பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள். இலக்கின்றி மெல்ல நடந்து கொண்டிருந்தாள். ஏதாவது திங்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், கையில் காசு எதுவும் இல்லை. காலையில் அப்பா எடுத்து வைத்த காசைக் கொண்டுவர மறந்துவிட்டாள்.
அந்த அரசு நடுநிலைப் பள்ளிக்கு வெளியே வயதான பாட்டி ஒருவர் சாக்கை விரித்து அதன் மேல் சீசனுக்குத் தகுந்தாற் போல் மாங்காய் கீற்றுகளை உப்பு, மிளகாய்ப்பொடி கலந்தும், பலாச்சுளைகளைப் பிரித்து வைத்துக் கொண்டும், ஆரஞ்சுப் பழங்களை இரண்டாக வெட்டி உப்பு, மிளகாய்ப்பொடி தடவியும், இலந்தைப்பழங்கள், ஜவ்வு மிட்டாய் என்று கிடைத்ததை விற்றுக் கொண்டிருப்பார். வசந்தாவுக்கு பெரிய நெல்லிக்காய்களைக் கழுவிக் கல்லுரலில் போட்டு,, கல்லுப்பு, பச்சை மிளகாய் சேர்த்து இடித்து விற்கும் நெல்லிக்காய்ப் பொடிதான் மிகவும் பிடிக்கும். தினமும் அதைத்தான் வாங்குவாள்.
அப்போதுதான் அமுதாவைப் பார்த்தாள். அவள் ஒரு சிறிய துண்டுப் பேப்பர் நிறைய நெல்லிக்காய் பொடியோடு வந்து கொண்டிருந்தாள். வசந்தாவைப் பார்த்தவள் சிறு புன்னகையுடன் நீட்டினாள்.
“இந்தா… எடுத்துக்கப்பா…”
வசந்தாவுக்கு நாக்கில் நீர் ஊறியது. ஆனாலும் தயங்கினாள்.
“சும்மா எடுத்துக்க…” என்றவள் அவளைப் பார்த்து “எங்கிட்டல்லாம் வாங்கிச் சாப்பிட மாட்டியாப்பா?” என்றாள் கம்மிய குரலில்.
“இல்லல்ல..” வசந்தா அவசரமாக நெல்லிக்காய்ப் பொடியை அள்ளினாள். வாயில் போட்டுச் சுவைத்தவாறே அமுதாவைப் பார்த்துச் சிரித்தாள். இடைவேளை முடிவடைந்ததற்கான மணி ஒலித்ததும் இருவரும் அவசரமாகக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு வகுப்புக்குள் ஓடினர்.
வசந்தா முதல் வரிசையில் அமர்ந்தாள். அமுதா கடைசி வரிசை. வசந்தா அவளைத் தன் அருகில் வந்து அமருமாறு அழைக்க, அமுதா அவசரமாக மறுத்தாள்.
வசந்தா எழுந்து பின்வரிசைக்குச் சென்றாள். “அமுதா நீ நல்லா கணக்கு போடுவேல்ல? அங்க வந்து உக்காரு. எனக்கும் சொல்லித் தாப்பா.”
“ஐயையோ… நாங்கள்லாம் உங்ககூடச் சேர்ந்து உக்காரக் கூடாது. ஊருக்குள்ள தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றாள் அமுதா. வசந்தா அவளை வலுக்கட்டாயமாக முன்வரிசைக்கு இழுத்துப் போனாள்.
அது ஒரு சிற்றூர். அங்கே சாதி முக்கியமான ஒன்றாக இருந்தது. ஊருக்குள் நிலவி வரும் சாதிப் பாகுபாடு பள்ளிக்கூடத்திலும் குடியேறியிருந்தது. அறிவியல் பாடம் எடுக்கும் சாந்தா டீச்சர் உள்ளே நுழைந்தார். கூச்சலிட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் அமைதியாக அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
சாந்தா டீச்சர் ஒருமுறை வகுப்பைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவர் முன்வரிசையில் இருந்த அமுதாவைப் பார்த்து முகத்தைச் சுளித்தார்.
“ஏய்… நீ எங்கடி இங்க உக்காந்திருக்க? அவ்ளோ பவுசு வந்துருச்சா? போடி பின்னால…” கையில் இருந்த பிரம்பால் அமுதாவின் காலில் சுளீரென்று இரண்டு அடிகள் வைத்தார். அமுதாவைவிட வசந்தா அதிகம் துடித்துப் போனாள்.
