எத்தனை பெண்விலங்குகளிடம் இணைசேர முடியுமோ அத்தனை பெண்விலங்குகளுடன் ஒரு குறுகிய இனப்பெருக்க காலத்திற்குள் ஆண்விலங்குகள் இணைசேர்ந்து மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும், குறைந்த அளவில் முட்டையிடும் பெண் விலங்குகள் ஆண்விலங்குகளின் பலத்தையும் தகுதியையும் தீவிரமாக ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதும்தான் பொதுவான சூழலியல் இயல்பாக இருக்கிறது. முட்டையை உருவாக்குவது, அடுத்த தலைமுறையை வளர்ப்பது ஆகிய செயல்பாடுகளுக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் பெண் விலங்குகளிடம் இந்தப் பண்பு உருவாகியிருப்பதாகப் பரிணாம அறிஞர்கள் கூறுகிறார்கள்.

எல்லா விதிக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு என்பதுபோல, விஞ்ஞானிகளையே குழப்பியடிக்கிறது தாமரைக் கோழி /தாமரை இலைக்கோழி (Jacana) என்ற நீர்ப்பறவை இனம்.

கள ஆய்வுகளில் இந்தப் பறவைகளை கவனித்த பறவையியலாளர்கள், நெடுங்காலம் வரை ஆண் பறவை எது, பெண் பறவை எது என்பதையே தவறாகத்தான் புரிந்து வைத்திருந்திருக்கிறார்கள்! முட்டையை அடைகாக்கும் பறவைகளைப் பெண் பறவைகள் என்றும், தேடித் தேடி இணைசேரும் பறவைகளை ஆண் பறவைகள் என்றும் புரிந்துகொண்டார்கள். பறவைகளைப் பக்கத்தில் போய் கவனித்ததும்தான் உண்மை புரிந்திருக்கிறது.

 உலகில் காணப்படும் எட்டு வகை தாமரைக்கோழிகளில், 6 தாமரைக்கோழி இனங்களில், பல ஆண்பறவைகளுடன் பெண்பறவைகள் இணைசேரும் Polyandry முறை பின்பற்றப்படுகிறது. அது மட்டுமில்லாமல், பெரும்பாலான இனங்களில், முட்டையிடுவது மட்டுமே பெண் பறவையின் வேலை. முட்டைகளை அடைகாப்பது தொடங்கி குஞ்சுகளை வளர்த்தெடுப்பது வரை எல்லாமே ஆண் பறவைகளின் வேலைதான்!

முட்டைகளைப் பாதுகாப்பதற்கான கூடுகளைக் கட்டிவிட்டு ஆண்பறவைகள் காத்திருக்கின்றன. பெண்பறவை, ஆண்பறவையுடன் இணைசேர்ந்துவிட்டு, பிடித்த கூட்டில் முட்டையிட்டுவிட்டுக் கிளம்பிவிடும். முட்டைகளை அடைகாத்துப் பாதுகாப்பது ஆண்பறவைகளின் வேலை. குஞ்சுகள் வளர்ந்தபிறகு அவற்றைப் பாதுகாப்பாக ஏந்திச் செல்வதற்கு ஆண்பறவைகளின் சிறகில் கூடுதல் தகவமைப்புகளும்கூட உண்டாம்!

பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.

முட்டைகளையும் குஞ்சுகளையும் கவனிப்பதில் பெண் பறவைகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்றும் ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. கூட்டுக்கு அருகில் பெண் பறவை நின்றுகொண்டிருக்கும்போது, எதிரிகள் வரும்போது முதலில் மூர்க்கமாகத் தாக்கி விரட்டுவது பெண் பறவைதான்! ஏனென்றால் பல தாமரைக்கோழி இனங்களில் பெண் பறவைகள் ஆண்பறவைகளை விட 60% பெரியவை, மூர்க்கமான, தாக்கும் குணம் கொண்டவை, எளிதில் கோபப்படும் பண்பு கொண்டவை.

குழந்தை வளர்ப்பு என்ற பெரும் பொறுப்பிலிருந்து விடுபட்டுவிட்ட பெண் பறவைகள், இனப்பெருக்க காலத்திற்குள் எத்தனை ஆண் பறவைகளுடன் இணைசேர முடியும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு முறை இணைசேரும்போதும் முட்டைகளை இடுகின்றன. ஏற்கனவே முட்டைகளை கவனித்துக்கொண்டிருக்கும் ஆண் பறவைகள் என்றால், அந்த முட்டைகளை அழித்துவிட்டு  அந்த ஆணுடன் இணைசேரும் பெண் தாமரைக்கோழிகளும் சில இனங்களில் உண்டு! “இனப்பெருக்க காலத்தின்போது ஒரு பெண் தாமரைக்கோழி, முட்டையிடும் இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறது” என்கிறார் சூழலியலாளர் ஸ்டீஃபன் எம்லர்.

