இன்று பிப்ரவரி 14. வி டே! காதலர் தினமாக இந்த நாள் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதே நாளை 2011ம் ஆண்டு முதல் உலகெங்கும் உள்ள ஒரு பில்லியன் பெண்கள் வி-டேயின் பகுதியாக, ‘ஒன் பில்லியன் ரைசிங்’ விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஈவ் என்ஸ்லர். 1998ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று நியூ யார்க் நகரில் ‘தி வஜைனா மோனோலாக்ஸ்’ என்ற மோனோலாகை (நீண்ட தனிப்பாடல், தன் நடிப்பு/வாசிப்பு) நிகழ்த்தினார். இந்த நிகழ்வை நடத்த, கிட்டத்தட்ட 200 பெண்களை ஈவ் பேட்டி கண்டார். இந்தப் பெண்களை அதிகம் பாதித்த வசனங்கள் என்னவெனக் கேட்டறிந்தார். பெண் என்பதால் சமூகத்தில் ஒடுக்கத்தையும், வன்முறையையும் சந்தித்த பெண்கள் மனம் திறந்து ஈவிடம் பேசினார்கள்; தன்னைப் போன்ற மற்ற பெண்களை அடையாளம் காட்டி, அவர்களிடமும் பேசப் பணித்தார்கள்.

வஜைனா மோனோலாக்ஸ் போஸ்டர்

இதன் விளைவாக, பாலியல், பாலியல் தொழில், உடல் பற்றிய புரிதல், பாலியல் வன்கொடுமை, பெண் பிறப்புறுப்பு சிதைப்பு, பிள்ளைப்பேறு, மாதவிடாய், சுய இன்பம், உச்சம் என பல விஷயங்களை இந்தப் பெண்கள் கட்டுடைத்துப் பேசினார்கள். இந்த மோனோலாகில் பல காட்சிகள் நடத்தப்பட்டன. ‘ஹேர்’ என்ற காட்சியில் தன் பாலுறுப்பிலிருந்த முடியை நீக்க மறுத்த பெண் ஒருவர், கணவர் இதைக் காரணமாகக் காட்டி தன்னை விவாகரத்து செய்ததை விவரித்தார்.

‘மை வஜைனா வாஸ் மை வில்லேஜ்’ காட்சியில் போஸ்னியா நாட்டில் ‘ரேப் கேம்ப்ஸ்’ஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் தங்கள் கதைகளை விவரித்தனர். ‘பிகாஸ் ஹி லைக்ட் டு லுக் அட் இட்’ காட்சியில், தன் பாலுறுப்பை அசிங்கமானது என நம்பிக்கொண்டிருந்த பெண் ஒருவர், அதை ஆண் ஒருவர் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்ததைக் கொண்டு, தன் எண்ணத்தை மாற்றியதை விவரித்தார்.

ஈவ் என்ஸ்லர்

வஜைனா மோனோலாக்ஸ் பெருவெற்றி கண்டது. அந்த பத்தாண்டின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகக் கொண்டாடப்பட்டது. இதை உலகம் முழுக்க ஒரு ‘இயக்கமாக’ தொடங்கும் ஆவல் கொண்ட ஈவ், 2012ம் ஆண்டு முதல் ‘ஒன் பில்லியன் ரைசிங்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்கும் உள்ள 200 நாடுகளில் பெண்களை ஒன்றிணைத்தார். இப்பெண்கள் ஆன்லைன் நிகழ்வுகள் மூலம் தங்கள் பிரச்னைகளை கலைவடிவத்தில் மக்களிடம் முன்வைக்கத் தொடங்கினர். உலகெங்கும் மூன்றில் ஒரு பெண் பாலியல் உள்ளிட்ட பிற வன்முறைகளுக்கு ஆளாகிறாள். அதைக் கணக்கிட்டால் ஒரு பில்லியன் பெண்கள் பாதிப்படைகிறார்கள் எனத் தெரியவருகிறது.

2014ம் ஆண்டு தில்லி சென்ட்ரல் பார்க்கில் நடந்த ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சி

உலகெங்கும் பெண் வெறுப்பு, துன்புறுத்தலுக்கு எதிரான பெரும் இயக்கமாக ‘ஒன் பில்லியன் ரைசிங்‘ உருப்பெற்றது. 2012ம் ஆண்டே இந்தியாவில் இயக்கம் வலுப்பெற்றது. டெல்லி நிர்பயாவின் வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியில், இசைக் கலைஞர் அனுஷ்கா ஷங்கர் தான் அனுபவித்த பாலியல் சுரண்டலை வி-டே நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டார். 2014ம் ஆண்டு நடிகர் அமீர் கான் இந்த இயக்கத்துக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். 2022ம் ஆண்டு ‘அனைத்துப் பெண்கள், சிறுமிகள் மற்றும் உலகைக் காப்பாற்ற’ ஒன்றிணையுங்கள் என பெண்களுக்கு ஒன் பில்லியன் ரைசிங் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. உலகெங்கும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு மும்பை சஹஸ் ஃபவுண்டேஷன் பெண்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை ஜூம் வழி நடத்துகிறது. ‘செலிப்ரேட்டிங்க் ஃபெமினிஸ்ட் ரெசிஸ்டன்ஸ்’ நிகழ்வு இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பாகிறது. ஒன்றிணைவோம். பெண்கள் மீதான வன்முறையை எதிர்ப்போம்.