விடியற்காலையிலேயே தொடர்வண்டியில் கண்டி (Kandy) செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதனால் ஓர் ஆட்டோவைப் பிடித்து, புகழ்பெற்ற மலையகத் தொடர்வண்டிப் பயணத்தைத் தொடங்குவதற்காகக் கொழும்பு கோட்டை தொடர்வண்டி நிலையத்தை (Colombo Fort Railway Station) நோக்கி விரைந்தோம்.

பயணச்சீட்டுகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தோம். கட்டணம் ரூ.1,250. பயணநேரம் இரண்டரை மணி; தூரம் 125 கி.மீ. நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. சிலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்; சிலர் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டிருந்தனர்.

நாங்கள் தண்ணீரும் சில உணவுப்பொருள்களும் வாங்குவதற்காக நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு சிறிய வழியில் சென்றோம். ஐம்பது அடி தூரம்தான் இருக்கும். ஆனால் அந்தச் சிறிய வழிக்குள் நுழைந்ததும், மூத்திரச் சந்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு! அவ்வளவு மோசமான நாற்றம்.

கொழும்பு கோட்டை தொடர்வண்டி நிலையம் 1917ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் கட்டிட அமைப்பு மான்செஸ்டர் விக்டோரியா நிலையத்தை (Manchester Victoria Station) நினைவூட்டுகிறது. அழகான வளைவுகள், மர வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள் எனக் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்த்தி தெரிகிறது. தரையும் அழகாக அமைந்துள்ளது.

ஆனால், அந்த அழகுக்குள் ஓர் அழுக்குப் படலம் படிந்திருந்தது. இந்தக் கட்டடத்தைக் கட்டும்போது மட்டும் தண்ணீர் பார்த்திருக்கவேண்டும்; அதன்பிறகு தண்ணீரையே பார்க்கவில்லையோ என்கிற எண்ணம் வருமளவுக்கு அழுக்கு.

அவ்வப்போது சோப்புபோட்டு நன்றாகக்கழுவி, முறையாகப்பராமரித்தால் இந்த நிலையம் இன்னும் மிக அழகாகத்திகழும். ஏனென்றால், அதன் கட்டிட அமைப்பிலேயே அவ்வளவு நேர்த்தியும் அழகும் இருக்கின்றன.

நாங்கள் நிலையத்திற்குள் நுழையும்போதே நாய் ஒன்றும் எங்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்தது. அதன் விளைவு, அங்கேயே எச்சம்! அருகில் நின்றிருந்த காவலர் ஒருவர், மற்றவர்கள் அதை மிதித்து விடாதபடி அனைவரையும் எச்சரித்துக்கொண்டிருந்தார்.

பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தக் காவலர், அதைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அக்கறையாக அனைவரையும் எச்சரித்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த எச்சத்தை அகற்றும் வேலை மட்டும் அங்கே நடக்கவில்லை. அதற்கும் அவர் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தோன்றியது. தூய்மைப் பணியாளரை அழைத்து, அவ்விடத்தைத் தூய்மையாக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறிய அக்கறைகள்தான் சுற்றுலாப் பயணிகளை ஒரு நாட்டை நோக்கித் திருப்பும். மீண்டும் மீண்டும் அந்த நாட்டிற்கு வரவைக்கும்.

‘புகையிரத நிலையம்’ என்ற பெயர்

இலங்கையில் தொடர்வண்டி நிலையத்தை ‘புகையிரத நிலையம்’ என்று அழைக்கிறார்கள். இந்தச்சொல் என்னைச் சற்றுச் சிந்திக்க வைத்தது.

நாம் பயன்படுத்தும் ‘ரயில்’ என்பதும் தமிழ்ச்சொல் அல்ல; அவர்கள் பயன்படுத்தும் ‘ரதம்’ என்பதும் தமிழ்ச்சொல் அல்ல. அதோடு, இன்றைய தொடர்வண்டிகளில் புகை வருவதுமில்லை. இருந்தாலும் பழைய பெயர் மட்டும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

‘Station Master’ என்பதற்கும் ‘புகையிரத நிலைய அதிபர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பல இடங்களிலும் இவ்வாறான பயன்பாட்டைக் காணமுடிகிறது. ஒரு மொழியின் சொற்கள் காலத்தோடு மாறினாலும், பழைய சொற்கள் எவ்வாறு நினைவுச் சின்னங்களைப்போலத் தொடர்ந்துவாழ்கின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

காபி வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கும்போதே எங்களுக்கான தொடர்வண்டி வந்துநின்றது. உள்ளே சென்றால், ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் என பிரித்துப்போட்டிருக்கிறார்கள். குடும்பமாக வந்தவர்கள், கணவன்–மனைவி, குழந்தைகள் என ஒருவருக்கொருவர் இடம் மாற்றி ஒன்றாக அமர்ந்துகொண்டோம்.

