“நித்யா ரொம்ப லக்கி…” அவளைப் பற்றி எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அன்பான குடும்பம், பெரிய இடத்தில் நிச்சயமான திருமணம், இன்ஸ்டாவில் புன்னகை நிறைந்த ஒளிப்படங்கள். வெளியே இருந்து பார்த்தால் அவள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அவளுக்குள் மட்டும் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.

அவளது வாழ்க்கையை யாரோ ஒருவர் கண்ணுக்குத் தெரியாமல் எழுதி வருவது போன்ற உணர்வு அவளுக்கு எப்போதுமே உண்டு.

சுதந்திரமே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த சுதந்திரத்தின் எல்லை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

நித்யா குழந்தையிலிருந்தே ’நல்ல பெண்’ ஆக வளர்க்கப்பட்டவள். சத்தமாகப் பேசக் கூடாது, பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது, ’முடியாது’ என்று சொல்லக் கூடாது, குடும்ப கௌரவம் முக்கியம், எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் அவளது கடமை என்று அவள் மனதில் ஏற்றப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

அதனால், அவளுக்குப் பிடிக்காத விஷயத்திற்கும் புன்னகையோடு ஒரு தலையசைப்பு மட்டுமே அவளது பதிலாக இருக்கும். ஒரு கட்டத்தில், தனக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்கே தெரியாமல் போய்விட்டது. அதுதான் இப்போது அவளுக்கு மிகப் பெரிய சோகமாக இருந்தது.

அவளது வாழ்க்கையில் இதுவரை அனைத்துமே நல்ல, சரியான முடிவுகள்தான். பள்ளி, கல்லூரி, வேலை, மாப்பிள்ளை—எல்லாமே சிறந்தவைதான். ஆனால், எதுவும் நித்யா முடிவு செய்ததில்லை. ஏன், அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கப்படவே இல்லை. பெரியவர்கள் நல்லதுக்குத்தான் சொல்வார்கள் என்கிற அறிவுரையோடு, அவள் குடும்பமே அவளுக்காக முடிவெடுத்தது.

பயோ கெமிஸ்ட்ரி படிக்க ஆசைப்பட்டவளை, “ஐடிக்குத்தான் எல்லா ஊருலேயும் வேலை கிடைக்கும். மாப்பிள்ளை கிடைக்கிறதும் ஈஸி” என்றார்கள். திருச்சியில் உள்ள ஒரு புகழ் பெற்ற  கல்லூரியில் அவளது தோழிகள் எல்லோரும் சேர்ந்தபோது, அவளும் அங்கே சேர ஆசைப்பட்டாள். “பொம்பள புள்ளய அவ்ளோ தூரம் அனுப்பிட்டு எப்படி நிம்மதியா இருக்க முடியும்? நீ இங்கேயே படிம்மா” என்று சொன்னபோது, அவள் ஆசைப்பட்ட அதே கல்லூரியில் இடம் கிடைத்ததைக்கூடப் பெரிதாக நினைக்காமல், பெற்றோர் சொன்ன கல்லூரியிலேயே சேர்ந்தாள்.

அழகழகாக மேற்கத்திய உடைகள் வாங்க வேண்டும் என்கிற கனவில் கடைக்குப் போனால், ஒன்றுக்கு பத்தாகத் தாவணிகளை எடுத்துக் கொடுத்து, “மகா லட்சுமி போல இருப்ப” என்று சொன்னபோதும், மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொண்டாள்.

அவளுக்கு எல்லோருக்கும் பிடித்த  நல்ல பெண்ணாகவும், மகா லட்சுமியாகவும் இருந்து அலுத்துவிட்டது. ’நான் கெட்ட பொண்ணு’ என்று ஒருமுறையாவது உரத்த குரலில் கூற வேண்டும் போல இருந்தது. மற்றவர்களை ஏமாற்றினால் பரவாயில்லை; ஒரு முறை என்னை நான் ஏமாற்றாமல் வாழ வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. ஆனால், அதற்கான தைரியம்தான் இல்லை.

“உனக்கு இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கா? ஏன் இவ்வளவு டல்லா இருக்க?” மதிய உணவு மேசையில் தோழி ஒருத்தி கேட்ட போது, முகத்தில் ஐஸ் தண்ணீர் பட்டது போல உணர்ந்தாள். அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில், இதுவரை அந்தக் கேள்வியை யாரும் அவளிடம் கேட்டதே இல்லை.

