You have heard it said, ‘Accept the things we cannot change.’ Today, we say instead, ‘Let us change the things we cannot accept. – Penobscot Nation Chief Kirk Francis (told during a State House press conference on tribal sovereignty)
‘மாற்ற முடியாதவற்றை நாம் ஏற்றுக்கொள்வோம்’ என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக, ‘நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததை மாற்றுவோம்’ என்று இன்று சொல்கிறோம். – பெனப்ஸ்காட் நாட்டின் தலைவர் கிர்க் பிரான்சிஸ் (மெயின் (Maine) சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டமர்வின்போது கூறியது).
பெனப்ஸ்காட் பூர்வகுடி இனம்
வடதுருவ எல்லையின் வாடைக்காற்றை சுவாசித்தவாறே, மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும் அமெரிக்காவின் மெயின் மாகாணம் (Maine). மேற்கில் அப்பலாச்சியன் மலைத்தொடரின் (Appalachian Mountains) அடிவாரத்தின் ஆழ்ந்த பசுமை. வடபுலத்தில் வளம்மிக்க வனப்பிரதேசங்கள். உடன் உயர்ந்த மலைகளும் நன்னீர் ஏரிகளும் சூழ்ந்திருக்கும். கிழக்குப் பக்கத்து அட்லாண்டிக் கடற்கரையோரம் கடல் வளத்தால் நிரம்பிக் கிடக்கும். மரகதப்பச்சையைப் பிரதிபலித்துக்கொண்டு, நீலமும் பச்சையமும் கலந்து அலையடித்துக் கொண்டிருக்கும் கடல். இக்கடற்கரையைக் காண்பவர்களுக்குக் காலத்தின் நகர்வு மறக்கக்கூடும்.
வானை முட்டும் பைன் மரக்காடுகளும் ஃபிர் (Fir), சிடார் (Cedar) மரங்களும் ஊசியிலைகளால் ஓயாமல் பசுமை பூசி நிற்கும். அடர்ந்து செழித்த மேப்பிள் (Maple), பிர்ச் (Birch), பீச் (Beech) முதலிய மரங்கள் பருவத்திற்கேற்பப் பல வண்ணம் பூசி நிற்கும். இவற்றின் காலடியில் பூத்துக் குலுங்கும் மலர்வகைகளோ பற்பல! வளங்குன்றா வனங்களிருக்க விலங்கினங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? கனிமரங்களிலெல்லாம் கானம் பாடும் பறவைகளுக்கும் பஞ்சமில்லை. கடற்பறவைகளும் கணக்கிலடங்கா மீன் வளமும் அந்நிலத்தைச் சுவர்க்க பூமியாக்கி வைத்துள்ளன.

சூழலியல் சீர்கேடுகள், மனிதப்பிழைகளாய் மாசுக்கள் கட்டுப்பாடின்றிப் பெருகியிருக்கும் இக்காலகட்டத்திலும் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளையாக மெயின் மாகாணம் விளங்கி வருகிறது. நானூறு, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்துபார்த்தால், அதன் அழகையும் அமைதியையும் எப்படி விவரித்துக் கூறமுடியும்?
1500ஆம் ஆண்டுவாக்கில் ஓர் அழகிய பொழுதொன்றில், கடற்காகங்களைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன அலைகள். மறு நொடி அச்சத்துடன் கடலுக்குள் ஒடுங்கின. ஐம்பது அறுபது பேர் கொண்ட மக்கள் கூட்டத்தின் கூக்குரலும் ஓலமும் ஓங்கி ஒலித்தது. கடற்பறவைகள் படபடத்து கூட்டமாக பறக்கத் தொடங்கின. கரையோரம் நின்ற படகுகளில் திணிக்கப்பட்ட கூட்டத்தைக் கண்டு கடல் பெருமூச்சுடன் தளும்பித் தவித்தது. காஸ்பர் கோர்ட்-ரியல் (Gaspar Corte-Real) என்கிற போர்ச்சுகீசிய கடலோடி அவர்களை கடத்திக்கொண்டிருந்தான். எம் மண்ணில் விழுந்து விளையாடித் திளைத்திருந்த பூர்வகுடிகளை எதற்காகக் கட்டி இழுத்துச் செல்கிறான் எனச் சுற்றியிருந்த கடலும் கல்லும் மலையும் மண்ணும் திகைத்து நின்றன.

