அடுக்களை டூ ஐ.நா.- 10

” பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே…. அலையாய் வந்து என்னை அடித்தாய்…ஒரு கடலாய் மாறி என்னை இழுத்தாய் , பல பதாகை தாங்கிய உன் முகம்  உன்முகம் என்றும் மறையாதே”, என பீல் ஆகி ஐ. நா. வைப் பிரிய மனமின்றி திரும்பித் திரும்பிப் பார்க்க, வைகை டேம் பார்த்துட்டு திரும்பிவர மறுத்து, கால்களை உதைத்து அழும் குழந்தையை, ‘சரி சரி,   நாளைக்கு மறுபடியும்  வரலாம் வா’ன்னு  சமாதானப்படுத்துவது போல,   இந்த பச்சப் புள்ளய (!)  எல்லாரும் சேர்ந்து ஏமாத்தி இழுத்துட்டு போனாங்க.

ஐநா தலைமையகத்திலிருந்து நாலரைக் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்துக்குப் போக 25 நிமிடங்களானது. நியூயார்க் பல்கலைக்கழகம்  அமெரிக்காவின் மிகப் பெரிய  தனியார் ஆய்வு பல்கலைக்கழகமாம். 1831 ஆம் ஆண்டே புள்ளைகளுக்கு படிப்புதான் முக்கியம்னு நினைச்ச  நியூயார்க்வாசிகளால், அப்போதய செக்ரட்டரி ஆப் ட்ரஷரியாக இருந்த ஆல்பர்ட் கெலட்டினை  நிறுவனராகக்  கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 230 ஏக்கர் பரப்பளவில் 171 கட்டிடங்களுடன் விரிந்து கிடக்கிறது.  இது தவிர மன்ஹட்டனுக்கும், ப்ரூக்ளினுக்கும் இடையில் 49 கட்டிடங்கள் இருக்காம்.  

நம்ம ஊர்ல டிபார்ட்மென்ட்னு சொல்வதைப் போல அங்க ஸ்கூல் ஆப் பிசினஸ், ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், ஸ்கூல் ஆப் மெடிசின்னு சொல்றாங்க ;  ஏகப்பட்ட துறைகள். நாங்கள் போனது அங்குள்ள கலாச்சாரம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை (ஸ்கூல் ஆப் கல்ச்சர், எஜுகேஷன் அன்ட் ஹியூமன் டெவலப்மென்ட்). 1890ல்  இந்தத் துறை ஆரம்பிக்கப்பட்டு  இன்றைக்கு நியூயார்க் யுனிவர்சிட்டியின் உயர்நிலை தாராளமய கலை மற்றும் கல்வித்துறையாக ( Secondary liberal arts and Education school on Network University)  இயங்குகிறதாம். உலகிலேயே இப்படி ஒரு துறை இங்க மட்டும் தான் இருக்காம்.   இவ்ளோ விஷயம் பெருமைப்பட்டுக்க இருந்தும் என்னா பிரயோசனம்? ஒரு   பிரமாண்ட போர்டு, ஒரு பேனர் வைச்சி  வெளம்பரப் படுத்த தெரியலியே?  NYU னு  ஒத்த கொடி பறக்குது அம்புட்டுதேங்.

எங்கூரு உசிலம்பட்டிக்கு வந்து பாருங்க, அத்தைமகனோட சகலப்பாடியோட மூணாவது பையனோட நாலாவது காதுகுத்துக்கே   ஊர மறிச்சி பனைமர ஒசரத்துக்கு எப்படி  பேனர் வைக்கறோம்னு நெனச்சிக்கிட்டேன்.

நாங்க போன ஏரியாவை சுருக்கமா எஜுகேஷன் ப்ளாக்னு சொல்றாங்க.  ஐநா வுல தவிச்ச வாய்க்குக்கூட தண்ணி தராம வெளியே அனுப்பியதால கிறுகிறுத்துப் போயிருந்த எல்லாரும், இங்க புரியாத வஸ்துக்களை கடிச்சிகிட்டே ஒரு அற்புதமான டீ  சாப்பிட, சப்ஜெக்டுகளுக்கு உயிர் வந்தது.

