‘தி லாஸ்ட் லீஃப்’ (The Last Leaf) என்றொரு ஆங்கிலச் சிறுகதை உண்டு. ஆதர்ச எழுத்தாளர் ஓ.ஹென்றியின் கதை அது. ‘கிஃப்ட் ஆஃப் தி மஜை’ (Gift of the Magi) தொடங்கி பல்வேறு ஹென்றி கதைகள் ஒரு திடுக் திருப்பத்துடன் தான் முடியும். அதை ‘ஓ.ஹென்றித்தனமான ட்விஸ்ட்’ என்று அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார். 1907ம் ஆண்டு எழுதப்பட்ட தி லாஸ்ட் லீஃப் கதை வாழ்க்கை முழுக்க தோல்வியையே சந்தித்த முதிய ஓவியருக்கும் சாகும் தருவாயிலுள்ள இளம் பெண் ஓவியர் ஒருவருக்கும் இடையேயான நட்பைச் சொல்லும் கதை.
பெர்மன் என்ற முதிய ஓவியர் தன் ‘மாஸ்டர் பீசை’ வரைவதற்காக காலம் முழுக்கக் காத்திருக்கிறார். அவரது அறைக்கு அருகே சூ என்ற இளம் பெண் ஓவியர் தங்கியிருக்கிறாள். ஏழ்மையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களில்லை. நிமோனியா அவர்கள் வாழும் நகரை சூறையாடுகிறது. சூவையும் விட்டுவைக்கவில்லை. நிமோனியா காய்ச்சலில் விழும் சூ, தன் அறை சன்னலுக்கு வெளியே உள்ள சுவரில் படர்ந்திருக்கும் ஐவி கொடியின் கிளைகளிலுள்ள இலைகளை தினமும் பார்க்கிறாள். மழைக்காலம் முடிந்து இலையுதிர்காலம் தொடங்கும் சூழலில் கொடியின் இலைகள் ஒவ்வொன்றாக விழுகின்றன. அதை கவனிக்கும் சூ, அந்தக் கொடியின் இறுதி இலை வீழ்கையில் தானும் அந்த இலை போல பிடிமானமற்ற பெருவெளியில் காற்றில் கரைந்து போகப்போவதாக பெர்மனிடம் சொல்கிறாள்.
ஒவ்வொன்றாக இலைகள் உதிர்கின்றன. ஒற்றை இலை மட்டும் பிடிவாதமாக கொடியிலிருந்து விழ மறுக்கிறது. கடும் காற்றிலும், பனியிலும் கூட அது அசையவேயில்லை. சூவின் மனம் மாறுகிறது. அந்த இறுதி இலை பல நாள்களாக இப்படிப் பிடிவாதத்துடன் வாழ்க்கையைப் பற்றிகொண்டிருக்க தான் மட்டும் சாவதா என்ன என்று நினைக்கிறாள். மெல்ல உடல்நலம் தேர்ந்து தெளிவடைகிறாள்.
பெர்மனைக் காணவில்லை. எங்கே என்று விசாரிக்கிறாள். ஒப்பற்ற அந்தக் கலைஞன் அவளுக்காக அந்தச் சுவரில் கடைசி இலையை வரைந்திருக்கிறான். குளிரில் நின்று அதை வரைந்ததில் நிமோனியா கண்டு இறந்தும் போயிருக்கிறான். உலகம் கண்டுகொள்ளாத அந்த அற்புதக் கலைஞனின் கடைசி இலை ஓவியம், ஒரு இளம்பெண்ணின் உயிரைக் காத்து, வாழும் துணிவை தந்திருக்கிறது என்று அந்தக் கதையை முடிப்பார் ஹென்றி. வாழ்க்கையில் ‘தோல்வியடைந்தவர்கள்’ என்று உலகம் சுட்டும் யாரைக் கண்டாலும் எனக்கு பெர்மனின் நினைவு தான் வரும். கூடவே அந்த கடைசி இலை ஓவியமும். உயிரோடு இருக்கும்வரை உலகம், ஏன் சூ கூட அங்கீகரிக்காத ஓவியன், மறைவுக்குப் பின் மாபெரும் ஓவியனாக நம் கண்முன் தெரிகிறான் இல்லையா? ஒற்றை இலைக்கு அத்தனை மகத்துவம்!
