குழந்தை வளர்ப்பு என்பது தற்போது உள்ள பெற்றோர்களுக்குச் சவாலான ஒன்று. குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புதுப் புது கோணங்களில் கேள்வி கேட்கிறார்கள், அவர்களிடம் பதில் சொல்லாமல் தப்பிப்பது அவ்வளவு எளிது அல்ல. பதில் சொல்வதற்கான காலத்தை நீட்டிக்க முடியுமே தவிர பதில் சொல்வதில் இருந்து விலக்கு பெற முடியாது .

“ஐ லவ் யூ மதி குட்டி, செழி குட்டி” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் இருவரும் சிரித்தனர். “ஐ லவ் யூ டூ அம்மா என்று சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் சொல்லாமல் மறுபடியும் சிரித்தனர். எதற்கு இப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் சொன்ன பதில் சற்று வித்தியாசமானதாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.

“அம்மா, கல்யாணம் பண்ணப் போறவங்கதான் அப்படிச் சொல்லுவாங்க. நம்ம அப்படிச் சொல்லக் கூடாது” என்றார்கள். “அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நமக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளைப் பிடித்திருந்தால்கூட ‘ஐ லவ் திஸ’ என்று சொல்லலாம். எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும் அதனாலதான் நான் சொன்னேன். உங்க மேல எனக்கு அவ்வளவு அன்பு” என்றேன். என் குழந்தைகள் நான்கு வயதிலும் ஆறு வயதிலும் புரிந்து கொண்ட அதீத கற்பனையின் பிம்பத்தை நான் என்னுடைய உயர்நிலை வகுப்பில் தெரிந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

‘ஐ லவ் யூ’ பயன்படுத்திய சூழலும் இப்படியான ஒரு பிம்பத்தைக் குழந்தைகளிடம் உருவாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்ததாக, ‘ஹார்ட் சிம்பல்’ என்று விரல்களைப் பயன்படுத்தி ‘ஹார்ட்’ உருவத்தை வடிவமைத்துக்கொள்வது. நானும் திரைப்படங்களில் பார்த்தது உண்டு. நாங்கள் சென்ற சுற்றுலாவில் படம் எடுக்கத் தயாரான போது செழியன், ஹார்ட் சிம்பலைத் தன் கைவிரல்களால் உருவகப்படுத்தி போஸ் கொடுத்தான். எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தாலும், “இது என்னது செழியன்” என்றேன். “அம்மா, இது தெரியாதா? இதுதான் ஹார்ட்” என்று சொன்னான். “அப்படினா என்ன” என்றேன். அதற்கு அவன், “ஐ லவ் யூ என்று அர்த்தம்” என்றான்.

என் பள்ளிப் பருவம் முதல் என் குழந்தையின் பள்ளிப் பருவம் நடந்து கொண்டிருக்கும் வரை “ஐ லவ் யூ” பற்றிய புரிதலும் கருத்தாக்கமும் பெரிதாக மாறவே இல்லை. சினிமாவிலும் “ஐ லவ் யூ” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் சூழல் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயோ அல்லது திருமணம் ஆனவர்களுக்கு இடையேயோ அல்லது பதின் பருவ இளவல்களுக்கிடையேயோ மட்டுமே பிரயோகிப்படுத்துவதற்கான சூழல் என்பது இன்று வரை பெரிதாக மாறவே இல்லை. ‘ஐ லவ் யூ அம்மா’, ‘ஐ லவ் யூ அப்பா’ என்றெல்லாம் இப்போதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

குழந்தைகளிடம் இது போன்ற உரையாடல்களை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றிய கவலையே வேண்டாம். அதைக் குழந்தைகளே பார்த்துக்கொள்வார்கள். அதற்கான பதிலை நாம் எப்படிக் கொடுக்கப் போகிறோம் என்பதுதான் சவாலாக இருக்கும்.

எப்பொழுதுமே வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது ‘துப்பட்டா போடுவது’ என் வழக்கம். ஒரு சில நேரம் மறப்பதும் உண்டு. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை, எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், நான் மறந்தாலும் செழியன் மறப்பதில்லை. வீட்டைப் பூட்டும்போது, “அம்மா நீ ஷால் போடல, மறந்துட்டே” என்று சொல்வான். ‘சரி இருக்கட்டும்’ என்பேன். முதல் தடவை சொல்லும் போது எனக்கு அது ஒரு விஷயமாகத் தெரியவில்லை. போகப்போக நான் எப்போது மறந்தாலும் அதை அவன் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான். அவன் பார்வையில் துப்பட்டா போடாதது ஒருவேளை தப்பு என்று தோன்றுகிறதோ என்ற எண்ணம் வந்தது.

ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது, “துப்பட்டா போடுவதும்

போடாததும் என்னுடைய விருப்பம். எனக்குப் போடணும்னு தோணுச்சுன்னா நான் போடுவேன், இல்லாட்டி வேண்டாம். இது ஒரு தப்பு இல்ல. இது அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்” என்று அவனிடம் கூறினேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.