ஹாய் தோழமைகளே, நலம் தானே?

இந்த வாரம் இசையின் உறுதியான நிலைப்பாட்டில் அவள் அடைந்த வெற்றியைப் பார்ப்போம்.

அலுவலகத்தில் வேலையாக இருந்த இசைக்குத் தலைவலி மண்டையைப் பிளந்தது. உடலும் ஓய்வுக்காகக் கெஞ்சியது. ஆனாலும் அலுவலகம் மற்றும் வீட்டுப் பொறுப்பை யோசித்தால் ஓய்வைப் பற்றி நினைக்கக்கூட முடியாத நிலை.

என்ன செய்வதென்று முடிவுக்கு வர அவளால் இயலவில்லை. சிறு வயதில் இருந்தே பெரியவர்களை மதிக்க வேண்டுமென மிகவும் ஆணித்தரமாகச் சொல்லி வளர்க்கப்பட்டதால், அவளால் அவர்களை மீறி உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளத் துணிவில்லை. ஆனாலும் தன் உடலுக்குச் செய்யும் கொடுமையும் புரிந்ததால் அவளால் அப்படியே தொடரவும் முடியாத நிலை. இதே குழப்பத்திலேயே இருந்தவளுக்கு உணவு நேரம் என்பதுகூட மறந்து விட்டது. சிறிது நேரம் அன்னையிட்ம் பேசினால் கொஞ்சம் தெளிவு பிறக்குமெனத் தோன்றியதால், மாலை நேராக அம்மாவிடம் சென்றாள்.

“ஹே இசை, வா வா ஒரே ஸர்ப்ரைஸா இருக்கு!“ என்று வரவேற்ற அம்மாவிடம், “சும்மா உங்களை எல்லாம் பாக்கலாம்னுதான். வந்தேன்“ என்று சமாளித்தாள்.

“சரி வா, காபி சாப்டு, நா அடை ஊத்தறேன், உனக்குப் பிடிக்குமே“ என்றவாறே காபியை நீட்டிய அம்மாவிடம், “சரிம்மா, எனக்கும் ரொம்ப பசி மதியம்கூடச் சாப்பிடலை“ என்றாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்த அம்மா, ஒன்றும் பேசாமல் அடை ஊற்றி அவளைச் சாப்பிட வைத்தார். பின் பிரபுவிற்கு போன் செய்து, “எனக்கு உடல் நலமில்லை என இசையை வீட்டிற்கு அழைத்தேன், அவளும் பதற்றத்தில் உங்களிடம் சொல்லாமல் வந்து விட்டாள். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் மாப்பிள்ளை“ என்றாள்.

பிரபு, “அதனால் என்ன அத்தை, வேண்டுமானால் அவள் அங்கேயே இருந்து உங்களுக்குச் சரியான பிறகு வரட்டும்.“

“இல்லை மாப்பிள்ளை, அவள் நாளை காலையில் வந்து விடுவாள்.“

“சரி அத்தை, ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடுங்கள்“ என்றவாறே இணைப்பைத் துண்டித்தான்.

இருவருக்கும் சண்டை எதுவுமில்லை என்று நிச்சயமாகத் தெரிந்ததும் நிம்மதியான அம்மா இசையிடம், “சொல்லுடா எப்படி இருக்க, அங்க உங்கிட்ட எல்லாரும் நல்லா பழகுறாங்களா?“ கேட்டார்.

