கின்றன என்று சார்லஸ் டார்வின் 1871ல் முன்வைத்தார். அப்போதைய விக்டோரியன் மதிப்பீடுகளில் ஊறிப் போயிருந்த விஞ்ஞானிகள், “அட! மனிதர்களிலேயே உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அழகு பற்றிய நுண்ணறிவெல்லாம் இருக்கிறது, இதில் விலங்குகளுக்கெல்லாம் அழகு பற்றிய புரிதல் இருக்குமா?” என்று வன்மத்தோடு அதை நிராகரித்தார்கள். அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பால்தேர்வு பற்றிய டார்வினின் கொள்கை உறுதிசெய்யப்படவே 80 ஆண்டுகள் ஆயின!
“விலங்குகளில்கூட ஆண் விலங்குகள்தான் அழகு” என்பதுபோன்ற புளித்து போன மேடைப்பேச்சுக்களை அதிகம் கேட்டிருப்போம். இந்த விஷயத்தில் மனிதர்களையும் விலங்குகளையும் நேரடியாக ஒப்பிடுவது அபத்தமானது. மனிதர்களின் பல பண்புகள், பால்தேர்வுக்கு அப்பாற்பட்டவை என்று 2000ல் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார் ஜியோஃப்ரி மில்லர். மனிதர்களில் ஆண், பெண் இருவருமே பால்தேர்வில் ஈடுபடுகிறார்கள். அது சமூகத்தாலும் அந்தந்த இனக்குழுக்களின் மரபாலும் கட்டமைக்கப்படுகிறது. தாமரைப்பூ போன்ற குட்டியான பாதங்கள் இருக்கும் பெண்களை விரும்பிய பண்டைய சீனர்கள், நீண்ட கழுத்துடைய பெண்களை விரும்பிய பண்டைய பர்மா குடிமக்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இது. இவ்வளவு ஏன், ஒரு சமூகத்திலேயே காலம் மாற மாற அழகு பற்றிய மதிப்பீடுகள் மாறுகின்றன. இப்போதைய மனிதர்களின் பால்தேர்வைப் புரிந்துகொள்ள விரும்பும் மானுடவியலாளர்கள் இணைய டேட்டிங் தளங்களில் புகுந்து மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆகவே சமூகம் முன்வைக்கும் கற்பிதங்களை ஒதுக்கிவிட்டு, விலங்குகள் பற்றிய அறிவியலை மட்டும் வைத்துக்கொண்டு மனிதர்கள் எப்படி இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பேசிவிட முடியாது.
ஆண்-பெண் இருமைகள் விலங்குகளின் உலகில் எப்படியெல்லாம் இயங்குகின்றன என்பதில் இந்த இணைகவரும் வித்தை ஒரு சிறு உதாரணம். இந்த இருமைக்கு அப்பாற்பட்ட பால் பண்புகள், பாலின வெளிப்பாடுகள், பாலீர்ப்புகள் ஆகியவை விலங்குகளிடையே உண்டா?
தொடர்வோம்...
தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:
படைப்பு:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.