மனிதகுல வரலாற்றினை ஆழ்ந்து பயின்றால், என்றைக்குத் தனி உடைமை சிந்தனை உருவாகி, குடும்பம் என்ற அமைப்பு தோன்றியதோ, அன்றிலிருந்துதான் பெண் தன் சுதந்திர வாழ்வை இழந்து முடக்கப்பட்டாள் என்பது புரியும். செல்வமே மனிதனின் முதல் உடைமையானது. தனது வாரிசுக்கு மட்டுமே தன் செல்வம்/சொத்து கையளிக்கப்படவேண்டும் என்ற ஆணின் பிடிவாதத்தால், அவனை ஈனும் பெண் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டாள்.  அன்றிலிருந்து இன்று வரை, எத்தனையோ வாழ்வியல் மாற்றங்கள்  நடந்தேறியிருக்கின்றன, கல்வி, வேலைவாய்ப்பு என 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் புழங்கும் வெளி அதிகரித்து வந்தாலும், பெண்கள் மீதான கண்காணிப்பு வளையம் மென்மேலும் கடுமையாகியுள்ளது என்பது கசக்கும் உண்மை தான்.

கண்காணிப்பு வளையம் பற்றி பேசவேண்டும் என்றால் குடும்பத்தில் தொடங்கி, உறவினர், அண்டைவீட்டார், பணியிடம் என விரிந்து பல முனைகள் கண்முன்னே தெரிகின்றன. எனினும், காதலர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையில் காதலர்களை முன்வைத்தே பேசுகிறேன்.  எனது கல்லூரி காலத்தில் பழைய திரைப்படப் பாடல்களை சிலாகித்துப் பேசும் ஒரு ஆசிரியர், தான் மிகவும் விரும்பிய பாடலென்று இதைப் பகிர்ந்தார். காதலன் காதலியை நோக்கி கேள்வி எழுப்பி, அவள் பதில் சொல்வதான பாடல் இது.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

தனக்காக அவள் காத்திருக்கும் வேளையில், அவளிடம் வேறு யாரேனும் நெருங்கிப் பேசி விட்டாரோ என்று கவலையுற்று காதலன் கேட்க, காதலி பதில் சொல்வதாக அமைந்துள்ள பாடல் இது . எனக்கு கேட்ட பொழுதிலேயே சுளீரெனக் கோபம் வந்தது. அந்த வயதில் ஆசிரியருடன் இவ்வாறான விஷயத்தில் வாதம்செய்ய துணியவில்லை என்றாலும்கூட, என்னவொரு கயமைத்தனமான சிந்தனை என்று மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.

இந்தக் கயமைத்தனத்தை, சந்தேக புத்தியைத்தான் செல்லமாக உடைமைத்தனம் (possessiveness) என்று பொதுச்சமூகம் பூசி மெழுகுகிறது. 

என் காலத்தில் இருபாலர் பயிலும் கல்லூரியில் கூட, ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பேசிக்கொள்ளும் சூழல் பொதுவாக வளாகத்தில் இருந்ததில்லை. அப்பொழுதும் எல்லா கல்வி நிலையங்களிலும் காதலர்கள் உருவாகத்தான் செய்தனர்.

Photo by Plann on Unsplash

இன்றைய 2கே கிட்ஸ் நிலைமையே வேறு. 24*7 ஆன்ட்ராய்டு போன் வழியாக தொடர்பில் இருக்கிறார்கள்.  இன்று நாம் கேள்விப்படும் பிரச்னைகள் திடுக்கிட வைக்கின்றன. காதலியின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டு கூட காதலனிடம் இருக்கிறது. அவனது காதலியின் நண்பர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்கிறான். அவள் என்ன முகப்புப் படம் வைக்க வேண்டும் என்பதையும், எந்த பதிவு பப்ளிக், எந்த பதிவு பிரைவேட் என்பதையும்கூட அவன்தான் தீர்மானிக்கிறான். அவள் எத்தனை மணிவரை இரவு ஆன்லைனில் இருக்க வேண்டும் என்பதைக்கூட கண்காணிக்கிறான். இது ஏதோ ஒரு ஜோடியின் பிரச்சினை அல்ல. மிகப் பரவலாகக் கேள்விப்படுகிறேன். என்ன நடக்கிறது இங்கு காதலின் பெயரால்?

காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல். இதற்கு மேலான காதல் பற்றிய விளக்கங்களுக்கோ, எது உண்மையான காதல் என்பது குறித்த விவாதங்களுக்கோ நான் போகவில்லை.

என் பிரியமான அடுத்த தலைமுறையே! பெண்களாகிய நீங்கள் இப்படி சிறகுகளைப் பெற எத்தனை ஆண்டுகள் எத்தனைபேர் இந்த சமூகத்தில் போராடியிருக்கின்றனர்; அதன் சுவடுகளாவது உங்களுக்குத் தெரியுமா?  காதலோ, திருமணவாழ்வோ உங்களுக்கான மிகச்சிறு வெளி ஒன்றை உங்களுக்கான அந்தரங்கமான இடமாக வைத்திருங்கள். ஆண்களாகிய நீங்கள், இந்தச் சமூகமும், குடும்ப அமைப்பும் காலம்காலமாக போதித்து வந்த ஆதி உடைமைச் சிந்தனையை விட்டு வெளியேறுவது என்பதை முதன்மைக் கடமையாக நினைத்து உதறித்தள்ளுங்கள்.

காதல் என்பது மனித வாழ்வின் அற்புதமான உணர்வு. அது எத்தனையோ உயிர்களை மகத்தான சாதனைகளைச் செய்ய வைத்திருக்கிறது. எத்தனையோ பேரை உருத்தெரியாமல் காணாமல் ஆக்கியிருக்கிறது. நீங்கள் காதலை என்னவாக உணர்கிறீர்களோ, எவ்வாறு கொண்டாடுகிறீர்களோ, பலமடங்கு அதைத் திரும்பப் பெறுவீர்கள்.

காதலர்தின நல்வாழ்த்துக்கள்!

யோசிப்போம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரஞ்சனி பாசு

நூல் விமர்சகர்.