“மல்ட்டி டாஸ்க்கிங்” (Multitasking) எனப்படும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதில் பெண்கள் திறமையானவர்கள் என்று பொதுவான ஒரு கருத்து இருக்கிறது. அடுப்பில் பாலை வைத்துவிட்டு வாசலில் காய்கறி வாங்கப் போவது, போனில் பேசிக் கொண்டே பாத்திரம் கழுவுவது, டிவி பார்த்துக் கொண்டே துணி மடிப்பது, காய்கறி நறுக்குவது… என்று பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்கும் திறன் படைத்தவர்களாக, பெண்கள் பாராட்டப்படுகின்றனர். ஆண்களுக்கு இந்த மல்ட்டி டாஸ்க்கிங் திறன் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

ஒரே நேரத்தில், சமையலை செய்து கொண்டே, கணவர், குழந்தைகள், பெரியவர்களுக்கு தேவையானதையும் கவனித்து, வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள் பெண்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கோ, இந்த அத்தனை வேலைகளுடன், அலுவலக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது, வாட்ஸ்அப், மெயில் அனுப்பும் பணிகளும் சேர்ந்து கொள்கின்றன.

உண்மையில் இந்த மல்ட்டி டாஸ்க்கிங் நல்லதுதானா? இல்லை. இது மூளைக்கும், மனநலத்திற்கும் உகந்தது அல்ல என்று அறிவியல் சொல்கிறது. இப்படி மல்ட்டி டாஸ்க்கிங் செய்யும் போது, நமது பணித்திறன் 40 சதவிகிதம் குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது.

மல்ட்டி டாஸ்க்கிங்-கில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? ஒரு வேலையில் இருக்கும் கவனம் விரைவாக மற்றொன்றுக்கு மாறுவதும், அடுத்து வேறொன்றுக்கு மாறுவதும் தான் நடக்கிறது. இதனால் கவனம் சிதறி, ஒன்றை முனைப்புடன் செய்ய மூளை திணறுகிறது. “மெண்டல் ப்ளாக்” ஏற்பட்டு பணித்திறன் குறைகிறது. ஒன்றை கற்றுக் கொள்ளும் திறமை, பிரச்சனைகளை அடையாளம் காண்பது, அதற்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த அறிவாற்றல் திறனையும் இது பாதிக்கிறது. மட்டுமல்ல, பதட்டம், கவலை, குழப்பமும் கூடுகிறது.

இதற்குத் தீர்வு, ஒரு நேரத்தில், ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதுதான். அப்படிச் செய்யும்போது செயல்திறன் (efficiency) கூடுவதுடன், ஈடுபாட்டுடன்  நிறைவாக அந்த வேலையை செய்து முடிக்க முடிகிறது. மட்டுமல்ல, மல்ட்டிடாஸ்ங்க்-கிற்கு ஆகும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சிறப்புடன் முடிக்கலாம்.

புத்த துறவி திக் நாட் ஹன் (Thich Nhat Hanh) மைண்ட்ஃபுல்னெஸ் (mindfulness) என்ற கருத்தை பரவலாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். மைண்ட்ஃபுல்னெஸ் என்றால் `அந்த நேரத்தில் என்ன செய்கிறோமோ அதில் முழுமையாக கவனம் செலுத்துவது’.

பாத்திரம் தேய்த்தாலும், காய்கறி நறுக்கினாலும், புத்தகம் வாசித்தாலும், டிவி பார்த்தாலும், வாக்கிங் போனாலும்… அந்த தருணத்தில் அதில் முழுமையாக ஈடுபட்டு, அன்புடன் செய்யுங்கள் என்கிறார் திக் நாட் ஹன். இந்த விழிப்பு நிலை, செய்யும் பணியை சிறப்பாக செய்ய உதவுவதுடன், டென்சனைக் குறைத்து மனதையும்,  சமன் செய்கிறது. பதட்டமாகவோ, கோபமாகவோ இருக்கும் போது, மூச்சை நன்றாக இழுத்துவிட்டு, செய்யும் வேலையை மிக நிதானமாகவும், மெதுவாகவும் செய்தால் மனம் சமநிலைப்படும் என்றும் சொல்கிறார்.

இதெல்லாம் சரிவருமா, காலை நேர பரபரப்பில் “ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்வதெல்லாம்” நடக்கிற காரியமா என்று தோழிகள் முணுமுணுக்கலாம். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சி செய்து பார்க்கலாம்.

psychology compass

என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ அவைகளை பட்டியலிட்டு, நீங்கள் செய்ய முடிந்ததை மட்டும் செய்யுங்கள். மீதியை குடும்ப உறுப்பினர்களுடனோ, வீட்டுவேலைக்கு வரும் உதவியாளரிடமோ பகிர்ந்து கொடுங்கள்.

“எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

மல்ட்டிடாஸ்கிங் கிரீடத்தை கழற்றி வைத்துவிட்டு மைண்ட்ஃபுல்னெஸில் கவனம் செலுத்தினால் மனநலத்திற்கு நல்லது தோழியரே !

கீதா பக்கங்களின் முந்தைய பகுதி:

படைப்பு:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.