பயணம் தொடங்கியபோது, முதலில் குமரி மாவட்டத்தின் சமதளப் பகுதிகளில் பயணம் செய்வது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல நிலப்பரப்பு மாறி, மலைப்பாதைப் பயணமாகியது.

கண்டி தேயிலைத் தோட்டங்களுக்குப் புகழ்பெற்ற பகுதி என்றாலும், நாங்கள் சென்ற இந்தப் பாதையில் ஒரு தேயிலைத் தோட்டம்கூட கண்ணில் படவில்லை. அதற்குப் பதிலாக ரப்பர் மரங்களும், தென்னை மரங்களும், அடர்ந்த காடுகளும், எங்கு பார்த்தாலும் பசுமையுமாகப் பயணம் அழகாக அமைந்திருந்தது.

சில தொடர்வண்டி நிலையங்களில் வரிசையாகப் பூந்தொட்டிகளை வைத்திருந்தார்கள். சிறிய நிலையங்கள்கூட இவ்வாறு அழகுபடுத்தப்பட்டிருந்தது கண்ணைக் கவர்ந்தது. நம் நாட்டில் தொடர்வண்டி வந்தவுடன், அது நின்றதா இல்லையா என்று கூடப் பார்க்காமல் ஓடிப்போய் ஏறுவது, இறங்குபவர்களைப் பொருட்படுத்தாமல் கதவின் முன் முந்திக்கொள்வது, இடம் பிடிக்கப் போராடுவது எனப் பழகிய நமக்கு, இப்படி அமைதியாகப் பூந்தொட்டிகளோடு காத்திருக்கும் நிலையக் காட்சி சற்று வியப்பாகவே இருந்தது. இவையெல்லாம் நமக்கும் சாத்தியம்தானா என்று கூடத் தோன்றியது! நம் நாட்டின் கூட்டமும் நெருக்கடியும் இவ்வாறு பூந்தொட்டிகள் வைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்காது என்பதையும் இங்கே இணைத்துத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

கண்டி நிலையத்தில்

கண்டி நிலையத்தை அடைந்ததும் கூட்டம் தொடர்வண்டியை நோக்கி அலைமோதியது. கண்டிக்குப் பிறகு செல்லும் பாதை மிகவும் அழகானது என்பதால், அந்தப் பயணத்தின் கூட்டம் என்பது மிகவும் பெரிது! நிலையமும், தொடர்வண்டியும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கண்டி தொடர்வண்டி நிலையமும் கொழும்பு நிலையத்தைப் போலவே அழகாக இருந்தது. ஆனால் ஒரு வேறுபாடு—அழகாக மட்டுமல்ல, மிகவும் தூய்மையாகவும் இருந்தது. 1867ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய கட்டிடம் என்றாலும், அதில் பழமையின் சுவையும் பயன்பாட்டின் ஒழுங்கும் ஒன்றாகத் தெரிந்தன. அழகிய புகைப்படங்கள் நம்மை வரவேற்கின்றன.

கண்டியில் தங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் கையில் இருந்த பொருள்களை எங்காவது வைக்கவேண்டும். கண்டி தொடர்வண்டி நிலையத்திற்குள்ளேயே ‘பொதிகள் பாதுகாப்பு அறை (Cloak Room)’ இருந்தது. கட்டணமும் குறைவு. சில நேரங்களில் அங்கு வரிசை நீளமாக இருக்கும். மேலும், ஓர் அறையை எடுத்துக் கொண்டால் வைப்பதோடு கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; குளிக்கவும் முடியும். அதனால் நிலையத்திலிருந்து வெளியில் வந்தோம்.

கண்டி என்பது மலைநாட்டுத் தமிழர்களும் வாழும் பகுதி. நிலையத்திற்கு வெளியே வந்ததும் ஒருவர் தமிழிலேயே எங்களை அணுகி, எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். நாங்கள் சொன்னதும் அவரே ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

வழியிலேயே அருகருகில் பல அறைகள் கண்ணுக்குப்பட்டன. ஆனால் நாங்கள் சொன்ன இடத்தைவிட வேறு ஓர் இடத்திற்கே அவர் எங்களை அழைத்துச் சென்றார். அறையின் வாடகை ரூ.2,500.

