பரிவு (Empathy)
ஒரு கதை.
அம்மா, அப்பா, பள்ளிக்குச் செல்லும் மகன் என ஓர் அழகிய, ஏழ்மையான குடும்பம். காலையில் பொருள் ஈட்ட வெளியே செல்லும் பெற்றோர், பள்ளிக்குச் செல்லும் மகன், மாலையில்தான் அனைவரும் வீடு திரும்புவர்.
தினமும் இரவு உணவு முடித்து படுக்கச் செல்லும் மகனுக்கு ஒரு சந்தேகம் எழும், ஆனாலும் அதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு தூங்கப் போய்விடுவான்.
ஒருநாள் தந்தையிடம் சென்று, “அப்பா, ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். தாங்கள் ஏன் தினமும் தீய்ந்து போன ரொட்டியை இரவு உணவுக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? அது அத்தனை சுவையாக இருக்காதே” என்று கேட்டான்.
“ஆம், கருகிய ரொட்டி அத்தனை சுவையாக இருக்காது, ஆனாலும் உன் தாய் காலையில் இருந்து பொருளீட்டுவதற்காக வெளியில் உழைக்கிறாள், மாலை வந்தும் வீட்டு வேலை. அதில் ஒவ்வொரு ரொட்டியையும் சரியான முறையில் சுட்டு முடிக்க இயலாமல் போகிறது. ஆனால், நான் சாப்பிடாவிட்டால் அவள் அதை உண்பாள். இல்லாவிட்டால் வீணாகும் ரொட்டிகான அவளது உழைப்பும் வீணாகும். ஒன்றிரண்டு கருகிய
ரொட்டியை உண்பதினால் இதைத் தடுக்க முடியுமே” என்றார்.
“அப்பா, நீங்கள் அம்மாவிடம் கொண்டுள்ள அன்பு எனக்குப் புரிகிறது. ஆனால், இப்படிச் செய்வதினால் அம்மாவிற்கு நாம் உதவ முடியாது, நீங்களும் தினமும் கருகிய ரொட்டிகளையே உண்ண வேண்டி வரும். அதைவிட நாம் இருவரும் மாலையில் அம்மாவிற்கு உதவினால், அவர்களின் வேலைப் பளுவும் குறையும், நீங்களும் நல்ல ரொட்டியை உண்ணலாம் “ என்றான்.
அன்றிலிருந்து தினமும் மாலையில் தந்தையும் மகனும் தாயின் சுமையைப் பகிர்ந்தனர். தாயின் சுமையும் குறைந்தது, இரவு உணவும் இனித்தது.
இந்தக் கதையில் தந்தைக்கு இருந்தது இரக்கம் (Sympathy), அதனால் அந்தத் தாய்க்குப் பெரிதாக எந்த நன்மையும் இல்லை. ஆனால், மகனுக்கு இருந்தது பரிவு (Empathy). பரிவு இரக்கத்தையும் தாண்டி சூழ்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென யோசிக்க வைத்தது.
பரிவு பெறுபவருக்கு மட்டுமல்ல தருபவருக்கும் நிறைந்த மன நிம்மதியை அளிக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், நாம் அந்த நிலையில் இருந்தால் நம் உணர்வுகள் எப்படி இருக்கும் எனத் தன்னைப் பிறர் நிலையில் வைத்துப் பார்ப்பது.
அப்படிப் பார்க்கும் போது நாம் அவர்களைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.
சில நேரம் நாம் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக அவர்களுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்தினாலே போதும்.
சில நேரம் அவர்கள் கொட்டித் தீர்க்க காது கொடுப்பது தேவைப்படலாம். அப்போது எந்த முன் முடிவும் இல்லாமல், எந்த அறிவுரையும் கூறாமல் அமைதியாகக் கேட்பது முக்கியம். (அறிவுரை எப்போதும் நம்மிடம் கேட்டால் மட்டுமே, நம் அறிவுக்கு உட்பட்டு வழங்க வேண்டிய ஒன்று.)
