ஈராயிரக் குழவிகள் எல்லாம் இந்த ஃபேஸ்புக் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. 90களில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர், பூமர்கள் எனக் கிட்டத்தட்ட முதியோர் இல்லம் போலாகிவிட்ட ஃபேஸ்புக்கில் நடக்கும் இன்பாக்ஸ் இம்சைகள் சமீபத்தில் பேசுபொருளாகியுள்ளன. ‘ஹலோ சொல்லிட்டான்’ என ஸ்கிரீன் ஷாட் போடுவது, அடிச்சிட்டான் மிஸ் என்பது போல சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறது என்கிறார்கள் சிலர். கமிட்டட் நபரிடம் ஃப்ளிர்ட் செய்வது சரியா என அறச்சீற்றம் கொள்கிறார்கள் சிலர். இந்தப் பஞ்சாயத்துக்குள் போகாமல் முகநூல் பற்றியும் இன்பாக்ஸ் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கிய மார்க் சக்கர்பெர்க் தன் பதின்ம வயதிலேயே கணினி நிரல்களில் ஆர்வம் கொண்டவர். தந்தை நடத்திய பல் மருத்துவமனையில் உள்ள ரிசப்ஷனிஸ்ட், காத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை மெசேஜ் வடிவில் அனுப்ப உதவும் நிரலை அவர் 13 வயதில் எழுதினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் கணினிநிரல் பற்றிப் படிக்கவில்லை. கணினி மற்றும் உளவியல் சார்ந்த கோர்ஸ் அது. போதை மருந்துக்கு அடிமையாவதுபோல மக்கள் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாக உளவியல் கோணத்திலான அவருடைய அறிவும் முக்கியக் காரணம்.
2003இல் ஹார்வர்டு தங்கும் அறையில் உருவானது ஃபேஸ்மேஷ் எனும் தளம். இரண்டு படங்களில் யார் அதிக அழகு என ஒப்பிடும் ‘ஹாட் ஆர் நாட்’ வலைத்தளம் அது. அந்தப் படங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி இன்றி எடுத்துப் பயன்படுத்தப்பட்டவை. உள்நோக்கம் இன்றி குறும்புக்காகச் செய்தது எனச் சொல்லி மார்க் மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்ககை எடுக்கப்படவில்லை. தளம் முடங்கியது. ஆனால், சில மணி நேரத்தில் ஃபேஸ்மாஷ் தளத்துக்குக் கிடைத்த வரவேற்பு மார்க் மனதில் பெரிய திட்டங்களைத் தோற்றுவித்தது.
Source: medium.com
https://medium.com/@jbackus/facebook-won-because-its-culture-was-voyeuristic-6132440b19c7
ஆம். தனிமனித உரிமையில் அத்துமீறி நுழைந்து கிடைத்த வெற்றியின் ருசிதான் ஃபேஸ்புக்கின் ஆரம்பமே. 2004இல் திஃபேஸ்புக் டாட் காம் என்கிற பெயரில் மாணவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய ப்ரஃபைலை உருவாக்கி, நண்பர்களுடன் தொடர்புகொள்ளும் வகையில் அறிமுகமானது. தங்கள் ஒளிப்படங்கள் மற்றும் விருப்பங்களைத் தானே பதிவேற்றிக்கொள்ளலாம். 2005இல் ஃபேஸ்புக் எனப் பெயரிட்டு மேம்படுத்திய தளத்தை வெளியிட்டார். இத்தளம் எல்லாக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களிடம் புகழடைந்தது.
இந்த யோசனை தங்களுடையது என்றும் அதைத் திருடிவிட்டார் மார்க் என்றும் குற்றம் சாட்டினர் அவருடன் ஹார்வர்டில் படித்த மாணவர்கள் மூவர். அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஒப்புக்கொண்டது உண்மைதான், ஆனால் அது வேறு ப்ராஜக்ட், இது வேறு ப்ராஜக்ட் எனச் சாதித்தார் மார்க். மூவரும் 2008இல் பணம், பங்குகளைப் பெறும் ஒப்பந்தம் மூலம் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஃபேஸ்புக் தளம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வேகமாக வளர்ந்தது. பல கோடி முதலீடுகளையும் ஈர்த்தது. வாட்ஸ்அப், இன்ஸ்டா என மேலும் சில நிறுவனங்களை வாங்கினார்கள். தற்போது, மெட்டா என்ற தாய்நிறுவனத்தின் கீழ் இவை செயல்படுகின்றன.
சர்ச்சைகளும் கூடவே வளர்ந்தது. தன்னிடம் உள்ள தனிநபர் டேட்டாவை எப்படிப் பணமாக்குவது என மார்க் ஆலோசனை செய்த தகவல் வெளியாகி பரபரப்பானது. வெறுப்புப் பேச்சு, பொய் செய்திகள் உருவாகும் முக்கியக் களமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள். வலதுசாரி அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்பதும் ஒரு குற்றச்சாட்டு. பணம் வாங்கிக் கொண்டு அறமின்றி எதை வேண்டுமானாலும் விளம்பரம் செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கூகுள் தளத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் செல்கிறோம். கூகுள் அதற்கான பதிலை எவ்வளவு விரைவாக அளித்து நம்மை அங்கிருந்து வெளியேற்றுகிறது என்பதில் தேடுபொறியின் வெற்றி இருக்கிறது. விளம்பரமே என்றாலும்கூட நமக்கு உதவும் விளம்பரத்தால் பயனர், கூகுள் இருதரப்புமே பயனடைகிறோம்.