அதற்குப் புகழ் தேடித் தந்த நபர்- லாரி ஷாஃப் (Larry Schaaf) என்ற புகைப்பட ஆய்வாளர். அந்த இலை- மிகச் சாதாரணமாக இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் வளரும் பட்டர்கப் செடியின் இலை. அதில் என்ன ஸ்பெஷல்? உலகின் முதல் ஃபோட்டோ பேப்பரில் அச்சிடப்பட்ட புகைப்படம் அது; அதை எடுத்தவர் ஒரு பெண்!
பழம்பெரும் புகைப்பட ஆய்வாளர்கள் உலகின் முதல் ஃபோட்டோ பேப்பர் புகைப்படம் என்று ஹென்றி ஃபாக்ஸ் டால்பாட் என்பவர் 1839ம் ஆண்டு எடுத்த ‘ஓரியல் விண்டோ’ (Oriel Window) என்ற புகைப்படம் சுட்டப்படுவதுண்டு. இதை 1835ம் ஆண்டிலேயே அவர் தயாரித்துவிட்டார் என்றும் சொல்வோருண்டு. ஆனால் இந்தப் படங்களை அச்சிடுவதற்கான ‘போட்டோகிராஃபிக் பேப்பர்’, 1839ம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வந்தது என்பதால், ஓரியல் விண்டோ 1839ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 2015ம் ஆண்டுவரை ஓரியல் விண்டோ தான் உலகின் முதல் பேப்பர் படம் என்றும் , டால்பாட் தான் உலகில் முதன்முதலில் அதை எடுத்தவர் என்றும் ஆய்வாளர்கள் சொல்லிவந்தனர்.
இந்தக் கதைக்கு ஓ.ஹென்றித்தனமான ட்விஸ்ட் தந்தவர் லாரி ஷாஃப். 2008ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரபல சாத்பி ஏலக்கூடத்துக்கு விற்பனைக்கு வந்தது சில பழங்கால புகைப்படங்கள் கொண்ட ஆல்பம் ஒன்று. ‘க்விலான் கலெக்ஷன்’ (Quillan Collection) என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஏழு படங்களும் டால்பாட்டின் படங்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் டால்பாட் படங்களை பல காலமாக ஆய்வு செய்துவரும் லாரியிடம் சாத்பிஸ் அனுப்பியது. அவற்றைக் கண்டதும், ‘தி லீஃப்’ (Quillan Leaf) படம் டால்பாட் எடுத்தது இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டார் லாரி. ஏலம் நின்றுபோனது.
2008 முதல் அந்த இலைப் படத்தின் நகலைக் கையில் எடுத்துக் கொண்டு உலகம் முழுக்க தகவல்கள் திரட்டிவந்த லாரி, 2015ம் ஆண்டு அந்தப் படத்தை எடுத்தவர் சாரா ஆன் பிரைட்(Sarah Anne Bright) என்ற பெண் என்று உண்மையைப் போட்டுடைத்தார்! உலகின் முதல் பேப்பர் புகைப்படத்தை எடுத்தவர் ஒரு பெண்ணா? ஊடகங்கள் ஆடிப்போயின. நம்பவில்லை, அவரைத் துளைத்தெடுத்தன. டால்பாட் எடுத்த படங்களின் ஒப்பற்ற ஆய்வாளர் என்பதால் லாரியின் கூற்றை அவர்களால் மறுக்கவும் முடியவில்லை.
எப்படி இந்த அதிசயம் நடந்தது? தி லீஃப் படத்தை ஆய்வு செய்த லாரி, அதன் பின்பக்கம் பென்சிலால் ஆங்கிலத்தில் ‘WB’ (தெளிவான எழுத்து அல்ல, கையெழுத்து போன்ற கிறுக்கல் தான்) என எழுதப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்; கூடவே ஆங்கில N/W என்ற எழுத்துப் பொறிப்பும் அதில் இருந்தது. புகைப்பட பேப்பர் நிறுவனத்தின் முத்திரை என்றும் லாரி கருதினார். ஹென்றி பிரைட் என்ற இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் நகரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது குடும்பத்திலிருந்து இந்தப் புகைப்படம் வந்ததாக அடையாளம் காணப்பட்டது.
