சுதா

மானாமதுரையில் பாரதி – முத்துலட்சுமி தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் என் அம்மா வளர்மதி. சென்னையில் வளர்ந்தவர். படிப்பில் தேர்ந்தவராக இல்லையென்றாலும் புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

மணிகளைக் கோத்து பொம்மைகள், கைப் பைகள் செய்வதில் வல்லவர். தையல் பயிற்சிக்கும் சிறிதுகாலம் சென்றார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் கல்வியைத் தொடரவில்லை.

தம்பிகள் தங்கையுடன் வளர்மதி

உறவினரான என் அப்பா முருகானந்தத்தோடு அம்மாவுக்குத் திருமணம் நடைபெற்றது. தலைநகரில் வளர்ந்தவர் என்றாலும் சித்தனேந்தல் கிராமத்தில் வாழ ஆரம்பித்தார். அப்பா கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். தமிழ்நாடு அரசு, வாரிசு பணி தொடர்முறையை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தது. அதனால் வேலையை இழந்தார் அப்பா.

அப்போது ஆரம்பித்ததுதான் அம்மாவின் கஷ்டகாலம். பொருளாதாரத்துக்காக கோழி வளர்த்தார். வயலில் களையெடுத்தார். நான் பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தம்பி ரஞ்சித் பிறந்தான். என்னை ஆச்சி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நேரத்தில் சின்ன ஆச்சி கனகு அம்மாவை, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவைத்தார். இதுதான் எங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.

சென்னையில் அக்னிகண்ணன் மாமா அம்மாவுக்கு ஒரு துணிக்கடையில் வேலை வாங்கிக்கொடுத்தார். பிறகு கௌரி பெரியம்மா மூலம் அங்கன்வாடியில் ஆசிரியராக அம்மாவுக்கு வேலை கிடைத்தது. வருமானம் குறைவென்றாலும் வருமானம் என்ற ஒன்று இருப்பதே தெம்பாக இருந்தது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவுக்குச் செவிலியர் பயிற்சி கிடைத்தது. ராமநாதபுரம் பொது மருத்துவமனையில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்றார். பிறகு செவிலியராக வேலை பார்த்தார். மருத்துவ முகாம்களின்போது மருத்துவர் முதல் செவிலியர் வரை எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார்கள். அம்மாவின் கைப்பக்குவத்தைப் புகழ்வார்கள்.

அப்பாவுக்குக் கிராம நிர்வாக அலுவலர் வேலை மீண்டும் கிடைத்து, கடலாடிக்குச் சென்றுவிட்டார். அம்மாவுக்கு ஆரம்பச் சுகாதார நிலையப் பணி நியமன ஆணை வந்தது. சந்தோஷத்தில் அம்மா குதித்த காட்சி இன்றும் நினைவிலிருக்கிறது.

செஞ்சி அருகில் பாடிப்பள்ளம் கிராமத்தில் வேலை. அம்மாவுக்கு அரசு செவிலியர் விடுதி இருந்ததால் செஞ்சியிலேயே தங்கி வேலை பார்த்துவந்தார். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை சென்னை வருவார். அப்பாவும் அப்படித்தான். சில ஆண்டுகளில் நானும் தம்பியும் அம்மாவோடு செஞ்சிக்கே சென்றுவிட்டோம்.

நால்வர் மட்டுமே உள்ள ஒரு சிறிய குடும்பமாக இருந்தபோதும், அதிகக் காலம் பிரிந்து இருக்க நேர்ந்தது. அதனால், நாங்கள் அம்மாவுடன் ஒன்றாக இருக்க முடிந்த அந்தக் காலக்கட்டம் எனக்கு முக்கியமானது.

மகள், மகன், பேரக் குழந்தையுடன் வளர்மதி, முருகானந்தம்

ஊசி போட வருபவர்களுக்கு உணவு அல்லது தேநீராவது கொடுத்துதான் ஊசி போடுவார் அம்மா. மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மக்களிடம், அவர்கள் வழியிலேயே சொல்லி மருத்துவம் செய்வதில் பேரார்வம் கொண்டிருந்தார்.

அரசு அறிவிக்கும் சலுகைகளைக் கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி, பயன்பெற உதவினார். அம்மா தன் வேலையைச் சேவையாக மட்டுமே பார்த்தார். பிரசவம் பார்ப்பதில் தனித்திறமை பெற்றிருந்தார். ஒரு முறை எய்ட்ஸ் நோயுற்ற பெண்ணிற்குப் பிரசவம் பார்த்ததால், மாவட்ட கலெக்டரின் பாராட்டையும் விருதையும் பெற்றார் அம்மா.

அவருக்குக் கொடுத்த விடுதியே ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்ததால் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருந்தார். எந்த நேரத்திலும் நோயாளிகள் பாம்புக்கடி, தேள்கடி, பூச்சிக்கடி என்று வந்துகொண்டேயிருப்பார்கள். பொறுப்பான பதிலும் முறையான சிகிச்சையும் கிராமவாசிகளை அதிகம் ஈர்த்தது. ’நர்சம்மா, நர்சம்மா’ என்று அன்போடு கூப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

இப்படி நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்து வந்ததால், அவர் உடல்நிலை பற்றிக் கவலைகொள்ளவில்லை. போதுமான ஓய்வு இல்லாததால், அம்மாவின் உடல் பாதிக்கப்பட்டது. ஆஞ்சியோ செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவுக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.

அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செஞ்சியிலிருந்து கிராம மக்கள் வேன்களில் திரண்டு வந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் என்று வந்த கூட்டத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரின் இறுதி ஊர்வலம் சொல்லிவிடும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு பலரும் வந்து, அம்மா அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவியதாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்கள்! ஒருவர் வீடு கட்டுவதற்கு அம்மா தங்க வளையல்களைக் கொடுத்ததாகச் சொல்லித் திருப்பித் தந்தபோது அம்மாவை நினைத்தும் அந்த மக்களை நினைத்தும் ஆச்சரியமாக இருந்தது.

படைப்பாளர்

சுதா

சுதா

படித்தது இளநிலை கணினி அறிவியல், இயற்கை மருத்துவம், தோட்டக்கலை, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக சமையல் பொடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார் .