“என்னடி இவகூடல்லாம் சிநேகிதம்? உங்கப்பாட்ட சொல்லட்டுமா?” வசந்தாவையும் மிரட்டினார். அவர் அவளுக்குத் தூரத்துச் சொந்தமும்கூட.
வசந்தா மெல்லத் திரும்பி அமுதாவைப் பார்த்தாள். அவள் முகம் அவமானத்தில் சிவந்து கன்றியிருந்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு இடைவேளையில் அமுதாவைத் தேடினாள் வசந்தா. அவள் தனது மேசையில் கவிழ்ந்து கொண்டு இன்னும் அழுது கொண்டிருந்தாள். வசந்தா மெல்ல அவள் முதுகைத் தொட்டாள். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“சா…சா…சாரிப்பா… டீச்சர் உன்னை அடிப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. மன்னிச்சிக்க” என்று வசந்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் அமுதா.
“அழாதப்பா… வா சாப்பிடலாம்” அமுதா மறுத்தாள். “நீங்க எங்க கூடல்லாம் பழகக் கூடாது. வீணா பிரச்னை ஆகும்.”
வசந்தா சிரித்தாள்.
“கிளாஸ் டைம்ல வேணா டீச்சர் நம்மள கேள்வி கேட்கலாம். பிரேக்ல நாம என்ன வேணாலும் பண்ணலாம். இனிமே நாம ஒண்ணாதான் உக்காந்து சாப்பிடப் போறோம்” என்று அமுதாவை இழுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றாள்.
விளையாட்டு மைதானத்தில் இரண்டு பக்கமும் நிறைய மரங்கள் நிழல் தந்து கொண்டிருந்தன. அதில் ஒரு மரம் மட்டும் குட்டையாக இருக்கும். அங்கு வசந்தா மட்டுமே அமர்வாள். இன்று அமுதாவும்.
இருவரும் டிபன் டப்பாக்களைத் திறந்தார்கள். அமுதாவின் உணவை மோப்பம் பிடித்தாள் வசந்தா.
“ம்ம்ம்… ஆஹா… வாசனை தூக்குது. என்ன சோறு இது?”
“நேத்து வெச்ச கருவாட்டுக் குழம்பு. ராகி களியோட சாப்பிட்டா இன்னும் சூப்பரா இருக்கும். ஆமா நீ என்ன கொண்டு வந்த?” வசந்தாவின் டப்பாவைப் பார்த்தாள். உள்ளே காரப் பணியாரங்கள் இருந்தன.
இருவரும் உணவைப் பகிர்ந்து கொண்டார்கள்.
“எனக்கு இனிப்புப் பணியாரம் சாப்பிடணும்னு ரொம்ப ஆசை. ஆனா அம்மா செஞ்சு தரவே மாட்டேங்குது. உங்கம்மா செஞ்சு தருவாங்களா?” அமுதா பணியாரத்தைக் கடித்துக் கொண்டே கேட்டாள்.
வசந்தா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின்னர் மெல்லிய குரலில்,” எனக்கு அம்மா இல்லை. நான் பிறந்தவுடனே செத்துப் போயிட்டாங்க. சமையல்காரப் பாட்டிதான் செஞ்சு தருவாங்க. நாளைக்கு லீவுதானே… நீ எங்க வீட்டுக்கு வரியா? பாட்டியைச் செஞ்சு தரச் சொல்றேன்” என்றாள்.
அமுதா சில நொடிகள் யோசித்தாள். “ஏய்.. .ப்ளீஸ்பா.. நாளைக்குச் சனிக்கிழமை. ஸ்கூல் லீவுதானே. வாப்பா… நாம சேர்ந்து வீட்டுப் பாடம் எழுதலாம். எங்கப்பா ரொம்ப நல்லவங்க. உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டாரு. எங்க வீட்ல நெறயா கலர் மீனெல்லாம் இருக்கு. பார்க்கலாம்” என்று ஆசை காட்ட, அமுதா ஒப்புக்கொண்டாள்.
மறுநாள். அமுதா கையில் நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வசந்தாவின் வீட்டுக்குப் போனாள். ஊரிலேயே பெரிய வீடு வசந்தாவுடையது. அவள் அப்பா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்தார்.
சிவப்பு சிமெண்ட் மெழுகிய பெரிய திண்ணை இருந்தது. வசந்தா அவளைப் பார்த்ததும் ஓடிவந்து கைகளைப் பற்றிக் கொண்டாள். அமுதா திண்ணையிலேயே அமர்ந்தாள்.

“ஏய்… என்னடி இது… வா உள்ள” என்று வசந்தா அவளை இழுத்துப் போனாள்.