எங்களோட நிகழ்வு கல்வி சார் குறுக்குப் பண்பாட்டுப் படிப்பு ( cross cultural studies of education) பற்றியது. அங்குள்ள பேராசிரியர்களுடன் ஒரு சந்திப்பு, சின்ன லெக்சர் அவ்ளோ தான். ரொம்ப ஃபார்மலா இல்லாம, ஒருத்தரோடொருத்தர் பேசி , கல்வி தொடர்பான கலாச்சார பகிர்வு போல  –  கற்றல் கற்பித்தல்  சிக்கல்கள், கற்பித்தல் முறைகள், மாணவர் – ஆசிரியர் உறவு  என பழையமொந்தை செய்திகளை புதிய ஆள்களுடன்  கடலைபோட்டோம். மொத்தமே 45 நிமிடங்கள் தான். நாமளே நினைச்சாலும் ஒரு நிமிஷம்கூட வீணாக்க முடியாது.  

46 வது நிமிஷம்,  ஓடு ஓடு ஓடு….கட் பண்ணி க்ளோஸ் போனா –  ஹோட்டல் அஃபினா – அழகான  ரூஃப்டாப் –  விதவிதமான பெயர் தெரியாத உணவுவகைகள் – வெவ்வேறு நாடுகளின்  பலவிதமான  பானங்கள் (ஹாட் & கோல்டு தான்!) – கலர் கலராய் பழவகைகள்……உலகக் கல்வி அமைப்பு வழங்கும் வெல்கம் ரிசப்ஷன் . ஐநா தொடர்புடைய சகலரும் ஆஜர். எல்லாரும் விருந்தில் பிஸியாக, எனக்கு மட்டும் வழக்கம் போல ஒண்ணுமே பிடிக்கல. சாதத்தை பார்த்து நான்கு நாட்களாகி இருந்ததால், ரசம் சாதம் கொடுத்தால் தேவலாம் போல இருந்தது.  ரசம் என்ன சார் ரசம், துளியூண்டு விசம் சோத்துல போட்டுத் தந்தாலே தின்னலாம் போல இருந்தது.

கல்யாணமான புதுசுல செகண்ட் ஷோ சினிமாவுக்கு பட்டுச்சேலை, நகையுடன்  போன எய்ட்டீஸ் கிட்ஸ் போல, பார்ட்டிக்கு பொருந்தாமல்  பட்டுச்சேலையுடன் நான் சுற்றிக்கொண்டிருந்தது  எனக்கே  விநோதமாயிருந்தது. ஏனெனில் தொடர்ச்சியாக நிகழ்வுகள். ரூம் போக நேரமில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஜாகூர் தம்பியும் நானும் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். அவன் இன்னிக்கு பாகிஸ்தானியா இருந்தாலும், அவன் தாத்தா இந்தியர் தானே?  விட்டகுறை தொட்டகுறை அன்பு இன்னும் அவங்க மேல இருக்கத்தான செய்யுது?

சின்னப் பையன் தான். நீளமான தாடி, இறை நம்பிக்கை அதிகம். ஏன் இந்த சின்ன வயசில இவ்ளோ பெரிய தாடின்னு கேட்டதுக்கு ஒரு பெரிய லெக்சர் அடிச்சு கொட்டாவி வர வைச்சிட்டான்.  சசி மேம், “உன் போட்டோவைப் பார்த்ததும் உனக்கு நிச்சயம் விசா கிடைக்காதுன்னு நினைச்சேன். ஏனெனில் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு,  எல்லா இஸ்லாமியர்களையும் அல்கொய்தா போலவே பார்க்கிறாங்க”ன்னு அவனிடம் சொல்ல, அதுக்கும்  பிக்பாஸ் ஆரி போல அவன் லெக்சரைத் தொடங்க,  நாங்க ரெண்டு பேரும் எஸ்கேப்.

மாலையும் இரவும் ஹலோ சொல்லி கைகுலுக்கும் நேரமாதலால் , ரூஃப்-டாப்பிலிருந்து பார்க்க  நியூயார்க் நகரம் ஜொலித்தது. “வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகுமிடம் எல்லாமே  கூடக்கூட வந்தாய்” னு கமலும், ஜோதிகாவும் நகரமெங்கும் நடக்க, நகரமே ஸ்லோமோஷனில் நகர்வது போல இருந்தது. தூரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான எம்பயர் ஸ்டேட் கட்டிடம்  வசீகரித்து, “வா வா”  என்றது. பெரியாளுக  எல்லாருக்கும் ஒரு ஹலோ சொல்லி , புன்னகைத்து, அட்டென்டன்ஸ் போட்டு பார்ட்டி நாகரிகம் காத்தாச்சு. இனி  எப்ப பார்ட்டி முடியும்,  அவுட்டிங் போகலாம்னு மனசு துடிக்குது. நியூயார்க்கின் இரவு உலகம் கண்முன்னால் ஆசைகாட்டி இழுக்குது. 