அறையைப் பார்த்ததும், என் வாழ்நாளில் நான் பார்த்த அறைகளிலேயே மிகவும் தரம் குறைந்த அறை இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆனால் சன்னலைத் திறந்ததும் காட்சி முற்றிலும் மாறிவிட்டது. வெளியே பார்த்தால் அவ்வளவு அழகான இடம்! அந்த அறையைச் சிறிது பராமரித்தாலே நன்றாக வைத்திருக்கமுடியும். அறையின் தரம் குறைவாக இருந்தாலும், இருப்பிடம் அப்படி—அவ்வளவு அழகான இடம்.

அங்கிருந்த மேற்பார்வையாளர் கண்ணியமாகப் பழகினார். எங்களுக்குச் செல்லவேண்டிய இடங்களை அவரிடம் கூறி, ஆட்டோவில் செல்வதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டோம். அவர் ரூ.2,500 என்றார்.

நாங்கள் சரி என்று சொன்னதும், தெருவில் நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநரை அழைத்தார். அவரும் அதே தொகையைத்தான் கூறினார். நாங்கள் புறப்பட்டோம்.

அந்த ஆட்டோ ஓட்டுநர் மிகவும் நேர்மையானவர். பயணம் முழுவதும் அவர் நடந்துகொண்ட விதத்திலேயே அதை உணரமுடிந்தது.

கண்டியில் ஒரு காலை உணவு

நேரம் பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது ஏதாவது சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ‘எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுவோம்’ என்றுதான் சொன்னோம்.

ஓட்டுநர் எங்களை நல்லதொரு உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். அதன் பெயர் வாழை (Valai K). கண்டியில் உள்ள தென்னிந்தியச் சைவ உணவகங்களில் இதுவும் ஒன்று. அதன் எதிரே வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி பிள்ளையார் கோவில் (Kandy Pillayar Kovil) இருந்தது. பல பெண்கள் கேரளப் பாணிச் சேலைகள் அணிந்து, கைகளில் தேங்காயும் பழங்களுமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.

இலங்கையில் உள்ள சில இந்துப் பெண்கள், குறிப்பாக மலையாளப் பின்னணியைக் கொண்டவர்களும் உள்ளூர் தமிழ்ப் பெண்களும், கோயில் திருவிழாக்கள், வெள்ளிக்கிழமை வழிபாடுகள், நவராத்திரி போன்ற நிகழ்வுகளின்போது வெள்ளை நிறத்தில் தங்கநிற விளிம்பு கொண்ட கேரளப் பாணிச் சேலைகளை (Kasavu Saree) அணிந்து கோயிலுக்குச்செல்வது வழக்கமாக இருப்பதாக ஒருவர் கூறினார்.

அந்தக் காட்சி எனக்கு யாழ்ப்பாணத்தில் பார்த்த காட்சியை நினைவூட்டியது. நல்லூர் முருகன் ஆலயத்தில் (Nallur Kandaswamy Kovil) பெண்கள் நம் ஊர் இந்துக் கோயில் திருவிழாக்களுக்கு வருவது போலப் பட்டுச் சேலை, பட்டுப் பாவாடை அணிந்திருந்தார்கள். ஆனால் இங்கே கேரளப் பாணிச் சேலைகளே பெரிதும் கண்ணில்பட்டன.

கண்டி பிள்ளையார் கோவிலிலும் உணவு வழங்குவதற்கான ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அங்கே போய் சுவை பார்க்கலாம் என்று கூட ஒரு கணம் விருப்பம் ஏற்பட்டது. என்னதான் வெளியில் சாப்பிட்டாலும், கோவில் சாப்பாடே தனிச்சுவைதான்! ஆனால் எங்களுக்குப் போதுமான நேரமில்லை.

உணவகத்தில் நாங்கள் சென்ற நேரத்தில் காலை உணவுநேரம் முடிந்துவிட்டிருந்தது. மதிய உணவுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இருந்தாலும் தோசை, இட்லி, வடை, சப்பாத்தி, பூரி, பரோட்டா என்று பல உணவுகள் கிடைத்தன. பரோட்டாவுக்குக் கடலைக் கூட்டு. கூடவே சாம்பாரும் சட்னியும். அங்கே வழங்கப்பட்ட எல்லா உணவுகளுக்கும் சாம்பாரும் சட்னியும் இருந்தன. அனைத்துமே நல்ல சுவையாக இருந்தன.

தோசை ரூ.200. பரோட்டா ரூ.250. மசாலா தேநீர் ரூ.150. எங்களுடன் வந்த அந்தப் பையன் வடை மட்டும் வாங்கினார். “நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன்” என்றார்.