“எல்லாரும் நல்லா பழகுறாங்கமா, ஆனா எனக்குத்தான் ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு.“

“ஏண்டி, எல்லாரும் நல்ல மனுஷங்களா இருக்கும் போது உனக்கு ஏன் அப்டிலாம் தோணுது?“

“அம்மா, எல்லாரும் நல்லவங்கதான், ஆனா காலைல எழுந்ததுல இருந்து நைட் படுக்குற வரைக்கும் எனக்குக் கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்ல, பல நாள் சாப்புடறதே இல்ல, சாப்புடற அன்னைக்குக்கூட வேகமா கொறிக்கத்தான் நேரம் இருக்கு, அதான் பிரச்னை.“

“ம்ம், வேலைக்குப் போற பொண்ணுங்களுக்கு இந்தப் பிரச்னை வரதான் செய்யும், நாமதான் வழி தேடணும்.“

“எங்கம்மா, சமையலுக்கு ஒரு ஆளைப் போட்டுக்கலாம்னு சொன்னா, இதெல்லாம் சரியா வராது, நீ வேணா வேலைய விட்டுடுனு சொல்றாங்க.“

“நீ அந்த ஐடியால இருக்கியா இசை?“

“நிச்சயமா இல்லைமா, நானும்தானே பிரபுவ போல படிச்சி இருக்கேன், எதுக்குமா சும்மா வீட்டில் இருந்து வெறும் சமையல் செய்யணும்?

“சந்தோஷம் தங்கம், பொண்ணுங்களுக்கு வேலையும், அதில் வர வருமானமும் ரொம்ப முக்கியம்டா. அதை விட்டுடவே கூடாது.“

“ஆனா, வீடு, ஆபிஸ்ன்னு இப்படியே செஞ்சிட்டு இருந்தா சீக்கிரம் நான் Collapse ஆயிடுவேன் போல.“

“உன்னை யாரு இப்டியே செய்யச் சொன்னா? அவசியமே இல்லயே.”

“பின்ன வேற என்ன செய்யலாம் சொல்லு ? பிரபு ஆபிஸ்ல இருந்து வந்து ஹாயா எக்ஸர்சைஸ் செய்றான், டிவி பாக்குறான், அப்புறம் சாப்ட்டு நல்லா தூங்குறான். ஆனா நா மட்டும் காலையில இருந்து வேலை செய்யுறேன். என்ன நியாயம் இது?“

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

“சரிம்மா, முயற்சி செய்யறேன்.“

“தங்கம், உன்னோட பிரச்னைய பிரபு புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்க்கும் போதே அவரால ஏன் இவ்வளவு நாள் புரிஞ்சிக்க முடியலன்னு நீ யோசிக்கணும். நிறைய empathy வேணும். நீங்க ரெண்டு பேரும் ஒரு நாலு நாளைக்கு எங்கியாச்சும் போய் ரிலாக்ஸ்டா பேசுங்க, அங்க நீங்க உங்க உத்யோகம், சம்பளம், பொறுப்பு எல்லாத்தையும் மறந்துட்டு நீ இசை, அவர் பிரபு அதை மட்டும் மனசுல வச்சுக்கங்க.  காலேஜ் படிக்கும் போது நீங்க வெளில போனா  எப்படி முகம் முழுக்கச் சிரிப்போட உற்சாகமா போவ, அந்த நாள மனசுல வச்சிட்டுப் போ. கண்டிப்பா தீர்வு கிடைக்கும்” என்றவாறே அவள் தலையைக் கோதினாள். “இன்னைக்கு இங்கேயே தூங்கு. அவர் கிட்ட நா சொல்லிட்டேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு எப்படிப் போறதுன்னு முடிவு பண்ணு.“

அடுத்த நாள் நேராக அலுவலகம் சென்று மாலையில் வீட்டிற்குப் போன இசை, பிரபுவுடன் வெளியூர்ப் பயணம் பற்றிப் பேசிய போது அவனும் உற்சாகமாகச் சம்மதித்தான். அவனுக்குமே இசை அவனுக்கு நேரமே தருவதில்லை என்கிற ஏமாற்றம் இருக்கவே செய்தது.

