‘நீங்கள் எதையும் செய்யாத வரை எதுவும் செயல்பட போவதில்லை’ என்கிற அமெரிக்க கவிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான மாயா ஏஞ்சலோவின் வரிகளோடும், ஒவ்வொரு கட்டுரையும் நம்மோடு நெருங்கிய நண்பர் உரையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்ற திலகவதி ஐபிஎஸ் வாழ்த்துரையோடும் ‘கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை’ என்கிற பாரதியாரின் வைர வரிகளைக் கொண்டு, 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்துள்ளது கேளடா மானிடவா நூல். இல்லற வாழ்க்கையில் இணையப் போகும் இணையர்கள், குழந்தைப் பேற்றினை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அனைத்துப் பெற்றோரும் தவறாமல் படிக்க வேண்டிய காலக் கண்ணாடியாக வெளிவந்துள்ளது இது.

ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நூல் நல்ல நூலாக இருக்க முடியாது. ஆங்காங்கே மூடிவைத்து யோசிக்க வைப்பதே நல்ல நூலாக அமையும் என்ற டாக்டர் ஜி. ராமானுஜம் இந்நூல் குறித்து தெரிவித்த கருத்து உண்மை.
ஒவ்வொரு முறை கையில் எடுக்கும் போதும் ஓராயிரம் வெளிச்சங்களைத் தந்துவிடும் புத்தகம் இது.

“ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒரு ஊரே தேவைப்படும்… குழந்தையின் பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி, கல்வி நிலையங்கள் மற்றும் சமூகமும் அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இன்று அந்தக் குழந்தைகளைச் சமூகம் கவனித்துக் கொண்டால், நாளை அந்தக் குழந்தைகள் இந்தச் சமூகத்தைக் கவனித்துக் கொள்ளும். இந்தச் சமூகம்தான், இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும்தான் குழந்தைகளுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் .


குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைப் பருவம்தான் நாம் குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து.
ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. தீமைகளைத் தடுக்க சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மலை தடுக்கிறது எனப் பயந்து நிற்க வேண்டாம், துணிந்து ஒவ்வோர் அடியாக எடுத்து நடக்க தொடங்கினால் போதும் மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.

நம்மிடம் இரண்டடி சுற்றளவு தூரம் ஒளி தரும் கை விளக்குதான் உள்ளது. நம்மைச் சுற்றிலும் இருள், எங்கும் எங்கெங்கிலும் இருள். உலகம் முழுவதிலும் இருளில் எப்படிப் பயணிப்பது? நம்முடன் உள்ள கைவிளக்கு போதும் இரண்டு இரண்டு அடிகளாக நாம் உலகை ஒளி வலம் வர என்கிற கட்டுரை புத்தம் புதிய வெளிச்சத்தை எழுத்தின் வழியே காட்டியது.

எல்லாருக்குமான பூமியில் ஏன் இந்தப் பேதம்? ‘வெளி’தான் அனைவருக்கும் பொதுவான வீடு . எனவே பெண்கள் வெளியே வாருங்கள் ‘வெளி’யைத் தன் வசப்படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள் என்று வட்டம்விட்டு வெளிவந்து வான் பார்க்கத் தூண்டுகிறது அசத்தலான அந்தக் கட்டுரை.

ஆணும் பெண்ணும் எதிரெதிர் இனமல்ல ; சக இனம் பூனை – எலி, மான் – புலி, கோழி – பருந்து என்று பார்ப்பதே நேசமற்ற பார்வை. சக பெண் புலியை ஆண் புலி வேட்டையாடுவதில்லை, மானைத்தான் உணவிற்கு வேட்டையாடுகிறது. இரண்டும் ஒன்றல்ல. யோசித்தால் இது புரியாதது அல்ல… ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன? ஆண் உலகம், ஆண்களிடம் சில கேள்விகள் என்று ஒவ்வொரு கட்டுரையும் தரும் வெளிச்சம் வாசிக்கும்போது கிடைக்கும் பேரானந்தம், வாசித்து பார்ப்பதால் மட்டுமே புரியும்.

