“சட்டி சுட்டதடா கை விட்டதடா, புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா” என்று “அடா அடா” என்று ஆணை முன்னிறுத்தி பாடல் எழுதினார் கண்ணதாசன். இது போன்ற உத்தியை அதிகமாகப் பயன்படுத்தியவர் கண்ணதாசன். இது போல பெண்களை முன்னிறுத்தி டி டி என்று எழுதிய பாடல்கள் இருக்கிறதா என்று பார்த்தால் தோழிகள் கூடி விளையாடுவது போல அல்லது பேசிக்கொள்வது போல அமைந்த பாடல்களில் ஓரிரண்டு இருக்கின்றன.
இது ஒரு கவிதை உத்தி. இந்த உத்தியை தமிழ் இலக்கணம் இயைபுத் தொடை என்று சொல்லும். அதாவது ஒவ்வொரு அடியிலும் கடைசி எழுத்தோ சொல்லோ ஒன்று போலவே வருவது. இது ஓசை ஒழுங்குக்காகப் பயன்படுத்தப்படும் உத்தி. ஓசை ஒன்று போலவே இருந்தால் அந்த கவிதையையோ பாடலையோ கேட்கும்போது செவிக்கு இனிமையாக இருக்கும். அதனால்தான் இந்த உத்தியைக் கவிஞர்கள் அதிகமாகப் பயன் படுத்துவார்கள். கண்ணதாசனும் பயன்படுத்தினார். “பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன்” என்ற பாடலும் “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ” என்ற பாடலும் இந்த ஓசை இன்பத்துக்காகவே இன்றய தலைமுறையினர் வரை ரசித்துக் கேட்கும் பாடல்களாக உள்ளன.
பாரதியார் தம் பாடல்களில் இயைபுத் தொடையைப் பயன்படுத்தியிருப்பார். இந்த உத்தி பண்டைய இலக்கியங்களில் காணப்படுகின்றனவா என்று பார்த்தால், பொதுவாக நாம் இயைபுத்தொடை என்று பேசினாலும் ‘டா, டா’ என்று ஆணை முன்னிறுத்தியது போல ‘டி, டி’ என்று பெண்ணை விளித்துப் பாடிய பாடல்கள் காணப்படவில்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால் கணவனைத் தவிர வேறு எவரும் பெண்களை ‘வாடி, போடி’ என்று அழைக்கும் மரபு அந்தக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அதே போல மனைவியும் கணவனை ‘டா’ என்று அழைக்கும் மரபு இல்லை. பொதுவாகப் பிற பெண்களை வயதுக்கொப்ப ‘பாப்பா, அக்கா, அத்தை, அம்மா’, என்று அழைப்பதே வழக்கமாக இருந்துள்ளது. உரிமையின் அடிப்படையில், “நீ சொல்லுக்கா, நீ சொல்லுமா”, என்று ஒருமையில் பேசினாலும், ‘டி’ என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள்.
தொடர்ந்து வரும் நாகரீக உலகில் மனைவியை கணவன் ‘டி’ என்று அழைப்பது போல கணவனை மனைவி என்று ‘டா’ என்று அழைக்கும் மாற்றமும் உரிமையும் சமத்துவமும் பெற்றுள்ளார்கள். இணைய கலாச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் வெகுவிரைவில் நட்பாகின்றனர். நட்பான அடுத்த சில நொடிகளிலேயே பெண் தோழியை ஆண் ‘வாடி, போடி’ என்று அழைப்பது நாகரீகம் என்பதைவிட அதுவே உண்மையான நட்பு என்று கருதக்கூடிய மனநிலைக்கு மாறியுள்ளனர். அப்படி அழைத்து தங்களுடைய நெருக்கத்தை காட்டிக்கொள்ள விரும்பும் ஆண்களாகப் பலர் இருப்பதைக் காண முடிகிறது.