எந்த மண்டபத்தில் திருமணம், என்ன கலர் புடவை வேண்டும், என்ன டிசைன் நகை வேண்டும் என்று கேட்டவர்கள், மாப்பிள்ளை எப்படி வேண்டும் என்று கேட்கவே இல்லை. சரி, மாப்பிள்ளையைப் பார்த்த பிறகுகூட, “உனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?” என்று யாரும் கேட்கவில்லை.

ஒருவேளை மனதில் யாரும் இல்லாதிருந்தால், மற்ற முடிவுகளைப் போல இதையும் ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால், அவளுக்கு ஒருவனை மிகவும் பிடிக்கும். கோகுல், பள்ளியில் இருந்தே நண்பன். அவளைத் தீவிரமாக நேசிக்கிறான். மிக நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தும், நித்யாவுக்காக இந்த ஊரிலேயே படிக்கிறான். இன்று வரை எந்த அழுத்தமும் கொடுக்காமல், எந்த எதிர்பார்ப்பையும் திணிக்காமல், அவளது முடிவுக்காகக் காத்திருப்பவன். அவனைப் பற்றி நினைத்தாலே அவளுக்குள் ஒரு பரவசம் எழுந்தது.

ஆனால், கோகுலைத் தேர்ந்தெடுப்பதா, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பதா என்பது இப்போது அவளது மிகப் பெரிய கேள்வி இல்லை. முதன்முறையாக, அந்த முடிவைத் தானே எடுக்க வேண்டும் என்பதுதான் அவளது ஆசை.

கோகுலை இழப்பது பற்றிய பயத்தைவிட, தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் இழந்துவிடுவோமோ என்ற பயம்தான் இப்போது அதிகம். அவளது மகிழ்ச்சி எல்லோருக்கும் முக்கியம்தான். ஆனால், அது அவர்கள் தேர்வில் இருக்க வேண்டுமே?

அன்று இரவு கண்ணாடி முன் நின்றுகொண்டிருந்தாள். பொலிவான முகம், உயிரற்ற கண்கள். ’நான் எப்போ இருந்து மத்தவங்க முடிவுல வாழ ஆரம்பிச்சேன்?’ அவளுக்குப் பதில் தெரியவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாக அவள் அப்படித்தான் வாழ்கிறாள்.

சிறு வயதில் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்பட்டபோது, “பெண்கள் மேடையில் அதிகம் பேசவேண்டாம்” என்று சொன்ன அப்பா… பள்ளிச் சுற்றுலாவுக்குப் போக ஆசைப்பட்டபோது, “பெண்பிள்ளையை ஊரைச் சுத்த அனுப்புறதா?” என்று திட்டிய பாட்டி… பிடித்த உடையை அம்மாவின் பார்வைக்குப் பயந்து வாங்காமல் திருப்பி வைத்த நாள்… இப்படி எத்தனை?

’என் வாழ்க்கையில் யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நான் அமைதியாக இருந்த ஒவ்வொரு முறையும், என்னுடைய சார்பாக மற்றவர்கள் முடிவு எடுக்க அனுமதித்தது நானே.’ அந்த உண்மை அவளை வலிக்கச் செய்தது. அவளை யாரும் சிறையில் வைக்கவில்லை. ஆனால், தன் ஆசைகளைவிட மற்றவர்களின் சம்மதத்தையே முக்கியம் என்று நம்பும்படி அவள் வளர்க்கப்பட்டிருந்தாள். எல்லாக் கேள்விகளுக்கும் பெற்றவர்களிடம் பதில் இருந்தது. ’நித்யாவுக்கு என்ன வேண்டும்?’ என்கிற கேள்வியைத் தவிர.

மற்றவர்கள் முடிவெடுத்ததால் அவள் கஷ்டப்பட்டாளா என்றால், இல்லை. இன்று வரை சௌகரியமாகத்தான் வாழ்கிறாள். அவர்கள் எடுத்த பல முடிவுகள் நல்லவையாகத்தான் இருந்தன. ஆனால், இன்று தான் விரும்பும் வாழ்க்கை தன் கையில் இருந்து நழுவுவதை அவளால் ஏற்க முடியவில்லை. தான் தவறாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் தேர்வின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள அவள் தயாராகிவிட்டாள்.

