காலையில் ப்ரைம் டைம். தொலைகாட்சியில் ஒருவர் பரபரப்பாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.
பாலியல் வழக்கு – அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறுகிறாள். ஆனாலும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தப்பித்துவிட்டார்கள். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சுடச்சுடச் செய்தி பரிமாற்றம் நடந்த வண்ணமே இருந்தது அன்று முழுவதும்.
அந்தச் செய்தியைச் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கடந்து சென்றனர்.
‘வீட்ல படிக்கவிட்டா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும். கண்டவனோட ஊர் சுத்துனா இப்படித்தான் நடக்கும்.’
‘பொம்பளைப் பிள்ளையை ஒழுக்கமா வளர்க்கணும்.’
‘அப்படியென்ன அரிப்பெடுத்து அவனோட போச்சோ?’
‘அவ எல்லாம் தெரிஞ்சுதான் போயிருக்கா.’
‘பசங்க சும்மா இருந்தாலும் இவளுக விடமாட்டாளுங்க.’
‘வீடியோ நல்ல க்லாரிட்டியோட வெளி வந்திருக்கலாம்…’
‘இதெல்லாம் பார்த்தா பெண்களைப் படிக்கவோ வேலைக்கு அனுப்பவோ பயமா இருக்கு.’
இப்படிப் பல குரல்களுக்கு இடையில், ‘அந்தப் பொண்ணு பாவம்… என்ன நினைச்சுப் போயிருப்பா? அவ இப்போ எப்படி இருக்கா? அவள் இதிலிருந்து மீண்டு வரவேண்டும்’ என்பது போன்ற குரல்கள் மெலிதாக ஒலித்து அடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கதறல், சமூகத்தின் இரைச்சலில் கேட்கவே இல்லை.
இச்சம்பவத்திற்குப் பிறகு கேள்விக் கணைகள் அவளைத் துளைக்க, அவள் மௌனமாகவே வாழப் பழகினாள். சமூகம் ஓரிரு விமர்சனங்களில் அவளின் துயரத்தைக் கடந்து சென்றது.
மெடூசா, அரக்னே, டேஃப்னே போல் பாவத்தின் சின்னங்களாக மாற்றப்பட்ட பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். நம் தொல் இதிகாசங்களிலும் இருக்கிறார்கள்.
அகலிகையின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்தக் கதையை நான் பதிமூன்று வயதிருக்கும் போது தொலைகாட்சியில் பார்த்தேன். சீதை, திரௌபதி, தமயந்தி போன்ற பெண்களின் கதைகளை ஏதேதோ காரணங்களுக்காக ஏற்க முடிந்த என்னால் அகலிகையை ஏற்க முடியவில்லை. அகலிகை என் மனச்சுவரில் அமிலம் ஊற்றிக் கொண்டே இருந்தாள். இப்பிழையிலிருந்து அவள் தப்ப, என்ன செய்திருக்கக் கூடும் என்று பல வருடம் சிந்தனை செய்திருந்தேன். அவள் செய்ய ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், அவளின் மௌனத்தை வாசிக்கத் தொடங்கினேன். அவளின் ஊடாகக் கதை வாசிக்கப்படவே இல்லை என்பது புரிந்தது.
பேரழகி அகலிகையின் மேல் இந்திரனுக்குப் பேராவல் உருவானது. அதனால் கௌதம முனிவரின் உருவத்தில் அவளை அணுகி, அகலிகையைப் புணருகிறான். தன் கணவன் என்று நம்பிய அகலிகை மறுப்புக் கூறாமல் இணங்குகிறாள். மறுப்புக் கூறும் வாய்ப்பு பெண்களுக்கு இல்லை என்பது தனிக்கதை. இந்திரனால் ஏமாற்றப்படுகிறாள் அகலிகை.
இந்திரனின் சூழ்ச்சியை அறிந்த கௌதமர், அகலிகையைக் கல்லாய் போ என்று சபிக்கிறார். ஆயிரம் பெண் குறிகள் உன் உடலில் தோன்றட்டும் என்று இந்திரனுக்குச் சாபம் அளிக்கிறார்.
அகலிகை அவரிடம் சாப விமோசனம் வேண்டி கதறி அழுகிறாள். ராமனின் பாதம் பட்டால் சாபம் நீங்கும் என்று விமோசனம் அளிக்கிறார்.
தவறிழைத்தது இந்திரன். ஆனால் தவறிழைக்காத அகலிகை ஏன் தண்டிக்கப்படுகிறாள் என்கிற கேள்வி ஒலிக்கும் முன்னரே, இந்திரன் என்று அகலிகை தெரிந்தே புணர்ந்தாள் என்று பின்வந்தவர்கள் மீள்வாசிப்பு செய்கிறார்கள்.
