சமீபத்தில் ஓர் ஒன்பது வயதுக் குழந்தையின் மரணம் மனதைப் பாதித்ததோடு யோசிக்கவும் வைத்தது. ஏனெனில் அந்தக் குழந்தையின் மரணம் இயற்கையானதல்ல. தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறது. ஒன்பது வயதுக் குழந்தைக்குத் தற்கொலை பற்றிய சிந்தனை எப்படி வந்திருக்கும்? திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுப் பெண் குழந்தை இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஆரம்பித்து பலவிதமான ரீல்கள் போட்டு ‘இன்ஸ்டா குயின்’ என்று பிரபலமாக இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அதன் பெற்றோர் படிக்கச் சொல்லி அதட்டியிருக்கின்றனர். தோழிகள் முன்பு திட்டியதால் அதை அவமானமாக எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தை தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிறு வசவைக்கூடத் தாங்க முடியாத தளிர்களாக இன்றைய குழந்தைகள் இருக்கிறார்களா, அல்லது மனம் நோகும்படியான வார்த்தைகளில் பெற்றோர் திட்டுகின்றனரா என்பது குறித்து நாம் ஆராய்வது இன்றைய சூழலில் மிகவும் அவசியம்.

இன்றைய குழந்தைகள் தங்கள் குழந்தைமையைத் தொலைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களது உள்ளங்கைக்குள் உலகத்தைக் கொண்டு வந்து தந்திருக்கிறது. நல்லது, அல்லது எல்லாவற்றையும் சிறு வயதிலேயே அறிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக நம்மை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். எதையும் பாராட்டினால் ஏற்றுக்கொள்ளும் நெஞ்சம் சிறு வசவைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளை எடுக்கத் துணிகிறது.

குழந்தைகள் உலகம் தனியானது. கவனமாகக் கையாள வேண்டியது. மாறி வரும் தொழில்நுட்பங்கள், கல்விமுறை, மதிப்பெண் பெற வேண்டிய அழுத்தம், பல கலைகளில் வித்தகராக விளங்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடே பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் எடுக்கும் இத்தகைய முடிவுகள்.

குழந்தைகள் ஒரு செயலில் வெற்றி பெற்றால் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டித் தள்ளுவதும், தோல்வியடைந்தால் திட்டித் தீர்ப்பதும் சிலரது பழக்கம். அவர்களது பேச்சுக்குப் பயந்து குழந்தைகள் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். இங்கே மாற வேண்டியது பெரியவர்களும்தாம். விஸ்வாசம் திரைப்படத்தில்கூட வில்லனின் மகள் எதிலும் முதலிடம் பெற்றே ஆகவேண்டும் என்று போதிக்கப்பட்டே வளர்வார். ஒரு தோல்விகூட அவருக்கு மிகப் பெரிய அழுத்தமாக இருக்கும். பெற்றோரைத் திருப்திப்படுத்த இயலாமல் உயிரைப் போக்கிக் கொள்ளத் துணிகிறார்கள் குழந்தைகள்.

சில நேரம் தற்கொலையை ஆயுதமாகப் பயன்படுத்தும் குழந்தைகளும் உண்டு. என் மகளின் பள்ளித் தோழி ஒருவர் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்துள்ளார். பதறி அடித்த ஆசிரியர்கள் காரில் தூக்கிச் சென்று முதலுதவி செய்திருக்கிறார்கள். விசாரித்ததில் வீட்டினர் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால் அவர்களை மிரட்ட இவ்வாறு நடந்து கொண்டதாகத் தோழிகளிடம் தெரிவித்திருக்கிறாள். அவள் தின்றது தலைவலி மாத்திரையான பாராசிட்டமால். இருபது மாத்திரைகளை விழுங்கியிருக்கிறாள். அறிவுரை சொன்ன தோழிகளிடம், “நீங்களும் வீட்டில் ஏதாவது வாங்கித் தர மறுத்தால் இதேபோல் செய்யுங்கள்… எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள்” என்று வேறு சொல்லியிருக்கிறாள். அந்தக் குழந்தை இப்படிப் பேசுகிறதென்றால் அதற்குப் பாதிப் பொறுப்பு அதன் பெற்றோரிடமும் இருக்கிறது தானே?