அவர் சிங்களவர் என்பதால், அவரிடம் வீட்டில் காலை உணவாக என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்டேன்.

“சோறு” என்றார்.

அவர்கள் வீடுகளில் சோறுதான் காலை உணவாக இருக்கும் என்றார். சிங்கள மொழியில் சோற்றை ‘பத்’ அல்லது ‘பாத்’ (Bath) என்று சொன்னார்.

அந்தச் சொல் எனக்கு ஆவலைத் தூண்டியது. நம் மொழிச்சூழலில் பழக்கமான வடமொழிச் சொல் ஒன்றைப் போன்ற ஒலி அதிலிருந்தது. மொழிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு வளர்ந்த விதத்தைப் பயணங்களில் இப்படிப்பட்ட சிறிய சொற்கள்கூட நினைவூட்டுகின்றன.

சிங்களப் பாரம்பரிய வீடுகளில் காலை உணவாகச் சோறும் கறியும் (Rice and Curry) சாப்பிடுவது வழக்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதுபோல, முந்தைய நாள் இரவில் மீதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து மறுநாள் காலையில் சாப்பிடும் ‘தியா பத்’ (Diya Bath) என்ற பழைய சோறு உணவும் அங்கே வழக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்.

சிறிய உரையாடலிலேயே ஒரு நாட்டின் உணவுப் பழக்கத்தையும், இன்னொரு மொழியின் சொல் வழக்கையும் அறிந்து கொண்டோம்.

கல்லாப்பெட்டிக்கு அருகில் லட்டு, மைசூர்பாகு போன்ற இனிப்புகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொள்’ என்று எவ்வளவு சொன்னாலும் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

உணவகத்தின் கழிப்பறையும் நன்றாகத் தூய்மையாக இருந்தது. உணவு, விருந்தோம்பல், தூய்மை ஆகியவற்றைப் பார்த்தபோது, இதை ஒரு தரமான உணவகம் என்று சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

பாம்பாட்டியும் காட்சித் திடலும்

அங்கிருந்து கண்டியின் புகழ்பெற்ற கண்டி காட்சிமுனை (Kandy View Point / Rajapihilla Mawatha) நோக்கிப்புறப்பட்டோம்.

மேலிருந்து கண்டி நகரத்தைப் பார்க்கக்கூடிய ஓர் இடத்தில் ஓட்டுநர் எங்களை இறக்கிவிட்டார். நாங்கள் இறங்கிய இடத்திலிருந்து நேராகப் பார்த்தால் சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பிரிவில் ஒரு புத்தர் சிலை இருந்தது.

இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், ஒரு பாம்பாட்டி இரண்டு பாம்புகளுடன் இரு வெள்ளையர்களைக் கவர்ந்துகொண்டிருந்தார். கண்டியின் உயரமான மலைப்பாதைகளிலும், காட்சிமுனைப் பகுதிகளிலும் உடும்பு, குரங்கு, நல்லபாம்பு போன்றவற்றை வைத்து வித்தை காட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மக்கள் இருப்பது வழக்கம் என்று கூறினார்கள்.

நமக்குத்தான் பாம்பு என்றால் பயமாயிற்றே! அது அங்கே படமெடுத்துக் கொண்டிருக்க, நான் தூரத்திலிருந்து ஒரு புகைப்படம் எடுத்ததோடு சரி. அதற்குப் பிறகு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை!

மறுபுறம் கண்ணைத் திருப்பியதும், காட்சி முற்றிலும் மாறியது. உலகமே அழகானது என்ற எண்ணத்தை உருவாக்கும் விதமான கண்டியின் பேரழகு கண்முன் விரிந்தது. உயரமான மலைகளுக்கு நடுவே அடர்ந்த பசுமை மரங்கள்; அவற்றுக்கு அப்பால் தூரத்தில் பளபளக்கும் கண்டி ஏரி (Kandy Lake); வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் (Sri Dalada Maligawa / Temple of the Tooth) தங்கக்கூரை இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து, ஒட்டுமொத்த கண்டி நகரத்தையும் அந்த உயரத்திலிருந்து ஒரு பெரிய ஓவியமாக மாற்றியிருந்தன.

அந்த இடத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. செயற்கையான கவர்ச்சியுமில்லை. இயற்கை தன்னுடைய அழகைத் தானே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

பார்ப்பவர் உள்ளத்தில் ஒரு பேரமைதியை உருவாக்கும் ஆற்றல் அந்த இடத்திற்கு இருந்தது. ஆர்ப்பாட்டமில்லா அழகும் அமைதியும் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.