அடுத்து வந்த வாரக் கடைசியில் பாண்டிச்சேரி போக ஏற்பாடுகள் செய்து, அதற்கு இரண்டு நாள் முன்னதாகவே இசை விடுமுறை எடுத்துக்கொண்டு உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக்கொண்டாள். பாண்டி வரைக்கும் நீண்ட கார் பயணமும், காரில் ஒலித்த பாடல்களும், நடு நடுவே நிறுத்தி ரோட்டோரக் கடைகளில் தேநீர் குடித்து அரட்டை அடித்ததும் அவர்கள் இருவருமே பழைய இசை, பிரபுவை உணர்ந்தனர்.

போய்ச் சேர்ந்து, ரெப்ரெஷ் செய்து கொண்டு கடற்கரையில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்த போது உள்ளவாறே இசைக்குத் தனக்குள்ள சவால்களே மறந்து போயிற்று.

பிரபு, “இசை இப்போ நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்படி இருக்கத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா கல்யாண வாழ்க்கைல நமக்கான நேரம்னே ஒண்ணு இல்லாம போச்சு“ என்றான் வருத்தமாக.

இசை, “நமக்கான நேரமா? பிரபு நா எனக்கான நேரம்னே ஒண்ணு இல்லாம ஓடிக்கிட்டு இருக்கேன், அது உன் கண்ணுல படவே இல்லையா?” என்று வருத்தம் நிறைந்த குரலில் கேட்டாள்.

“நீ என்ன சொல்ற இசை?”

“பிரபு, காலையில எழுந்து நீ என்ன பண்ணுவ?“

“morning routines முடிச்சிட்டு காபி குடிப்பேன்.”

“அப்பறம்?”

“கொஞ்ச நேரம் எக்ஸர்சைஸ் செய்வேன், அப்புறம் ஆபிஸுக்குப் போவேன்.“

“நா என்ன பண்றேன்னு தெரியுமா? எழுந்து எல்லாருக்கும் காபி கொடுத்து, காலை டிபன், அதுக்கு சட்னி பண்ணி ஹாட் பேக்ல வச்சிட்டு, மதியத்துக்கு சமைச்சி, உனக்கும் எனக்கும் பேக் பண்ணி, உனக்கு தண்ணிகூட பாட்டில்ல ஃபில் அப் பண்ணிட்டு, ரெடியாகி சாப்பிட்டுக் கிளம்பணும். இத்தனையும் எட்டு மணிக்குள்ள. பாதி நேரம் நா பண்ணின டிபன சாப்பிடக்கூட நேரமிருக்காது. சரி காபியாவது நிதானமா குடிக்கிறேனான்னு கேட்டா, அதுவும் இல்லை. ஏதோ ஒரு வேலைக்கு நடுவுல ஒரு கடமை போலதான் குடிக்க நேரமிருக்கு. எனக்கும் ஒரு ரிலாக்ஸ்ட் காபி, காலையில கொஞ்சம் எக்சர்ஸைஸ் எல்லாம் தேவைப்படாதா  பிரபு?”

“ஏன் தேவை படாம, கண்டிப்பா உனக்குத் தேவை. நீதான வேலைய விடமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற? நான் என்ன செய்ய?”

“பிரபு, நானும் நீயும் ஒரே காலேஜ் ஒரே டிகிரிதான் வாங்கினோம். அப்போவே உனக்கு என்னோட கனவு தெரியும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது இதெல்லாம் அழிச்சிட்டு வீட்டுல இருக்க வைக்கவா?”

பிரபுவால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவள் கேள்வியில் இருந்த நியாயம் முகத்தில் அறைந்தது, அதைவிடக் கல்யாணத்திற்குப் பிறகு அவளது வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்று புரிந்ததால் மனதில் வலியும் கூடியது.

இசையின் முகத்தில் பழைய உற்சாகத்தைக் கொண்டு வருவதே தனது காதலின் வெற்றி என முடிவு செய்து கொண்டான்.

இப்போது இசையின் சவால், பிரபுவிற்கும் சவாலானது. இருவரும் சேர்ந்து எப்படி அதை வெற்றி கொள்ள போகிறார்கள் என அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.