உள்ளே பெரிய முற்றம் விரிந்திருந்தது. ஒரு ஓரமாக மிளகாய் வற்றல் காய்ந்து கொண்டிருந்தது. இன்னொரு புறம் புளி காயப் போட்டிருந்தது.
முற்றத்தைத் தாண்டிய ஓரத்தில் பெரிய மீன் தொட்டி இருந்தது. உள்ளே ஆரஞ்சும் கறுப்புமாக நிறைய மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அமுதா அங்கேயே அமர்ந்து விட்டாள். இருவரும் வெகுநேரம் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சமையல் பாட்டி வசந்தியை உள்ளிருந்து அழைத்தார். உள்ளே போனவள் உணவருந்தும் மேசையில் இனிப்பு பணியாரங்களை எடுத்து வைத்துவிட்டு அமுதாவை அழைத்தாள்.
அமுதா உள்ளே போனாள். அவளை நாற்காலியில் அமரச் செய்து பணியாரம் நிறைந்த தட்டை அவள் கையில் கொடுத்தாள் வசந்தா. பண்டத்தைப் பார்த்து அமுதாவின் விழிகள் விரிந்தன. வசந்தாவும் எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினாள்.
அப்போது, “என்னம்மா… உன் சிநேகிதி வரான்னு சொல்லிட்டு இருந்தியே… வந்துட்டாளா..?” என்றவாறே உள்ளே வந்த வசந்தாவின் தந்தை பழனியப்பன் அமுதாவை உற்றுப் பார்த்தார்.
“ஏய்.. நீ.. கீழத்தெரு மாரியப்பன் மகதானே? எடுபட்ட கழுதை.. நடு ஊட்டுக்குள்ள வந்து உக்கார்ற அளவு தைரியம் வந்துடுச்சா? ஓடு மொதல்ல வெளியே” என்று கையை அடிக்க உயர்த்தினார்.
அமுதாவின் முகம் வெளிறிப் போயிருந்தது. கையில் எடுத்த பணியாரத்தைத் தட்டிலேயே போட்டுவிட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு கண்ணீர் வழிய வெளியேறினாள்.
“கண்ட கழுதைங்களை சிநேகிதின்னு கூட்டிட்டு வந்து ஊட்டை அழுக்காக்குறியா நீயி? தராதரம் தெரிஞ்சு பழகணும். இதுங்களை எல்லாம் வாசல்லயே நிறுத்தாம உள்ள கூப்பிட்டு உபசாரம் வேறயா? முதல்ல வீட்டைக் கழுவி விடச் சொல்லணும்” உறுமிக் கொண்டே வெளியே போனார்.
வசந்தாவுக்கு அப்பாவின் இன்னொரு முகம் பார்த்து அதிர்ச்சியானது.
திங்கட்கிழமை பள்ளிக்குப் போனவுடன் அமுதாவைத் தேடினாள். அவளிடம் ஓடி மன்னிப்பு கோரினாள். அமுதா பேசாமல் நகர்ந்து விட்டாள். வசந்தா முகம் வாடி நின்றாள்.
அதன் பின்னர் வசந்தா அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசுவதையும், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் தவிர்த்தாள். அவரும் சின்ன பெண்தானே போகப்போக சரியாகிவிடுவாள் என்று விட்டுப்பிடிக்க நினைத்தார்.
சில நாட்கள் கழிந்தன.
ஊருக்குத் தெற்கில் ஒரு தென்னந்தோப்பு விலைக்கு வருவது அரசல்புரசலாக பழனியப்பனின் கவனத்துக்கு வந்தது. அவருக்கு அந்தத் தோப்பின் மீது ஒரு கண். எப்படியாவது அதை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.
“ஏண்டா அழகிரி… அந்தத் தோப்பு இளநி குடிச்சிருக்கியா?” தனது பண்ணையத்துக்காரனிடம் விசாரித்தார்.
“குடிக்காமயா சாமீ… சும்மா கல்கண்டா இனிக்குமே. எளநியும் பெரிய சைசா இருக்கும். ஒண்ணு குடிச்சா வவுறு ரொம்பிக்குங்க. தேங்கா அத விட ருசி. தோப்பு நம்ம பெருமாள் ஐயரோடது. அவரு மருமகன்தான் பாத்துக்கிறாரு. ஐயர் பட்டணத்தில மகன்கூட இருக்காரு” என்று சொன்னதில் கூடுதல் தகவல்களும் கிடைத்தன.
தோப்பை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற எண்ணம் பழனியப்பனுக்கு வலுப்பட்டது.
பெருமாள் ஐயரைத் தேடிக் கொண்டு புறப்பட்டுப் போனார்.