பல ஆண்விலங்குகளுடன் பெண்விலங்குகள் இணைசேரும் polyandry முறை 1% பறவையினங்களிலும், தேனீ உட்பட சில பூச்சி இனங்களிலும் வேறு சில உயிரிகளிலும் காணப்படுகிறது. இந்தப் பண்பு உள்ள இனங்களில் எல்லாம், ஆண் விலங்குகளே பெரும்பாலும் குழந்தை வளர்ப்பை ஏற்று செய்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ஆண் விலங்குகளுக்குக் குட்டிகளை வளர்க்கும் பண்பு உருவாகாவிட்டால் polyandry நிலைக்காது என்றுகூட ஒரு கருதுகோள் உண்டு. குட்டிக்குப் பாலூட்டவேண்டிய கட்டாயம் இருப்பதால் பாலூட்டிகளில் இது அவ்வளவாகக் காணப்படுவதில்லை என்கிறார்கள் பரிணாமவியல் வல்லுநர்கள்.

Polyandry பண்பு கொண்ட விலங்குகளில், மரபணுக் கலப்பு அதிகம் ஏற்படுவதால் மரபணு வீரியம், பொதுவான உடல்நலம், நோய் எதிர்ப்பு சக்தி, மரபணுப் பல்வகைமை ஆகியவை அதிகரிக்கின்றன. அந்த இனத்தின் பொதுவான நலனும் கூடுகிறது. இதில் ஒரு சில இனங்களில், பெண் விலங்குகளுக்கு, உயிரணுக்களை சேமித்து வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளும் அம்சமும் உண்டு. இது Sperm storage mechanism என்று அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு இனத்தின் நலனை, பிழைப்பு விகிதத்தை அதிகப்படுத்துகிறது. 

தாமரைக்கோழிகளுக்கும் இந்த நன்மைகள் எல்லாமே கிடைக்கும் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அம்சம் விஞ்ஞானிகளைத் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.

Polyandry பண்பு கொண்ட விலங்குகளில், ஒவ்வொருமுறை இணைசேரும்போதும் பெண் விலங்குகள் கருவுறுவதில்லை. பொதுவான போட்டியை அதிகரித்து மரபணுப் பல்வகைமையைப் பெருக்கிக்கொள்ளவே இந்தப் பண்பு உதவுகிறது. ஆனால் தாமரைக்கோழிகளிலோ, ஒவ்வொரு முறை இணைசேரும்போதும் பெண்பறவை முட்டையிடுகிறது. 

முதலைகள் உள்ளிட்ட பல நீர்வாழ் விலங்குகள் முட்டைகளைத் தின்றுவிடுவதால் தப்பிப்பிழைக்கும் சந்ததியின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் தாமரைக்கோழிகள் தொடர்ந்து முட்டையிடுகின்றன என்று பரிணாம வல்லுநர்கள் வாதிடுகிறார்கள். அது தர்க்க ரீதியாக சரிதான் என்றாலும், கருமுட்டைகளை உருவாக்குவது, கருவுறுவது, முட்டையிடுவது ஆகியவை கடுமையான ஆற்றலைக் கோரும் செயல்பாடுகள். கூடியவரையில் ஆற்றலை சேமிக்கும் வழியையே எப்போதும் இயற்கை தேர்ந்தெடுக்கும் எனும்போது, முட்டையிடும் இயந்திரமாகப் பெண்பறவை சோர்ந்துபோகும் அம்சம் எப்படி பரிணாமத்துக்குள் புகுந்திருக்கும்?

ஏதோ ஒருவகையில் இது தாமரைக்கோழிகளுக்கு உதவுகிறது என்பதால் அது என்ன பயன் என்று தெரிந்துகொள்ளும் மும்முரத்தில் பலர் களம் இறங்கியிருக்கிறார்கள்.  முட்டையிடுவதில் உள்ள ஆற்றல் விரயம் மற்றும் கூடுதல் முட்டைகளால் வரும் பயன்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு விஞ்ஞானிகள் சிக்கலான கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். “அவர்கள்  கண்டுபிடிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்தப் பண்பு இல்லாவிட்டால் தாமரைக்கோழி இனம் எப்போதோ அழிந்திருக்கும்!” என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். இந்த சண்டைகளை அறியாத தாமரைக்கோழிகள் தன்பாட்டுக்கு நீர்வாழ் பூக்களின் இலைகளின்மீது தத்தி விளையாடிக்கொண்டிருக்கின்றன.

விலங்குகளின் உலகில் பால் பண்புகள் எப்படியெல்லாம் இயங்குகின்றன என்று புரிந்துகொள்ளும் பயணத்தில் நெடுந்தூரம் வந்துவிட்டோம். பயணித்த பாதையைத் திரும்பிப் பார்த்து நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? 

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.