சமூகவலைத்தளத்தின் அடிப்படையே நம்மை அதிக நேரம் தளத்துக்குள் இருக்கச் செய்வதுதான். பயன் இருக்கிறதோ இல்லையோ எதையாவது காட்டி தாெடர்ந்து நம்மை ஸ்ரோல் செய்ய வைத்தால்தான் அவர்களுக்கு லாபம். எனவே உபயோகமில்லா ஆர்வம் தூண்டும் விஷயங்கள் அதிகம் இங்கே. யார் யார் முகத்தையோ காட்டி உன் நண்பரின் நண்பருக்கு இவரைத் தெரியும், நீயும் நட்பு அழைப்பு அனுப்புகிறாயா எனத் தொடர்ந்து மற்றவர்களைத் தொடர்ப்பு கொள்ளத் தூண்டில் போடுகின்றன இத்தளங்கள். தொழில் ரீதியாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் மூலம் முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். எனினும் வெட்டியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் நேரத்தை வீணாக்குவதோடு மற்றவர்களுக்கும் இன்பாக்ஸில் தொல்லை கொடுக்கிறார்கள்.
தொல்லை கொடுக்கும் நபரைத் தவிர்க்க மிக எளிமையான தீர்வு என்றால் ப்ளாக் செய்வதுதான். ஹாய் அனுப்பியது யார் என்று அவர் பக்கத்துக்குச் சென்று ஆய்வெல்லாம் நடத்தத் தேவையில்லை. யோசிக்கத் தேவையில்லை. முன்பின் அறியாத நபரிடம் தனிப்பட்ட உரையாடலை ஆரம்பிக்க நேராக விஷயத்துக்கு வரவேண்டும். வெறுமனே ஹாய் என்பதற்கு நான் வெட்டியாக இருக்கிறேன், நீயும் வெட்டியாக இருக்கிறாயா என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்? இத்தகைய நபர்களைக் கையாள்வது நேரக்கேடு. ஒற்றைச் சொடுக்கில் நட்பு நீக்கம் செய்வதாலோ ப்ளாக் செய்வதாலோ இழக்கப் போவது ஒன்றுமில்லை.
ஒரு நபர் தினமும் காலை வணக்கம் சொல்வது எனக்குத் தொந்தரவுதான். ஆனால், ஆபத்தானவர் இல்லை. நேராக அவரிடம் காலை வணக்கம் அனுப்பாதே எனச் சொல்ல விருப்பம் இல்லை. இப்படியெல்லாம் சிக்கலான எண்ணங்கள் இருந்தால் ம்யூட் ஆப்ஷனைப் பயன்படுத்தலாம். பெயரின் மீது ரைட் க்ளிக் செய்தாலோ அல்லது வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளைத் தொட்டாலோ ம்யூட் ஆப்ஷன் காட்டும். ப்ரஃபைலுக்கு அருகில் இருக்கும். சில நிமிடங்கள், சில மணி நேரம் அல்லது திரும்ப ம்யூட்டை எடுக்கும் வரை எனப் பலவித வாய்ப்புகள் உள்ளன. ம்யூட் செய்யப்பட்டது அந்த நபருக்குத் தெரியாது. அவர் அனுப்பும் செய்திகள் உங்களுக்கு வரும். ஆனால், உங்களுக்கு நோட்டிபிகேஷன் காட்டாது. அவருக்கு மெசேஜ் டெலிவர்டு எனக் காட்டும். அந்த மெசேஜை நீங்கள் படித்தீர்கள் எனக் காட்டாது. தொடர்ந்து பல நாட்கள் இந்த மெசேஜ் சீன் காட்டாமல் இருந்தால் அனுப்புவதை நீங்கள் படிப்பதில்லை எனப் புரிந்து கொண்டு அவர் நிறுத்திவிடலாம்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டுக்கும் சேர்த்து ஒரே மெசேஜிங் செயலிதான் என்றாலும் ஏதேனும் ஒன்றில் மட்டும் ப்ளாக் செய்யும் வசதியும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில்கூட மொத்தமாக ப்ளாக் செய்யாமல் மெசேஜ் செய்வதையும் கால் செய்வதையும் மட்டுமேகூடத் தடுக்க முடியும்.
