உணவு பரிமாறிக்கொண்டிருக்கும்போது, “நீங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு குண்டு குண்டுனு ஆகிடணும் சரியா?” என்றேன்.

“நான் குண்டாக மாட்டேன்” என்றான் செழியன்.

“எதுக்குச் செழியன் அப்படி சொல்ற?”

“எல்லாரும் எங்கள பார்த்துச் சிரிக்கவா?”

இவனுடைய இந்தப் பதிலுக்கு நானும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். அவன் படிக்கும் வகுப்பில் ஒருவனை, ‘குண்டு தக்காளி’ என்று அழைப்பார்களாம். சொல்லும்போதே செழியனுக்குச் சிரிப்பு!

ஏனென்றால், அவன் குண்டாக இருப்பானாம்.

“செழியன் அப்படிச் சொல்லக் கூடாது. உன்னை யாராவது அப்படிச் சொன்னா உனக்குக் கஷ்டமா இருக்குமா? சந்தோஷமா இருக்குமா?”

“கஷ்டமாதான் இருக்கும்.”

“அப்படின்னா நீ அடுத்தவர்களின் மனம் கஷ்டப்படும்படி பேசக் கூடாது.”

“அம்மா, அவன் ஒன்னும் சொல்ல மாட்டான். நான் குண்டு தக்காளின்னு சொன்னா, அவன் என்னைக் கிச்சு கிச்சு காட்டுவான்” என்றான்.

“அம்மா, நான் அப்படிச் சொல்ல மாட்டேன்” என்றான் மதி.

நானும் சில நேரத்தில் என்னுடைய நட்பு வட்டம்,

தெரிந்தவர்களிடம் பேசும்போது எனக்கு, “தொப்பை வச்சிருச்சு, நான் குண்டாகிட்டேன். இனிமே வாக்கிங் போகணும்” என்று சொல்லும் போது, அந்தக் குழந்தையும் அதைக் கவனித்துக்கொண்டிருக்கும் தானே!

ஒரு குழந்தையின் மனதில் ‘குண்டு ஆகிட்டோம்’ என்ற வார்த்தைப் பல பரிமாணங்களில் சற்று மதிப்பு குறைவாகவே எண்ணப்படுகிறது.

குண்டாக இருக்கும் குழந்தைகளிடம் சொல்லுங்கள், யாரும் கிண்டல் செய்து சிரித்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறது என்று சொல்லுமாறு அறிவுறுத்துங்கள்.

இவன்/இவள் மனதில் ‘என்ன இவ்வளவு குண்டா இருக்காங்க’ என்ற வார்த்தைகள் சமூகத்தில் உருவக்கேலிக்கு ஆளானவர்களின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியலாம்.

பொதுவாக உருவக்கேலி என்ற வார்த்தையின் பொருள் குண்டாக, ஒல்லியாக, குட்டையாக, நெட்டையாக, கறுப்பாக இருப்பது எனப் பல கோணங்களில் கூறப்படுகிறது.

இந்தக் குணாதிசயங்களுக்கு நாம் பொறுப்பானவர்கள் அல்ல, அதுபோல தாழ்வு மனப்பான்மைக்கு நாமும் நமது எண்ணங்களும்தாம் காரணமாக இருக்க முடியும். எனவே அந்த எண்ணத்தை அடித்து நொறுக்கி நமக்கான வளர்ச்சிப் பாதையில் பயணியுங்கள்.

உருவக்கேலி பற்றிய எண்ணங்களையும் அதை எதிர்கொள்ளும் மனதைரியத்தையும் குழந்தைகளிடம் சொல்லித்தர முயற்சி செய்யுங்கள்.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் உருவக்கேலி குறித்துப் பள்ளிப் பாடத்தில் சேர்ப்பதற்கான முன்னெடுப்பு வரவேற்புக்குரியது.

மலையாளத்தில் பேசும்போது குண்டாக இருப்பதை, “நாங்கள் எல்லாரும் நல்ல வண்ணத்தில் இருக்கின்னோம்” என்ற வார்த்தை நேர்மறை பொருளில் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஏனென்றால் வார்த்தையைப் பேசும் கோணங்களில் அதன் நேர்மறையும் எதிர்மறையும் பொதிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

குறிப்பாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட்டுக்குக் கூட கிண்டல் (உருவக் கேலி) செய்யாதீர்கள். மற்ற குழந்தைகளுடனும் ஒப்பீடு செய்யாதீர்கள். அது சிறுவயதிலேயே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோருக்கு எந்த அளவுக்குப் பொறுப்புணர்ச்சியும் கடமையும் உள்ளதோ அதைவிட அதிகமாகவே ஆசிரியர்களுக்கும் பங்கு இருக்கிறது.

குழந்தைகள் பெற்றோரிடம் செலவழிக்கும் நேரத்தைவிட ஆசிரியர்களுடன் பயணப்படும் நேரம் அதிகம்.

கற்பிக்கும் ஆசிரியர், மாணவனின் சிந்தனைத் திறனைத் தூண்டி, பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் துணை நின்று, மாணவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிஞர்களாக உருவாக்க வழிவகை காண வேண்டும். ஆய்ந்து அறியும் அறிவுசார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் வல்லவர்களாக இருத்தல் வேண்டும்.

ஆசிரியர்களால் குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்த முடியும்.குழந்தைகளை கதை சொல்ல பழக்கப்படுத்துங்கள். அவர்களின் கற்பனைத்திறன் விசாலமடையும். அவர்களைப் பேச அனுமதியுங்கள். சரியோ தவறோ அவர்கள் பேசும் மழலை மொழியைப் பொறுமையுடன் கேட்டுப் பாராட்டுங்கள். கேள்வி கேட்பதை ஊக்குவியுங்கள்.

வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளின் முன் தைரியமாகப் பேசப் பழக்கப்படுத்துங்கள். அதற்கான அடித்தளத்தை ஆசிரியர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.

திருக்குறளைப்படி என்று குழந்தைகளை வற்புறுத்துவதைவிட, திருவள்ளுவர் என்ற ஆளுமையை அறிமுகப்படுத்துங்கள். அவர் கூறிய கருத்துகள் எக்காலத்துக்கும் ஏற்புடையவையாக இருக்கின்றன என்பதை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். அனைவருக்கும் புரியும் மொழியில் மேம்பட்ட கருத்துகளை அதுவும் இரண்டு அடியில் இவ்வளவு எளிமையாக எப்படி எழுத முடிந்திருக்கிறது!இது போன்ற கேள்விகள் அவர்களை திருக்குறளின்பால் ஈர்க்கும். திருவள்ளுவரைப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்.

வெறுமனே 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்துவிட்டு, பெருமையாகப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. திருக்குறளை வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது திருக்குறளின் மகத்துவமும் திருவள்ளுவரின் பெருமையும் !

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.