உலகக் கல்வி அமைப்பின் தலைவர் சூசன் ஹாப்குட் , செயலாளர் ப்ரெட் வேன் லீவன் எல்லாம் எங்க கூட இருந்ததால, பார்ட்டிய பாதில கட் பண்ண முடியல. டி.இ.ஓ இன்ஸ்பெக்‌ஷனுக்கு முதல் நாள் அதுவரை நடத்திய பாடத்தையெல்லாம் பசங்களின்  மூளைக்குள் திணிக்க நினைக்கும் டீச்சர்ஸ் போல டென்சனுடன், எங்களை மறுநாள் நிகழ்வுக்கு உற்சாகப்படுத்தி டிப்ஸ் கொடுத்திட்டே இருந்தாங்க. எங்கே நாங்க சொதப்பிடுவோமோன்னு அவங்க டென்சன் அவங்களுக்கு. ஆனா நாங்க ஏழு பேரும் அதக் காதில வாங்காம,  லாஸ்ட் பென்ச் ராக்கர்ஸ்  போல அவங்கள லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிட்டு, வெளியே போகலாம்னு கண்ஜாடை காட்டிட்டே  இருந்தோம்.

ஒரு வழியா  எட்டு மணிக்கு பார்ட்டி முடிய, எனக்கு உடைமாற்ற 3 நிமிடம் தரப்பட்டது. சசி மேடம் தலைமையில் உள்ளூர்  மேரி கேதரினை கையில் பிடிச்சிக்கிட்டு,  “போவோமா ஊர்கோலம்”னு குஷ்புவை விட சந்தோசமா கிளம்பியாச்சு.

உலகப் புகழ் பெற்ற டைம் ஸ்கொயர், தங்கியிருந்த அஃபினா ஹோட்டலிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம். மேடிசன் அவென்யு வழியா வேக வேகமாக நடந்தே செவன்த் அவென்யூ போயிட்டோம். ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டு, கூகுள் பண்ணி, ஆனுவல் எக்ஸாம் போறமாதிரி  நோட்ஸ் எடுத்து, தியரியா மைண்ட்ல ஏத்தியிருந்தாலும்கூட ப்ராக்டிகலா நேரில் பார்க்கும் அனுபவம்…….அடடா….பார்க்கக் கண்கோடி, இல்லயில்ல கண் பில்லியன்  வேண்டும். அழகர் ஆத்துல இறங்குறத பார்க்கக் கூடுற கூட்டம் போல ரோடு முழுக்க ஜேஜேன்னு இருக்கு.   

42வது தெரு முதல் 47வது தெரு வரை விரிஞ்சு கிடக்கு டைம் ஸ்கொயர். உலகத்தின் இதயம் ( heart of the world) பிரபஞ்சத்தின் மையம்னு ( centre of the Universe ) பெருமை பேசப்படும் இந்த இடம்தான் உலகின் மிக பிஸியான பெடஸ்ட்ரியன் ஏரியாவாம். வருடத்திற்கு 50 மில்லியன் மக்கள், பிஸியான ஒரு நாளில் சுமார் 4.5 லட்சம் பேர் நடமாடக்கூடிய ஏரியாவாம். அம்மாடியோவ்! தொலைஞ்சு போயிடாம பத்திரமா ரூம் போகனுமேன்னு பயம் வந்திடிச்சு. சுற்றுலா கவர்ச்சிகள், கமர்சியல் பிஸினஸ் ஏரியா, பொழுதுபோக்குகள் என  மக்கள் கூடுவதற்கான அத்தனை காரணங்களும் ஒரே இடத்தில் இருந்தால், கூட்டம் வராம என்ன செய்யும்? தீபாவளிக்கு முந்தைய நாள் டி. நகர்  ரெங்கநாதன் தெரு போல கூட்டம் அள்ளுது.