ஹென்றியின் தந்தை ரிச்சர்ட் ப்ரைட் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என்று கருதினார் லாரி. ஆனால் அந்தக் குடும்பத்தில் அவருக்குப் பின் மூன்று ஆண்கள், மூவருமே அறிவியலாளர்கள் என்பது இன்னும் குழப்பம் தந்தது. திடீரென படத்தின் உரிமையாளர், அதன் பின்பக்கம் சீல் ஒன்று காணக்கிடைக்கிறது என்று லாரிக்கு சொல்லியனுப்ப, சிறப்பு வெளிச்சத்தில் அதை ஆவணப்படுத்தினார் லாரி. அதில் ‘லங்காஸ்டர்/கிளிஃப்டன்’ என எழுதப்பட்டிருந்ததைக் கொண்டு கிளிஃப்டன் நகருக்கு பேப்பர் நிறுவனத்தைத் தேடிக்கிளம்பினார் லாரி.
ஒருவழியாக வில்லியம் வெஸ்ட் என்பவர் டால்பாட்டிடமிருந்து பேப்பர் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டு கிளிஃப்டனில் செய்து, அவரது அண்டை வீட்டுக்காரரான லங்காஸ்டர் மூலம் விற்பனை செய்துவந்ததை லாரி கண்டுபிடித்தார். 1839ம் ஆண்டு வெஸ்ட் தன் ஃபோட்டோ பேப்பரை பிரிஸ்டல் பகுதியில் விற்றது தெரியவர, ஹாம் கிரீன் ஹவுஸ் என்ற இடத்தில் வந்து நின்றது லாரியின் தேடல். அது ரிச்சர்ட் பிரைட் குடும்பம் வாழ்ந்த வீடு. ஆனால் புகைப்படம் எடுத்த நபர் யாரென்று லாரியால் இன்னும் நிச்சயமாக சொல்லமுடியவில்லை.
அதிர்ஷ்டம் ஒருவழியாக அவரை சாராவின் வாட்டர் கலர் ஓவியங்களிடம் இட்டுச் சென்றது. அவளது ஓவியங்களின் கீழ் அவள் SAB என ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்ததை கவனித்தார்! அவர் முதல் கண்ட WB இப்போது அவருக்கு SAB என தெளிவாகவே தெரிந்தது! சாரா 15 மார்ச் 1861 அன்று தன் ஓவியங்கள், ‘புகைப்படங்கள்’, மற்றும் பிற சொத்துக்களை தன் சகோதரர் ராபர்ட் பிரைட்டுக்கு எழுதித்தந்த பத்திரத்தைக் கண்டுபிடித்தார் லாரி! அப்படித்தான் படம் ராபர்ட்டிடம் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். உலகின் முதல் பேப்பர் புகைப்படத்தை எடுத்தவர் ஒரு பெண், அவர் பெயர் சாரா ஆன் பிரைட். உரக்கச் சொல்வோம்.
சாரா குறித்து இதுதவிர வேறெந்த தகவலும் லாரியால் திரட்ட முடியவில்லை. சாரா குறித்து மேலதிக தகவல்கள் கிடைத்தனவா, 2021ம் ஆண்டில் சாரா பற்றி இன்னும் எதுவும் அறியாமல் தான் இருக்கிறோமா எனக் கேட்டு அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் வரவும் இல்லை. (வந்தால் கட்டாயம் இங்கே அவரது பதிலை பதிவு செய்கிறேன்).
இன்று ஏன் இந்தப் பதிவு? இன்று உலகப் புகைப்பட தினம். 1839ம் ஆண்டு லூயி தாகுர் (Louis Daguerre) என்பவர் கண்டுபிடித்த ‘தாகுரோடைப்’ (Daguerreotype) வகை புகைப்படங்களின் செய்முறை எளிதாக, பொதுமக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் இத்தாலிய அரசால் கொண்டுவரப்பட்ட நாள் ஆகஸ்ட் 19! அதைத் தான் உலக புகைப்பட தினமாகக் கொண்டாடிவருகிறோம். உண்மையில் உலகின் சரிபாதி பெண்களுக்கு காமிராவை கையில் ஏந்தி படங்கள் எடுத்து ஆவணப்படுத்த வாய்ப்பு கிடைத்ததை பெண்களாகிய நாம் கொண்டாட வேண்டும் இல்லையா?