குழந்தைகளிடம் உரையாடுங்கள், எதையும் கேள்வி கேள் ஆகிய கட்டுரைகள் மிக முக்கியமான, காத்திரமான முன்னெடுப்பை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறது. நம் சமூகத்தின் உண்மையான பலம் என்பது நோயுற்ற மனிதர்களின் ஆரோக்கிய அளவே! அவர்களைக் குணப்படுத்தும் போதுதான் சமூகம் பலமுள்ளதாகும் என்பது எவ்வளவு ஆழமான, ஆணித்தரமான பதிவு.

அடுத்த முக்கியமான கட்டுரையாக மீ டு பிரச்னைகள். அது பற்றிய விவரங்களைக் காணொலிகளின் விவரங்களோடு, தரவுகளோடு இணைத்துப் பதிவேற்றிருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

பிரெண்ட்லியாக இருப்பது வேறு பிரெண்டாக இருப்பது வேறு. தன்னிடம் பிள்ளைகள் எது பற்றியும் பகிரும்படியான நட்புறவுடன் பெற்றோர் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று ரகசியம் இருப்பதை மதிக்க வேண்டும். அவர்களுக்கான அறை என்பது கண்டிப்பாக வேண்டும். அறை தனியாகத் தர முடியாதவர்கள் அவர்களுக்கு ஒரு பீரோ, மேஜை தர வேண்டும் என்கிறார் பிருந்தா சேது. கொடுக்கிறோமா குழந்தைகளுக்கு? அது பற்றிச் சிந்திக்கவாவது செய்கிறோமா? இனியாவது சிந்திப்போம்.

சமையல், கழிவறை சுத்தம் செய்தல், குழந்தைகளை எப்படி engage செய்வது, குழந்தைகளின் ஆற்றலை முறைப்படுத்துவது, காலையில் எப்படி எழுப்புவது? இரவில் தூங்க வைப்பது எப்படி? சேஃப் டச், அன்சேஃப் டச் எனக் குழந்தை வளர்ப்பின் அனைத்துப் புள்ளிகளையும் ஒன்று விடாமல் தொட்டுச் சென்றிருப்பது புத்தகத்தின் கூடுதல் பலம்.

அதேபோல முதிய தம்பதிக்கான பிரைவஸி கிடைக்கிறதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. அக்கறை என்பது வேறு, தலையீடு என்பது வேறு. இந்தியாவில்தான் பெற்றோர் தான் சாகும் வரை பிள்ளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள், பிள்ளையின் வாழ்வில் தலையிட்டுக் கொண்டேவும் இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரிதாகி பெற்றோரது பிரைவஸியில் இதே தலையீடு பரஸ்பரம் நிகழ்கிறது.


ஆக குழந்தைகள் முதல் தம்பதி முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வீட்டினரோடு இயைந்த பகிர்தலான உரையாடல்களே எல்லாவற்றையும் சமன்படுத்தும். ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுடைய வழியை மதித்து பிறருடையதில் தலையிடாமல் கண்ணியம் காத்தால், தன்னையும் குறைத்துக்கொள்ளாமல் மற்றவரையும் பெருமையாக நடத்த முடியும் என்று முத்தாய்ப்பான முடிவுரையுடன் நிறைவடைந்திருக்கிறது கேளடா மானிடவா புத்தகம்.

வாழ்க்கை என்பதே முயல்வதும் தவறுதலுமான செயல்முறையும்தான் (Trial & Error Process). அப்படித்தான் குழந்தை வளர்ப்பும். உண்மையில் குழந்தைகளோடு நாமும் வளர்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூகம் சார்ந்து சிந்திக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாசித்து, விழாக்களின் போது, குறிப்பாக திருமண விழாக்களுக்குப் பரிசளிப்பதை வாடிக்கையாகக் கொண்டால் புத்தகத்தின் நோக்கம் இனிதே நிறைவேறும்.

படைப்பாளர்:


சண்முக வடிவு. வாசிப்பதை அன்றாட வாடிக்கையாகக் கொண்டவர். வாசிப்பின் சுவையை, தேவையை அடுத்தடுத்த தலைமுறைக்கு, முக்கியமாகச் சிறார்களுக்குக் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்கிற துடிப்புடன் செயல்படுபவர். அறிவுச்சுடர் படிப்பகம் மற்றும் தோழமைகளுடன் இணைந்து வாசிப்பே வெல்லும் என்ற குழுவினை நடத்திவருபவர்.