சில ஆண்கள் பெரும்பாலான பெண்கள் அணியும் உடையன நைட்டியைக் குறித்துக் கேலி பேசி, சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகள் இடுவதற்காகக் கொந்தளித்து, அதன் சாதக பாதகங்களை நான் இங்கே விவாதிக்க முனையவில்லை. மறுபடி மறுபடி இதுபோல் தினுசு தினுசாக வேண்டுமென்றே இவர்கள் இங்கே கொண்டுவந்து கொட்டும் இதுபோன்ற வக்கிரங்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால், நைட்டி என்பது என்னவோ ஒரு கவர்ச்சி உடை அல்லது ஆபாச உடை என்கிற ரீதியில் பெண்களே பதிவுகள் இடுவதையும் பல பெண்கள் அதற்கு ஒத்து ஊதுவதையும் பார்க்கும்போது, இப்படி ஒரு பதிவு அவசியம் என்றே தோன்றுகிறது.

ஏதோ ஒரு வசதிக்காக நைட்டி அணியும் பெண்களை மட்டம்தட்டுகிறோம் என்பதை நம் பெண்கள்கூட உணரவில்லையே என வருத்தமாக இருக்கிறது.

முன்பெல்லாம் இந்த உடையை மேக்ஸி என்று சொல்லிக் கொண்டிருந்ததாகத்தான் நினைவு. இதை இரவில் மட்டுமே அணிய வேண்டும் என்கிற கற்பிதத்தில் இவ்வுடை நைட்டி என்று மருவிவிட்டது என்றே தோன்றுகிறது. காரணம், இது நம் கலாச்சாரத்துக்குப் பொருந்தாத உடை, அவ்வளவுதான்! ஆனால், 40+ பெண்களுக்கு நைட்டி ஓர் அத்தியாவசிய உடையாகக் கருதுகிறேன்.

வசதியான உடை

மாதவிடாய், வெள்ளைப்படுதல் என 24×7 பெண்களுக்கு ஏதாவது ஓர் அசௌகரியம் இருந்துகொண்டுதானே இருக்கிறது. ஓரிரு பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு இருமல், சளி, தும்மல் போன்ற நேரத்தில் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிவிடும் பிரச்னையும் பலருக்கு இருக்கிறதுதானே? அப்போது அவசரத்துக்குக் கழிவறையை உபயோகிக்க நைட்டி அளவுக்கு லகுவான உடை வேறேதும் இருக்க முடியுமா?

சட்டென மாற்றிக்கொள்ள, துவைக்க இது மிகவும் வசதியான உடைதான். இங்கே கிண்டல் பேசும் ஆண்கள் யாருக்கேனும் பெற்ற தாயின் / மனைவியின் குருதி படிந்த / சிறுநீரால் நனைந்த உடையை அசூயை இன்றி அலசிப்போடும் மனப்பக்குவம் இருக்கிறதா?

பிள்ளைகளைப் பிரசவித்து அவர்களுக்குப் பாலூட்டும்போது பச்சிளங் குழந்தைகளின் மல, மூத்திரத்தால் மடி நனைகையில் இந்த நைட்டி அளவுக்கு வசதியான உடை வேறு இருக்க முடியுமா? இத்தகைய உபாதைகளுடன் வீட்டு வேலையும் பார்க்கும்போது, சீரியல்களில் வரும் நாயகியர் போல டிசைனர் புடவையும் முழு ஒப்பனையுமாகவா வலம்வர முடியும்?

பெண்கள் அழுக்கு உடையுடன் இருப்பதற்கான காரணம் நாள் முழுவதும் அவர்களை ஓய்வின்றி வைத்திருக்கும் வீட்டுவேலைகளே அன்றி வேரில்லை. நைட்டி என்றில்லை, வேலை செய்யும்போது உடுத்தும் புடவையும்கூட இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து உபயோகித்தால் பிசுக்கு பிடித்துப் போகும். வெங்காயம் நறுக்கினால் போதுமே, அந்த உடையை மாற்றும் வரை அதன் வாடை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்காதா?