அவன் தன்னுடைய கடற்பயணச் செலவுகளை ஈடுசெய்வதற்குத்தான் ஐம்பதிற்கும் மேற்பட்ட பூர்வகுடி மக்களைக் கடத்திச்செல்கிறான். ஆனால் அது அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை. அவர்களை ஐரோப்பாவில் அடிமைகளாக நல்ல விலைக்கு விற்பதுதான் அவனின் திட்டம். அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பூர்வகுடி இன மக்கள் தற்போதைய கனடா நாட்டையும் மெயின் மாகாணத்தையும் பூர்வீகமாகக்கொண்டவர்கள்.
அதைத்தொடர்ந்து பிரெஞ்சு நாட்டிலிருந்து கப்பல்கள் இந்தக் கரையைநோக்கி வரத்தொடங்கின. மீன்பிடிக்கவும், ஊனும் உயிருமாக இருந்த பழங்குடி மக்களைப் பிடிக்கவும் வந்தன. அதனால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த வபானாகி பூர்வகுடி (Wabanaki Confederacy) கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஐரோப்பியர்களின்மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. ஆனால், ஐரோப்பியர்கள் பூர்வகுடியினரை வசப்படுத்த வகைவகையான பொருள்களை வரிசையாக அறிமுகப்படுத்தினர். அதேபோல் அங்கிருந்து வணிகப் பொருள்களை ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லத்தொடங்கினர்.
இத்தகைய இயற்கை வளம் செறிந்த நிலத்தில், வெள்ளை நிறப் பாறைகளில் பாய்ந்தோடியது பெனப்ஸ்காட் நதி. அதன் வெண்நுரை பொங்கும் கரைகளில் வாழ்ந்து வந்தவர்கள் பெனப்ஸ்காட் பூர்வகுடி இனம். அல்கொன்க்யுன் (Algonquin) மொழி பேசும் பெனப்ஸ்காட் (Penobscot), அபெனாகி (Abenaki), பாஸாமக்வாடி (Passamaquoddy), வ்வுலஸ்டோக்விக் (Wolastoqiyik), மிக்மாக் (Mi’kmaq) ஆகிய ஐந்து பழங்குடி இனங்களும் வபானாகி என்னும் கூட்டமைப்பின்கீழ் இணைந்திருந்தனர்.
இம்மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிர்ச் மரப்பட்டைகளை (birchbark) வைத்து கனோ (canoe) எனும் சிறு ஓடங்களைக் கட்டுவதில் வல்லவர்களாக இருந்தனர். இப்பட்டைகள் இயற்கையாகவே நீர்புகாத் தன்மையுடன் நெகிழ்வாக இருக்கக்கூடியவை. அதே சமயத்தில் உறுதியாவையும்கூட. பழங்குடியினர் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் முறையான கருவிகளும் உபகரணங்களும் இல்லாத காலகட்டத்தில், நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த காட்டு மரங்களைக் குடைந்து ஓடங்களாகப் (dugout canoes) பயன்படுத்திவந்தனர்.
அடுத்த ஐநூறு ஆண்டுகளில் கற்களைக்கொண்டு நுட்பமாக கூர்மையான ஈட்டிகளும் கோடரிகளும் கத்திகளும் செய்யப்பழகிவிட்டனர். அதனால் மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட ஆரம்பகாலப் ஓடங்களுக்குப் பதிலாக உறுதியான, எடைகுறைவான பிர்ச் மரப்பட்டையினால் ஓடங்கள் செய்வதில் இவர்கள் வல்லமைமிக்கவர்கள் ஆனார்கள். அவற்றை வேகமான காட்டாற்றுச் சுழல்களிலும் செலுத்தக்கூடியதாக வடிவமைத்தனர். இப்படகுகளின் திறனும் நுட்பமும் ஐரோப்பியர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஆனால் 1900-களின் தொடக்கத்தில் இவ்வகைப் படகுகளைச் செய்பவர்களின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பமானது. அநேகமாக அந்தக் கலை அழியும் நிலையை அடைந்தது. இது குறித்த பரந்துபட்ட ஆய்வுகளும் முன்னெடுப்புகளும்செய்யப்பட்டன; பிர்ச் மரப்படகு கட்டுமான ஆர்வலர்கள் இதனை மீட்டெடுக்க ஒன்றிணைந்தனர். அதன் விளைவாக, வபனாகி கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இக்கலை உயிர்பெற்றுவருகிறது.


அடிமை விற்பனைக்காக ஆள்கடத்தல்கள், நில அபகரிப்பு, கட்டாய இடப்பெயர்வுகள், ஐரோப்பிய தொற்றுநோய்களால் பூர்வகுடிகளின் அதீத மரண எண்ணிக்கை (Great Dying – 1616 – 1619) முதலிய காரணங்களால் பெனப்ஸ்காட் பூர்வகுடியினர் சிதறுண்டுபோயினர்.
