“டீச்சர். . .டீச்சர். . .”
பெருத்த குரலோடு ஓடிவந்து வினவுகிறாள் இன்பா.
“ஏன் இவ்ளோ வேகமா வர்ற. . . என்னன்னு சொல்லுமா இன்பா. . .”
“டீச்சர், நீங்க ஆண், பொண்ணுன்னு எல்லோரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பீங்கன்னு தெரியும். ஆனா இதுல மட்டும் ஏன் இப்படி?”
“என்னன்னு விளக்கமா சொல்லேன் இன்பா. .”
“சூர்யா என் வகுப்புலதான் படிக்கறான். அவனுக்குக் கொடுத்த யூனிஃபார்ம் சட்டைல பாக்கெட், கால் சட்டைல கூட ரெண்டு பாக்கெட்டு இருக்குது. என்னோட ஆடைல ஒன்னு கூட இல்லியே. . .ஏன் டீச்சர்?”
“ஓ பாக்கெட் வேணுமா இன்பா. . .வா உட்கார். உனக்கொரு கதை சொல்றேன்.”

artormanliness.com (17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரியா அரசர் இரண்டாம் ஃபெர்தினாந்து முதன்முதலில் ‘பாக்கெட் பவுச்’- தன் ஆடையுடன் தொங்கவிட்டு பயன்படுத்தினார். பின்னாளில் பாக்கெட் தோன்ற இதுவே prototype)

“300 வருசத்துக்கு முன்ன பாக்கெட்டுங்கிறது யார் ஆடையிலும் வைச்சு தைக்கற பழக்கம் இல்ல. காசு கண்டுபிடிச்சதுக்கப்புறம் அதைப் பத்திரமா வைச்சுக்கணும்னு ஆண்கள் பேண்ட்ல பாக்கெட் வைச்சு தைச்சு போட்டுக்கிட்டாங்க. அப்போ ஆண் வெளில போய் சம்பாரிக்க சமூகம் அனுமதிச்சதால, அவங்க மட்டும் உடைல பாக்கெட் வைச்சுக்கிட்டாங்க. பொண்ணுங்க தான் வீட்லயே இருந்தாங்களே. வெளிய போய் சம்பாதிக்கிறதுக்கு பெண்ணுக்கு அப்போ அனுமதி இல்ல.”

“இந்த மாதிரி சூழல்ல போர் வந்தது. ஆண்களை மட்டும் கூப்பிட்டா ஆள் பற்றாக்குறைன்னால பெண்களும் போருக்கு வரலாம்னு சொன்னாங்க. அங்க ஆண், பெண் இருவருக்கும் ஒரே உடை தான். ஏன்னா துப்பாக்கி, குண்டு, மருந்து பொருள்கள் எல்லாம் வைச்சிக்க பாக்கெட் வேணும்ல? அதனால…”

“அங்க போன பெண்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிடுச்சு. ஆகா, இத்தனை பாக்கெட் இருக்கே, எல்லாத்தையும் கையில வைச்சிக்கத் தேவையில்ல. பாக்கெட்டுலயே வைச்சுக்கலாம். இந்த மாதிரி உடைல பாக்கெட் வைச்சு தராங்கன்னே சில பெண்கள் போருக்கு போனாங்க இன்பா..”

pinterest (பெண்கள் முதன்முதலில் பாக்கெட் பயன்படுத்தத் தொடங்கியது இரண்டாம் உலகப் போரில் தான்!)

“போருக்கு போகும் போது, ‘ஆகா, நாங்க பாக்கெட் வைச்ச ஆடை போடப் போறோம்’னு எல்லார்கிட்டயும் மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டே போனாங்கன்னா பாரேன். “

“பாக்கெட்டுக்காகவா போருக்கு போனாங்க மிஸ்?”