இரண்டு மணி நேரப் பயணம். முகவரி கையில் இருந்ததால் அதிகம் அலைச்சலின்றி வீட்டுக்குப் போனார்.
“சாமி… சாமி… சாமியோவ்…” உள்ளிருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தார்.
“இருங்க… சாமி தோ வரார்” அடுத்த நொடி பெருமாள் ஐயர் பிரசன்னமானார்.
“யாருங்காணும் அது?” வெளியே வந்தவர் அடையாளம் கண்டு கொண்டு,”அடடே! பழனியப்பனா? எங்கே இவ்வளவு தூரம்?” திண்ணையில் அமர்ந்தார்.
“நல்லாருக்கீங்களா சாமி?” பழனியப்பன் இன்னும் நின்று கொண்டிருந்தார்.
“நேக்கென்ன ஓய்… புள்ளையாத்துல ஷேமமா இருக்கேன். ஆமா… என்ன விஷயம்?” என்றவர் அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “உக்காரும்” என்று அரை மனதாகத் திண்ணையைச் சுட்டிக் காட்டினார்.
பழனியப்பன் பட்டும் படாமல் திண்ணையில் அமர்ந்தார்.
உள்ளிருந்து ஐயரின் மனைவி வெளிப்பட்டார். வெள்ளி டம்ளரில் ஐயரிடம் காபியை நீட்டியவர், நசுங்கிய அலுமினிய டம்ளரை இவரருகில் வைத்து விட்டு நகர்ந்தார்.
பழனியப்பனுக்கு காபியைக் குடிக்க மனமில்லை.
“போட்டாச்சு… காபித்தூள், சர்க்கரை விக்கிற விலையில் இதை வீணடிக்க முடியுமோ? குடிங்கோ” என்றூ ஐயர் கிட்டத்தட்ட கட்டளையிட்டார்.
காபி தொண்டையில் கசந்தது.
குடித்து முடித்து நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“அதுக்கென்ன பேஷா வாங்குங்கோ. எனக்கு இனிமே தோப்பை வந்து பார்க்க தோதுபடாது. மாப்ளையும் ஆறு மாசத்துல குடும்பத்தோட ஃபாரின் போறார். வித்து ஆளாளுக்குக் கைல காசைக் குடுத்துட்டோம்னா நமக்கும் வேலை மிச்சம் பாருங்கோ…” என்று சிரித்தார் ஐயர்.
விலை படிந்து அடுத்த வாரம் கிரயம் செய்ய முடிவு செய்தார்கள்.
பழனியப்பன் திருப்தியாக எழுந்தார்.
“ஒருவா சாப்டுட்டு போங்கோ. நாழியாய்டுத்து. அடுத்து ஊருக்குத்தானே?” என்று ஐயர் உபசரித்தார்.
பழனியப்பன் மணியைப் பார்த்தார். மதியம் இரண்டு. வெயில் கொளுத்தியது. சாப்பிட்டுக் கிளம்பினால் மாலைக்குள் ஊருக்குப் போய்விடலாம்.
சரியென்று தலையசைத்தார். கிணற்றடிக்குச் சென்று கைகால் கழுவி விட்டு உள்ளே செல்ல வந்தார்.
திண்ணையிலேயே வாழை இலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் அதே நசுங்கிய அலுமினிய டம்ளரில் தண்ணீர். மனசு சட்டென்று உடைந்தது. வெட்டவெளியில் ஆடைகள் உருவப்பட்டு நிற்பது போல் அவமானமாக இருந்தது.
சட்டென்று செருப்புகளை அணிந்து கொண்டு சொல்லிக் கொள்ளாமலே வெளியேறினார். பெருமாள் ஐயர் கூப்பிடக் கூப்பிட காதில் வாங்காமல் நடந்தார்.
மாலை வீட்டுக்கு வந்தவர் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த வசந்தாவின் அருகில் வந்து தலையைத் தடவினார்.
அவள் நிமிர்ந்து பார்க்காமல் எழுதிக் கொண்டிருந்தாள்.
“அம்மாடி… உன் சிநேகிதி அமுதாவைக் கூட்டிட்டு வா. உங்க ரெண்டு பேருக்கும் இனிப்புப் பணியாரம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லும்போதே வசந்தாவின் கை மீது கண்ணீர்த் துளிகள் சூடாக வழிந்தன.
ஆச்சரியமாக எழுந்த வசந்தா ஆனந்தமாக அமுதாவின் வீட்டுக்கு ஓடத் தொடங்கினாள்.
*
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.