1600-களின் தொடக்கத்தில், ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் ஆரம்பகால நிரந்தரக் குடியிருப்புகளை நிறுவமுயன்றனர். அதில் சில முயற்சிகள் தோல்வியடைந்தன; சில நிலைபெற்றன. உள்ளூர் பூர்வகுடித் தலைவர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோதும், பழங்குடியினரைக் கடத்தும் விரோதச்செயல்களிலும் ஈடுபட்டனர். பிரெஞ்சுத் தோல் வணிகர்களாலும் (Fur traders) ஆங்கிலேயக் குடியேறிகளாலும் பிற பூர்வகுடிகளைப் போலவே பெனப்ஸ்காட் இனக்குழுவும், ஆள்கடத்தல் உள்பட எண்ணிலா துயரங்களுக்கு ஆளாகினர்.
அபெனாகி பூர்வகுடி இனம்
இப்போது சற்று அபெனாகி இனத்தைப் பற்றிப்பார்ப்போம். இன்றைய மெயின் மாகாணத்திலும், அதையொட்டிய நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire), வெர்மான்ட் (Vermont), வடக்கு மசெசூசெட்ஸ் (Massachusetts), நியூயார்க்கின் கிழக்குப் பகுதிகளிலும், கனடாவைச் சேர்ந்த தென் கியூபெக் (South Quebec) பகுதியிலும் வாழ்ந்துவந்தனர். ‘என்டாகீனா’ (Ndakinna) என்று தங்களை அழைத்துக்கொண்ட இம்மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களில் 12,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவந்துள்ளனர். இந்த நீண்டகால வரலாற்றுக்குச் சான்றாகப் பல தொல்லியல் ஆய்வுகளும் இப்பழங்குடி மக்களின் வாய்மொழி வரலாறுகளும் துணைநிற்கின்றன.

பனிப்பாறைகள் உருகத்தொடங்கிய ‘கடைசி பனிக்காலம்’ (Last Ice Age) காலத்திலிருந்தே, இப்பகுதி இவர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. நாடோடி சமூகமாக இருந்த இக்குடியினர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஆற்றங்கரைக் கலாச்சாரங்களாகப் பரிணாமம் அடைந்தனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இப்பகுதியின் காடுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து வாழ்ந்துவந்துள்ளனர். இதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பெனப்ஸ்காட் பழங்குடியினரைப் போலவே, இவர்களும் பிர்ச் மரப் ஓடங்களைக் கட்டுவதில் வல்லமையுடையவர்கள்.
பூர்வகுடிகளும் போராட்டக்களங்களும்
பெனப்ஸ்காட் பூர்வகுடியும் அபெனாகி இனமும் சந்தித்த போர்களைப்பற்றிப் பார்ப்போம். அவை அநேகமாகப் பொதுவான காரணங்களை முன்னிட்டே நடைபெற்றன. மிக்மாக் போர்கள் (Micmac Wars), வரலாற்று ரீதியில் ‘டாரட்டின் போர்கள்’ (Tarratine Wars) என்றும் அழைக்கப்படுகின்றன. நாம் முந்தைய அத்தியாயத்தில், ஐரோப்பியர் வருகையினால் புதிய பூமியில் விலங்குத் தோல் (Fur trade) வணிகம்போன்ற புவிசார் பொருளாதாரப் போராட்டங்களைப் பார்த்தோம். அக்காரணங்களால்தான் இப்பகுதியில் தோராயமாக 1607 முதல் 1615 வரை தொடர்ச்சியான வன்முறை மோதல்கள் நடந்தன. முக்கியமாக, மிக்மாக் (Micmac) பூர்வகுடிகளுக்கும் அபெனாகி, பெனப்ஸ்காட் உள்ளிட்ட அயல் பூர்வகுடி இனங்களுக்கிடையே இவை நிகழ்ந்தன.
1616 முதல் 1619ஆம் ஆண்டுவரை ஐரோப்பியப் பெருந்தொற்று கோரத் தாண்டவமாடியது. பல்வேறு பூர்வகுடிகளின் எண்ணிக்கையில் 90 சதவிகித மக்கள் மாண்டனர். இதன் தாக்கத்தால், அந்நிலப்பரப்பிலிருந்த பழங்குடியினர் ஒன்றுபட்டு ஐரோப்பியரை எதிர்க்க அணிதிரண்டனர். இதன் தொடர்ச்சியாக 1600களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்கப் புரட்சிப் போர்வரையில் (1875 – 1878 வரை) போர்கள் தொடர்ந்தன.