‘ஜம்போட்ரான்கள்’  என்று சொல்லப்படும் எப்போதும் மின்னிக்கொண்டேயிருக்கும் நியான்விளக்குகள் விளம்பரங்களாக ஓடிக்கொண்டே இருப்பது தான் டைம் ஸ்கொயரின் மெயின் அட்ராக்சன். முன்பு லாங்கேக்கர் சதுக்கம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம், 1904ல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தனது தலைமையிடத்தை இங்குள்ள ஒரு டைம்ஸ் கட்டிடத்திற்கு மாற்ற, அன்றிலிருந்து Times Square என்றாகிப் போனது. அதன் பிறகு முக்கிய தருணங்களில் (நம்ம மெரினா போல)  மக்கள் கூடுமிடமாகி, மன்ஹட்டனின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

இங்கு உலகப்புகழ் வாய்ந்த நிகழ்வு ஒன்று நடப்பதுண்டு.  புத்தாண்டை வரவேற்க  ஒவ்வொரு டிசம்பர் 31 அன்று இரவும் இங்கு நடைபெறும்  கொண்டாட்டங்களும், மிகச் சரியாக இரவு 11.59 க்கு நடைபெறும் பந்து வீழ்ச்சியும்( Ball drop ) மிகப் பிரபலம் .  1904 ல இந்த ஏரியாவுக்கு குடிவந்த ‘தி நியூயார்க் டைம்ஸ்’  நிறுவனர் அடால்ஃப் ஓக்ஸ் ( Adolph Ochs) முதல் முதலா நியூ இயருக்கு  பிரமாண்டமான வாண வேடிக்கை கொண்டாட்டங்களை இங்கே அறிமுகப்படுத்தறார்.  கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர்  இந்த பட்டாசுத் திருவிழாவைப் பார்க்க வர,  ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு நினைக்கும்போது, அவர் ஆபிசின் தலைமை எலக்ட்ரீசியன் மூளையில் உதித்த ஒரு ஐடியா தான் பால் ட்ராப். 

அடால்ஃப் ஓக்ஸ்

நேரத்தைக் குறிக்க டைம் பால் ட்ராப் பண்ணலாம்னு அவர் சொல்ல, நிறுவனருக்கு பிடிச்சுப் போக இரும்பாலும், மரத்தாலும் செய்யப்பட்ட 320 கிலோ பந்து  1907 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59 க்கு மேலிருந்து கீழே   இறங்கியது. நாளடைவில் பந்தின் உருவங்கள் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது. மாலை 6 மணிக்கு பந்து மேலே ஏற்றப்பட்டு கவுண்ட் டவுன் தொடங்கி, 11.59க்கு பந்து வீழ்வதைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர். ஒரு பத்திரிகையாளரால் ஒரு நாட்டின் அடையாளத்தையே உருவாக்க முடிந்திருக்கிறது!

2020 புத்தாண்டு பால் டிராப், டைம்ஸ் ஸ்கொயர்

இதை மேரி கேதரின் சொல்லிட்டே வர,  கேட்கக் கேட்க உடல் புல்லரிக்க, நரம்பு புடைக்க, “அடுத்த பால் ட்ராப்புக்கு நாம எட்டுப் பேரும்  நியூயார்க் வர்றோம்,  இதே இடத்துல  சந்திக்கிறோம்”னு  காலேஜ் விட்டுப் பிரியற ப்ரெண்ட்ஸ் போல,  சின்னப்புள்ளத்தனமா சபதம் எடுத்துகிட்டோம். நெருக்கியடிக்கும் மக்கள் வெள்ளத்தில் நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டாலும், செம்புலப்பெயல் நீர்போல அதில் கலக்க முயற்சித்தோம். ஆனாலும்  நம் தோலின் நிறம் காரணமாக, அந்தக் கூட்டத்திலும் தனித்தே தெரிந்தோம்.

பட்டிக்காட்டான் – மிட்டாய்க்கடை கதையாக  வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்து, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு சொந்தமான, இன்று உலகின் மிக மதிப்பு வாய்ந்த விளம்பர இடமாகக் கருதப் படும் டைம்ஸ் டவரை  அடைந்த போது, எட்டுபேர் கொண்ட குழு நான்கு பேராகச் சுருங்கியிருந்தது. எங்கே அந்த நான்கு பேர்????????

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!