வணக்கம் சொல்லும்போதும் ‘ஹாய் டி வணக்கம்’ என்று தேவையற்ற ஒரு ‘டி’ போடும் மனப்பான்மையும் ஆண்களிடம் காணப்படுகிறது. அதே போல ‘டி’ போட்டு அழைக்கும் ஆண்களைப் பிடித்து அதே உரிமையில் ‘டா’ போட்டு அழைக்கும் பெண்கள் சிலர். பிடிக்காமல் இவன் என்ன நம்மை ‘டி’ என்று அழைப்பது என்று கோபத்தால் ‘டா’ போட்டு அழைக்கும் பெண்கள் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இப்படியான ஆதிக்க மனப்பான்மை எங்கிருந்து வருகிறது? இப்படி பிற பெண்களை அன்பாகவோ அதிகாரமாகவோ ‘டி’ போட்ட ஆண்கள் இதற்கு முன்பு இருந்திருக்கின்றார்களா? இருந்திருந்தால் அவர்களைப் பெண்கள் எப்படி கையாண்டு இருக்கின்றார்கள் என்று பார்த்தால், மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!
கம்பரிடம் அவ்வளவு ஆணிய மனப்பாங்கு வருவதற்கு என்ன காரணம்? சோழ மன்னன் கம்பரை உச்சி மேல் வைத்துக் கொண்டாடினான் என்பது ஒன்று. பத்தாயிரம் பாடல்களை முத்தாக அள்ளித்தந்த சத்தான கவிஞர் என்பது மற்றொன்று. மூன்றாவது அவ்வையார் “பெரியாரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற புறநானூற்றை ஆழ்ந்து படித்தவள். சோழ மன்னன், கம்பரைப் பாராட்டும் போதெல்லாம் அந்த அவையில் எல்லோரும் மகிழ்ந்து பாராட்டுவார்கள். ஆனால் ஒளவையார் கம்பரைக் கண்டு வியக்க மாட்டார். பாராட்ட மாட்டார். ஒளவையின் இந்த அலட்சியப்போக்கு கம்பரை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கலாம். அந்த ஆத்திரமே மனதில் முள்ளாக வளர்கிறது. அந்த முள்ளே ஒரு நாள் ஒளவையை மரியாதை இன்றி ‘டி’ என்று பேச வைக்கிறது.
வேறு ஒரு காரணமும் இருந்திருக்கலாம். பெண்கள் தனித்து வாழாத அக்காலத்தில் ஒளவை தனித்து வாழ்ந்தார். கேட்க ஆள் இல்லாது தனித்து வாழும் ஒரு பெண். நம்மோடு போட்டி போடுகிறாளே என்ற ஆத்திரமாகவும் இருக்கலாம், அதனால் ஒளவையை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் நினைத்திருக்கலாம். ஒளவையிடம் கம்பர், “ஒற்றைக் காலடி நாலிலைப் பந்தலடி” என்று ஒரு புதிர் போடுகிறார். அதாவது ஆரைக்கீரை என்று ஒருவகைக் கீரை. அந்தக் கீரைக்கு ஒரு தண்டுதான் இருக்கும் நான்கு இலைகள் இருக்கும். அதைப் பற்றி புதிர் போடுகின்றார். ‘ஒற்றைக் கால் நாலிலைப் பந்தல்’ என்று கூறியிருந்தாலே போதுமானது. மனத்தில் ஒளவையை அவமதிக்க இது தக்க தருணம் என்று நினைத்து “ஒற்றைக் காலடி நாலிலைப் பந்தலடி” என்று புதிர் போட்டு விட்டார். இதுதான் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது என்பது.
அதற்கு ஒளவையின் பதில் எப்படி இருந்திருக்கும். இப்படி இருந்திருக்கிறது, பாருங்கள். “அவலட்சணமே, எருமையே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே யாரைப்பார்த்த டா சொன்னாய்? அது ஆரைக்கிரை டா” என்று பதில் தந்தார்.
“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.”