தங்களது குடும்ப நிலையையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றோர் புரிய வைத்து வளர்த்திருக்க வேண்டும். அவசியத் தேவை, அவசரத் தேவை, அநாவசியம் என்பதற்கான வேறுபாடுகளைச் சொல்லித் தந்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் நடப்பவற்றைப் பகிரும் சூழலை ஏற்படுத்திக் கொடுடுத்திருக்க வேண்டும். அப்போது இத்தகைய புரிதல் இல்லாத சம்பவங்கள் நடைபெறாது. அதேபோலக் குழந்தைகள் ஆசைப்பட்ட ஒரு பொருளை எப்பாடு பட்டாவது வாங்கித் தர வேண்டும் என்ற மனோநிலையைப் பெற்றோர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் உடனடித் தேவை அல்லது சாவகாசமான தேவையைப் பொறுத்து அதை வாங்கித் தர வேண்டும். சில நேரம் உடனே வாங்கித் தராமல் கொஞ்சம் இழுத்தடித்து வாங்கித் தர வேண்டும். சின்னச் சின்னத் தோல்விகளையும் அறிமுகம் செய்ய வேண்டும்.

கொரோனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய 2020ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11,396 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கொரோனா நோயின் பாதிப்பினால் மரணமடையவில்லை. தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 9,613 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 9,413 ஆக இருந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் தற்கொலை விகிதம் அதிகரித்திருக்கிறது. குடும்பப் பிரச்னை, காதல், நோய்கள், வேலையின்மை, விரக்தி, பொருளாதாரத் தேவைகள், பாலியல் வன்கொடுமைகள் என்று இந்தத் தற்கொலைக்கான காரணிகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்துக்கும் முக்கியக் காரணம் மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவைதான். நம் நாட்டில் பெரியவர்களின் மனப் பிரச்னைகளையே வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சூழல்தான் நிலவுகிறது. இதில் குழந்தைகளின் மனதைப் பற்றி யார் பேசுவார்கள்? அவர்களுக்கும் நம்மைப் போலவே தனிப்பட்ட சிந்தனைகளும் ஆசாபாசங்களும் இருப்பதை முதலில் நாம் புரிந்துகொள்வோம். நமது கனவுகளை நிறைவேற்றும் கருவியாக அவர்களைப் பார்க்கக் கூடாது. அவர்கள் நம் மூலமாக வந்தவர்கள் மட்டுமே. அவர்களை நல்வழிப்படுத்த நம்மால் இயன்ற முயற்சிகளை நாம் செய்து தான் ஆகவேண்டும்.

குழந்தைகளின் கனவுகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அவர்கள் கனவுகள் நனவாகப் பெற்றோரின் முறையான வழிகாட்டல் அவசியம். பொழுதுபோக்குகள் அளவோடு இருப்பதோடு ஆரோக்கியமாகவும் அமைந்தால் நலம். குழந்தைகளைப் பிடிவாத குணமின்றி வளர்க்க வேண்டும். அதற்கு முன் பெற்றோர் தங்களைச் சுய பரிசோதனையும் சுய அலசலும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உறவுப் பாலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பாஸிட்டிவ் பக்கங்களைப் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் நெகட்டிவ் விஷயங்களை நாசூக்காக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களது உளவியலையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியம். பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளின் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, ஆலோசனைகள் வழங்க முறையான உளவியல் ஆலோசகரை நியமிப்பது நல்லது.

குழந்தைகளை வெளியே ஓடியாடி விளையாட விட வேண்டும். அப்போதுதான் மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் குணம் வரும். அதற்கு முதலில் பெற்றோர் தங்கள் கூட்டுக்குள் எப்போதும் பூட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து சமுதாயத்துடன் கலக்க வேண்டும். அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் அதையே பின்பற்றுவார்கள்.

வெற்றியை மட்டுமே ருசித்து, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மட்டுமே கேட்டு வளரும் குழந்தை சிறு வசவுச் சொல்லுக்கோ ஒரு தோல்விக்கோ மனசு உடைகிறது. குழந்தைக்குத் தோல்வியையும் அறிமுகம் செய்வோம். வெற்றியோ தோல்வியோ எதையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழக்குவோம். அதற்கு முன் நாம் அவற்றைக் கடைப்பிடிப்போம். ஏனெனில் நம் குழந்தைகளுக்கு நாம்தானே முன்மாதிரி!

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.