ராமனின் கால்பட்டு, அகலிகை பெண்ணாக மாறிய தருணம், ராமன் விசுவாமித்திரரிடம் சில கேள்விகள் கேட்கிறான். தவறிழைத்தது இந்திரனாக இருப்பினும், ஏன் அகலிகைக்குச் சாபமென்று. மனைவிக்குக் கணவனின் உடற்கூறுகள் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதை உணர மறந்த அகலிகை இந்திரனிடம் கற்பிழந்தாள். அதன்பொருட்டே அவளுக்குத் தண்டனை என்று கூறுகிறார்.
உண்மையில் அகலிகைக்குக் கணவன் உருவில் வந்தது இந்திரன் என்று தெரியுமா என்று யாருக்கும் தெரியாது. அவளின் கதையை எழுதிய வால்மிகியும், அதன் பின்னர் அதை மீளுருவாக்கம் செய்த அனைவருக்கும் மனதின் ஓரம் ஒரு குத்தல் இருந்திருக்க வேண்டும். அதன்பொருட்டே அகலிகை இந்திரன் என்று தெரிந்தே புணர்ந்தாள் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.
அகலிகை ஏமாற்றப்பட்டாளா? இச்சம்பவம் முடிந்து இந்திரன் என்று அறிந்தபோது, அவள் என்ன நினைத்தாள்? சாபம் பெற்றபோது அவள் என்ன நினைத்தாள்? ஒரு பாலியல் வன்கொடுமையை எப்படி கடந்து வந்தாள்? இப்படியெல்லாம் அவளுடைய கதையை யாரும் மீளாய்வு செய்யவில்லை. கௌதமரின் சாபத்தை ஏற்றாள். விமோசனம் வேண்டி அழுது புலம்புகிறாள். ராமன் பாதம் பட்டு பெண்ணாக மாறினாள். இப்படித்தான் அவள் வாசிக்கப்பட்டாள்.
தவறிழைத்தது இந்திரனாக இருப்பினும், முழுப்பழியை அவளே ஏற்றுக்கொண்டாள் என்பதே கதையின் மையம். தன் உடலின் மேல் அவள் அருவருத்தது இச்சம்பவத்திலிருந்து நம்மால் உணர முடிகிறது. அவளின் கதையை மீளாய்வு செய்த ஆண்கள் மேலெல்லாம் சிறிது கோபம் வருகிறது. தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டவளை இறுதியில் ஒழுக்கம் கெட்டவளுக்கு இது நடந்தால் தவறில்லை என்கிற பொதுபுத்தியோடு அவளைக் கைவிட்டது எவ்வகையில் நியாயம்? கதைதானே, கடந்து போ என்று சொல்லும் சமூகத்திற்கு, ‘கதையில்கூட நியாயம் பழகாத சமூகமாக இருப்பதால் மாற்றங்கள் நிகழப் போவதில்லை’ என்பது விளங்குமா? ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று ஆணுக்குச் சொல்லிக் கொடுக்காமல் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் இருந்திருக்கிறது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பல அகலிகைகள் விசாரிக்கப்படாமல், இன்றும் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதில் மாற்றமில்லை.
இந்திரனுக்கும் சாபம் கொடுக்கப்பட்டதே? அவனும் தண்டனை அனுபவித்தானே என்று கதை சொல்லலாம். ஆனால் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையே பெண்ணினத்திற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையாகவே பார்க்க வேண்டும். ஏனெனில் இழிக்காரியம் புரிந்த இந்திரனை இழிவு செய்ய ஆயிரம் பெண் குறிகள் உடலில் தோன்றுவதே தண்டனை. அதாவது தண்டனையின் அடிப்படையிலேயே பெண்ணின் உடல் ஓர் அவமானக் குறியீடாகக் கருதப்படுகிறது.
பெண்ணின் பிறப்புறுப்பைக் கொண்டு ஒருவரை இழிவுபடுத்தும் வழக்கம் இன்றும் சமூகத்தில் தொடர்கிறது. அதனால் அகலிகையின் கதை வெறும் ஒரு புராணக் கதையாக மட்டும் இல்லை. பெண்களின் உடல், பாலியல் மற்றும் ஒழுக்கத்தைச் சுற்றி சமூகத்தில் உருவாக்கப்பட்ட அவமானக் கருத்துகளின் வரலாற்றுச் சான்றாகவும் அது நிற்கிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட இந்தக் கதையிலும், பெண்ணின் உடலை இழிவின் அடையாளமாகக் காணும் மனப்பான்மை தெரிகிறது. அதனால்தான் அகலிகையின் கதையைப் படிக்கும்போது, அவள் மீது நிகழ்ந்த அநீதியோடு சேர்ந்து, அந்தக் கதையை உருவாக்கிய சமூகத்தின் பார்வையையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.
தேவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திரன் சாபம் நீங்குகிறான். ஆனால் பல ஆண்டுகள் அகலிகை கல்லாகவே இருக்கிறாள்.
இந்தக் கதையில் இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை ஒப்புக்கு அளிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. மெடூசாவை வன்புணர்ந்த பொசைடனுக்கும் அகலிகையைப் புணர்ந்த இந்திரனுக்கும் பெரும் வித்தியாசங்கள் ஏதுமில்லை. கதையின் முடிவில் அவர்களுக்குப் பாதிப்புகள் ஏதுமில்லை. இருவரும் கடவுளர்களாவே இருக்கிறார்கள். ஆனால் கதையின் முடிவில் மெடூசா அரக்கியாகிறாள். அகலிகை கல்லாகிறாள்.
அகலிகை ஒழுக்கம் துறந்தவள் என்று சாடும் சமூகம், பாண்டு மற்றும் திருதிராஷ்டிரனின் பிறப்பை ஏற்றுக் கொண்டது எப்படி என்பது குழப்பமாக இருக்கிறது.
குலவாரிசு வேண்டுமென்று அம்பிகா மற்றும் அம்பாலிகாவை வியாசருடன் புணர வைத்த காரணம் விளங்கவேயில்லை. நீதி நூல்கள் அனுமதிக்கிறது என்னும் காரணம் மட்டுமே போதுமானதாக இல்லை. பல புராணக் கதைகளின் அடியோட்டத்தில், ஆண்களின் தவறுகளை நியாயப்படுத்தவோ, அவர்களின் செயல்களுக்கு அறம் சார்ந்த விளக்கங்களை வழங்கவோ முயலும் ஒரு பார்வை உள்ளுறைந்திருப்பது போலத் தோன்றுகிறது.
அகலிகை மற்றும் மெடூசாவின் கதைகளை நாம் வால்மிகி மற்றும் ஓவிட் மூலம் கேட்டுக் கொண்டே இருக்கும்வரையில் பெண்கள் அனைவரும் கதையின் துணைப் பாத்திரங்களாகவே வந்துபோவார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அகலிகையும் மெடூசாவும் கதை சொல்லிகளானால் இந்நிலை மாறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் சமூகம் அவர்கள் மௌனத்தை மட்டுமே விரும்புகிறது.
இது பாலியல் வன்கொடுமைக்கு மட்டும் பொருந்தாது. பல புராணத் தலைவிகளைக் கொண்டாடும் நாம், அவர்களின் பல துயரங்களை மௌனமாக கடந்து போகிறோம்.
நிடத நாட்டு மன்னன் நளன் மற்றும் விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தி ஆகியோர் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே, ஓர் அன்னப் பறவையின் மூலம் தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டனர்.
அவளின் தந்தை சுயம்வரம் ஒன்றை அறிவித்தார். அதில் தேவர்களும் கலந்து கொள்கின்றனர். தமயந்தி நளனை விரும்புவதை அறிந்த தேவர்கள், நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வருகின்றனர். அதில் நளனை அடையாளம் கண்டுகொள்கிறாள் தமயந்தி. பின் அவனின் கரம் பற்றுகிறாள். அதைப் பொறுக்க முடியாத சனி அவர்களைப் பிரிக்க நினைக்கிறான்.
பல சூழ்ச்சிகளைச் செய்த சனி இறுதியில் ஒரு சூழ்நிலையில் நளனைப் பிடித்துக்கொள்கிறான். புட்கரன் என்பவன் நளனைச் சூதாட அழைக்கிறான். சூதாட்டத்தில் செல்வம் மற்றும் நாட்டை இழந்த நளன், காட்டிற்குச் செல்கிறான். தமயந்தியும் அவனோடு கானகம் செல்கிறாள். இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு நளனோடு காடு புகுந்தாள் தமயந்தி.
காட்டில் அவர்களின் துயரங்கள் தொடர்கின்றன. பஞ்சு மெத்தையில் வீணையின் இசை கேட்டு சுகமாக இருந்தவர்களுக்கு, காட்டில் முள்தரையில் உறங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இருவரும் சேர்ந்தே சங்கடங்களை அனுபவித்தனர். ஆனால் தமயந்தியின் துயரங்களைக் கண்டு அவள் உறங்கும்போது, அவளைத் தனியே விட்டுச் செல்கிறான் நளன்.