பல ஆண்டுகளாகத் தன்னுடைய குரலைத் தானே கேட்காமல் வாழ்ந்ததை நினைத்தபோது, நித்யாவுக்குள் ஒரு வலி நிரந்தரமாக இருந்தது.  சிறு வயதில் இருந்து எத்தனை முறை அவளுக்கு மறுத்துப் பேசத் தோன்றியிருக்கும்? எத்தனை முறை பிடிக்காத விஷயங்களைப் பிடித்தது போல நடித்திருப்பாள்? எத்தனை முறை தன்னுடைய ஆசைகளைவிட மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாள்?

பல ஆண்டுகளாக எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு நல்ல கதாபாத்திரமாக இருக்க முயன்று, தன்னுடைய வாழ்க்கையில் மட்டும் தன் குரலைக் கேட்க மறந்துவிட்டதை நினைத்தபோது, அவளுக்குள் ஒரு புதிய தெளிவு பிறந்தது. அவள் மேல் தவறு இல்லை; அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. ஆனால், இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அந்த இரவு நித்யாவால் தூங்க முடியவில்லை. தன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான முடிவுகளை எண்ணிப் பார்த்தாள். எல்லாமே அவளுக்காகத்தான், அவளது நல்வாழ்விற்காகத்தான். ஆனால், இந்த முறை அவளே முடிவெடுக்கப்போகிறாள். அந்த எண்ணமே அவளைத் தூங்க விடவில்லை.

அடுத்த நாள் காலை எதுவும் மாறவில்லை. ஆனால், அவள் தந்தையை நோக்கி, “கல்யாணத்தைப் பற்றி முடிவு செய்ய எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்றாள்.

அவளுக்குத் தெரியும். அம்மா, அப்பா அவளை வெறுக்கவில்லை. அவர்கள் அவளுக்காகத்தான் எல்லாம் செய்தார்கள். அதுதான் அவளது குழப்பம்.

தவறான மனிதர்களுக்கு எதிராக நிற்பது எளிது. நம்மை நேசிக்கும் மனிதர்களிடம், ’நான் வேறொரு வாழ்க்கையை விரும்புகிறேன்’ என்று சொல்வதுதான் கடினம்.

வீட்டில் அப்படி ஓர் அமைதி. அதிர்ச்சி, கேள்விகள், “ஏன்?”, “எதற்கு?”, “இப்போ என்ன குறை?” என்று எல்லோரும் கேட்டார்கள்.

முன்பு இருந்த நித்யா என்றால், உடனே பயந்திருப்பாள். தன் முடிவை மாற்றியிருப்பாள். ஆனால், இந்த முறை அவள் அழுத்தமாக, “என்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு முறை நானும் யோசிக்கணும்” என்றாள். நித்யாவுக்கு அது சுதந்திரத்தின் முதல் சுவாசம்.

அந்த நாளுக்குப் பிறகு வாழ்க்கை சுலபமாகவில்லை. குற்ற உணர்ச்சி, பயம், அழுத்தம் எல்லாம் இருந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு புதிய உணர்வு வந்தது. ’எனக்காக நான் இருக்கிறேன்’ என்கிற உணர்வு.

நித்யா நன்கு யோசித்து கோகுலைத் தேர்ந்தெடுக்கிறாளோ, அல்லது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கிறாளோ, அது அவள் முடிவு. ஆனால், முதல் முறையாக, தன் வாழ்க்கையின் முடிவைத் தானே எடுக்கிறாள்.

சில நேரத்தில் வாழ்க்கையில் மிக ஆபத்தான சிறை, நம்மை யாரோ பூட்டி வைக்கும் சிறை இல்லை. நம்முடைய ஆசைகளைவிட மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கே அதிக மதிப்பு கொடுக்கக் கற்றுக்கொள்ளும் சிறை. அதிலிருந்து வெளியே வருவது கதவை உடைப்பதல்ல. முதல் முறையாக, ’எனக்கு என்ன வேண்டும்?’ என்று நம்மையே கேட்பதுதான்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.