ன்புள்ள அண்ணா,

எனக்குத் திருமணம் நிச்சயமாகி ஒரு மாதமாகிறது. நேற்று என் உறவுக்காரச் சகோதரர்களும் என் வருங்கால மனைவியின் தோழிகளுமாக உல்லாசப் பயணம் போனோம். திரும்பும் வழியில் என் ஒன்றுவிட்ட சகோதரன் சிவா சொன்ன சேதி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது வருங்கால மனைவி காயத்ரி அவனிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் கூறினான் சிவா.

என்னால் நம்பவே முடியவில்லை. இதை அவளிடம் எப்படிக் கேட்பது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, காயத்ரி என்னை அழைத்து, சிவா அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகப் புகார் செய்தாள்.

சிவாவைச் சிறு வயது முதல் அறிவேன். அவன் பொய்யே சொல்ல மாட்டான். எனக்கு மிகவும் நெருக்கமானவன். எனக்குத் தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது.

அன்புள்ள கார்த்தி,

உங்கள் மீது உங்கள் ஒன்றுவிட்ட சகோதரருக்கு ரொம்பவும் பொறாமை என்று நினைக்கிறேன். நல்லதொரு மணவாழ்வு சகோதரருக்கு அமைந்துவிட்டால் அதைப் பார்த்துப் பூரிக்கும் ஆண்கள் அரிது. எதையாவது சொல்லி இப்படித்தான் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கப் பார்ப்பார்கள். ஆண்களின் குணமே பொறாமைதானே?

என்ன, திருமணமான பின்பு இதெல்லாம் நடக்கும். உங்கள் விஷயத்தில் முன்கூட்டியே நடக்கிறதென்றால் காயத்ரி பேரழகியாகவும், உங்கள் தகுதிக்கு மீறிய வரனாகவும் வந்திருக்கிறார் என்றெண்ணுகிறேன்.

முதலில் உங்கள் சகோதரர் சிவாவுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள். அவர் பேச்சில் உண்மை இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போய் காயத்ரியிடம் கேட்டால் என்ன நடக்கும்? வீண் சலசலப்பு உண்டாகும். கோபப்பட்டு அவர் திருமணத்தை நிறுத்தி விட்டால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். உங்கள் பெற்றோர் செய்த திருமணச் செலவெல்லாம் பாழாகிவிடும். முக்கியமாக உங்கள் குடும்ப கௌரவமே குலைந்துவிடும்.

திருமணமானதும் காயத்ரி உங்களையே சுற்றிச் சுற்றி வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சிவாவுடன் உங்கள் உறவை உடனே முறித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவரது பெற்றோரிடம் சொல்லி அவருக்கு அறிவுரை வழங்கச் சொல்லுங்கள்.

அன்புள்ள அண்ணா,

என் பெயர் விஷால், 32 வயது. நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமலா என்பவருடன் உறவில் இருந்து வருகிறேன். விமலாவுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இது முதலில் எனக்குத் தெரியாது. தெரிந்தபோது நான் கடுமையாகக் கோபப்பட்டு உறவை முறித்துக்கொள்ள முயன்றேன். ஆனால், விமலா என்னைத்தான் மிகவும் நேசிப்பதாகவும், தனது திருமண வாழ்வில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்றும், கணவரை விரைவில் விவாகரத்து செய்து விடுவதாகவும் வாக்களித்திருக்கிறார்.

என் நண்பர்கள் எல்லாம் அது பொய் என்றும் என்னை விமலா ஏமாற்றி வருவதாகவும் கூறுகின்றனர். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் உண்மையிலேயே அவரை மிகவும் நேசிக்கிறேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியுமா என்று தெரியவில்லை. என் துயர் தீர்க்க ஒரு வழி கூறுங்கள் அண்ணா.

அன்புள்ள விஷால்,

உங்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. பெண்களைப் பற்றி நீங்கள் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை என்று உணர்கிறேன். எந்தப் பெண்ணும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, காதலனைக் கைப்பிடிக்க மாட்டாள். அவர்களுக்கு அது தேவையே இல்லை. வீட்டில் பணிவிடை செய்ய ஒரு கணவனையும் சல்லாபம் செய்ய உங்களைப் போன்ற அப்பாவி ஆண்களையும் வைத்திருப்பது காலங்காலமாகப் பெண்களுக்கு வழக்கம்தானே? அது தெரிந்தும் அவர்களுடன் பழகிவிட்டு, விலகிவிடும் பெண்கள் பரவாயில்லை. கணவனை விவாகரத்து செய்துவிடுவாள் என்று நம்பி இருக்கும் உங்களைப் போன்ற ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம். விழித்துக்கொள்ளுங்கள். கண்ணியமான வாழ்வு வாழ வேண்டுமென்றால் இப்போதே அவரது உறவை முறித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் எங்கள் பத்திரிகையின் ‘ஆண்கள் நலம்’ அவசர உதவி எண்ணுக்கு அழையுங்கள். உதவி கிடைக்கும்.

அன்புள்ள அண்ணா,

என் மகளின் பள்ளியில் எப்போதும் வார நாட்களில்தாம் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நாள் வைக்கிறார்கள். என் மனைவி தன்னால் அலுவலகப் பணிகளை விட்டு வரவே முடியாதென்கிறார். நான்தான் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போக வேண்டியுள்ளது. இதனால் எனது வேலை பாதிப்பதுடன் மன உளைச்சலும் அதிகமாகிறது. என் மனைவி மீது எனக்குக் கடுங்கோபம் வந்து சிடுசிடுத்தபடியே இருக்கிறேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

அன்புள்ள மதன்,

வருந்தாதீர்கள். திருந்த வேண்டும் என்று முடிவெடுத்த போதே நீங்கள் பாதி திருந்திவிட்டீர்கள். ஓர் ஆணாகிய நீங்கள் எவ்வளவுதான் உங்கள் பணியிடத்தில் உயர் பதவி வகித்தாலும் ஒரு தந்தையாக, கணவனாக உங்கள் கடமையை மறந்துவிடக் கூடாது. உங்கள் குழந்தையின் நலனும் வீட்டின் நிம்மதியும்தான் உங்கள் முதல் பொறுப்பு என்பதை நினைவில் வையுங்கள்.

இக்காலத்தில் வீட்டுப் பொறுப்பு, குழந்தைகள் நலன் எல்லாவற்றையும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, அலுவலகத்திலும் கொடி நாட்டும் ஆண்கள் அதிகரித்து வருகிறார்கள். அதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதில் இணைந்து உங்கள் குறைகளை அகற்ற வழி காணுங்கள்.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்துவிட்டு, அலுத்துக் களைத்து வரும் மனைவியிடம் உங்கள் சிடுசிடுப்பைக் காட்டாதீர்கள். மலர்ந்த முகமும் மனம் நிறைந்த பணிவிடையுமாக வீட்டில் மகிழ்ச்சியை மலரச் செய்யுங்கள்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.