பணமும் செல்வாக்கும் இருந்ததால் மட்டுமே சாராவால் இந்தத் துறையில் நுழைய முடிந்தது. அப்படி நுழைந்து சாதித்தாலும், அவரது திறமையை, அந்த ஒற்றை இலையை உலகம் 175 ஆண்டுகளாக மறந்து/ மறைத்து வைத்திருந்தது.
பெண்ணின் சாதனைகள் எல்லாமே இப்படித்தான் ஆண்மைய உலகில் மறைந்து கிடக்கின்றன என்பதை சாரா படமெடுத்த ‘க்விலான் இலையை’ மையப்படுத்தி, அழகிய கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் ஃபின்லாந்துப் பெண் கவிஞர் ஜெரி ஸ்டூவர்ட் (Gerry Stewart). இந்தக் கவிதை சாராவுக்கு சமர்ப்பணம்.
சாரா ஆன் பிரைட்
மகள்…
தவிர வேறெதுவும் இல்லை.
அவளது பணக்கார தந்தை நிறுவனங்களை நிறுவினார்,
தொழில்சாரா அறிவியலாளரவர் .
அவள் தன் சகோதரர்களுக்கு ‘உதவி’ செய்தாள்
அவர்களின் அறிவியல் ஆய்வுகளில்…
ஆனால் குடும்ப ஆவணங்களிலும்
மறந்துபோன வாட்டர்கலர்களிலும் மட்டுமே
அவளது கதை 150 ஆண்டுகளாகப் புரட்டப்பட்டது.
ஏழு புகைப்படங்கள்,
கறை படிந்த வெள்ளி வரைபடங்கள்,
ஹார்ன்பீம் இலை மற்றும் விசைகள்,
ஒரு சுறா முட்டை பை
மற்றும் பிரிக்கப்பட்ட ஒரு இலை
இவை கட்டப்பட்டு விற்கப்பட்டன
அதிக ஏலதாரருக்கு.
முதலில் ஒரு ஆணுக்கு,
பின்னர் மற்றொரு ஆணுக்கு,
இறுதியாக ‘அடையாளம் தெரியாத புகைப்படக்காரருக்கு’
வரலாற்றாசிரியர்கள் கிறுக்கப்பட்டத்
தடயங்களைக் கண்டறிந்தார்கள்.
மணமாகவில்லை, குழந்தைகள் இல்லை,
அவள் ஒரு நிழலாக இருக்கிறாள்,
வெறும் முதலெழுத்துக்களின் தொகுப்பாக.
அவளுடைய ஒளியைத் துரத்துகிறோம்,
அது இல்லாததை மட்டுமே கைப்பற்றுகிறது.
அவளுடைய நிழல் ஓவியங்கள்
அவளுடைய உயிலில் நினைவுகூரப்பட்டன,
அவளுக்கு அவற்றின் முக்கியத்துவம் தெரியும்!
ஆங்கில மூலம் இங்கே
உலகின் கடைசி இலையாக இருந்தாலும், அதை வரைய பெர்மன் போல, லாரி போல, அதைப் படமெடுக்க சாரா போல யாரோ ஒருவர் வரக்கூடும்!உலக புகைப்பட நாள் வாழ்த்துகள், பெண்களே! பூட்டிய பெட்டிகளிலும், கிழிந்த காகிதங்களிலும் யாரோ ஒரு சாரா நம் வீட்டிலும் இருக்கலாம்…
***
நன்றி: லாரி ஷாஃப்
படைப்பாளரின் பிற படைப்பு வாசிக்க:
கட்டுரையாளர்:
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், வரலாற்றாளர்.
அருமையான கட்டுரை தோழர் ! உலகின் முதல் புகைப்படக் கலைஞர்- சாரா – என்ற உண்மையை உலகுக்கு உரைக்க, ஆவணப்படுத்த எத்தனை முயற்சிகள், ஆய்வுகள்… படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. அரிய தகவல்களுடன், பெண்ணின் வரலாற்றை, சாதனைகளை எடுத்துரைக்கும் உங்களும் நிறைய அன்பும் நன்றியும் !
நன்றியும் பேரன்பும் தோழர்…உண்மையைத் தேடிச் சொல்வோம்!