நளன் ஏன் அப்படிச் செய்தான் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. தன்னால் காதல் மனைவி துயருறுகிறாளே என்றும், தன்னைப் பிடித்திருக்கும் சனி அவளை விட்டொழிக்க, மனவருத்தத்தோடு பிரிகிறான் என்று கூறுகிறார்கள். ஆனால் தமயந்தியின் நிலையிலிருந்து பார்த்தால், பல கேள்விகள் உதிக்கின்றன.
அடர் காட்டில் உறங்கும் மனைவியை, எந்தவிதப் பாதுகாப்புமின்றி தனித்துவிட்டுச் செல்வதில் ஏதேனும் நியாயம் இருக்க முடியுமா?
நளனை மையப்பாத்திரமாகக் கொண்டு புனையப்பட்ட கதையை ஒருமுறை தமயந்தியின் வாயிலாக மீளுருவாக்கம் செய்வோமா?
அன்னப்பறவையால் ஒருவரை இன்னொருவர் பார்க்காமலே காதலில் விழுகின்றனர். அதன்பிறகு சுயம்வரத்தில் தமயந்தி நளனை அடையாளம் கண்டு மணந்துகொள்கிறாள். தேவர்களை எதிர்த்து, தனக்குப் பிடித்த ஒருவனைக் கரம்பற்றினாள். நளனோடு இல்லறம் நல்லறமாகவே சென்றது. நளன் அவளிடம் ஆலோசனை கேட்காமல் சூதாடுகிறான். நாட்டையும் செல்வத்தையும் இழந்து நின்றபோதும், அவனோடு உடன் நின்றாள். கானகம் புகுந்து அவனோடு அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கிறாள். மீண்டும் அவளிடம் ஆலோசனை கேட்காமல் தமயந்தியைத் தனியே தவிக்க விடுகிறான் நளன். அதன்பின் அவள் பல இன்னல்களைக் கடந்து பிழைத்து நாடு வந்து சேர்கிறாள். மீண்டும் கணவனைத் தேடிக் கண்டறிகிறாள். அவனைத் திருமணம் செய்து கொண்ட தருணம் முதல், அவள் உறுதியோடு பயணிக்கிறாள். பொறுப்புகளில் இருந்து ஓடவில்லை. நளனின் துயரத்தைப் பதிவு செய்த கதைகள், தமயந்தியின் உறுதியை எங்குமே பதிவு செய்யவில்லை. அவளை நளனின் காதல் கிழத்தியாக மட்டுமே நினைவுகூர்கிறது.
நாம் இதுவரை பார்த்த மீநாயகர்களின் கதைகளில், நாயகிகள் பல சமயங்களில் மௌனிகளாகவே வருகின்றனர். பெண்ணோடு மௌனத்தையும், மௌனத்தோடு சம்மதத்தையும் இணைசேர்ப்பது நம் மரபு.
ஆனால் எல்லா மௌனங்களும் சம்மதத்தைப் பதிவு செய்வதில்லை. பல மௌனங்கள் விரக்தியையும், இயலாமையையும், சொல்ல முடியாத வலியையும் பதிவு செய்கின்றன. சில நேரம் அவை எதிர்ப்பின் வடிவமாகவும் இருக்கின்றன. அகலிகையின் மௌனம் அநீதிக்கு எதிரான மௌனம். தமயந்தியின் மௌனம் கைவிடப்பட்ட ஒருவரின் மௌனம். ஆனால் அந்த மௌனம் இரண்டும் சம்மதமாகவே வாசிக்கப்பட்டன.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட கதைகளும், இன்றையச் செய்திகளும் வெவ்வேறு காலங்களின் பதிவுகளாக இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண்களிடம் கேட்கப்படும் கேள்விகள் பெரிதாக மாறவில்லை.
“அவளுக்கு என்ன நடந்தது?” என்று கேட்பதற்கு முன், “அவள் என்ன செய்தாள்?” என்று கேட்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம்.
அதனால்தான் அகலிகை இன்னும் கல்லாகவே நிற்கிறாள். தமயந்தி இன்னும் காட்டில் தனியாக நடக்கிறாள். செய்தியில் வந்த அந்தப் பெண் இன்னும் சமூகத்தின் தீர்ப்புகளுக்கு நடுவே தனது வாழ்க்கையை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறாள்.
கதைகள் பழையவை. ஆனால், பெண்களின் மௌனத்தைச் சம்மதமாக வாசிக்கும் பழக்கம் இன்னும் பழையதாகவில்லை.
(தொடரும்)
படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.