“ஆமாமா…ஆனா போர் முடிஞ்சதும் அந்த ஆடை போட அனுமதி இல்லை. அதுவுமில்லாம போர்ல போட்டதை தினசரி போடமாட்டமில்ல? அதனால திரும்ப பாக்கெட் இல்லாமயே பெண்கள் ஆடை போட வேண்டியதா போச்சு.”

“இப்ப வரைக்கும் பெண்களோட சில ஆடைகள்ல பாக்கெட் வைச்சிருந்தாலும் பெரும்பாலான ஆடைகள்ல பாக்கெட்டே இருக்கறதில்லை. ஆனா வயது வித்தியாசம் இல்லாம எல்லா ஆண்கள் ஆடைகளிலும் பாக்கெட் வைச்சு தைக்கப்படுது.”

“பெண்கள் ஆடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்ற முக்கியமானவைகளை கைகளிலோ அல்லது அதுக்குனு தனிப்பைகளிலோ கொண்டு போக வேண்டியதா இருக்குது. அதனால பொருள்கள் மேலயே எப்போது கவனம் செலுத்த வேண்டியதாவும் இருக்கு. அது முடியாதபோது பொருள் இழப்பும், வேலைப் பளுவும் பெண்களுக்கு ஏற்படுது. இருக்குற சுமைல இதுவொரு கூடுதல் சுமைன்னுதான் சொல்லணும் இன்பா. . .”

“நீ சொல்ற மாதிரி பாக்கெட் வைச்சா இது போன்ற சிரமங்கள் இல்லாம நல்லா இருக்கும்தான். அருமையா சொன்ன இன்பா. நம் அரசாங்கம் அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை தருது. அதுவுமில்லாம அரசாங்கம் பெண் கல்வி மேம்பாடு அடைய பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருது.”

momspresso.com (அனைவருக்கும் கல்வி இயக்கம் சின்னம்)

“பாரு… ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சின்னத்துலகூட பெண் குழந்தைதான் முதல்ல இருக்கு பிறகுதான் ஆண் குழந்தை படம் வைச்சிருக்கு அரசு. அதனால பெண் குழந்தைகளுக்கான சீருடைகளிலும் பாக்கெட் வைங்கன்னு அரசாங்கத்திடம் இன்பா அனைத்து பெண் குழந்தைகள் சார்பா கோரிக்கை வைக்கறான்னு சொல்லுவோம். அடுத்த வருடம் தவறாம உன்னைபோல பெண்களுக்கான ஆடைகளில் பாக்கெட் தைச்சி தருவாங்க. நீங்களும் பொருள்களைப் பத்திரமா வைத்துக் கொள்வீங்கன்னு நம்புவோம் இன்பா. . .சரியா?”

“ரொம்ப அருமைங்க டீச்சர். எங்களுக்கும் பாக்கெட் வேணும் இதை அரசாங்கத்துக்கிட்ட சொல்லிடுங்க. அம்புட்டுதேன். . .”

“சரி டா செல்லம். மாற்றம் நடக்கும் கவலைப்படாத வீட்டுக்குப் போ. . .”

கட்டுரையாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.

கோவிட் காலத்தில் ஊராட்சி மன்றத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு ஏற்பாடு செய்து விநியோகம் செய்திருக்கிறார். அத்துடன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக பள்ளியுடன் இணைந்து ‘இளந்தளிர் திட்டம்’ மூலம் குழந்தைகளுக்கான விலையில்லா ‘ஹெல்த் கிட்’ ஒன்றும் வழங்கியிருக்கிறார். நண்பர்கள் உதவியுடன் இந்த திட்டம் மூலம் சிற்றுண்டி, டியூஷன் போன்றவையும் பள்ளியுடன் சேர்ந்து ஏற்பாடு செய்கிறார். தன்னிடம் பயிலும் குழந்தைகளை களப்பயணங்கள் அழைத்துச் செல்வதன் மூலமும், போட்டிகள், கற்றல் நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலமும் தரமான வாழ்க்கைக் கல்வியைத் தர தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார். தமிழினி வழங்கும் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றவர்.