இந்த இரண்டு பூர்வகுடிகளும் தங்களின் வாழ்நிலங்களை இழந்தனர். வேட்டைப் பகுதிகளையும் இரொக்வய் போன்ற பிற வலிமையான பூர்வகுடி இனத்திடம் இழந்தனர். அத்துடன் ஆங்கிலேய நிலவுரிமை மோதல்கள், அமைதி உடன்படிக்கைகள், அவற்றில் அத்துமீறல்கள் போன்றவையும் தீராத தலைவலியாக இருந்தன.
ஆங்கிலேயர்களுக்குச் சாதகமான சட்டங்கள், அமெரிக்க மத்திய அரசின் அங்கீகார மறுப்பு போன்ற சிக்கல்களுடனும் போராடிக்கொண்டிருந்தனர். அதனால், இரண்டு இனங்களும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தொடர்ச்சியாகப் பல போர்களில் ஈடுபடவேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
பீவர் போர்கள் (Beaver Wars – 1638 – 1655)
வலிமையான இரொக்வய் கூட்டமைப்பின் தாக்குதலை எதிர்கொண்டு, தங்களின் வளமான நதிப்படுகைகளையும் வணிகத் தடங்களையும் (நீர்ப்பாதைகள்) காக்கவும், தங்களின் இன மக்களின் கட்டாய வெளியேற்றத்தையும் தடுக்கவும் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது.
பூர்வகுடி இனங்களை ஒருங்கிணைத்தது கிங் பிலிப் போர் (King Philip’s War – 1675 – 1678)
ஆங்கிலேய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக கிங் வில்லியம் போரிலும் (King William’s War – 1688 –1699) இவ்விரு இனங்களும் இணைந்தே களமாடினர்.
குயின் ஆன் போர் (Queen Anne’s War – 1703 – 1713)
பூர்வகுடி மக்களின் தலைக்கு ஆங்கிலேயர்களால் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட காலகட்டத்துப் போர் இது. ஐரோப்பாவில் நடைபெற்று வந்த மாபெரும் ஆட்சி மாற்ற அரசியலின் (ஸ்பெயினும் பிரான்சும் ஒன்றிணையும் நிலை உண்டாகியிருந்தது) பிரதிபலிப்பாகும். அமெரிக்காவைத் தக்கவைத்துக்கொள்ள பிரான்ஸும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. பிரான்ஸுக்கு ஆதரவளித்து வலிமை சேர்த்தனர் பூர்வகுடி மக்கள். அவர்களின் மண்டையோட்டுத் தோலை உரித்து (scalp bounties) வருபவர்களுக்கு பிரிட்டனின் காலனியான அமெரிக்க அரசு பணப்பரிசு அறிவித்தது.

நில உரிமை மற்றும் எல்லை மோதல்கள் காரணமாக இவ்விரு இனமக்களுடன் ஆங்கிலேயர்கள் தொடுத்தது டமர் போர் (Dummer’s War: 1721 –1726) ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்திவந்த பிரெஞ்சு பாதிரியார்களை (குறிப்பாகச் செபாஸ்டியன் ரால்ஸ் முதலியவர்களை) வெளியேற்ற முயன்றதுடன், பூர்வகுடிகளின் சுதந்திரத்திலும் தலையிட்டதால், பதற்றம் உச்சத்தை அடைந்தது.
இப்போரின்போது மசசூசெட்ஸ் காலனியின் துணை ஆளுநர் வில்லியம் டமர் (William Dummer) பூர்வகுடி மக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார். கொல்லப்பட்ட பூர்வகுடிகளின் உரித்த உச்சந்தலைகளுக்குப் (bounty for Scalps) பெருமளவு பணப் பரிசுகளை அறிவித்தார்.

நாரிஜ்வாக் படுகொலையால் (Norridgewock Massacre) நிலைமை உக்கிரமானது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை செபாஸ்டியன் கொல்லப்பட்டது, கொந்தளிப்பை அதிகரித்தது. பல ஆண்டுகள் நீடித்த இந்த ரத்தக் களறியான போருக்குப் பிறகு, இரு தரப்பினரும் சோர்வடைந்தனர்.