சில நேரம் நாம் செயலாற்றவும் தேவை இருக்கும், அப்போது சூழ்நிலையின் சரியான புரிதல் நாம் செய்ய வேண்டிய செயல் குறித்த தெளிவைத் தரும். கதையில் வரும் அந்தச் சிறுவனைப்போல.
காலையில் விழித்ததில் இருந்து இரவு படுக்கையில் விழும் வரை நாம் பல தரபட்ட மனிதர்களிடம் பழகுகிறோம். கல்வி அறிவில் சிறந்தோர், கற்காதவர், பண்பு மிகுந்தோர், பண்பெல்லாம் என்ன விலை என்போர், அன்புக்குரியோர், வழிபோக்கர், வேலை நிமித்தமாகப் பழகுவோர் எனப் பல விதமான மனிதர்கள். எல்லாருடனும் சுமூகமான உறவே நம் வாழ்வை சுகமாக நகர்த்தும். காலையில் பேருந்து நடத்துனரிடம் நடந்த இரண்டு நிமிட சச்சரவுகூட நம் மன நிலையை மாற்றவல்லது. அந்தப் பயணமே பத்து நிமிடம்தான், அதில் அந்தச் சச்சரவு இரண்டே நிமிடம் என நம்மால் அதை ஒதுக்க இயலாது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நிமிடமும் அந்த நாளை மாற்றவல்லது. அப்படி இருக்கும்போது ஒவ்வொருவரையும் பரிவோடு அணுகும்போது, சரி அவருக்கென்ன துன்பமோ பாவம் அதுதான் அப்படி நடக்கிறார் என ஒதுக்கக் கற்றுக் கொண்டால் அந்த மோசமான அனுபவம் நம்மைப் பாதிக்காது. நம் மகிழ்ச்சி நம்மிடம் பத்திரமாக இருக்கும்.
ஒரு நியாயமான மனிதரால் தொடர்ச்சியாக மோசமாகவும் நடக்க இயலாது, அதுவும் நீங்கள் சரிக்குச் சமமாக மோசமாக நடக்காதபோது, பரிவோடு இருக்கும்போது.
இதற்கு நீங்கள் அடி பணிந்து போக வேண்டும் என்று அர்த்தமல்ல. நீங்கள் நீங்களாக இருங்கள், உங்கள் பாணியில் பணியாற்றுங்கள். தவறுகள் சுட்டி காட்டபட்டால் திறந்த மனதோடு திருத்திக் கொள்ளுங்கள், தவறில்லை எனில் விளக்கமளிக்கத் தயாராக இருங்கள், அதை மற்றவர் கேட்கத் தயாராக இல்லை எனில் கவலைப்படாதீர்கள்.
அனுபவத்தை மனதில் இருத்துங்கள். ஆனால், அந்த அனுபவத்தின் கசப்பைத் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
நியாயமற்ற மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எந்த நிர்பந்தத்திற்கும் நீங்கள் அடிபணியப் போவதில்லை எனும்போது அதைப் பற்றிக் கவலைப் பட என்ன இருக்கப் போகிறது? அவர்களையும் பரிவோடு அணுகும்போது நம்மிடம் கசப்புக்கு இடமே இல்லை.
எதையும் எவரையும் பரிவோடு அணுகும்போது அது நீங்கள் மற்றவருக்குச் செய்யும் உதவி அல்ல. உங்களுக்கு நீங்களே செய்யும் உதவி. எப்போதும் மகிழ்ச்சி, நிறைய நண்பர்கள், மிகக் குறைந்த எதிரிகள், சந்திக்கும் அனைவரிடம் இருந்தும் பரிசாகக் கிடைக்கும் அழகிய புன்னகை என வாழ்வு அழகாக மலர்வதைக் காணத் தயாராகுங்கள்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
Super