புடவையோ அல்லது எந்த ஓர் உடையோ, வெளியிடங்களுக்குச் செல்லும் போது பொருத்தமாக,  திருத்தமாக, அழகாக, நளினமாக அவரவர் விருப்பத்திற்கு அணியவேண்டியது அவசியமே, மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், ஒரு பெண் அவளது வீட்டிலிருக்கும்போது, அவள் அணியும் உடை அவளது சௌகரியத்துக்கு அணிந்துகொள்வதில் தவறென்ன இருக்கிறது? இல்லை, அவசர வேலைக்காக அதே உடையுடன் வெளியில் செல்வதில்தான் குற்றமென்ன?

வீட்டிற்குத் திடீர் விருந்தினர்கள் வந்தாலோ அல்லது வெளியாட்கள் யாரேனும் வந்தாலோ, நைட்டியுடன் அவர்களை எதிர்கொள்ளச் சங்கடமாக உணர்ந்தால், அது நைட்டி ஓர் ஆபாச உடை என இந்தச் சமுதாயம் நம்மை நம்பவைத்திருக்கும் கற்பிதத்தால் உண்டாகும் மனச்சுமை மட்டுமே!

இன்னும் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் போய் தெரிந்தவர் யாரிடமாவது விசாரித்துப் பார்த்தால் தெரியும், நம் பாட்டியின் பாட்டிகளுக்கெல்லாம் ரவிக்கை என்பதே ஒரு நாகரிக ஆடைதான் என்று!

இப்படி ஓர் உடை அதிகம் புழக்கத்தில் இல்லாததால் சென்ற தலைமுறை பெண்கள் வாயில் புடவையின் வசதியில் வாழ்ந்தார்கள். புடவையைச் சொருக வசதியென்று உள்பாவாடையை வயிற்றில் இறுகக் கட்டிக் கட்டி, பதிந்துபோய் பள்ளமான கருத்தத் தடங்கள்தாம் அவர்களின் வீரத் தழும்புகள்.

வெயில் காலங்களில் பாவாடை நாடா பதிந்து புண்ணாகி, வியர்வையில் ஊறிப்போய் அவை கொடுக்கும் எரிச்சலை உணர்ந்தவர்களுக்கு, இதைப் பற்றி அதிக விளக்கம் தேவையில்லை.

புடவையைத் தவிர வேறு உடை அணிய மாட்டேன் எனக் கொள்கையுடன் வாழ்ந்த பெண்மணிகள்கூட வயோதிகத்தில் நைட்டியின் துணை நாடுகிறார்கள்.

புடவை அணியும்போது ஆங்காங்கே தெரியும் இடைவெளியில் வக்கிரமாகக் கண்களை மேயவிடும் ஆண்களுக்கும் இதைப் பண்பாடு கலாச்சாரத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கும் கும்பலுக்கும் மட்டுமே நைட்டி ஓர் அசிங்கமான, ஆபாச உடையாகத் தோன்றுமோ என்னவோ!

எளிதாகப் பளிச்சென்று வெளியிடங்களுக்கும்கூட அணிந்து செல்ல ஏதுவாக லாங் ஃபிராக் மாடல் டிசைனர் மேக்ஸிகள் (நைட்டிகள்) புழக்கத்தில் வந்துவிட்டன. துண்டை துப்பட்டா போல் பெண்கள் அணிகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு… மார்பகங்கள் மட்டுமல்ல, பிரசவத்தினாலோ வயது காரணமாகவோ பெருத்துப் போய்விட்ட வயிற்றையும் சேர்த்துத்தான் சொல்கிறேன், தங்கள் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள அங்கங்களின்பால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை, குற்ற உணர்ச்சியை விட்டொழித்தால் குளிக்கும்போது உபயோகிக்கும் (Bath Towels) துண்டுகளை நைட்டிக்கு மேலாக்காகப் பயன்படுத்த வேண்டிய அவசியமற்றுப் போகும்.

இங்கே மூட வேண்டியது மாதர் தம்மைக் கேலி பேசும் மூடர் வாயை மட்டுமே!

படைப்பாளர்:

கிருஷ்ணப்ரியா நாராயண். தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர்.  8 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன. வாசித்தலில் அதிக ஆர்வம் உண்டு