உங்கள் கான்டாக்டிலோ அல்லது நட்பு வட்டத்திலோ இருக்கும் நபரின் செய்திகள் மட்டுமே உங்களுக்கு நேராக மெசெஞ்சரில் வரும். அறிமுகம் இல்லாத நபர்களின் செய்திகள் பெரும்பாலும் மின்னஞ்சல் ஸ்பேம் போல தனிப் பகுதியில்தான் இருக்கும். ரெக்வஸ்ட் எனும் பகுதியைச் சொடுக்கினால் இந்தச் செய்திகள் அனைத்தும் காட்டும். அவசியம் என்றால் பதில் சொல்லலாம். இல்லை ஸ்பேம் என அழுத்தி வைக்கலாம். அதிக ஸ்பேம் மெசேஜ்களை ஒரு நபர் அனுப்பினால் முகநூல் அவருக்கு ஓலை அனுப்பி எச்சரிக்கும்.
குழுக்களில் வாட்ஸ்அப் செயலி போலவே நீங்கள் குழுவை விட்டு வெளியேறும் வசதியும், தவறாக அனுப்பிய செய்தியை அழிக்கும் டெலிட் ஃபார் மீ, ஃபார் எவ்ரிஒன் வசதியும் கூட இருக்கிறது. நீங்கள் அனுப்பியதை குழுவில் உள்ளவர் ஏற்கெனவே படித்துவிட்டிருந்தால் அவர்கள் மூளையில் இருந்து அழிக்க முடியாது. எனவே குழுக்களில் எச்சரிக்கையுடன் பதிவிடுங்கள்.
ஃபேஸ்புக் நண்பர்களுக்கு நமக்குப் பிடித்த மாதிரி செல்லப் பெயர்கள் வைத்துக்கொள்ளலாம். பெயரைச் சொடுக்கினால் வரும் அரட்டைப் பெட்டியின் வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளைத் தொட்டால் இந்த நிக்நேம் மாற்றும் வாய்ப்பு தெரியும். நீங்கள் வைக்கும் பெயர் அந்த நபருக்கும் தெரியும். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குழுவில் பேசும்போது எது யாருக்கான பதில் உரையாடல் எனும் குழப்பத்தைத் தவிர்க்க எப்போதும் ரிப்ளை ஆப்ஷனை பயன்படுத்துவது நல்லது. தனிப்பட்ட உரையாடல் என்றால்கூட எந்த வரிக்கு இந்தப் பதில் என்பதைக் குறிக்கும் வகையில் இதைப் பயன்படுத்தலாம். மெசேஜ் அருகில் மவுஸை வைத்தால் வளைந்த அம்புக்குறி காட்டும். அதைச் சொடுக்கி செய்தி அனுப்பினால் ரிப்ளை டூ என அந்தச் செய்தி டெலிவரி ஆகும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று கனெக்ட் செய்து இங்கே போடும் ஸ்டோரியை அங்கேயும் காண்பிக்கும்படி செய்யலாம். வாய்ஸ் கால், வீடியோ கால் செய்யலாம். எழுத்தே வேண்டாம் என்று ஏகப்பட்ட ஸ்டிக்கர்களைத் தரவிறக்கம் செய்து படம் காட்டிப் பேசலாம். லொகேஷன் ஷேர் செய்யலாம். ஒளிப்படங்களை எடிட் செய்து பகிர்ந்து கொள்ளலாம். அரட்டைப் பெட்டிக்கு நிறம் கொடுக்கலாம். சில நாடுகளில் ஃபேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதிகூட வந்துவிட்டது.
ஃபேஸ்புக் கணக்கு இல்லாமல் தொலைபேசி எண்ணைக் கொண்டுகூட மெசெஞ்சர் பயன்படுத்த முடியும். கணினியில் மெசெஞ்சரைத் தரவிரக்கம் செய்துகொள்ளலாம். அதன் மூலம் முகநூல் திறக்காமலே மெசெஞ்சரை மட்டும் பயன்படுத்தலாம்.
டேட்டிங் செய்பவர்களுக்கு என்று தனியாக டேட்டிங் ஆப்ஷனும் வைத்துள்ளது ஃபேஸ்புக். ரிலேஷன்ஷிப்பில் ஆர்வம் உடையவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கணினியில் அல்ல, ஆன்ட்ராய்ட் அல்லது ஐபோனில் மட்டும் இது வேலை செய்யும். ஃபேஸ்புக் செயலியின் வலது மூலையில் உள்ள 3 கோடுகளைத் தொட்டால் வரும் பட்டியலில் ஊதா நிற இதயத்துடன் டேட்டிங் ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று டேட்டிங் ப்ரஃபைலை உருவாக்கிக் கொள்ளலாம். விருப்பமுடைய, ஆர்வமுடைய நபர்களிடம் பேசிப் பழகலாம். சமூக வலைத்தளங்கள் புதிய நபர்களை அறிமுகம் செய்துகொள்ளவும் நட்பு பாராட்டவும்தான் இருக்கின்றன. ஃப்ளிர்ட் செய்வது நிச்சயம் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், எந்தச் சுவரைப் பார்த்தாலும் காலைத் தூக்கும் நாயைப் போல எல்லா இன்பாக்ஸ் கதவின் பூட்டையும் ஆட்டுவது அறிவுடமை அல்ல.
(தொடரும்)
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்