பெருந்தொற்று காலத்தில் வீட்டில் முடங்கிய போதுதான், நம்மைச்சுற்றி அன்றாடம் நடப்பவற்றைக் கூடுதல் கவனத்துடன் பார்க்கத் தொடங்கினேன். சென்ற வருடம் கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக, பல  திருமண விழாக்கள் குறைவான அழைப்புகள் தரப்பட்டு, சுருக்கமான நிகழ்வுகளுடன் நடந்தேறின.

இப்பொழுது  தளர்வுகள் ஏற்பட்ட பின்னர், இன்னும் கூடுதல் வேகத்துடன் திருமண விழாக்களின் பிரம்மாண்டங்கள் அரங்கேறுகின்றன. அவரவர் குடும்ப நிகழ்வு. மற்றவர் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று நாம் கடந்து போக முடியாது.  அவரவர் பொருளாதாரத் தகுதிநிலைக்கு ஏற்றவாறு தான் செலவழிக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் தங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் செலவு செய்கின்றனர்.

பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணங்கள் என்றால், அநேகமாக திருமண மண்டபம், உணவு ஏற்பாடு வரை மணமகன் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பெண்வீட்டார்தான் முழுச்செலவையும் செய்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக, இருவீட்டாரும் திருமணச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும் செய்திகளைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், அது மிகவும் குறைந்த எண்ணிக்கைதான்.

வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.

பொருளாதாரச் சுமை என்பதைத் தாண்டி, இவ்வளவு சீரும் சிறப்புமாக நடந்தேறிய திருமணங்களில் ஒரு ஆறு மாதத்திற்குப் பின்னர் அல்லது ஒரு வருடத்திற்கு பின்னர் திரும்பிப் பார்த்தால், சுமுகமாகச் செல்லும் திருமண வாழ்க்கை பாதி தம்பதியினருக்கு வாய்த்திருந்தால் அதிகம். பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றாலும், நான் குறிப்பிட்ட இரு அம்சங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன். மண்டபத்தின் ஆடம்பர அலங்காரங்களுக்கும், உடைகளுக்கும், உணவு ஏற்பாடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். Pre wedding shooting என்பது சமீபமாக பலலட்சம் செலவு பிடிக்கும் துறையாக மாறி வருகிறது.

மணமக்களை மனரீதியாக, உடல்ரீதியாகத் திருமண வாழ்விற்கு தயார்படுத்தும் prewedding counselling centers உருவாக்கப்படுவதன் அவசியம் குறித்து இங்கு என் கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். புத்தாயிரக் குழந்தைகள்தான் இன்று திருமண வரன்கள். முந்தைய தலைமுறைக்கு இல்லாத இணையப் பயன்பாடு இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், அது அவர்களை இன்னும் தனித்தவர்களாக மாற்றியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். திருமண வாழ்க்கைப் பிரச்சினைகளால் விவாகரத்து கோரும் தம்பதியினர் மிக அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

தாம்பத்திய உறவு என்பதும் இன்னும் நம் குடும்ப அமைப்பில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத, ஆனால் தம்பதியினருக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் அடிப்படை அம்சம் ஆகும். அதில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படையாக விவாதிப்பதற்கான எந்த ஏற்பாடும் நமது குடும்ப அமைப்பில் இல்லை. திருமணம் செய்து வைத்துவிட்டு, இரண்டு மாதத்தில் ‘ஏதாவது விசேஷம் உண்டா’ என்று கேள்வி எழுப்பவும், பத்து மாதத்திற்குள் குழந்தை பெற்றுத்தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் மட்டுமே சமூகத்தில் நிலவுகிறது. அதைத்தாண்டி இருவருக்குமான ஒத்திசைவு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்து யாரும் வாயைத்திறப்பதே இல்லை.

 குடும்ப மருத்துவர் என்ற ஒரு அமைப்பு பல்லாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது. அதை நோக்கி நாம் இன்று கூடுதலாக நகர வேண்டும். இத்தனை லட்சங்கள் செலவழிக்கும்போது, உளவியல் சிக்கல்களை மனம்விட்டுப் பேசி, சரிசெய்து கொள்வதற்கான ஏற்பாடாக இது அமையும். வெவ்வேறு குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர்கள், குடும்பமாக இணையும்போது ஏற்படும் ஆரம்பகட்ட சிக்கல்களை அவ்வப்போது மனம்விட்டுப் பேசினால் சரிசெய்து விட முடியும். இதற்கு முன்மாதிரியான நபர்களாக யாரும் இல்லை.

எவ்வகையில் பிரச்சினை ஏற்பட்டாலும், இன்றும் பெண்கள் மீதுதான் குற்றம் சுமத்தப்படுகிறது. பெண்கள்தான் அனுசரித்துப் போக வேண்டும் என்ற தீர்ப்பு எதையும் ஆராயாமல் கூறப்படுகிறது. திருமண வாழ்வில் புதிய பொறுப்புகள் திடீரென சுமத்தப்படுவதால் கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாவது பெரும்பாலும் பெண்களே. குடும்பத்தினரிடம் வெளிப்படையாகப் பிரச்சினைகளை விவாதிக்கும் ஜனநாயக சிந்தனை இன்னும் நம் குடும்பங்களில் ஏற்படவில்லை.

Prewedding counselling centers  என்பது இப்பொழுது புதியதாகத் தோன்றலாம். காலத்தின் தேவை அது. குடும்ப வாழ்வின் அடிப்படை தம்பதியினருக்கிடையே ஏற்படும் இணக்கமான உறவுதான். அதை நோக்கி கூடுதல் கவனம் செலுத்துவோம்.

யோசிப்போம்...
தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரஞ்சனி பாசு

நூல் விமர்சகர்.