இறுதியாக, 1725 மற்றும் 1726ஆம் ஆண்டுகளில் பூர்வகுடிகளுக்கும் ஆங்கிலேய காலனியாட்சிக்கும் இடையே டமர் ஒப்பந்தம் (Dummer’s Treaty) கையெழுத்தானது. இதன் மூலம் போர் முடிவுக்கு வந்து, தற்காலிக அமைதி திரும்பியது. மன்னர் ஜார்ஜ் போர் (King George’s War – 1744), பிரெஞ்சு – இந்தியப் போர் (French and Indian War – 1754) முதலியன, இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே காலனி ஆதிக்கத்திற்காகத் தொடர்ந்த போர்களாகும்.
1775ஆம் ஆண்டு மசசூசெட்ஸ் வளைகுடா காலனி அதிபயங்கரமான ‘மண்டையோட்டுப் பிரகடனம்’ (Scalp Proclamation) ஒன்றை வெளியிட்டது. பெனப்ஸ்காட் பூர்வகுடிகளை உயிருடனோ அல்லது அவர்களின் மண்டையோட்டைக் காட்டினாலோ பணப்பரிசு பெறலாமென அறிவித்தது. அதில் 12 வயதிற்கு மேற்பட்ட ஆண் மண்டையோட்டிற்கு அதிக பணப்பரிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பிரகடனம் பெனப்ஸ்காட் பூர்வகுடிகளுக்குப் புதைகுழியென்றால், அதற்குச் சற்றும் சளைத்ததல்ல அபெனாகிகள் எதிர்கொண்ட சவால்கள். ஆங்கிலேயக் காலனி 1759இல் நடத்திய ‘ரோஜர்ஸ் ரேஞ்சர்ஸ் ரெய்ட்’ (Rogers’ Rangers Raid) என்ற கொலைவெறியாட்டம், மேற்குப்புறத்து அபெனாகிகளை உயிரோடு எரித்து அவர்களின் கிராமங்களைச் சாம்பலாக்கியது.
இதற்கிடையில், பெனப்ஸ்காட் தலைவர் ஜோசஃப் ஒரொனொ (Joseph Orono) போர்ச்சூழலை விட்டு விலக, அமைதியையே தீர்வாகக் கருதினார். அமெரிக்கக் குடியேறிகளிடம் அமைதித் தூதுவராகச் சென்று, தன் சமூகத்தின் நலனுக்காகவும் நில உரிமைகளுக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச்செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பில், பசுமைக்குள் இவ்விரண்டு இனங்களும் பொதிந்துகிடந்தன. பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்தபின், அதன் எல்லையில் ஒதுக்கப்பட்ட நிலங்களில் எஞ்சியவர்கள் வசிக்கின்றனர். மாகாண, மத்திய அரசின் அங்கீகாரங்களை ஓரளவு பெற்று வருகின்றனர். இருப்பினும், தளராத மனதுடன் தங்கள் பண்பாட்டுக்கூறுகளை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் இம்மக்கள். தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஈரமண்வாசனை மிகுந்த இவ்வீரகுடிகள்.
குரல் தொடரும்…
பெட்டிச் செய்தி
1930களில் வெர்மான்ட் (Vermont) மாநிலத்தின் நிதியுதவியுடன் இனப்பெருக்கத் தூய்மைவாத (யூஜெனிக்ஸ்) ஆய்வுகளை வெர்மான்ட் பல்கலைக்கழகம் நடத்தியது. இதன் விளைவாக, ‘நாடோடிகள்’ (ஜிப்சிகள்) அல்லது ‘மனநலக் குறைபாடு உள்ளவர்கள்’ என முத்திரைகுத்தப்பட்ட பல மேற்கு அபெனாகி (Western Abenaki) தனிநபர்களும் குடும்பங்களும் குறிவைக்கப்பட்டு, கட்டாயக் கருத்தடைக்கு ஆளாக்கப்பட்டனர். கட்டாயக் கருத்தடைகள், குழந்தைகளை அரசுக் காப்பகங்களுக்கு எடுத்துச்செல்லுதல் போன்ற துன்புறுத்தல்களில் இருந்து தப்புவதற்காக, பல அபெனாகி (Abenaki) குடும்பங்கள் தீவிர மௌனத்திற்குள் ஆழ்ந்தன. அவர்கள் தங்களது அனைத்து பழங்குடி அடையாளங்களையும் மறைத்தனர். பெயர்களை மாற்றிக்கொண்டு குடும்ப ஆவணங்களை அழித்தனர். இறுதியாக, வெர்மான்ட் பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டில் தனது இனப்பெருக்கத் தூய்மைவாத (யூஜெனிக்ஸ்) ஆய்விற்காக மன்னிப்பு கோரியது. 2021 ம் ஆண்டில், வெர்மான்ட் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியது.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.