எட்டேகால் லட்சணமே என்றால் அவலட்சணமே
(தமிழ் எண்களின் வரிசையில் 8 க்கு ‘அ’, 1/4 க்கு ‘வ’ எட்டேகால் என்பது அவ என்று வரும்)
எமனேறும் பரியே என்றால் எருமையே
(எமன் ஏறி வரும் வாகனம் எருமை. எமனேறும் பரியே என்றால் ‘எருமையே’ எனப்பொருள் படும்)
மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் கழுதையே
(சின்னம்மை என்றால் திருமகள். பெரியம்மை என்றால் அவளது தமக்கை மூதேவி. மூதேவியின் வாகனம் கழுதை)
மேற்கூரையில்லாவீடே என்றால் குட்டிச்சுவரே
(மேற்கூரையில்லாத வீட்டைக் குட்டிச் சுவர் என்பது வழக்கம்)
‘குலராமன் தூதுவனே’ என்றால் குரங்கே
இராமனின் தூதுவன் அனுமன் (குரங்கு)
‘ஆரையடா சொன்னாயது’ யாரைப் பார்த்து டா சொன்னாய் என்பதும் ஆரைக்கிரையைத் தான டா சொன்னாய் என்றும் இரு பொருள் படும்.
‘டா’ என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை ‘டி’ என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
‘டி’ என்று கூறிய ஒரு மாக்கவிஞனை எதிர்த்து ‘டா’ என்று கூறும் அளவுக்குப் பெண்ணியச் சிந்தனையும் தன்மான உணர்வும் ஒளவையிடம் இருந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் ஒன்றுக்குப் பத்தாக வெவ்வேறு வார்த்தைகளாலும் வசை பாடி, ஆண் ஆதிக்கத்தைக் கடுமையாகச் சாடும் மன எழுச்சியும் ஒளவையிடம் இருந்தது. இந்தக் குரலே கல்வியில் சிறந்த ஆணை எதிர்த்து ஒலித்த முதல் பெண் குரல். ஆம், ஆணாதிக்கத்திற்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்புக் குரல் ஒளவையுடையது.
அவ்வை என்ற பெயரே கல்வியையும், முதுமையையும் அடிப்படையாகக் கொண்டது என்பர். தமக்கு நிகராகக் கவி புனையும் ஒரு பெண்ணை இழிவு செய்ய நினைத்தது என்பது கம்பரின் ஆணாதிக்க மனநிலை. அந்த மனநிலையை எதிர்த்த முதல் பெண் குரல் ஒளவையின் குரல். ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில் நினைத்தே பார்க்க முடியாத அளவில் மனத்தில் உறுதியோடு அச்சமின்றி வாழ்ந்த முதல் பெண் போராளி ஒளவை.
ஆகவே ‘டி’ போட்டு ஒருமையில் அழைப்பவர் யார்? என்ன நோக்கம்? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன என்பதை எல்லாம் பார்த்துதான் அதை ஏற்பதா எதிர்ப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ‘டி’ என்பது ஆணவத்தின் அல்லது அதிகாரத்தின் குரலாக இருப்பதை ஒரு போதும் ஏற்கக் கூடாது.
கணவனாகவோ காதலனாகவோ இருந்தாலும் ‘வாடி, போடி’ என்று பெண்களை அழைப்பது நாகரித்தில் இன்னும் கற்காலத்தில் இருப்பதைக் காட்டும் குறியீடு. பெண்ணடிமைச் சமூகத்தின் அடையாள வார்த்தை பெண்களை ‘டி’ என்பது!
கட்டுரையாளர்:
ஆதிரா முல்லை
பேராசிரியராகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வரும் இவர் குமுதம் குழும இதழிலும் தினமலர், தினமணி முதலான நாளிதழ்களிலும் வலைத்தளங்களிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆய்வு, பதிப்பு உட்பட பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார். அறம் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் இலக்கிய அமைப்பின் செயலாளரான இவர் பல்துறையிலும் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பெண்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகின்றார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், பாரதியார் சங்கம் முதையவற்றில் இணைச் செயலாளராகவும் வளரி கவிதை இதழின் முதன்மை ஆசிரியராகவும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் வலைத்தளத்தின் தலைமை நடத்துநராகவும் இருக்கும் இவர் ஆதிரா முல்லை என்னும் பெயரில் யூ டியூப் சேனல் வைத்து அதிலும் தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி பொதுவெளிக்குக் கொடுத்து வருகின்றார்.
ஆணாதிக்க சிந்னைக்கு அருமையான சவுக்கடி உதாரணம்